- அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான 'மறைக்கப்பட்ட வரலாற்றுத்தகவல்கள்' என்னும் கட்டுரைக்கான எதிர்வினையிது. - பதிவுகள்.காம் -


1980களில் நான் சென்னையிலிருந்த காலத்தில், என் மாணவப் பருவத்து நண்பனான இரகுபதியை சந்தித்ததேன். அக்காலத்தில்தான் இரகுபதியின் ஆய்வு நூல் சென்னையில் பதிக்கப்பட்டது. இராமாயணத்தில் அணிலாக Early Settlements in Jaffna என்ற ஆய்வு நூலின் பதிப்பில் எனது பங்கும் இருப்பதால் சில உண்மைகளை விளம்ப விரும்புகிறேன்.

வரலாற்றை, வரலாற்றியல் மரபோடு பதிவிட விரும்புவர்கள், அதைத் தாங்களே தேடி அறிந்து பதிவிடுவது நல்லது. மரபைக் கவனிக்காத கூற்றுகளுக்காக ஒதுங்கி இருக்கும் நண்பரை இழுத்து வருவதற்கு எனக்குப் பிரியமில்லை. இருப்பினும், நூல் பதிக்கப்பட்ட காலத்தில் சென்னையில் வாழ்ந்து , விடயங்களைத் தெரிந்துகொண்டு, இந்த நூலுக்கு நிதியுதவி வழங்கியவருள் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லவேண்டும்.
பத்மநாப ஐயரின் அமுதவிழாவின் சூம் நிகழ்வில், மு. நித்தியானந்தன் கூறிய விடயங்கள் மூன்று; முதலாவது, பத்மநாத ஐயர் அபாயகரமான சூழலில் தனியாக நூற்பிரதியை எடுத்துச் சென்றார் என்பது. பத்மநாப ஐயரும் பொ. இரகுபதியும் ஒன்றாகச் சேர்ந்துதான் கடல் வழியாகப் பயணித்தார்கள் என்பதை பத்மநாப ஐயரே பதிவிட்டிருக்கிறார். நித்தியானந்தன் கூற்று மாறுபட்டுத் தொனிப்பது ஏன்?

இரண்டாவது, நூலாசிரியர் தனது நூலில் பத்மநாப ஐயருக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்பது. நூலின் நன்றியுரையில் பெயர் குறிப்பிட விரும்பியிராத நண்பர் ஒருவர் (A friend of mine who wishes to remain anonymous) பதிப்பிற்கு முன்முயற்சி எடுத்து அடித்தளமிட்டார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அது தனக்குரியது என்று பத்மநாப ஐயர் பல ஆண்டுகளுக்குப்பின் பூடகமாக ஏற்றுக்கொண்டதுடன், தன் முயற்சியால் வந்த நூல்களின் பட்டியலில் இந்நூலையும் இணைத்திருக்கிறார். இதை நூலாசிரியர் இதுவரை மறுக்கவில்லை. அது அவர்கள் இருவருக்கும் இடையிலான புரிந்துணர்வு என்று தோன்றுகிறது.
மூன்றாவது , நூற்பதிப்புச் செலவு இந்தியப் பணத்தில் 55000 ரூபா என்றும் , பத்மநாப ஐயரின் முயற்சியால் வந்த பணத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டு , பின்னர் அது வெளியானபோது திருமதி. இரகுபதியின் பதிப்பாக வெளியானது என்ற பொருட்பட மு. நித்தியானந்தன் பேசியிருந்தார்.

எனக்குத் தெரிந்தவரை, பத்மநாப ஐயரின் சேகரிப்பால் முதலில் க்ரியாவில் வைப்பிடப்பட்ட தொகை 10000 ரூபா. வழங்கிய அன்பர்கள் யாரென்று இரகுபதிக்குத் தெரியாமலே இருந்தது. ஆய்வு நூற்பதிப்பு அரசியல் பின்னணியற்று இருக்கவேண்டும் என்பதை கருத்திற்கொண்டு இந்த நூற்பதிப்பிற்கான நிதியை எவ்வகையில் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது பற்றி தனக்கும் பத்மநாப ஐயருக்கும் இடையில் ஒரு முன் உடன்பாடு இருந்ததாகவும், அந்த உடன்பாட்டின் முக்கியத்துவத்தைக் கவனிக்காமல் , பத்மநாப ஐயர் பின்னர் பிறிதொரு நிதியை தனக்குத்தெரியாமல் பெற்றுக்கொண்டதால், தமிழியல் உறுப்பினராக இருப்பதிலிருந்தும் , தமிழியல் ஊடாக இந்த நூலை வெளிக்கொணர்வதிலிருந்தும் விலகிக்கொள்வதாக எழுத்து மூலம் பத்மநாப ஐயருக்கு தெரிவித்துவிட்டேன் என்று இரகுபதி அக்காலத்தில் எனக்கும் கூறியிருந்தார். ஏற்கனவே பெறப்பட்ட பணத்தை பத்மநாப ஐயர் யார் யாரிடம் கொடுத்து வைத்திருந்தாரோ அவர்களிடமே விட்டுவிட்டதாகவும், அந்தப் பணத்தில் எதையும் பயன்படுத்தவில்லையென்றும், அதுவரை நடந்த எழுத்துருவாக்கப் பணச்செலவை தனது குடும்பப் பணத்திலிருந்து க்ரியா பதிப்பகத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் இரகுபதி கூறியிருந்தார்.

இதற்குமேல், நூலின் பக்க உருவாக்கம் ,அச்சிடுதல், நூற்கட்டு போன்றவை க்ரியாவிற்கு வெளியில்வைத்து நூலாசிரியரின் செலவில் செய்யப்பட்டு வந்ததை நான் அறிவேன். நிலையைப் புரிந்துகொண்டு நண்பர்கள் சிலர் இயன்ற தொகையைத் தனிப்பட்ட முறையில் உதவியிருந்தோம். அது நூலில் பதிவிடப்பட்டிருக்கிறது.

நூல் வெளியான பின்னர், அரைவிலைக்கு மொத்த விற்பனையாக ஒரு தொகைப் பிரதிகள் விற்கப்பட்டு சுதர்சன் கிராபிக்ஸ் அச்சகத்தின் பாக்கி அடைக்கப்பட்டதையும் நான் அறிவேன். திரிக்கப்பட்ட கூற்றுகளைத் திரும்பத்திரும்பக் கூறி வரலாற்று உண்மைகளாக்க முயற்சிப்பதும் வரலாற்றின் பெயராலேயே நடைபெறுகிறது. கூற்றுகளைச் சீர்தூக்கி உண்மைகளையும் நோக்கங்களையும் உய்த்துணர்வதே வரலாறு என்பதற்காகவே எனது சாட்சியம் இங்கு பதிவாகிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.