"பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது"
- கவிஞர் வைரமுத்து -\

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க  - எஸ்.ஜானகி - https://www.youtube.com/watch?v=eXP2G8ocziU

மானுடப்பிறப்பில் இந்தக் காதல் உணர்வு இருக்கிறதே. இது ஒரு விசித்திரமான அனுபவம். இது ஏன் வருகின்றது, எப்படி வருகின்றது என்பது தெரியாது. ஆனால் வந்தால் இது மானுட வாழ்க்கையையே ஆட்டிப்படைத்து விடுகின்றது. இப்பாடலும் அதைத்தான் கூறுகின்றது.

நடிகர் திலகமென்றாலே உணர்ச்சிகளைக்கொட்டி, வசனங்களைக்கொட்டி நடிக்கும் அவரது திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். வசனங்களைக்குறைத்து, முகபாவங்கள், உடல் அசைவுகள் மூலம் சிறப்பாக அவரது நடிப்புத்திறமையினை வெளிக்கொணர்ந்திருப்பார் இயக்குநர் பாரதிராஜா இத்திரைப்படத்தில். அவ்வகையில் மறக்க முடியாத சிறந்த திரைப்படமாக இத்திரைப்படம் இரசிகர்கள் உள்ளங்களில் நிலைத்து நிற்கின்றது.  படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள்  அனைத்துமே காலத்தால் அழியாத கானங்கள்தாம்.

பாரதிராஜா, இளையராஜா & வைரமுத்து கூட்டணி தமிழ் சினிமாவின் முக்கியமானதொரு கூட்டணி. தமிழ் சினிமாவில் கிராமத்தைத் துல்லியமாக, உயிர்த்துடிப்புடன் காட்டிய கூட்டணி. சமூகத்தின் பல்வேறு சீர்கேடுகளையும் தோலுரித்துக்காட்டியவை பாரதிராஜாவின் திரைப்படங்கள். ஆனால் அவற்றைக் காதலை அடிநாதமாகக்கொண்டு வெளிப்படுத்தியிருப்பார். அதனால்தான் அவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்களும், பாடல்களும் நெஞ்சில் எப்போதும் வளைய வந்துகொண்டிருக்கின்றன.

அவரது இயக்கத்தில் வெளியான முதல் மரியாதை அவ்வகையில் முக்கியமான திரைப்படம்.

காதலுக்குக் கண் இல்லையென்பார்கள். அதற்கு வயது வித்தியாசமும் கிடையாது என்பதை நெஞ்சை வருடும் வகையில் ,எவ்வித விரசமுமில்லாமல் எடுத்துக்காட்டியிருப்பார் அவர் இத்திரைப்படத்தில்.

நடிகை ராதாவின் நடிப்புத்திறமையினை வெளிப்படுத்திய திரைப்படங்களில் முதலிடத்தில் நிற்கும் திரைப்படம் 'முதல் மரியாதை'யே.

இத்திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை ராதாவுக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அதனை அவரிடமிருந்து தட்டிப்பறித்தவர் நடிகை சுகாசினி 'சிந்து பைரவி'க்காக.

சிறந்த பாடல் வரிகளுக்காகக் கவிஞர் வைரமுத்துவுக்குச் சிறந்த கவிஞருக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த  இத்திரைப்படம் சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அவ்வருடப் ஃபிலிம்பெயரின் சிறந்த தமிழ் நடிகர் , நடிகைக்கான விருதுகளை முறையே  நடிகர் திலகத்துக்கும், நடிகை ராதாவுக்கும் பெற்றுத்தந்ததும் இத்திரைப்படமே  என்பதும் நினைவில்கொள்ளத்தக்கது.

பாடகி எஸ்.ஜானகியின் நெஞ்சை ஈர்க்கும் குரலில் இப்பாடல் ஒரு பெண்ணின் காதல் உணர்வுகளை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகின்றது.


பாடல் வரிகள் முழுமையாக:

ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
வந்து சொல்லாத உறவை
இவ நெஞ்சோடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா
பழசை மறக்கலையே
பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வச்சு
ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக
தரும மகராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலான்னு தான் பெரு
அட மந்தையிலே நின்னாலும்
நீ வீரபாண்டி தேரு
காதுல நரைச்ச முடி
கன்னத்துல குத்துது குத்துது
சுழியில படகு போல
என் மனசு சுத்துது சுத்துது
பருவம் தெரியாம
மழையும் பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம
மனசும் நனைஞ்சாச்சு
உனக்கே வச்சிருக்கேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காது மூக்கு வச்சு
ஊருக்குள்ளே பேச்சு