
புதிய கற்கால யுகத்திலிருந்து அயர்லாந்தின் வேளாண்மையில் முக்கிய இடம் பிடிப்பது பார்லியும், கோதுமையும். பார்லி கால்நடைகளுக்காகவும் மேய்ச்சல் நிலங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டது. நாட்டில் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்காங்கே சிறியதாய் ஆரம்பித்த அயர்லாந்து சுதந்திர வேட்கையின் குரல்கள் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தணலாய் கனன்று 1916 முதல் நெருப்பாக கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
1920. பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தின் கீழிருக்கும் அயர்லாந்தின் தெற்கு மாகாணமான மன்ஸ்டெரில் கார்க் கோட்டத்தில் வசிக்கிறார்கள் பதின்பருவ இறுதி வயதுகளில் இருக்கும் சகோதரர்கள் டெட்டியும், டேமியனும். டெட்டி, அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 'அயர்லாந்து குடியரசு இராணுவ'த்தின் அங்கமான உள்ளூர் இரகசிய 'பறக்கும் படை'க் குழு ஒன்றின் தலைவன். டேமியன், தன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு லண்டனில் ஒரு மருத்துவமனையில் வேலை செய்ய கிளம்பும் உத்தேசத்திலிருக்கிறான்.
நாட்டில் காலனிய ஆதிக்கத்தின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருக்கிறன. டெட்டி, டேமியனின் நண்பன் மைக்கேல் ஒருநாள் ராயல் ஐரிஷ் காவல்துறையின் ஆங்கிலேய வீரர்களிடம் மாட்டி, தன் பெயரை ஆங்கிலத்தில் சொல்ல மறுத்ததற்காக கொல்லப்படுகிறான். லண்டன் கிளம்பும் டேமியன், இரயில் நிலையத்தில் பிரிட்டிஷ் வீரர்களின் அத்துமீறலையும், அவர்கள் ஐரிஷ் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஓட்டுநரைத் தாக்குவதையும் நேரில் பார்த்து லண்டன் செல்லும் தன் முடிவைக் கைவிட்டு திரும்ப வந்து அண்ணன் டெட்டியின் படைக் குழுவில் சேர்ந்துகொள்கிறான்.
டெட்டியின் குழு, உள்ளூர் ராயல் காவல்துறை முகாம் ஒன்றை முற்றுகையிட்டு ஆயுதங்களைக் கைப்பற்றுகிறது. ராயல் கவல்துறையைச் சேர்ந்த நான்கு வீரர்களையும் உள்ளூர் உணவகம் ஒன்றில் சுட்டுக் கொல்கிறது. டெட்டியின் குழுவில் பதின்ம வயதுகளின் ஆரம்பத்திலிருக்கும் கிறிஸ், ஆங்கிலோ-ஐரிஷ் செல்வந்தரான ஜான் ஹேமில்டனின் பங்களாவில் வேலை செய்கிறான். கிறிஸ்-ன் சமீபத்திய நடவடிக்கைகளால் சந்தேகம் கொள்ளும் ஜான் பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தகவல் கொடுக்கிறார். கிறிஸ்-ஸைப் பிடித்து விசாரிக்கும் உளவுத்துறை டெட்டி குழுவின் இருப்பிடத்தை அறிந்து, படையுடன் அவ்விடத்திற்குச் சென்று அவர்களைக் கைது செய்கிறது. ஆயுதங்களை அவர்கள் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள் என்றும், குழுவில் இன்னும் யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றும் கேட்டு தலைவன் டெட்டியை அவன் விரல் நகங்களை குறடால் பிடுங்கி சித்திரவதை செய்கிறது பிரிட்டிஷ் காவல்துறை. சிறையில் கம்யூனிச சித்தாந்தங்களில் ஈர்ப்பு கொண்ட இரயில் ஓட்டுநர் டேன்-னுடன் டேமியனுக்கு நட்பு ஏற்படுகிறது.
காவல்துறையிலிருக்கும் பூர்வீக ஐரிஷ்கார இளைஞன் ஒருவன் உதவியால் குழுவில் மூன்று பேரைத் தவிர மீதி அனைவரும் தப்பிக்கிறார்கள். டெட்டி குணமாகும் வரை குழுவிற்கு டேமியன் தலைமை வகிக்கிறான். சிறையிலிருந்த மூன்று பேர் காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள். பதிலுக்கு குழுவைப் பற்றி காவல்துறைக்கு துப்பு கொடுத்த செல்வந்தர் ஜான்-ஐயும், கிறிஸ்-ஸையும் கொன்று விடுமாறு குழவிற்கு உத்தரவு வருகிறது. டேமியன்தான் சுட்டுக்கொல்கிறான். கிறிஸ் தன்னைப் புதைக்கும்போது ஜான் அருகில் புதைக்க வேண்டாம் என்றும், தன்னைப் புதைத்த இடத்தை தன் அம்மாவிடம் காண்பிக்குமாறும் கேட்டுக்கொள்கிறான். பிரிட்டிஷ் காவல்துறை குழவிற்கு உதவி செய்யும் டேமியனின் தோழி Sinead வீட்டிற்கு வந்து அவளைத் துன்புறுத்தி டெட்டி மறைந்திருக்குமிடத்தை சொல்லுமாறு காவல்துறை மிரட்டுகிறது.
