- கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரன் -அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.

முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.

இதிலவர் கோபுரம் பற்றிக் கூறியவற்றைப் பார்க்கலாம். முதலில் கூறுகின்றார் 1080 இல் சோழரால் தஞ்சைபெரிய கோவிலில் அறிமுகப்படுத்தபட்டதுதான் கோபுரம் என்கின்றார். அதன் பின் இன்னுமோரிடத்தில் கூறுகின்றார். இலங்கைத்தமிழர்களின்
கொயில் அமைப்பு கேரளாவுடன் அதிகம் தொடர்புள்ளது தமிழகத்துடனல்ல என்கின்றார். இன்னுமோரிடத்தில் கூறுகின்றார் தமிழ்நாட்டில் கோயில் வாசலிலுள்ளது கோபுரம் என்கின்றார். மேலுமோரிடத்தில் இலங்கையில் கோபுரம்
அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த இருபது , முப்பது வருடங்களில்தானென்கின்றார் .

தஞ்சைபெரிய கோயிற் காட்சி.. விமானம் -கோபுரம் பற்றிய இவரது கூற்றுகள் அவை பற்றிய இவரது அறியாமையை[ப் புலப்படுத்தின. முதலாம் இராசராசனின் தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்திலிருப்பது கோபுரமல்ல. அது விமானம். தஞ்சைப்பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் காலகட்டம் ஆலய வடிவமைப்பில் விமானங்கள் கோலோச்சிய காலகட்டம். விமானம் என்பது ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தின் மேல் (கருவறையின் மேல்) அமைக்கப்படுவது. அக்காலச்சோழர் காலத்தில் அமைந்திருந்த ஆலயங்களில் கோபுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலச்சோழர்களின் காலகட்டத்திலேயே அவற்றின் முக்கியம் அதிகரிக்கத்தொடங்கிப் பின்னர் விஜயநகரசப் பேரசு காலத்தில் , நாயக்கர் கோலத்தில் அவை ஆலய அமைப்பில் கோலோச்சத்தொடங்கின. விசயநகரப்பேரரசு காலத்தில்தான் ஆலயங்கள் பெருமண்டபங்களையும் கொண்டிருக்கத்தொடங்கின. மேலும் இவர் கூறுவதுபோல் அண்மைக்காலத்தில்தான் இருபது , முப்பது வருடங்களில்தான் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது தவறானது என்பது யாவருக்குமே தெரியும்.

இது தவிர இலங்கைத் தமிழருக்கும், கேரளாவுக்குமிடையிலான தொடர்புக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கைத்தமிழருக்கும் கேரளாவுக்குமிடையில் தொடர்புகள் இருந்தன. அவற்றின் விளைவாக இருபக்கமும் தாக்கங்கள் ஏற்பட்டன. அவை இயல்பானவை. அதற்காக இவர் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்றி விடுவது ஏற்கத்தக்கதல்ல. முப்பது , நாப்பதுகளில் யாழ்ப்பாணத்துக்கும், கேரளாவுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் உச்ச நிலையிலிருந்ததை அக்கால ஈழகேசரிப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உதாரணமாகப் புகையிலை வர்த்தகத்தைக் குறிப்பிடலாம்.

இன்னுமொரு விடயத்திலும் இவர் தவறிழைக்கின்றார். சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் ஒரு காலத்தில் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளில் அவ்விதமான சூழல் இருந்ததை மணிமேகலைக் காப்பியம் எடுத்துக்காட்டும், சிங்கள மன்னன் கஜபாகு கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக்கொண்டு வந்தது எடுத்துக்காட்டும். சிங்களவர்கள் அதாவது பெளத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடு ஏற்பட அது முக்கிய காரணம். சிங்கள மக்கள் மத்தில் ஏற்பட்ட பத்தினி வழிபாட்டை ஒட்டுமொத்தமாகத் தமிழ் இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டதாகத் தீர்மானித்துக் கருத்துகளைக் கூறுகின்றார் அஞ்சலேந்திரன். அது தவறானது. தமிழர்கள் மத்தியிலுல் கண்ணகி வழிபாடு அக்காலகட்டத்தில் ஏற்படத்தான் செய்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள கண்ணகியம்மன் ஆலய வழிபாட்டை அதற்குதாரணமாகக் காட்டலாம்.

இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத்தமிழர்கள் அதிகமாக தமிழகச்சோழர்களின், பாண்டியர்களின் பண்பாட்டுத் தாக்கங்களுக்கே ஆட்பட்டிருந்தார்கள். நல்லூர் சோழர் காலத்திலேயே பிரபலமான நகராக விளங்கியது. யாழ்ப்பாண அரசின் உருவாக்கத்தில் பாண்டியரின் தாக்கம் பலமாக இருந்ததையே வரலாறு எடுத்தியம்புகின்றது. நல்லூரில் அமைந்திருந்த முருகன் ஆலயக் கட்டடம் இடிக்கப்பட்டு , கோட்டை கட்டப் போர்த்துக்கீசர் பாவித்தனர் என்பது வரலாறு. யாழ்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக்கல்வெட்டொன்று நல்லூரை நல்லை மூதுரென்கின்றது.  இவ்விதமாக வரலாறிருக்க அஞ்சலேந்திரன் வரலாற்றையே திரிக்கின்றார்.

- கோபுரம் -

மேலுமின்னொன்றையும் கூறுகின்றார். அது: இலங்கைத் தமிழர்களின் புனித நூல் இராமாயணமோ மகாபாரதமோ அல்ல. சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் யாருமே புனித நூலாகக் கொள்வதில்லை. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களிலொன்றாகவே கொள்வார்கள். சிலப்பதிகாரம் உருவான காலத்தில் கூடச் சேரர்கள் தமிழர்கள். சேர நாடு தமிழகத்தின் ஒரு பகுதி. சேரர் மூவேந்தரில் ஒரு பிரிவினர்.

அஞ்சலேந்திரன் இலங்கைத்தமிழர்களின் , தமிழகத்தின் வரலாறு, இந்து, திராவிடக் கட்டடக்கலை பற்றிய ஞானம் நிறையவே பெற வேண்டியிருப்பதை அவரது இக்காணொளிக் கருத்துகள் புலப்படுத்துகின்றன.

கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனின் நேர்காணலையுள்ளடக்கிய காணொளி: https://www.youtube.com/watch?v=0QU8m4VOxXY&fbclid=IwAR3DS7PjLOUvrWe6a0nuJ9k4cqoqVwz5lgH3__zjNmEP_sZd9DVhKKN7HJ4