- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்  


செப்டம்பர் 2003 இதழ் 45

[ இந்தியாவில் தற்போது வசித்து வரும் திரு .கே.சங்கர் ஒரு இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்ற்¢ல் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் பதிவுகளில் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். - பதிவுகள் - ]

கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற ஒவ்வொரு மனிதனும் ஆளுமை பெற வேண்டும். ஆளுமை பெற வேண்டுமென்றால் பல ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று எனது துவக்க படைப்பில் கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த இதழில் மனோபாவம் பற்றியும், சரியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்வதன் அவசியம் பற்றியும் கூறுகிறேன். சரியான மனோபாவம் (attitude) ஒருவருக்கு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி விளக்க அமெரிக்காவிலுள்ள புகழ் பெற்ற ஹார்வேர்ட்(Harvard) பல்கலைகழகம் நடத்திய ஒரு ஆராய்ச்சி பற்றி இந்த சந்தர்ப்பத்தில் நிச்சயமாக குறிப்பிட வேண்டும். ஒரு மனிதன் தன் கல்வியில், வேலையில், வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் முக்கியமானது எது என்பதை பற்றி ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்ட ஹார்வேர்ட் பல்கலைகழகம், முடிவில் சரியான மனோபாவம்( Right Attitude) 85% பங்கு வகிக்கிறது என்றும், புத்திசாலித்தனம் மற்றும் இதர விஷயங்கள் வெறும் 15% தான் என்றும் எடுத்துரைத்தது.

ஒருவனுக்கு புத்திசாலித்தனம்(intelligence) இருக்கலாம். திறமைகள்(Abilities) இருக்கலாம். ஆனால் இவற்றை சரியான மு¨றையில் பயன்படுத்தக் கூடிய சரியான மனோபாவம் இல்லாவிட்டால், அவை அனைத்தும் வீண். காரணம், ஒருவனது புத்திசாலித்தனத்தை வழி நடத்தி செல்லக் கூடிய சரியான சிந்தனையும், மனோபாவமும் அந்த புத்திசாலித்தனத்தை விட முக்கியமானது என்றார் ஒரு அறிஞர். சாதாரண விஷயம் போல் தெரியும் இது மிக பெரிய, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது அந்த நாட்டின் மனித வளம். மனித வளத்தில் உள்ள முழு ஆற்றலையும் நல்ல முறையில் முழுமையாக வெளிக்கொணர ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் சரியான மனோபாவம் தேவை. “சிறுதுளி பெரு வெள்ளம்” என்பார்கள். நாட்டின் ஒட்டு மொத்த மனோபாவம் குடிமக்களின் மனோபாவம் மூலம்தான் பிரதிபலிக்கிறது. ஆகவே இளைஞர்களே, இளைஞிகளே, நீங்கள் சரியான மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுங்கள்.

சரி.. மனோபாவம் என்றால் என்ன? சரியான மனோபாவத்தை வளர்த்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.

மனோபாவம் என்றால் அது ஒரு மன நிலை. மன நிலை சமயத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகிறது. அடிப்படை சிந்தனைகள்தான் மனோபாவத்தை ஆட்டுவிக்கும் பாம்பாட்டி. ஆகவே நல்ல சிந்தனைதான் நல்ல மனோபாவத்திற்கு வித்து. ஆனால் சிந்தனையை நாம் எவ்வாறு கட்டுபடுத்துவது? நல்லது, கெட்டது இரண்டுமே நம் கண்ணில் பட்டு தொலைக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம்? உண்மைதான். மனம் என்பது ஒரு காலியான மைதானம் போன்றது. அதில் பூச்செடிகளும் வளரும், புல் பூண்டும் தோன்றும். நல்ல தோட்டம் வேண்டுமென்றால், நாம் அடிக்கடி தோட்டத்திலுள்ள வேண்டாதவற்றை களைந்தெறிவது போல, மனத்தோட்டத்தையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வேண்டாத எண்ணங்களை களைந்தெறிய வேண்டும். கஷ்டமான காரியம்தான். ஆனால் இயலாதது இல்லை. முயன்றால் நிச்சயமாக முடியும். முயற்சிதான் முக்கியம்.

