- நவம்பர் 13 பி.சுசீலாவின்  பிறந்ததினம்! -

கலைஞர்கள் அவர்கள் எத்துறைகளைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் (எழுத்தாளர்கள், நடிகர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்கள் எனக் கலைஞர்கள் எவராகவிருந்தாலும்) மானுடர்களாகிய எம் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவர்கள். எம் இன்ப துன்பங்களில் அவர்கள் கலந்து நிறைந்து நிற்பவர்கள். அவ்வகையில் எம் வாழ்வில் பின்னிப் பிணைந்த கலைஞர்களிலொருவர் பாடகி பி.சுசீலா.  அவரது பிறந்ததினம் இன்று.  யார் சொன்னது இலக்கம் 13 நல்ல இலக்கம் அல்ல என்று. எங்கள் இன்ப துன்பங்களில் கலந்திருக்கும்  அவரை இவ்வுலகுக்குத் தந்த அதிருஷ்டம் மிக்க இலக்கம் அல்லவா.

ஐந்து தேசிய விருதுகளை (தமிழில் 2, தெலுங்கில் 3), பதினொரு மாநில விருதுகளை (தமிழில் 3, மலையாளத்தில் 2, தெலுங்கில் 6) சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர அவர் மேலும் பல விருதுகளைத் தன் குரலுக்காகப் பெற்றவர்.

இன்று அவர் பிறந்த தினத்தை முன்னிட்டு  எந்தப் பாடலைக் கேட்போம் என்று நினைத்துப் பார்த்தபோது முதலில் நினைவுக்கு வந்தவை 'நீ இல்லாத உலகத்தில்', 'மாலைப்பொழுதின் மயக்கத்தில்', 'நினைக்கத்தெரிந்த மனமே' 'எங்கிருந்த போதும் உனை மறக்க முடியுமா' போன்ற பாடல்களே. இவையெல்லாம் சிறந்த பாடல்கள் என்றாலும் , காதலின் பிரிவை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்கள் என்றாலும் ,  காதல் பிரிவு தரும் துயரை வெளிப்படுத்துபவை.  சுசீலா அவர்களின் பிறந்ததினத்தில் இவற்றைத்தவிர்க்கலாமென்று அதனாலேயே முடிவெடுத்தேன்.

பின் எந்தப் பாடலைக் கேட்பது? முதலில் நினைவுக்கு வந்தது 'பாத காணிக்கை'யில் நடிகையர் திலகம் பாடுவதாக அமைந்திருக்கும் 'அத்தை மகனே போய் வரவா?'.  நடிகையர் திலகம் முக பாவங்களால் தன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பார். பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் அவரது கண்களையும், உதடுகளையும் , அவற்றின் அசைவுளையும், முகத்திலோடும் உணர்வுகளையும் கவனித்தீர்களென்றால் அவர் ஏன் நடிகையர் திலகம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். கூடவே அவ்வுணர்வுகளைத் தன் குரலில் வெளிப்படுத்தியிருக்கும் பி.சுசீலா ஏன் 'இசைக்குயில்' என்பதையும் ,  பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரரான கண்ணதாசன் ஏன் 'கவியரசர்' என்பதையும் , இசையமைத்த விஸ்வநாதன் & ராமமூர்த்தி இருவரும் ஏன் 'மெல்லிசை மன்னர்கள்' என்பதையும்   உணர்ந்துகொள்வீர்கள்.

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=qo49oFOiAFs