தெலுங்கு குடும்பத்தில் பிறந்த ஜானகி அம்மா நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப்பயிற்சியை மேற்கொண்டவர். பின்னர் ஏவிஎம் ஸ்ருடியோவில் ஒப்பந்த அடிப்படையில் கோரஸ் பாடும் பாடகியாகச் சேர்ந்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழியில் மட்டுமல்லாது கொங்கணி. துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஷ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என பதினான்கிற்கும் மேற்பட்ட மொழிகளில் 48.000 இற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய ஒரு இசையரசி. இத்தகைய ஒரு அற்புதமான மாயக் குரலின் அருகே அவரின் குரலோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்றமை நான் பெற்ற அற்புதமான ஒரு சக்தியின் பாக்கியம் என்றே கருதுகின்றேன்.

1960 களில் ‘கொஞ்சும் சலங்கை’ என்ற படத்தில் அவர் பாடிய ‘சிங்கார வேலனே தேவா...’ என்ற பாடல் இன்றும் தொடர்ந்து பலராலும் பாராட்டப்படுவதும், பாடப்படுவதும் மறக்கமுடியாததொன்றாகும்;. ஜானகி அம்மா போன்று உச்சஸ்தாயியில் எந்தப்பாடகி;களாலும் பாட முடியாதபோது அந்தப்பாடலைப் பாடி உலகப் புகழ் பெற்ற பெருமைக்குரியவர்.

ஜானகி அம்மாவின் குரல் ஒவ்வொரு ஆன்மாவோடும் பேசும் ஆற்றல் படைத்தது என்றால் அது மிகையாகாது. நாம் சொல்லத் தயங்கிய ஏக்கங்களை, கனவுகளை, காதலை ஒவ்வொருவரின் மனதிலும் விதைத்த குரல். தனிமையில் நான் அதிகமாக அழும்போதெல்லாம் துணையாகி துணிவு தந்து என்னை உருக வைத்தது அந்தக் குரல். ஓரு குழந்தைக் குரலாக, செல்லமாக, சிணுங்கலாக, ஆணாக மாறி மாறி மாயாஜாலம் காட்டும் அந்தக் குரலை பல தடவைகள் கேட்டுச் சிரித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். அண்மையில் ‘கண்ணா...’ என்று தன் மகனை நினைத்துப் பாடிய பாடலைக் கேட்டுக் கண்கலங்கினேன். ‘இந்த மன்றத்தில் ஓடி வரும்... என்ற அவரது பாடலை இன்றுவரை தொடர்ந்து கேட்பேன். அத்தகைய வாழ்தலுக்கான போராட்டத்தில் ஆன்மாவோடு பயணிக்க எல்லாக் காலங்களிலும் ஜானகி அம்மா போன்ற கலைஞர்களால் மட்டுமே முடியும் என்பதை நான் உணர்வதுண்டு.

ஜானகி அம்மாவின் அன்பு மகனின் மனைவியான உமாவின் அறிமுகம் ‘சலங்கை நர்த்னாலயா’ நிறுவனர் டாக்டர் ஜெயந்தி யோகராஜாவின்; மூலம் எனக்கு ஏற்பட்டது. 2012 ஆம் ஆண்டு என நினைவில் தட்டுகின்றது. அவ்வேளை ‘சிலப்பதிகாரம்’ என்ற நாட்டிய நாடகத்தில் நாட்டியத்தாரகைகளான ஜெயந்தி யோகராஜா கண்ணகியாகவும், உமா அவர்கள் மாதவியாகவும் நாட்டிய பாவங்களால் அசத்தி இருந்தார்கள். லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற அந்த நாட்டிய நாடகத்திற்கு ‘நவஜோதி’ நான் மேடை அறிவிப்புச் செய்தமையும் இன்று இனிமை தருகின்ற விடயம்.

அன்றைய காலப்பகுதியில்தான் லண்டன் ஹரோப்பகுதியில் இடம்பெற்ற உமா முரளியின் நாட்டிய நிகழ்சிக்கு ஜானகி அம்மாவும் வருகை தந்திருந்தார். அவ்வேளை உமாவின் நாட்டியத்தை பார்க்கும் ஆவலில் நானும் அங்கு சென்றிருந்த வேளையில்தான் இந்த இசை மேதையைச் சந்தித்தேன். அவரின் பாடல்களால் லயித்த எனக்கு அவரைப் பார்த்ததும் ஒருவித கூச்சத்தையும்;, மனதுள் அச்சத்தையும்; என்னுள் ஏற்படுத்தியது என்பது உண்மைதான். ஆனால் ஜானகி அம்மாவோ என்னவொரு எளிமையானவர் என்பதைப் புரிந்துகொண்டேன். எத்தகையவொரு அழகான அவரது பேச்சு... புன்சிரிப்புப் பரவிய முகத்தில் அவரின் பாடல்களின் சோகக் கோடுகள் எதுவுமே என்னுள் கீறவில்லை. அன்பான மகிழ்வான இனிமையான அவரின் உரையாடல் இன்றும் என்னைத் தடவிக் கொண்டுதான் இருக்கிறதே!
அவரின் பிரிவு சரித்திரமாகி எல்லாக் காலங்களிலும் ஆன்மாவோடு பயணித்து வாழ்ந்து கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கூகுள் நனோபனானா வழி வநகி


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்