அந்த காலத்தில் ஔய்வு நேரங்களில் கூட கடவுளை ஜெபித்து கொண்டிருந்ததன் காரணம் இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு. யாரையாவது நினைத்தால் ஏதாவது சண்டை நினைவுக்கு வரும், அல்லது அவர் செய்த கெட்ட செயல் நினைவுக்கு வரும். அதனால்தான் இ¨றைவனையோ அல்லது இயற்கையையோ நினைத்தார்கள். இப்படியே செய்து பழக்கப்பட்டு நல்லதையே நினைக்க ஆரம்பித்தார்கள். கடவுள் பிடிக்காதவர்களோ, அல்லது நம்பிக்கை இல்லாதவர்களோ இயற்கையை பற்றியோ அல்லது வேறு ஏதாவது நல்ல விஷயங்களை பற்றியோ சிந்திக்கலாம். படைப்புத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

நல்ல மனோபாவத்தை வளர்த்து கொள்வதற்கு சில வழிகள் உள்ளன. எனக்கு சரியென்று பட்ட, நான் படித்த, கேட்ட, பார்த்த, அனுபவப்பட்ட சில விஷயங்களை உங்களுக்கு சொல்லுகிறேன்.

எல்லாவற்றிலும் நல்லதையே பாருங்கள்

முதலில் எதிலும் நல்லதையே பாருங்கள். உதாரணமாக, தங்கத்தை தேடி பூமியை தோண்டும் போது, முதலில் கிடைப்பது கற்களும், பாறையும், வேண்டாதவைகளும்தான். ஆனால் நாம் அதற்காக, தங்கம் தோண்டுவதை விட்டு விடுவதில்லை. தோண்டி, தோண்டி, தங்கத்தை வெட்டி எடுக்கிறோம். அது மாதிரிதான் மனிதர்களும். எல்லா மனிதர்களுக்குள்ளும் தங்கம் இருக்கிறது. முதலில் தெரிவது அவர்களது வேண்டாத செயல்கள்தான். அதை தாண்டி போனால்தான் அவர்களுக்குள் உள்ள நல்ல விஷயங்கள் புலப்படும். பொதுவாக ஒரு மனிதன் செய்யும் தவறுகள் உடனடியாக நம் கண்ணுக்கு தெரிகிறது. ஆனால் அவன் செய்யும் நல்ல விஷயங்களை நாம் உடனே பாராட்டுவதில்லை. மன நிலைக்கு இதுவே ஒரு உதாரணம்.

நல்லவற்றை பார்ப்பது, நல்லவற்றை அங்கீகரிப்பது, நல்லவற்றை தேடி பிடிப்பது என்பதை நாம் ஒரு பழக்கமாக வைத்து கொண்டு விட்டால் மன நிலையில் கண்டிப்பாக நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

தாமஸ ஆல்வா எடிசன், தன்னுடைய 68 வது வயதில், தான் கட்டிய தொழிற்சாலை தன் கன் முன்னேயே எரிந்து சாம்பலாவதை கண்டார். அப்போது அவ்ர் சொன்ன வார்த்தைகள் என்னவென்றால், “ என்னுடைய தவறுகளெள்ளாம் எரிந்து போய் விட்டன. இனி நிர்மாணிக்கும் தொழிற்சாலையில் தவறுகள் வராமல் பார்த்து கொள்வேன்” என்று. அவர் தனக்கு நேர்ந்த கெடுதலில் கூட ஒரு நன்மையையே பார்த்தார். உலகில் உள்ள எல்ல மனிதர்களுக்கும் இவரது இந்த செயல் ஒரு மிக சிறந்த முன்மாதிரி.

இருப்பதை போற்றுங்கள்; அதிலிருந்து வளம் பெறுங்கள்

இரண்டாவதாக, நமக்கு ஒன்று இல்லையே என்று நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதை விட, இருப்பதை வைத்து சந்தோஷப்பட தெரிய வேண்டும். அதற்காக நாம் உழைக்க கூடாது என்று அர்த்தமில்லை. ஒரு கல்லூரியில் இதை பற்றி பேசும் போது, ஒரு மாணவன் சொன்னான்,”சார், நானும் இதையேதான் சொல்லுகிறேன். 40 மார்க்குகள் போதும் என்று திருப்தியோடு நான் இருக்கிறேன். என் பெற்றோர்கள் திருப்தி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று”. இதைத்தான் அர்த்தத்தை, அனர்த்தமாக்கிக் கொள்வது என்று சொல்வார்கள். ஒருவனது மனநிலைக்கு ஏற்றவாறு அவன் அர்த்தம் செய்து கொள்கிறான். இது பற்றி ஒரு கதை உண்டு.

