கவிஞர் முத்துலிங்கத்தின் சிந்தையை வசியம் செய்யும் வரிகள், மெல்லிசை மன்னரின் இசை, கே.ஜே.ஜேசுதாஸ் & வாணி ஜெயராமின் குரல், எம்ஜிஆர் & லதாவின் சிறப்பான நடிப்பு , என்.பாலகிருஷ்ணனின் ஒளிப்பதிவு எல்லாமே நன்கிணைந்து எனைக் கவர்ந்த கானமிது. கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளை ஒவ்வொன்றாக இரசித்தவாறே, அவற்றைப் பாடும் பாடகர்களின் குரல்களையும், அபிமான நடிகர்களின் நடிப்பையும் இரசித்துப்பாருங்கள் நிச்சயம் நீங்கள் உங்களையே மறந்து விடுவீர்கள். இப்பாடலின் பொருளை விளங்கி அமைக்கப்பட்டுள்ள இசை, அதையுணர்ந்து அனுபவித்துப் பாடும்  பாடகர்களின் குரலினிமை , விளங்கி நடிக்கும் நடிகர்களின் நடிப்பு எல்லாமே என்னை ஈர்த்தனவென்பேன்.

இப்பாடலின் முக்கிய சிறப்புகளிலொன்று பாடலில் வெளிப்பட்டுள்ள லதாவின் நடனத்திறமை. லதா சிறந்த நர்த்தகி. லதாவின் நடனத்திறமையினை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப்பட்டுள்ள பாடலோ என்னும் வகையில் பாடல் முழுவதும் லதாவின் நடனத்தை வெளிப்படுத்தும் வகையில் பாடற் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரும் நிதானமாக அதனை இரசித்துக்கொண்டிருப்பதன்  மூலம், லதாவின் நடனத்துக்கு இடையூறேதும் செய்யாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றார்.

"வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா"

என்னும் வரிகளுக்கு லதா வெளிப்படுத்தும் நடனத்திறமை என்னை  மிகவும் கவர்ந்தது. இப்பாடலில் பின்வரும் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தவை:

"எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே
வரும் வரம் கேட்கின்றேன்"

கவிஞர் முத்துலிங்கத்தை வற்புறுத்தி எம்ஜிஆர் எழுத வைத்த பாடலென்று கவிஞர் முத்துலிங்கமே ஓரிடத்தில் கூறியிருப்பதை 'மீனவ நண்பன்' பற்றிய விக்கிபீடியாக் கட்டுரையிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.

ஐம்பது, அறுபதுகளில் 'நெஞ்சிலோர் ஆலயம்', 'சுமைதாங்கி', 'கல்யாணப்பரிசு' , 'நெஞ்சிருக்கும் வரை' என்று பல திரைப்படங்களில் தன் தனித்துவத்தைப் பதித்த ஶ்ரீதர் பின்னர் நொடிந்து போயிருந்த நிலையில் அவருக்கு எம்ஜிஆர் படங்களே கை கொடுத்தன என்பது ஒருவித முரண்நகை. அவர் தன் இறுதிக்காலத்தில் இயக்கிய 'உரிமைக்குரல்' , 'மீனவ நண்பன்' ஆகியவை மிகப்பெரிய வர்த்தரீதியில் வசூலில் வெற்றி பெற்றவையென்பது குறிப்பிடத்தக்கது.

அறுபதுகளில் எம்ஜிஆருக்குப் பாடிய டி.எம்.எஸ் அவர்களின் பாடல்களைக் கேட்ட எவருமே எம்ஜிஆருக்கு வேறெவரது குரலும் பொருந்தாதென்றே எண்ணியிருப்பார்கள். நானும் அவ்வாறே எண்ணியிருந்தேன். ஆனால் எழுபதுகளில் அவருக்குக் குரல் கொடுத்த கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் ஒலித்த பாடல்களைக் கேட்டபோது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். ஜேசுதாஸின் குரலும் நன்கு பொருந்துகின்றது. அவ்விதமே நானுணர்ந்தேன்.
ஜேசுதாஸ் & வாணி ஜெயராம் கூட்டணியில் ஒலித்த பல பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள். அவற்றில் இப்பாடலுமொன்று. அதுபோல் எம்ஜிஆர் திரைப்படங்களில் இடம் பெற்ற மறக்க முடியாத கனவுக் காட்சிகளை உள்ளடக்கிய பாடல்களில் இப்பாடலுமொன்று.

