பாடகி அனு ஆனந்த்

"தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்.
ஒரு தூதுமில்லை. உன் தோற்றமில்லை.
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை.
நெஞ்சம் மறப்பதில்லை. அது தன்
நினைவை இழக்கவில்லை.
நான் காத்திருந்தேன்.
உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை. என்
கண்களும் மூடவில்லை."
- கவிஞர் கண்ணதாசன் -

'யதார்த்ததிலிருந்து தனிமைப்படுத்தல்' (Quarantine from Reality) 'யு டியூப் சான'லிலிருந்து நான் கேட்ட, இரசித்த இக்காலத்தால் அழியாத  கானத்தை நீங்களும் ஒரு முறை கேட்டுப்பாருங்களேன். பாடகி அனு ஆனந்த் சிறப்பாகப் பாடியுள்ளார். காணொளியின் இறுதியில் பி.பி.ஶ்ரீனிவாசின் குரலில் பாடகர் பத்மநாபன் பாடுவார். அதுவும் இக்காணொளியின் சிறப்பு.

பொதுவாக நான் பாடல்களைக் கேட்டு இரசிக்கையில் பாடகர்களின் குரலினிமை, கவிஞரின் மொழியினிமை, அபிமான நடிகர்களின் நடிப்பினிமை & இசையமைப்பாளரின் இசையினிமையில் என்னை மறந்து விடுவேன். அவ்விதம் மறந்து விடுகையில் பாடலில் பாவிக்கப்பட்டிருக்கும் பல்வகை வாத்தியக் கலைஞர்களின் வாத்திய இனிமையைத்  தவற விட்டுவிடுவேன். ஆனால் இந்தச் 'சான'லில் வாத்தியக்கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களது முக்கியத்துவத்தையும் இசை இரசிகர்கள் உணர்ந்து இரசிக்கும் வகையில் செய்திருக்கின்றார்கள். அது இக்காணொளியின் முக்கியச் சிறப்பு. புல்லாங்குழல், தபேலா, 'கீ போர்ட்' என்று வாத்தியக் கலைஞர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து  கேட்பவர் உள்ளங்களில் அவர்களும் பதியும் படி செய்திருக்கின்றார்கள். எம் இசையமைப்பாளர்கள் எவ்விதம் தாள வாத்தியக் கருவிகளைக் குறிப்பாகத் தபேலாவைக் கையாண்டிருக்கின்றார்கள் என்பதைத்  தெளிவாகவே  உணர வைத்தது இக்காணொளி.

சிறப்பாகக் காணொளியை ஒளிப்பதிவு செய்திருக்கின்றார்கள். 'சான'லின் தலைப்பும் கவித்துவம்  மிக்கது. யதார்த்தத்திலிருந்து தனிமைப்படுத்தல் தற்போது உலகமெங்கும் சூழலுக்கு நன்கு பொருந்துகின்றது. கூடவே இசையில் மயங்கி யதார்த்தத்திலிருந்து விலகி வேறொரு உலகில் எம்மையே தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் பொருந்துகின்றது.

இந்தச் 'சான'லின் தொகுப்பாளினி 'ராகமாலிகா' சுபஶ்ரீ தணிகாசலம் சிறப்பாகத் தொகுத்திருக்கின்றார். இதுதான் நான் பார்த்த இந்தச் 'சான'லின் முதலாவது காணொளி. ஏனைய காணொளிகளையும் கண்டு யதார்த்தத்திலிருந்து என்னை மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தை ஊட்டுகின்றது.

https://www.youtube.com/watch?v=I3kkuAaS6GM&t=3s