- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில் வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். - ஆசிரியர் -
ஆளுமை வளர்ச்சிக்கு மனோபாவம் எந்தளவிற்கு உதவும் என்பதையும், நல்ல மனோபாவத்தை பெற என்னென்ன வழிகள் உண்டு என்றும் சில வழிகளை உங்களுக்கு சொன்னேன். இந்த இதழில், மனிதன் வெற்றி பெற முக்கியமான ஒரு ஆற்றல் பற்றி உங்களுக்கு எடுத்துரைக்கப் போகிறேன்.
பொதுவாக யாரிடமாவது ஒருவரை பற்றிக் கேட்டால், அவர் உடனே அவரைப் பற்றி தனக்குத் தெரிந்தது, தெரியாதது என்று பலவற்றை பற்றி கூற ஆரம்பித்து விடுவார். இதை நான் தவறாக கூறவில்லை. அது மனித சுபாவம். சிலர் தெரியாது என்றும் சொல்லுவார்கள். அதனால்தான் நான் பொதுவாக கூறினேன். ஆனால் நான் இனிமேல் சொல்லப்போவதுதான் ரொம்ப முக்கியம். ஒருவரிடம் உங்களை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டால் “ ஹி ஹி என்னை பற்றி என்ன சொல்வது?” என்பார். ஒன்று, அவருக்கு தன்னை பற்றி எதுவுமே தெரியாதாக இருக்கலாம் அல்லது கூச்சப்படுபவராக இருக்கலாம். பெரும்பாலான நேரங்களில் உண்மை என்னவென்றால், பொதுவாக மனிதர்கள் தங்களை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள்.
வேலை நேர்காணல்களில் (job interviews) நடப்பது இதுதான். உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் என்பார்கள். எதை எதையோ படித்து வந்திருப்பார்கள். ஆனால் தன்னைப் பற்றி அழகாக எடுத்து சொல்ல அவர்களுக்குத் தெரியாது. நாம் பேசும் போது பேசும் நடையையும், மொழியையும், பேசும் சொற்களையும், வேகத்தையும், உடல் அசைவுகளையும், முகபாவங்களையும் வைத்து நேர்காணல் காண்பவர் நம்மை அழகாக படம் பிடித்து விடுவார். தன்னை முழுவதும் தெரிந்து வைத்திருப்பவனே ஞானி என்று சொல்வார்கள். அந்த காலத்திலேயே கவிஞர் கண்ணதாசன் எழுதினார், “ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்” என்று. தன்னை முழுமையாக அறிந்து கொள்வது என்பது அவ்வளவு சுலபமான வேலையில்லை. ஆனால் கொஞ்சம் முதிர்ச்சி பெற்றவுடன் தான் யார், தன்னுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, தன் விருப்பு, வெறுப்புகள் என்ன, தான் எந்த படிப்பை, தொழிலை எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று ஒரளவிற்கு தெரிந்து கொள்ள முற்பட்டால்தான் முன்னேற முடியும். இதுதான் தன்னை தெரிந்து கொள்ளும் ஆற்றல்.
ஆங்கிலத்தில் SWOT Analysis என்று சொல்லுவார்கள். அதாவது Strengths Weaknesses Opportunities Threats என்று இதைக் குறிப்பிடுவார்கள். தன்னுடைய பலம், பலவீனம் இவைகளை வைத்து தனக்கு என்ன சந்தர்ப்பங்கள் கிடைக்கும், எங்கு நமக்கு பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை ஒருவன் முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப அவன் வாழ்க்கையில் செயல்பட்டால் நிச்சயமாக அவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சுலபம். எறும்பின் வாழ்க்கையை அலசினால் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். இதை ஆங்கிலத்தில் “Ant Philosophy” என்று சொல்லுவார்கள்.
முதலாவதாக “ Ants Never Quit”. அதாவது எறும்புகள் தங்களுடைய குறிக்கோளையோ அல்லது பாதையையோ விட்டு விலகி செல்வதே இல்லை. யாராவது அவர்களுடைய பாதையில் குறுக்கிட்டால் எறும்புகள் உடனே தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டு வேறு வழியில் செல்லத் துவங்கி விடும். சளைக்கவே சளைக்காது. வாயில்லா ஜீவன்களாக இருப்பதால் அவை யாரையும் குற்றம் சொல்வதில்லை. ஆனால் மனிதர்கள் தங்களின் தோல்விக்கு ஆயிரம் காரணங்களை கண்டு பிடிப்பார்கள். இருட்டை குறை கூறுவதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது இருட்டை நீக்கும் என்று சொல்வார்கள். எவ்வளவு அருமையான வார்த்தைகள் பாருங்கள். இதை வாழ்க்கையில் கடைபிடித்தால் எவ்வளவு முன்னேறலாம்.