ஒரு முறை ஒரு அறிஞர் மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். மது பழக்கம் எவ்வளவு கொடுமையானது என்று விளக்க அவர் ஒரு செய்முறையை செய்து காட்டினார். ஒரு குடுவையில் அவர் தண்ணீரை நிரப்பினார். இன்னொரு குடுவையில் அவர் மதுவை நிரப்பினார். இரண்டிலும் அவர் புழுக்களை போட்டார். தண்ணீரில் இருந்த புழுக்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் மதுவில் இருந்த புழுக்கள் இரண்டாக ஆகி மதுவில் மேல் பகுதியில் மிதந்தன. உடனே அந்த அறிஞர், “ பாருங்கள், மாணவர்களே அந்த புழுக்களின் கதி என்னவாயிற்று என்று. இதிலிருந்து நீங்கள் என்ன தெரிந்து கொண்டீர்கள்? என்று கேட்டார்.” உடனே ஒரு மாணவன் எழுந்து, “ சார், மது குடித்தால் நாங்களும் இது போல மிதக்கலாம் என்று தெரிந்து கொண்டோம்” என்றானே பார்க்கலாம். அர்த்தத்தை அனர்த்தமாக்குவது என்பது இதுதான். இதை ஆங்கிலத்தில் “selective reasoning” என்று சொல்வார்கள். அதாவது தங்களுக்கு வசதியாக உள்ள மாதிரி ஒரு விஷயத்தை அர்த்தப்படுத்தி கொள்வது என்பதுதான் அது.

உலகத்திலேயெ மிக பெரிய அதிசயங்கள் என்று ஏழு அதிசயங்களை கூறுவார்கள். சீன பெருஞ்சுவர், தாஜ் மஹால், எகிப்து பிரமீடு, தொங்கும் தோட்டம்.. இப்படி. ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழ கடவுள் நமக்கு கொடுத்த கண்கள்தான் மிக பெரிய அதிசயம். குயில் கூவுவதையும். யானை பிளிருவதையும், நல்ல இசையை கேட்பதற்கும், நல்ல விஷயங்களை கேட்பதற்கும் நமக்கு இரண்டு காதுகளை கொடுத்திருப்பது அதிசயம். நம் கருத்துக்களை கூற, பேச நமக்கு கொடுக்கப்பட்ட வாய் ஒரு அதிசயம். உழைக்க நமக்கு கொடுக்கப்பட்ட இரண்டு கைகள் அதிசயம். நடக்க, ஔட நமக்கு கொடுக்கப்பட்ட இரண்டு கால்களும் அதிசயம். நம் உடற் கூறே ஒரு அதிசயம்தான். இப்படிப்பட்ட அதிசயங்களை மறந்து விட்டு நாம் எதையோ நோக்கி ஒடுகிறோம். ஆகவே இதை படிக்கிறவர்கள் இதில் உள்ள அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அனர்த்தத்தை பார்க்காதீர்கள்.

ஒன்றை நன்றே செய்; நன்றை இன்றே செய்

மூன்றாவதாக, ஒரு நல்ல விஷயம் உங்கள் கவனத்திற்கு வந்தால், அதை உடன் செய்து முடியுங்கள். “ ஒன்றை நன்றே செய். நன்றை இன்றே செய்” என்று சும்மாவா சொன்னார்கள். ஆங்கிலத்தில் இதை, “ Procrastination is opportunity’s natural assassin” என்று சொல்வார்கள். அதாவது ஒரு வேலையை ஒத்தி போடுவது, சந்தர்ப்பம் தன்னையே அழித்து கொள்ளுவதற்கு சமமாகும் என்பதுதான் இதன் பொருள். சோம்பேறிகள் வாழும் இடத்தில் மூதேவியும், உழைப்பாளிகள் வாழுமிடத்தில் ஸ்ரீதேவியும் வாசம் செய்வார்கள் என்று சான்றோர்கள் சொல்வார்கள். நாளை, பிறகு, அப்புறம்,பார்க்கலாம் போன்ற வார்த்தைகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை மிகவும் ஜாக்கிரதையாக பிரயோகிக்க வேண்டும். தள்ளி போடுவது என்பது தற்காலிகமாக நிம்மதியை கொடுப்பது போல இருக்கும். ஆனால் நிரந்தரமாக நம் நிம்மதியை அது கெடுத்து விடும். அடிப்படையில் பார்த்தால் இது பழக்கம் மூலம் வருவதுதான். பழக்கம் என்பது மனிதன் தானாக ஏற்படுத்திக் கொள்வதுதான். “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்று சொல்வார்கள். காரணம் ஒருவன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் அது சீக்கிரத்தில் அவனை விட்டு போகாது. ஆகவே ஒரு காரியத்தை உடனே செய்து முடிப்பது என்பது போன்ற பழக்கங்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் சிறிய வயதிலேயே உண்டாக்க வேண்டும்.
இதை பற்றி நிறைய நீதிக்கதைகள் கூட உண்டு. அவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

தீயவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்

“உங்களுடைய நண்பன் யார் என்று சொல்லுங்கள். உங்களை பற்றி சொல்கிறேன்” என்று சொல்வார்கள். ஆழமாக ஆராய்ந்து சொல்லப்பட்ட விஷயம் இது பற்றி விளக்க ஒரு அருமையான நீதிக்கதை ஒன்று சொல்கிறேன்.

ஒரு பருந்து ஒன்று தன் முட்டையை கோழிக்கூடு ஒன்றில் போட்டு விட்டு போய் விட்டது. முட்டையிலிருந்து வெளிப்பட்ட பருந்துக் குஞ்சு, கோழி குஞ்சுகளுடன் வளர ஆரம்பித்தது. கோழிக் குஞ்சுகள் என்னவெல்லாம் செய்யுமோ அதையே பருந்துக் குஞ்சும் செய்ய ஆரம்பித்தது. குப்பையை கிளறியது. கூச்சல் போட்டது. ஒரு நாள் அது வானத்தில் ஒரு பெரிய பருந்து வட்டமிட்டு செல்வதை கண்டது. உடனே அது கோழிக் குஞ்சுகளிடம் கேட்டது, “ யாரந்த பறவை, இவ்வளவு உயரத்தில் பறந்து செல்வது” என்று. உடனே கோழிக் குஞ்சுகள் சொன்னது. அதுவா? அதன் பெயர் பருந்து. அது ராஜ பறவை. நாமெல்லாம் அதன் மாதிரி பறக்க முடியாது என்று. உடனே பருந்துக் குஞ்சும் அதை நம்பி விட்டது. கோழிக் குஞ்சுகளோடே வாழ்ந்து, தன் உயிரை விட்டது. எவ்வளவு வீண் பாருங்கள். தான் யார், தன் பலம் என்ன என்று தெரியாமல், சேர்க்கையின் பலனைத்தான் அது பெற்றது. நல்ல சேர்க்கைதான் நல்ல பலனை தரும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

“நீங்கள் சாதிக்க துடிப்பவரோடு சேர்ந்தால், நீங்களும் சாதனையாளராவீர்கள்”.

“தொண்டு செய்பவரோடு சேர்ந்தால், நீங்களும் தொண்டு மனப்பான்மையுடையவராவீர்கள்”.

“சோம்பேறிகளோடு சேர்ந்தால், நீங்களும் . . . . அதேதான்”.

நீங்கள் யாரோடு பழகுகிறீர்கள் என்பது மட்டும் முக்கியமல்ல, யாரோடு பழகுவதை தவிர்க்கிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

ஒவ்வொரு நாளையும், நல்ல நாளாக தொடங்குங்கள்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் பெறும் வெற்றிதான், உங்களை ஒரு வெற்றி மனிதனாக்குகிறது. ஒவ்வொரு நாளும் வெற்றி பெற, ஒவ்வொரு நாளையும் நல்ல நாளாக தொடங்குங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக செலவழியுங்கள். தொடக்கம் நன்றாக இருந்தால், எல்லாமே நல்லதாக இருக்கும். நல்லதையே நினைத்து நாளை தொடங்குங்கள். ஏதாவது ஒரு நல்ல குறி¢க்கோளோடு நாளை தொடங்குங்கள். நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும். கெட்டது நடந்தால் கூட, நல்லதையே நினையுங்கள். எடிசனின் உதாரணத்தை எப்போதும் நினைத்து கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.

நல்ல மனோபாவத்திற்கு வழிகாட்டிகளாக சில விஷயங்களை பற்றி உங்களுக்கு சொன்னேன். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இது முடிவல்ல. ஆரம்பம்தான்.

இது இன்னும் தொடரும். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள்.

[ தொடரும் ]

கே.ஷங்கர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.