இப்பாடலைக் கேட்டு, பார்த்து இரசிக்க: தங்கத்தில் முகமெடுத்து , சந்தனத்தில் உடலெடுத்து..

'மீனவ நண்பன்' இடம் பெற்ற கவிஞர் முத்துலிங்கத்தின் இப்பாடலின்  முழுமையான வடிவத்தைக் கீழே தருகின்றேன்:

கவிஞர் முத்துலிங்கம்

- கவிஞர் முத்துலிங்கம் -

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா

வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும்
கலை மானும் நானல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

முல்லை மலர் செண்டுகள்
கொண்டு கொடி ஆடுது
செண்டு சதிராடினால்
அந்த இடை தாங்குமா

இந்த இடை தாங்கவே
கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து
சிரித்து குலுங்கும் கனியாகவோ

எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே
வரும் வரம் கேட்கின்றேன்

இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே
சொந்த மகராணி
நீ என்று நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க
கொடுத்து மகிழ்ந்து முத்தாடுவேன்

தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ


இப்பாடல் உருவான விதம் பற்றி டூரிங்டாக்கீஸ் இணையத்தளத்தில் வெளிவந்த குறிப்பொன்றினையும் இங்கு பகிர்ந்துகொள்வது பொருத்தமானதே:
(https://touringtalkies.co/kavingar-muthulingam-told-a-story-of-meenava-nanban-movie-song/)

“எனக்காக இயக்குநர் ஸ்ரீதரிடம் சண்டை போட்ட எம்.ஜி.ஆர்.” – கவிஞர் முத்துலிங்கத்தின் மலரும் நினைவுகள்..!

ஒரு சில திரைப் பாடல்களை இன்றைக்கும் கேட்கும்போது மனதுக்குள் ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும், காதலையும், தாபத்தையும் ஏற்படுத்தும். அப்படியொரு பாடல்தான் 1977-ம் ஆண்டு வெளிவந்த ‘மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல்.
இந்தப் பாடலை எழுதியவர் ‘கவிஞர் முத்துலிங்கம்’. இந்தப் பாடல் எப்படி உருவானது என்பது பற்றி ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் கவிஞர் முத்துலிங்கம் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

அது இங்கே :

“1977-ம் வருடத்தில் ஒரு நாளில் எம்.ஜி.ஆரைச் சந்திக்க சத்யா ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கே ‘மீனவ நண்பன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும், ‘இந்தப் படத்தில் நீ எந்தப் பாட்டு எழுதியிருக்க..?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘நான் எந்தப் பாட்டையும் எழுதலை’ என்றேன். எம்.ஜி.ஆர். அதிர்ச்சியாக ‘ஏன்?’ என்றார். ‘என்னை யாரும் பாட்டு எழுத கூப்பிடலை..’ என்றேன்.

உடனே அங்கேயிருந்த படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர். ‘முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை?’’ என்று கோபத்துடன் கேட்டார். ‘நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை’ என்றார் ராஜாராம். உடனே என் பக்கம் திரும்பி ‘நீங்க எங்க போனீங்க..?’ என்றார் எம்.ஜி.ஆர். ‘ஒரு அவசர வேலையா ஊருக்குப் போயிருந்தேன். உடனேயே கிளம்பிட்டதால யார்கி்டடேயும் சொல்லிட்டுப் போக முடியலை’ என்றேன்.

