யாழ்ப்பாணத்தில் இயல்,இசை, நாடகம்  எனும் முத்தமிழ் கொலுவிருந்த ஓர் இனியகாலம். யாழ்.திறந்தவெளியரங்கம், வீரசிங்கம் மண்டபம் என்பன வாரம்தோறும் கலைநிகழ்ச்சிகளால் களை கட்டியிருந்த சிறப்பான காலகட்டம். யாழ் மண்ணின் ஏனைய பகுதிகளிலும் அப்பொழுது கலை நிகழ்ச்சிகள் நிறைவாகநடைபெற்று வந்தன. யாழ்ப்பாணம் என்றால் அங்கே பல அடையாளச்சின்னங்கள் எம் மனக்கண்ணில்எழும். அவை பாரம்பரியத்திற்குரியவையாகவும் நவீனத்துவமானவையாகவும் அமைந்துள்ளன. அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அன்றுடன் முடிந்துவிடும். நிழல் படங்கள் மட்டும் பார்வைக்கு இருக்கும். அவையும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அமைந்துவிடுவதில்லை. 1970கள் யாழ்ப்பாணம் பல்வேறு விதமான நவீன தொழில் நுட்பங்களைதம்மகத்தே உள்வாங்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுதுதான் ஒலிப்பதிவுகள் மேற்கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்பட்டன. இசைப்பிரியர்களை மகிழ்வித்துவந்த இசைக்களஞ்சியமாக யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றாக அக்காலகட்டத்தில் திகழ்ந்தது நியூ விக்ரேர்ஸ். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியில், யாழ்.பொது மருத்துவமனைக்குப் பின்புறமாகஇந்த நிறுவனம் அமைந்திருந்தது. அப்பொழுதெல்லாம் திரைப்படப்பாடல்கள் கேட்பதென்றால் இலங்கை வானொலிஒன்றே வழியாக இருந்தது. வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்கும் இசைப் பிரியர்கள் மீண்டும்அப்பாடல்களைக் கேட்பதற்கு யாழ்ப்பாணத்தில் பெரும் வரப்பிரசாதமாகஅமைந்தது நியூ விக்ரேர்ஸ் நிறுவனம்.

தென்னிந்தியாவில் வெளிவரும் திரைப்படங்களின் பாடல்கள் 45RPM இசைத்தட்டுக்கள், LP இசைத்தட்டுக்கள் என்பவற்றில் வெளியாகும். அந்த இசைத்தட்டுக்களை யாழ்ப்பாண மக்கள் பார்க்கக்கூடியதாகவும், அதிலிருந்து பாடல்களை ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்து கொள்வதற்கும்வழி வகுத்த முன்னோடிகள். இசைப்பிரியர்களின் இசைத்தாகத்தைத் தீர்ப்பதில் பெரும்பணியாற்றியவர்கள். பாடல், பாடியவர்கள், இசையமைப்பாளர், திரைப்படம் ஆகிய விபரங்கள் உள்ளடங்கிய புத்தகம் ஒன்றையும் அச்சடித்து தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தார்கள். அவர்கள் அதிலிருந்து பாடல்கள் தெரிவுசெய்து பதிவு செய்து கொள்வார்கள். ரி.டி.கே, மக்ஸெல், சொனி கசெற்றுக்களிலேயே பெருமளவான ஒலிப்பதிவுகள் நடைபெறும். ஒலியமைப்பாளர்கள், உணவக உரிமையாளர்கள் ஸ்பூல் நாடாவில் பதிவு செய்து கொள்வார்கள். நகரத்தின் பல பகுதிகளிலும் ஒலியமைப்பாளர்களாகப் பணியாற்றிவந்தவர்கள் தங்கள் சேவையில் பரவசமூட்டும் பக்திப்பாடல்களையும் நாதஸ்வர தவில்கச்சேரிகளையும் புதிய பழைய திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்புவதற்கு சிறந்த தொழில் நுட்பத்தில் அவற்றைப்பதிவுசெய்து வழங்கியவர்களில் நியூவிக்ரேர்ஸ் தனியிடம் பெற்றவர்கள். நியூ விக்ரேர்ஸ் வழியில் காலப்போக்கில் நகரின் பல்வேறு இடங்களிலும் ஒலிப்பதிவுக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

