பி.சுசீலாவின் சிறந்த திரைப்படப் பாடலிது. திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவனின் இசையில் ஒலிக்கும் சிறந்த பாடல்களில் இதுவுமொன்று. இப்பாடல் வரிகளைக் கேட்டதும் எல்லோரும் கவிஞர் கண்ணதாசனின் வரிகளாக நினைத்துக்கொள்வர். ஆனால் உண்மையில் இப்பாடலை எழுதியவர் கவிஞர் அ.மருதகாசி. 'நீங்காத நினைவு' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் எம் பதின்ம வயதுகளில் எம்மையெல்லாம் ஆட்டி வைத்த பாடல்களிலொன்று. இலங்கை , இந்திய வானொலிகளில் நேயர் நெஞ்சங்களைக் கவர்ந்த பாடல்களிலொன்றாக அடிக்கடி ஒலித்த பாடல்களிலொன்று. இன்றும் அவ்விதமே ஒலிக்குமென்று நினைக்கின்றேன்.

இப்பாடலில் வரும் 'அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்' என்னும் வரி எனக்கு மிகவும் பிடித்தது. உண்மை. அன்பு உண்மையாயிருந்தால் நிச்சயம் அன்புக்குரியவரையும் நினைக்க வைக்கும். அதற்குக் காரணம்: ஒருவர் மீது மிகுந்த அன்பு வைக்கும்போது உல்ளம் வேறெதனையும் நினைக்காது மனமொன்றி அவரைப்பற்றி நினைக்கும். அவ்விதம் மனமொன்றி நினைக்கையில் மனத்தின் சக்தி உறுதியானது. வலிமையானது. அந்தச் சக்தியே அவ்விதமே அன்புக்குரியவரையும் நினைக்க வைக்குமென்பது உளவியலாளர் பலரின் ஊகம். ஆனால் என்னைப்பொறுத்தவரையில் அது உண்மையானதும் கூட என்பேன்.

பாடலைக் கேட்டு மகிழ: https://www.youtube.com/watch?v=DXknHhg8rLM


பாடல் வரிகள் முழுமையாக:

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வரும் வரை நிம்மதி இல்லையே
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா