மானுட விடுதலைக்கவி கண்ணதாசன்! - ஊர்க்குருவி -

கவிஞர் கண்ணதாசனின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். எவ்விதம் கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' உலக மக்களை விளித்துப்பாடப்பட்டதோ அவ்விதமே இப்பாடலையும் எடுக்கலாம். திரைப்படக்கதைக்குப் பொருந்தும் வகையில் வரிகள் இருந்தாலும், இப்பாடல் இவ்வுலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது. இனி பாடலின் முக்கிய  வரிகளைப் பார்ப்போம்.

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்"

எவ்விதம் அந்தப்பறவை சுதந்திரமாகப் பறக்கின்றதோ அவ்விதமே இம்மண்ணின் மக்களும் எவ்விதத்தளைகளுமற்று ,சுதந்திரமாக வாழ வேண்டும். இம்மண்ணின் மாந்தர்கள் வர்க்கம், மதம், மொழி, வர்ணம், இனமென்று பல்வேறு தளைகளால் பூட்டப்பட்டு , அடிமை வாழ்வு வாழ்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். வான் ஒன்று. நாம் வாழும் மண் ஒன்று. இதில் மனிதர் அனைவரும் சுதந்திரமாக விடுதலைக்கீதம் பாடும் நிலை ஏற்பட வேண்டும், அந்த ஒரு கீதமே மாந்தர் பாடும் நிலை வரவேண்டும். தளைகள் எவையுமற்ற, அடக்குமுறைகள் எவையுமற்ற பூரண விடுதலைச்சூழலில் மக்கள் வாழும் நிலை வரவேண்டும்.

"கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை "

கோடிக்கணக்கான இப்புவியின் மக்கள் அனைவரும் எவ்வித வேறுபாடுகளுமற்று , புவியன்னையின் குழந்தைகளாகச் சேர்ந்து  வாழ  விடுதலை வேண்டும். அதிகாரத்தின் அடக்குமுறைகள் பற்றிய அச்சமற்று ஆடிப்பாடிடும் வகையில் விடுதலை பெற்றிட வேண்டும். பல்வேறு தளைகளுக்குள் அடிமைகளாக இப்புவியில் வாழும் மக்கள் அனைவருக்கும் அந்நிலை நீங்கிட விடுதலை வேண்டும். விடுதலை! விடுதலை! சகலவகைத் தளைகளுமற்ற பூரண விடுதலை! மானுடர் அனைவருக்குமான பூரண விடுதலை! அதுதான் வேண்டும்!


முழுப்பாடல் வரிகளும் கீழே:

கவிஞர் கண்ணதாசனும், மக்கள் திலகமும்...

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ் & பி.சுசீலா
நடிப்பு: எம்ஜிஆர் , ஜெயலலிதா & குழுவினர்.

பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=plInzhePfI8