1921-ல் பிரிட்டிஷ் காலனி அரசு ஐரிஷ் குடியரசு இரணுவத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை அறிவிக்கிறது. அந்த 'ஆங்கிலோ-ஐரிஷ்' ஒப்பந்தத்தின்படி ஐரிஷ் நாட்டை இரண்டாகப் பிரித்து, ஒன்றிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என்றும், ஐரிஷ் நாட்டினர் அவர்களை அவர்களே ஆண்டுகொள்ளலாம் என்றும், ஆனால் பதவிப் பிரமாணம் பிரிட்டிஷ் ராயல் அரசின் கீழ் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கிறது. ஒப்பந்தத்தில் திருப்தி இல்லையென்றாலும், இப்போதைக்கு போர் நிறுத்தம் ஏற்படுவதால் அதை ஒத்துக்கொண்டு மேற்கொண்டு தேவையானவற்றை பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என்பது டெட்டி தரப்பினரின் கருத்து. ஆனால் டேமியன், டான் மற்றும் சிலருக்கு ஒப்பந்தத்தில் கிஞ்சித்தும் திருப்தியில்லை. அது ஒரு ஏமாற்று திட்டம் என்றும், ஒன்றிணைந்த ஐரிஷ் குடியரசு அமையும் வரை தொடர்ந்து போரிட வேண்டுமென்றும் விரும்புகிறார்கள்.
அதுவரை ஓரணியாக தீவிரத்துடன் அயர்லாந்தின் சுதந்திரத்திற்காகப் போராடி வந்த 'ஐரிஷ் குடியரசு ராணுவம்' இரண்டாகப் பிரிகிறது. 'ஆங்கிலோ-ஐரிஷ்' ஒப்பந்தத்திற்கு ஆதரவாக ஒரு அணி. அதை எதிர்க்கும் அணி. டேமியனும், டேனும் ஒப்பந்தத்திற்கு எதிராண அணியில் சேர்கிறார்கள். இரண்டு பிரிவினருக்கும் 1922-ல் டப்ளின் நகரில் ஆரம்பிக்கும் சண்டைகள் போராட்ட வடிவம் கொண்டு, தீவிர உள்நாட்டுப் போராக மாறுகிறது (இதைத்தானே பிரிட்டிஷ் அரசு எதிர்பார்த்தது). ஒப்பந்த ஆதரவுப் படைக்கு எதிராக, ஒப்பந்த எதிர்ப்பு அணி கொரில்லா போர்முறையைக் கையாள ஆரம்பித்தது.
சகோதரர்கள் டெட்டியும், டேமியனும் இப்போது ஐரிஷ் உள்நாட்டுப் போரில் எதிர்/எதிர் போர்ப்படையில்...
"The Wind That Shakes the Barley", அயர்லாந்து சுதந்திரப் போராட்டத்தையும், அதன்பின் உருவான அயர்லாந்து உள்நாட்டுப் போரையும் களமாகக் கொண்டு, இரண்டு ஐரிஷ் சகோதரர்களின் கதையைச் சொல்கிறது.
2006 கேன்ஸ் திரை விழாவில் Palme d'Or விருது பெற்றிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவிற்காக Barry Ackroyd-ம் விருது பெற்றிருக்கிறார். பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கின்றன (George Fenton). படத்தின் தலைப்பு 19-ம் நூற்றாண்டின் பிரபல ஐரிஷ் கவிஞர்/எழுத்தாளர் Robert Dwyner Joyce-ன் அயர்லாந்து புரட்சிப் பாடல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ராபர்ட்டின் பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.
(குறிப்பு: இப்போது 21-ம் நூற்றாண்டிலும் அயர்லாந்து தீவின் வடக்குப்பகுதி பிரித்தானிய ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறது)
படம், பார்லி கதிர்களை அசைக்கும் சுதந்திரக் காற்று...
"The Wind That Shakes the Barley" (2006 Irish War Drama film)
Language: Irish/English/Latin
Directed by Ken Loach
Written by Paul Laverty
Prime Video
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.