ஆளுமைகள் சிலர் எங்களையறியாமல் எம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருப்பார்கள். அவ்வித ஆளுமையாளர்களிலொருவர் 'ஆல் இந்தியா ரேடியோ'வில் செய்தி வாசிப்பாளராக எழுபதுகளில் விளங்கிய சரோஜ் நாராயணசுவாமி அவர்கள்.

உண்மையில் இவரது செய்திகளை அதிகம் நான் எதிர்பார்த்துக் கேட்டதில்லை. 'ஆல் இந்தியா ரேடியோ'வில் அவ்வயதில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது புதன் இரவு 10மணியிலிருந்து 11 மணிவரையிலான நேயர் விருப்பம் நிகழ்ச்சியைத்தான். பழைய பாடல்களை ஒலிபரப்புவார்கள். நிச்சயமாக 'தொட்டால் பூ மலரும்', 'கண்களிரண்டும்', 'பேசுவது கிளியா' பாடல்க:ள் அவற்றிலிருக்கும். இவ்விதமாகப் பழைய பாடல்களைக் கேட்பதற்காக மட்டும் 'ஆல் இந்தியா வானொலி'யைக் கேட்பதுண்டு. எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்த காலகட்டத்தில் மட்டும் இந்தியச் செய்திகளைக் கேட்பதற்காகவும் அதனைப் பயன்படுத்துவதுண்டு.

இவ்விதமானதொரு சூழலில் அடிக்கடி , இடையிடையே 'ஆல் இந்தியா ரேடியோ'வில் ஒலிக்கும் ஒரு குரல் , அதன் தனித்துவம் காரணமாக என் கவனத்தை ஈர்த்தது. ஏனைய செய்தி வாசிப்பாளர்களிலிருந்து வித்தியாசமாக ஒலித்த குரலது. செய்திகளில் தேவையற்ற ஏற்ற இறக்கங்களில்லாமல் ஒலிக்கும் அக்குரலைக் கேட்கும்போதெல்லாம் பிரமித்துப் போனதுண்டு. அக்குரலுக்குரியவர் அச்செய்திகளை வாசித்த சரோஜ் நாராயணசாமி.

'ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' என்று அவர் செய்திகளை வாசிக்கத் தொடங்குவது இன்னும் நினைவுகளில் பசுமையாகவுள்ளது.

இன்று மீண்டும் அவரைப்பற்றிய நினைவுகளை அவரது மறைவு பற்றிய முகநூற் செய்திகள் காவி வந்தன. அந்தத் தனித்துவக் குரலும் , அதைக் கேட்டுப் பிரமித்த உணர்வுகளும் நினைவுக்கு வந்தன.

சரோஜ் நாராயணசாமியின் குரல் எம் வாழ்க்கைப் படிக்கட்டில் ஒரு காலகட்டத்தை நினைவூட்டுமொரு நினைவுச் சின்னம். இருக்கும் வரை நினைவில் இருக்கப்போகுமொரு நினைவுச் சின்னம். வானொலிக் கலைஞர்களென்றால் நினைவுக்கு வரும் ஆளுமையாளர்களில் அவருமொருவர். அவர் இழப்பால் வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.

அவரது குரலைக் கேட்க: https://www.youtube.com/shorts/7Tw76b3tsak