83 கலவரத்தைத் தொடர்ந்து முதல் முதலாக அந்நிய நாடொன்றில், அமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற நியூயோர்க் மாநகரில் அகதியாக அலைந்து கொண்டிருந்தபோது பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்த பாடகர்கள் நால்வர். அதனால் அப்பாடகர்கள் பற்றிய நினைவுகள் எழும்போதெல்லாம் எனக்கு அமெரிக்க மண்ணில் அகதியாக அலைந்து திரிந்த அந்த நாட்கள் நினைவுக்கு வந்து விடும். லயனல் ரிச்சி, சிந்தி லோப்பர், பில்லி ஜோயெல், மைக்கல் ஜாக்சன் இவர்கள்தாம் அப்பாடகர்கள். மைக்கல் ஜாக்சனின் 'திரில்ல'ரும் வெளியாகியிருந்த காலம். கறுப்பினப் பதின்ம வயதுச் சிறுவர்கள் ஆங்காங்கே நடைபாதைகளில் கசட் பிளேயரில் மைக்கல் ஜான்சனின் பாடல்களை ஒலிக்கவிட்டு உடம்மை வளைத்து, முறுக்கி, வெட்டி 'பிரேக் டான்ஸ்' ஆடுவார்கள்.

இவையெல்லாம் இன்று யு டியூப்பில் லயனல் ரிச்சியின் 'ஹலோ' பாடலைக் கேட்டபோது நினைவிலாடின. லயனல் ரிச்சியின் குரல் இதயத்தைக் கிழித்துச் சென்று நெஞ்சை உருக்க வைக்கும் குரல். இந்த 'ஹலோ' அவரது மிகவும் புகழ்பெற்ற பாடல். காதல் வயப்பட்ட ஆணொருத்தனின் உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகளும், அதற்கேற்ற இசையும் , அவனது அந்தக் காதலுக்குரிய அந்த பார்வையிழந்த பெண்ணின் நடிப்பும் இப்பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள்.

பாடலை முழுமையாகக் கேட்டுப்பாருங்கள். குரல் , இசை, பாடலில் இழையோடும் உணர்வுகள், நடிப்பு எல்லாம் நிச்சயம் உங்களை வசியப்படுத்தி விடும்.