தினமும் மாலை வேளையில் ஒரு இசை இரசிகர் கூட்டம் நியூ விக்ரேர்ஸ்முன்பாகக் கூடும். பாடல்கள், நாதஸ்வரக்கச்சேரிகள், வயலின், வீணை இசைக்கோலங்கள் எனப்பலவற்றை ஸ் ரீரியோ தொழில் நுட்பத்தில் அந்த இசைப்பிரியர்கள் தினமும்கேட்டு மகிழ்வார்கள். ஈழத்துப் பொப்பிசைப்பாடல்களையும் அவர்களது  சிறப்பான ஒலியமைப்பில்ஒலிபரப்பி மக்களை மகிழ்வித்தார்கள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் அவர்கள் நியூவிக்ரேர்ஸ் நிறுவனத்துக்கு நேரடியாக விஜயம் செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இதுபோல பொப்பிசைப்பிதா நித்தி கனகரட்ணம் அவர்கள், ‘அண்ண ரைற்’ கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள், எம்.பி.பரமேஸ் அவர்கள் எனப் பலகலைஞர்களின் அபிமானத்துக்குரிய நிறுவனம் நியூ விக்ரேஸ். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் அத்தனை கலை நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவுக்கரம்கொடுக்கும் நிறுவனம்.

தொலைக்காட்சி இலங்கையில் அறிமுகமான வேளையில் அதனை முதன் முதலில் யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியவர்கள் மாத்திரமல்ல, பாமரமக்களும் தொலைக்காட்சியைப் பார்த்து மகிழ உதவியவர்கள். சனசமூக நிலையங்கள், பொது அமைப்புகள் பலவற்றுக்கு இலவசமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கியவர்கள். வீடியோ டெக், வீடியோ கமெரா என்பனவற்றை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியவர்கள். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஜே.ஜேசுதாஸ்-சுஜாதா(சிறுமி), ரி.எம்.சௌந்தரராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை இவர்களது வீடியோகமெரா தான் படம்பிடித்தது. இதன் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகள், கல்யாண வைபவங்கள் யாவும் வீடியோபதிவுகளாக்குவதிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.

யாழ்ப்பாணம் பி.எம்.சி ஒழுங்கையில் நான்கு மாடிகள் கொண்ட நியூ விக்ரேர்ஸ் ஒலி-ஒளிப்பதிவுக்கூடம் ஒன்று மிகவும் பிரமாண்டமாக அமைந்தது. இது யாழ்ப்பாணத்துக்குப் பெருமை சேர்த்தது. இந்த நான்குமாடிக் கட்டிடத்தின் மேல்மாடியில் திறந்த கலையரங்கமும் அமைந்திருந்தது. இதன் ஆரம்ப விழாவில் பரமேஸ்-கோணேஸ் இசைத்தென்றல் நிகழ்ச்சிநடைபெற்றது. நாட்டின் அசாதாரண சூழலால் புலம் பெயர்ந்து ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வந்தகாலகட்டத்தில் மெல்பேர்னிலும் நியூ விக்ரேர்ஸை நிறுவியிருந்தவர். இவை மாத்திரமல்ல இன்னும் பல செயற்பாடுகளை யாழ் மண்ணில் மேற்கொண்டவரலாற்றுக்குரியவர். நான்கு மாடியில் ஒலி-ஒளி கலைக்கூடத்தை அமைப்பதற்கு முன்னர் எம்மைப்போன்றோருடன் கலந்துரையாடினார். கலைஞர்களுக்கு என்ன தேவை என்பதைப்பற்றி ஆராய்ந்த வேளையில், ஓர் உயர்தர ஒலி-ஒளிப்பதிவுக்கூடத்தின் தேவையை அடியேனும் வலியுறுத்தியிருந்தேன். அனைத்தையும் கருத்தில் எடுத்துச் செயற்படுத்தியவர் எமது அன்புக்கும்அபிமானத்துக்கும் மரியாதைக்கும் உரிய குணம் அண்ணா என நாம் அழைத்துமகிழ்ந்த தேவசகாயம் ஆசிர்வாதம் அவர்கள் ஒஸ்ரேலியா மெல்போர்னில் ஏப்ரில்2ம் திகதி காலமானார் என்ற செய்தி ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது இறுதிக்கிரியைகள் ஏப்ரில் 10ம் திகதி சனிக்கிழமை நேற்று காலை ஒஸ்ரேலிய நேரம் காலை 10.30க்கு நடைபெற்றன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.