கவிஞர் வாலி, மெல்லிசை மன்னர்கள் , ஜெயலலிதா & பி.சுசீலா கூட்டணியில் உருவான இனியதொரு , கேட்பதற்குச் சுவையான பாடல். சின்னச்சின்ன இன் சொற்களைத் தொகுத்து, வரிக்கு வரி மோனைகளை அள்ளித் தெளித்திருக்கின்றார் கவிஞர் வாலி. கேட்டதுமே நெஞ்சில் பதியும் வரிகள்.

ஜெயலலிதா 'வெண்ணிற ஆடை'யில் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நுழைந்து இடம் பிடித்தது 'ஆயிரத்தின் ஒருவன்' மூலம்தான். மிகவும் தேர்ந்ததொரு நடிகையாக அவரை வெளிப்படுத்திய திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அதற்கு அவரது நாட்டிய, நடிப்புத்திறமை, அழகு மிக்க ஆளுமை உதவியிருக்கின்றது.

நான் நினைவு தெரிந்து பார்த்த இரண்டாவது திரைப்படம். வவுனியா ஶ்ரீ முருகன் திரையரங்கில் பார்த்தது. திரையரங்கின் முகப்பில் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு எம்ஜிஆர் நிற்கும் சிறியதொரு 'கட் அவுட்'டை வைத்திருந்தார்கள். இன்னும் நினைவிலுள்ளது. நினைவுகளைப் பால்ய பருவத்துக்குக் காவிச்செல்லும் இன்னுமொரு காலக்கப்பல் இப்பாடல்.

சுசீலா அவர்களின் சிறந்த பாடல்களிலொன்று இப்பாடல். அவரது இன் குரலில் ஒலிக்கும் இப்பாடலை எத்தனை தடவைகள் வேண்டுமானால் அலுக்காமல் , சலிக்காமல் கேட்டுக்கொண்டேயொருக்கலாம்.

இப்பாடற் காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு ,சட்டத்துக்குச் சட்டம் , நெஞ்சை ஈர்க்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு இசையும் நன்கு ஒத்துழைத்திருக்கின்றது. கண்களைக் கவரும் நிறங்களும் நிறைந்து பாடற் காட்சியை மேலும் சிறப்பாக்குகின்றது. இவற்றால்தான் இன்னும் இப்பாடல் எம்மைக் கவர்ந்துகொண்டிருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=kmdjU4jsP70

பாடல் முழுமையாக: 

                   - கவிஞர் வாலி -

பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்


இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்

மான்கள் உனது உறவாகும்
மானம் உனது உயிராகும்

தென்றல் என்னை தொடலாம் - குளிர்
திங்கள் என்னை தொடலாம்

மலர்கள் முத்தம் தரலாம் -அதில்
மயக்கம் கூட வரலாம்

சின்னஞ்சிறிய கிளி பேசும்
கன்னங்கரிய குயில் கூவும்
பறவை இனங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்

பழகும் விதம் புரியும்  - அன்பின்
பாதை அங்கு தெரியும்
வாழ்க்கை அங்கு மலரும்