அடுத்து, எறும்புகள், கோடையில் மழைக்காலத்திற்காக உழைக்கும். “Ants think winter all summer”. கோடையில் அவை இளைப்பாறுவதில்லை. மாறாக, அவை கோடையிலேயெ மழை காலத்திற்காக தங்கள் உணவை சேர்க்க ஆரம்பித்து விடுகின்றன. தங்களால் மழை காலத்தில் ஓடி, ஓடி உழைக்க முடியது என்று அவைகளுக்கு தெரியுமாதலால் அவை கோடையிலேயே இந்த காரியத்தை செய்ய துவங்கி விடுகின்றன. பலம், பலவீனம் அறிந்து செயல்படுவதில் இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? மூன்றாவதாக, அவை மழை காலத்தில் கோடைக்காக உழைக்கின்றன. “Ants think summer all winter”. ஆம். மழை காலத்தில் அவை அடுத்து வரும் காலத்தைப் பற்றி சிந்திக்கின்றன.
நான்காவதாக, அவை எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதற்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேர்க்க முற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் “All- that- you- possibly-can” அதாவது “ எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்று சொல்லுவார்கள்.
இப்படி தங்களை முழுவதும் உணர்ந்து, அதற்கேற்ப செயல்படும் மனோபாவத்தை வேறு எங்காவது பார்த்திருக்கிறீர்களா? நம் பாடம் படிக்க வேறு எங்கும் செல்ல வேண்டாம். இயற்கையும், இறைவனுமே இ¢ப்படி பல விஷயங்களை நமக்காக வைத்திருக்கிறார்கள். நாம்தான் அவற்றை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
தன்னை தெரிந்து கொள்வது என்பது கல்வியில் மாணவர்களுக்கு மிக பெரிய அளவில் உதவுகிறது. எந்த கல்வியை மேற்படிப்பிற்க்கு தேர்ந்தெடுப்பது என்பது முதல், எந்த வேலையில் ஈடுபடுவது, எந்த தொழில் செய்வது என்பது வரை எல்லாவற்றிலும் இந்த “தன்னை அறிதல்” என்பது தேவைபடுகிறது.. நிறைய குடும்பங்களில், குழந்தைகள் தங்கள் விருப்பபடியே படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவார்கள். குழந்தைகளின் விருப்பம் என்ன, அவர்களது பலம் என்ன என்று, முதிர்ச்சி அடைந்த பெற்றோர்களே சிந்திக்க மாட்டார்கள். உதாரணமாக ஒரு மாணவன் எப்போதும் படம் வரைந்து கொண்டு இருப்பான். அவன் ஒரு சிறந்த வரைகலைஞனாக வர வாய்ப்பு உண்டு. அதில் ஈடுபட்டால் அவன் மாநில அளவிலோ, தேசிய அளவிலோ அல்லது ஏன் உலக அளவிலோ கூட சிறந்து விளங்க வாய்ப்பு உண்டு. ஆனால் பெற்றோர்களோ, போயும் போயும் அவன் ஒரு வரைகலைஞனாகவா வர வேண்டும். அவன் ஒரு கணிணி பொறியாளனாக வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்பார்கள். அவனுக்கோ அதில் கொஞ்சம் கூட விருப்பம் இருக்காது. அதில் ஈடுபட்டால் அவன் ஏனோ தானோ என்று படித்து அதில் பத்தோடு பதினொன்றாக இருப்பான். எப்போதுமே நாம் ஈடுபாட்டுடன் செய்யும் செயல் நமக்கு பெரிய வெற்றியை தேடி தரும். ங்கிலத்தில் இதை “Heart and Soul Affair” என்று சொல்வார்கள்.
படைப்புத் திறன் மிகுதியாக தேவைபடும் துறைகளில், குறிப்பாக இசை, திரைத்துறை போன்றவற்றில் வெற்றி பெறுவர்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அங்கு மன ஈடுபாட்டுடன் எதையும் செய்தால்தான் வெற்றி பெற முடியும். தொடர்ந்து நீடிக்க முடியும்.
மேலும் ஒருவர் தன்னுடைய திறமைகளை தொடர்ந்து காலத்திற்கேற்றவாறு மெருகேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் தொடர்ந்து வெற்றி பெற முடியும். இதற்கு அவர் தன்னை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். தாம் தற்போதுள்ள சூழ்நிலையில் வெற்றி பெற முடியுமா, அதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்றெல்லாம் யோசிக்க வேண்டும். இது பற்றி உங்களூக்கு ஒரு நீதிக்கதை சொல்லுகிறேன்.
மரங்களை வெட்டி போடும் வேலை ஒன்றை ரகுராம் என்பவன் ஒரு நிறுவனத்திற்காக செய்து கொண்டிருந்தான். அவன் பல வருடங்களாக வேலை செய்தும் அவனுக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் பரசு என்பவன் அங்கு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலை பார்த்த ஓரிரு வருடங்களிலேயே அவனுக்கு ஊதிய உயர்வு கிடைத்தது. ரகுராமுக்கு பொறுக்கவில்லை. ஓடினான் மேலதிகாரியுடம். அவர் சொன்னார். நீ பல வருடங்களாக தொடர்ந்து வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு நீ 5 மரங்கள் மட்டும் வெட்டுகிறாய். ஆனால் அவனோ ஒரு நாளைக்கு 8 மரங்கள் வெட்டுகிறான். எப்படி என்று அவனையே போய் கேளேன் என்றார்.
