இலங்கை வானொலியில் நீண்ட காலம் பணியாற்றிய கலைஞர்  அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் (20 – 01 – 2021) காலமானார். எமது நீண்டகாலக் குடும்ப நண்பர் சிறிஸ்கந்தராசாவின் மரணம் வேதனை தருகிறது. அறுபதுகளின் பிற்பகுதி முதல் அவரை நன்கறிவேன். அன்று வானொலியில் மாதமொருமுறை யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம் சார்பாகக் கிராமசஞ்சிகை நிகழ்ச்சியை எனது சகோதரர் த. துரைசிங்கம் தயாரித்தளிப்பதுண்டு. அந்நிகழ்ச்சியில் அன்று மாணவனான நானும் பங்குபற்றியதுண்டு. அவ்வேளை அந்நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராக விவியன் நமசிவாயம் கடமையாற்றினார். அவருடன்  தயாரிப்பாளராகச் சிறிஸ்கந்தராசா பணியாற்றினார்.

அந்தக் காலங்களில் கொழும்பு செல்லும் வேளைகளில் அவரின் நாரங்கன்பிட்டி வீட்டிற்குத் தவறாது செல்வதுண்டு. பின்னர் எழுபதுகளில் கிராம சஞ்சிகை - கிராம வளம்  நிகழ்ச்சிகளுக்கான ஒலிப்பதிவுகளை வடபகுதிக் கிராமங்கள் தோறும் ஒழுங்குசெய்து அவருடன் பயணித்த நாட்கள் நினைவிலுண்டு. தீவுப்பகுதி முதல் வடபகுதியின் குக்கிராமங்கள் தோறும் சென்று நாட்டுபுறக் கலைஞர்களின் திறமைகளை - நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்திட அவருக்கு உதவியதும் மறக்கமுடியாத நினைவுகளே..!

சுமார் 40 ஆண்டு காலம் இலங்கை வானொலியில் கடமையாற்றியவர். தன்னை விளம்பரப்படுத்தாமல் பலரை வானொலி நிகழ்ச்சிகளில் இணைத்து அவர்களது திறமைகளை வளர்த்து ஊக்கப்படுத்தி முன்னிலைக்குக் கொண்டு வந்த மனிதர். இலங்கை வானொலி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மத்தியில் பேரும்புகழும் பெற்று நட்சத்திரக் கலைஞர்களாக மிளிர்ந்த - மிளிரும் பலர் சிறி அவர்களின் நெறிப்படுத்தலின் மூலம் உருவாகியவர்கள் என்பது அதிகம் வெளிவராத உணமையாகும்.! கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராக - கட்டுப்பாட்டாளராகப் பல்லாண்டுகள் கடமையாற்றி இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் சகல கிராமங்களின் கலை பண்பாட்டுச் செல்வங்களை வானொலி மூலம் மக்கள் மத்திக்கு கொண்டுவருவதில் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் செயற்பட்ட மனிதன்.

இலங்கை வானொலிக் கலைஞர்களுடன் சிறி...

சிறி சிறந்த படப்பிடிப்பாளருமாவார். பண்போடு பழகும் அற்புதமான மனிதன் என அத்தனை கலைஞர்களின் - படைப்பாளிகளின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரித்தான பண்பாளன். கிராம சஞ்சிகை - கிராமவளம் - மற்றும் கிராமிய நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் - கட்டுப்பாட்டாளராகவும் பல்லாண்டுகள் கடமையாற்றி ஓய்வுபெற்றுக் கனடா மொன்றியலில் வசித்த சிறி அவர்களை 89 வயதில் இயற்கை அணைத்துக்கொண்டது. இறுதிவரை ஓர் இளைஞனைப் போன்று சுறுசுறுப்பானவராக இயங்கி உரையாடி வந்தவர். பல்லாண்டுகள் எங்கள் குடும்ப நண்பராக - அன்புள்ளம் கொண்ட பண்பாளராக வாழ்ந்த சிறி அவர்கள் நினைவு எம் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருக்கும்..!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.