யாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.யாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.

கைலாயமாலை
கைலாய மாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவ மாலையை எழுதிய மயில் வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதல் நூல்களில் ஒன்றாக கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது.

நல்லூர்க் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதர் பெருமான் மேல் பாடப்பட்டதாகக் தோன்றினும் யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்திற்கு முன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்கக் கூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும்.இது ஆறுமுக நாவலரின் தமையனார் புத்திரர் த.கைலாசபிள்ளையவர்களால் அச்சிடப்பட்டது.

யாழ்ப்பாண வைபவமாலை
யாழ்ப்பாண வைபவ மாலை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூற என எழுந்த ஒரு நூலாகும். 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பரால் கி.பி.1736 ஆம் ஆண்டளவில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரி ஒருவர் என நம்பப்படும் மேக்கன் என்பரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டதாக இந்நூலில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றினால் அறியப்படுகிறது.

கைலாயமாலை, வையாபாடல் பரராசசேகரன் உலா மற்றும் ராசமுறை போன்ற நூல்களை முதல் நூல்களாகக் கொண்டே யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றினார் என்று மேற்படி செய்யுளில் புலவர் எடுத்துக்கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் கால வரலாறு பற்றி கூடியளவு தகவல்களைக் கொண்டுள்ள தற்போது கிடைக்கக் கூடிய நூல் இதுவே ஆகும். எனினும் மேற்படி காலப்பகுதியின் இறுதியின் பின் 150 -200 ஆண்டுகள் வரை கழிந்த பின்னரே இந்நூல் எழுதப்பட்ட காரணத்தினால் பல்வேறு நிகழ்வுகளின் காலங்கள் தொடர்பிலும் மேலும் பல விடயங்களிலும் பிழைகளும் குழப்பங்களும் நேர்ந்துள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

எனினும் யாழ்ப்பாண வரலாறு தொடர்பில் இந்நூலின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இந்நூல் ஆரம்பத்தில் இராமாயணத்தில் இருந்து இராம இராவண யுத்தத்தின் பின் ஏற்பட்ட விபீஷணன் ஆட்சியைத் தொட்டுப் பின் மகாவம்சத்தில் இருந்து வட இந்தியாவில் இருந்து வந்த விஜயராஜனின் கதையையும் அவன் பின் அரியணையேறிய அவன் தம்பியின் மகனாகிய பண்டுவாசனதும் கதை கூறி பின் அவன் வம்சத்தில் வந்த ஒருவனிடமிருந்து தென்னிந்தியப் பாணன் ஒருவன் பரிசாகப் பெற்ற மணற்றிடர் என்ற இடம் யாழ்ப்பாணமான கதை கூறி யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொடங்குகின்றது.

இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள திருக்கேதீஸ்வரத்தின் புனரமைப்பு, கிழக்குக் கரையில் உள்ள திருக்கோணேஸ்வரம், தெற்கில் உள்ள சந்திரசேகரீச்சரம் மற்றும் வட கரையில் உள்ள திருத்தம்பலேஸ்வரம் என்பவற்றை விஜயராஜனின் திருப்பணிகளாக இந்நூல் கூறுகிறது. பின்னர் யாழ்பாடியின் வரவுக்கு முன்னரே வன்னியர்களின் குடியேற்றம் பற்றியும் பேசப்படுகிறது.

யாழ்பாடிக்குப் பின் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருந்து கூழங்கைச் சக்கரவர்த்தி அழைத்துவரப்பட்டமை, நல்லூர் ராஜரானியின் தோற்றம், யாழ்ப்பாணத்தில் மக்களின் குடியேற்றம் என்பவற்றை விபரிக்கும் இந்நூல் தொடர்ந்து இந்நாட்டை ஆண்ட மன்னர்கள் பற்றியும் அவர்கள் காலத்தில் நடந்த முக்கிய சில சம்பவங்கள் பற்றியும் சுருக்கமாக விபரம் தருகிறது. போர்த்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்ச்சியடைய முன் நடந்த சம்பவங்களிலும், காலப்பகுதிகளிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கீசர் ஆட்சி பற்றியும் பின்னர் அவர்களின் வீழ்ச்சி பற்றியும் கூறும் இந்நூல் ஒல்லாந்தரின் ஆட்சிபற்றியும் ஓரளவு கூறி நிறைவு பெறுகிறது.

ஒல்லாந்தர் ஆட்சியின் போது அவ்வரசின் அதிகாரி ஒருவரின் வேண்டுகோளின் பேரில் எழுதப்பட்ட இந்நூலில் காணப்படும் ஒல்லாந்தர் ஆட்சி பற்றிய சில கடுமையான விமர்சனங்களும் பிரித்தானிய ஆட்சி பற்றி வருகின்ற பகுதிகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்பது ஆய்வாளர் கருத்தாகும்.

