இசையமைப்பாளர் வேதா காலத்தால் அழியாத தமிழ்த்திரைப்படப் பாடல்கள் பலவற்றை வழங்கியவர். ஒரு சில மேனாட்டுப் பாடல்களின் தழுவல்களுமுண்டு. தமிழ்த்திரையுலக இசையில் தழுவாதவர்கள் யாருளர்?

மாடர்ன் தியேட்டர்ஸ் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கூறலாம் இசையமைப்பாளர் வேதா என்று. அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றே கூறுமளவுக்கு அந்நிறுவனத்துக்காக அதிக எண்ணிக்கையில் அவர் இசையமைத்துள்ளார். 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்' ஜெய்சங்கரையும், வேதாவையும் பிரிக்க முடியாதென்று கூறுமளவுக்கு அதிக அளவில் அவரது திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் வேதா.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, விஜயலலிதா, சி.ஐ.டி.சகுந்தலா போன்றோர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு இசையமைத்த வேதாவின் பாடல்கள் பல காலத்தால் அழியாதவை. வேதாவின் இசையமைப்பில் வெளியாகி எம்மையெல்லாம் துள்ள வைத்த, கிறங்க வைத்த துடிப்புள்ள பாடல்கள் பலவற்றைப் பின்வரும் இணைப்பில் கண்டு, கேட்டுக் களிக்கலாம்: https://www.youtube.com/watch?v=E5hbXdGgbbE

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக இளமைத்துடிப்பு மிக்க , மேனாட்டுப்பாணிப் பாடல்களை நமக்குத் தந்த இசையமைப்பாளர் வேதாதான் அமைதியும், இனிமையும், காதல் உணர்வுகள் படர்ந்த, இதயத்தை வருடிச் செல்லும் 'பார்த்திபன் கனவு' (ஜெமினி & வையந்திமாலா நடிப்பில் வெளியான) திரைப்படப் பாடல்களையும் நமக்குத் தந்தவரென்பது பலருக்கு வியப்பைத்தரலாம், ஆனால் அதுவே இசையமைப்பாளர் வேதாவின் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதாகவுமிருக்கின்றது என்பதுதான் உண்மை.