உடனே எம்.ஜி.ஆர்., ராஜாராமிடம் ‘அதான் இப்போ வந்துட்டார்ல்ல..? இவரை வைச்சு ஒரு கனவு பாட்டு எழுதி வாங்குங்க..’ என்றார். ‘படம் முடிஞ்சிருச்சே..’ என்றார் ராஜாராம். உடனேயே, படத்தின் இயக்குநர் ஸ்ரீதரையும், தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும் அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர். அவர்கள் வந்ததும், ‘இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைச்சு ஒரு கனவுக் காட்சி பாடலை ரெடி பண்ணுங்க. அதற்குப் பிறகு படப்பிடிப்பு நடத்திக்கலாம்’ என்றார். அவர்களும் ராஜாராம் சொன்ன மாதிரியே ‘அதற்கான சிச்சுவேஷன் படத்துல இல்லையே’ என்றார்கள்.

‘கனவுப் பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் வேணும்..? சாப்பிடும்போது, தூங்கும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதுபோல் வர்றதுதானே கனவுப் பாட்டு.. அதற்குத் தனியா என்ன சிச்சுவேஷன் வேணும்..? உங்க ‘உரிமைக் குரல்’ படத்துல ‘விழியே கதை எழுது’ பாட்டுக்கு எப்படி சிச்சுவேஷன் வந்துச்சு..? அது மாதிரி இதை ரெடி பண்ணுங்க.. அப்புறமா ஷூட்டிங்கை வைச்சுக்கலாம்’ன்னு ஸ்ரீதரிடம் கண்டிப்பா சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர்.

அப்புறம் அந்த கனவுப் பாடலா நான் எழுதியதுதான் அந்தப் படத்திலேயே ஹிட்டான பாடலா அமைஞ்ச ‘தங்கத்தில் முகமெடுத்து’ என்ற பாடல். இந்தப் பாட்டும் முதல்ல ரொம்ப எளிதா அமையலை. இந்தப் பாடலுக்கு முதல்ல நான் எழுதியிருந்த பல்லவி…

‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் – உன்
அங்கங்களே மன்மதனின் படைக்களம்
இரவினிலே தீபமாகும் உன் முகம் – நீ
இன்பத் தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்’

என்று எழுதியிருந்தேன்.

இந்தப் பாடலில் ‘படைக்களம்’ என்ற வார்த்தையில் இயக்குநர் ஸ்ரீதருக்கு ஏதோ சந்தேகம் வந்தது. ‘படைக்கலன் என்றுதானே இருக்க வேண்டும்’ என்று கேட்டார். ‘படைக்கலன்’ என்றால் அது ‘ஆயுத’மாகிவிடும். ‘படைக்களம் என்றால் அது போர்க்களமா’கிவிடும் என்று அவருக்கு உணர்த்தினேன். ஆனாலும், அவருக்குத் திருப்தியில்லாததால் அதை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

இந்த நேரத்தில் எம்.எஸ்.வி.க்கும் ஒரு மிகப் பெரிய சந்தேகம். ‘அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம்’ என்றிருந்த வரியில் ‘அடைக்கலம்’ என்ற வார்த்தைக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்தார். ‘இதை அப்படியே விட்டுட்டா நாளைக்கு யாராவது ‘அடைக்கலம்’ என்ற பெயர் வைச்சிருக்கிறவன் கோர்ட்ல கேஸ் போட்டு நம்மளை கோர்ட்டுக்கு இழுப்பான். அதெல்லாம் வேண்டாம்.. அதையும் மாத்து’ன்னு சொல்லிட்டார்.

அப்புறம் அந்த பல்லவி மொத்தத்தையும் மாற்றி  

‘தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ –
நீ மாலை நேரப் பொன் மஞ்சள் நிலவோ’

என்று எழுதினேன்.

இதை தயாரிப்பாளர், இயக்குநர், எம்.எஸ்.வி., எம்.ஜி.ஆர். அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்…” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.