வையாபாடல்
வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களில் ஒன்றாகும். இதன் காப்புச் செய்யுளிலும் தொடர்ந்து வரும் பல இடங்களிலும் இலங்கையின் வரலாற்றைக் கூறுவதே குறிக்கோளாகக்காணினும் இது வட இலங்கையின் வரலாறு பற்றியே கூறுகிறது. <br /><br />18ஆம் நூற்றாண்டின் மயில்வாகனப்புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலுக்கு முதல் நூலாக அமைந்த இதுவும் ஒன்றாகும். இந்நூலானது 104 செய்யுள்களினாலானது. இந்நூலின் ஆரம்பத்தில் அதனை ஆக்கியோன் பற்றி கூறும் பாடலிலே "ததீசிமா முனிதன் கோத்திரத் திலங்கு வையாவென விசைக்கு நாதனே" என்று வருவதனால் இதன் ஆசிரியர் பெயர் வையாபுரி ஐயர் ஆவார் என அறியமுடிகிறது. கி.பி. 15ஆம் நூற்றாண்டளவில் நூல் எழுதப்பட்டதாகும்.

இந்நூல் கி.பி. 1440ஆம் ஆண்டு பட்டத்திற்கு வந்த கனகசூரியசிங்கை ஆரியனுடைய இரண்டாவது புதல்வனாகிய 7ஆம் செகராசசேகரன் யாழ்ப்பாண அரசனாயிருந்த காலத்துடன் நிறைவெய்துகிறது. பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியன் ஆட்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால் இந்நூல் சங்கிலியன் காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு இதன் காலம் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடையில் இருக்கக் கூடும் என 1980 ஆம் ஆண்டில் கொழும்பு தமிழ்ச்சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான க.செ.நடராசா அவர்கள் கணித்துக் கூறியுள்ளார்.

பரராசசேகரன் உலா
யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றைக் கூறும் பழையமையான நூல்களுள் பரராசசேகரன் உலாவும் ஒன்றாகும். இது ஒரு பழைய பத்திய ரூபமான நூல். இந்நூலை இயற்றியவர் யார் என்பது உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை மனப்புலி முதலியார் இயற்றினார் என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நூல் பற்றிய ஒரு சில குறிப்புகளே கிடைத்துள்ளன தவிர நூல் முழுமையாக அகப்படவில்லை.

இராசமுறை
இராசகாரிய முறை என்ற நூல் இலங்கையை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி நடத்திய காலத்திற்கு சிறிது முன்னதாக எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்நூலை இயற்றியவர் யார் என்பது தெரியவில்லை. இந்நூல் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளனவே தவிர இந்நூலும் அகப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட நூல்கள் பற்றிய பழைய செய்யுள் ஒன்று வருமாறு;

உரராசர் தொழுகழன் மேக்கொ உனென்றோது
முதலந்தேசு மன்னனுரைத் தமிழாற்கேட்க
வரராசகையாலாய மாலை தொன்னூல்
வரம்புகண்ட கவிஞர்பிரான் வையாபாடல்
பரராசகேரன்றன் னுலாவுங் காலப்
படிவழுவா துற்றன சம்வங்க டீட்டுந்
திரராசமுறைகளுந் தேர்ந்தி யாழ்ப்பாணத்தின்
செய்தி மயில்வாகனவேற் செப்பினானே

நல்லூர் இராசதானி பற்றி அறிந்து கொள்ள உதவும் தற்கால நூல்கள்:

1. யாழ்ப்பாண சரித்திரம் எஸ்.ஜோன் யாழ்ப்பாணம் 1882
2. யாழ்ப்பாணவைபவ விமர்சனம்சுவாமி ஞானப்பிரகாசர் அச்சுவேலி1928
3. யாழ்ப்பாணச்சரித்திரம் முதலியார் செ.இராசநாயகம் யாழ்ப்பாணம்1933
4. யாழ்ப்பாணச்சரித்திரம் ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை யாழ்ப்பாணம்1933
5. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம் கா.இந்திரபாலா யாழ்.தொல்பொருளியற்கழகம், கண்டி 1972
6. நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சென்னை 1875
7. யாழ்ப்பாணச்சரித்திரம் ஆங்கிலேயர் காலம் செ.இராசநாயக முதலியார் யாழ்ப்பாணம் 1935
8. யாழ்ப்பாண அரச பரம்பரை கலாநிதி க.குணராசா கொழும்பு 2000
9. நல்லூர்க் கந்தசுவாமி குலசபாநாதன் நல்லூர் 1971
10. நல்லை நகர் நூல் கலாநிதி.க.குணராசா யாழ்ப்பாணம் 1987
11. ஈழத்து வரலாற்று நூல்கள் பேராசிரியர் சி.பத்மநாதன் பேராதனை 1970
12. நல்லூர் இராசதானி நகர அமைப்பு வ.ந.கிரிதரன் சென்னை 1999
13. யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு பேராசிரியர்.சி.க. சிற்றம்பலம்(பதிப்பாசிரியர்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1999
14. யாழ்ப்பாணச் சரித்திரம் ஒரு மீள் வாசிப்பு கலாநிதி.க.குணராசா யாழ்ப்பாணம் 2001
15. யாழ்ப்பாண மாவட்ட கோவில் பதிவேடு கச்சேரி, யாழ்ப்பாணம் 1892

மூலம்: http://www.yarlmann.lk/viewsingle.php?id=950