உண்மையிலேயே இந்தியப்பாடகர் என்று கூறத்தக்க வகையில் இந்தியாவின் பன் மொழிகளில் பாடிப் புகழ்பெற்றவர் பாடகர் கே.கே (கிருஷ்ணகுமார் குன்னுத்). கேரளாவைப் பூர்விகமாகக்கொண்ட குடும்பம் இவருடையது, ஆனால் இவர் பிறந்தது புது தில்லியில்.

ஆரம்பத்தில் கே.கே என்னும் ஈர் எழுத்துகள் மூலம் என் கவனத்தை ஈர்த்த பாடகராக விளங்கியவர். நீண்ட நாட்கள் அவ்வெழுத்துகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் பெயர்களையோ அல்லது அவரது உருவத்தையோ நான் அறிந்திருக்கவில்லை.

ஒரு காலகட்டத்தில் அவரது பாடல்கள் பல என்னைக் கவர்ந்திருந்தன. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் கே.கே. உற்சாகமும், துடிப்பும் மிக்க குரலில் பாடகர் அனுராதா ஶ்ரீராமுடன் இணைந்து 'கில்லி' திரைப்படத்துக்காக இவர் பாடிய 'அப்படிப் போடு' பாடலைத் தமிழ் திரைப்பட இரசிகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டார்கள். மறக்க மாட்டார்கள். அப்பாடலைக் கேட்ட பின்னரே அதனைப்பாடியவர் யாரென்று அறிய முற்பட்டேன். அப்பொழுதே முதன் முறையாகப் பாடகர் கே.கே பற்றி அறிந்துகொண்டேன்.

குறுகிய காலத்தில் இந்தியா முழுவதும் இரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்திருந்த பாடகர் கே.கே.யின் திடீர் மறைவு எதிர்பாராதது. இந்தியத் திரையுலகுக்கு, இசையுலகுக்கு மிகப்பெரிய இழப்பென்பது சரியானதொரு கூற்றே.மிகைப்பட்டதொன்றல்ல.

அவரது நினைவாக 'அப்படிப் போடு' பாடல்: https://www.youtube.com/watch?v=7ZgHRiDK3Fo