ரகுராம் பரசுவிடம் சென்றான். எப்படி உன்னால் 8 மரங்களை வெட்ட முடிகிறது. நான் பல வருடங்களாக 5 மரங்களைதானே வெட்டி கொண்டிருக்கிறேன் என்றான். உடனே பரசு சொன்னான். நான் ஒவ்வொரு முறை மரம் வெட்டும் போது என் கோடாலியை கூர்மையாக்குகிறேன். நீ எத்தனை முறை உன் கோடாலியை கூராக்கினாய் என்றான்.
இதுதான் பிரச்சனையே. நம்மில் எவ்வளவு பேர் தினம் தினம் நம் மூளையை சாணை பிடிக்கறோம். ஒரு அலுவலகத்தில் ஒருவன் குமாஸதாவாக சேர்ந்தால் அப்படியே ஓய்வு பெற விரும்புகிறான். தன்னை வளர்த்துக் கொள்ள முற்படுவதில்லை. முன்னுக்கு வர விரும்புபவன் தன்னை காலத்திற்கேற்றவாறு மாற்றி கொள்கிறான். வெற்றியும் பெறுகிறான். தொழிலதிபர் திருபாய் அம்பானி படிக்காதவர். அவருடைய காலத்தில் கணிணியெல்லாம் கிடையாது. ஆனால் அவருடைய தொழிற்சாலைகள் மிகவும் நவீனமானவை. அவற்றில் எல்லா புதிய தொழில் நுட்பங்களும் இருக்கும். இல்லாவிட்டால் தொழிலில் நிலைத்து இருக்க முடியாது என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்ததனால் அவர் தனக்கு தெரியாதவற்றை கூட தெரிந்து கொள்ள முற்பட்டார்.
நமக்கு பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே விட்டு விடாமல் அவற்றை உணர்ந்து, அவைகளை பலமாக மாற்ற எவனொருவன் முற்படுகிறானோ அவனே வெற்றியை தழுவுகிறான்.
தன்னை புரிந்து கொள்ளும் ஆற்றலில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. அது என்னவென்றால் தன்னை புரிந்து கொண்டவர்களுக்கு, மற்றவர்களின் கஷ்டத்தையும் புரிந்து கொள்ளும் மனப்பான்மை வரும். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்வார்கள். அது வராமலேயே அதை தெரிந்து கொள்பவர்கள்தான் புத்திசாலிகள். நல்ல சிந்தனையுடன் இருப்பவர்களால்தான் அது முடியும்.
ஒருவன் ஆளுமை பெற்று, தலைமை (leadership) தகுதியை பெற வேண்டுமென்றால் அதற்கு தன்னை புரிந்து கொண்ட தகுதி கண்டிப்பாக தேவை. ஆங்கிலத்தில் இதை “Knowledge of self” என்று சொல்வார்கள். Knowledge of self, knowledge of the job and knowledge of handling people, இவை அனைத்தும் இருந்தால்தான் ஒருவன் தலைமை தகுதியை பெற முடியும்.
தனக்கு தேவை என்ன, தான் என்னென்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே பல மனிதர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதில்லை. அவர்களால் தங்களுடைய வேலைகளில் முக்கியமானது எது, முக்கியமில்லாதது எது, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தெரியாத காரணத்தினால் எதையோ செய்து எப்படியோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நம்மை புரிந்து கொள்ளும் வேளையில், நான் என்ற அகங்காரத்தையும் விட்டு விட வேண்டும். நம்மால் முடியும் என்பது நம்பிக்கை. நம்மால் மட்டும்தான் முடியும் என்பது அகங்காரம். நாம் மட்டும்தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது சுயநலம். நாமும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதுதான் முதிர்ச்சி.
நம்மை தெரிந்து கொள்ள முற்படும்போது, self-analysis(சுய பரிசோதனை) செய்ய வேண்டும். நம்முடைய அன்றாட செயல்களை எடை போட்டு பார்க்க வேண்டும். ஒவ்வொரு செயலையும் செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு அதானல் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களை நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வது ஆரம்பத்தில் கஷ்டம் போல தெரியும். போக போக நம்முடைய எல்லா செயல்களுமே அர்த்தமுள்ளதாக கி விடும்.
Self-realization is the beginning of soul searching. அதாவது தன்னை உணருதல்தான் ஆத்மாவை புரிந்து கொள்ள முதல் படி. ஆகவே உங்களை உணருங்கள். வாழ்க்கையில் உயருங்கள்.
இது இன்னும் தொடரும். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள்
[ தொடரும் ]
கே.ஷங்கர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.