
* கட்டுரையாளர்: முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.சந்திரன் ஆய்வாளர் திரு. உதயமூர்த்தி களாய்வு மேற்கொண்டனர். அப்போது நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் இரு நடுகற்கள் மற்றும் ஒரு கல்குவையை அரை கிலோமீட்டர் இடைவெளியில் அடையாளம் கண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதியில் கிழக்குப் பார்த்தவாறு இரு நடுகற்கள் உள்ளன. அவை நெல்லிவாசல் நாட்டு வனப்பகுதி எல்லையில் இருந்து இரண்டு கிலோமிட்டர் தொலைவிலும் சிங்காரப்பேட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளன. அவற்றில் இடப்பக்கம் உள்ள நடுகல் மூன்றடி உயரமும் இரண்டே முக்கால் அடி அகலமும் கொண்டதாக உள்ளது. அந்த நடுகல்லில் ஒரு வீரன் நேராக நின்றவாறு இருக்கிறான். அவனது இடதுகால் முன்னோக்கி நிலத்தில் ஊன்றி நிற்கிறது. வலது கால் இடதுகாலை நோக்கியவாறு உள்ளது. வலது கையில் கூர்மையான வாளை வைத்துள்ளான். இடையில் இடைக்கச்சையும் கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல் மற்றும் இடது பகுதி உடைந்துள்ளதால் அவனது இடது கையில் என்ன வைத்திருந்தான் என்று தெரியவில்லை. அவ்வீரனுக்கு வலப்புறமாக ஒரு காட்டு மாட்டின் உருவம் ஒன்று சிறிய அளவில் உள்ளது. அது அவ்வீரனைத் தாக்குவதாக உள்ளது.
இரண்டாவது நடுகல் இரண்டே முக்கால் அடி உயரமும் இரண்டரை அடி அகலமும் உடையதாக உள்ளது. முதல் நடுகல்லில் உள்ளது போன்றே இதில் உள்ள வீரனும் நின்றுகொண்டிருப்பதாகவே உள்ளது. இடக்கையில் கூரிய வாளினை வைத்துள்ள அவன் வலக்கையில் வில்லை வைத்துள்ளான். இடையில் இடைக்கச்சையும் கழுத்தில் அணிகளும் காணப்படுகின்றன. முதல் நடுகல் போன்றே இந்த இரண்டாவது நடுகல்லும் மேல் மற்றும் இடது பகுதி உடைந்துள்ளது. புருவத்திற்கு மேலுள்ள தலைப் பகுதி உடைந்துள்ளது. என்றாலும் அவ்வீரனின் கையில் வில்லைப் பிடித்திருப்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. அந்த இரு நடுகற்களின் அமைப்பை வைத்துப் பார்க்க அவை நாயக்கர் (15 ஆம் நூற்றாண்டு)காலத்தைச் சார்ந்தவை என்பது தெரிகிறது.
அந்த நடுகல் இருக்கும் இடத்திலிருந்து வடக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இரண்டு கல்திட்டைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சதுர வடிவில் உள்ளது. கற்களால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள அது இரண்டடி உயரமும் பத்தடி நீளமும் கொண்டதாக உள்ளது. இன்னொன்று தரையை ஒட்டிய நிலையில் உள்ளது. அது சிதைவுற்றுக் காணப்படுகிறது. அவை இரண்டும் ஆநிரை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்காக ஏற்படுப்படுத்தப்பட்ட கற்குவைகளாக இருக்கலாம் என்று கருத வேண்டி உள்ளது.
வனப்பகுதியில் இவ்வாறு அரை கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள இந்த இரு வகையான பண்டைய மக்களில் வாழ்வியல் எச்சங்களில் ஒன்று நடுகல் வடிவிலும் மற்றொன்று கற்குவை வடிவிலும் இருந்தாலும் அவை இரண்டும் ஆநிரை வேட்டையில் உயிர் நீத்த வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றை ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்துள்ள புளியானூர் வாழ் மலையாளி (மலைவாழ்) மக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.