- பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  - ஆசிரியர்   -


இந்த உலகில் மாறாத ஒன்று உண்டென்றால், அது மாற்றம்தான். நம் கல்வியறிவு, பொருளாதார நிலை,  குடும்பச் சூழ்நிலை, நாட்டின் அரசியல் நிலைமை, தட்பவெட்ப நிலை என்று எல்லாவற்றிலும் மாற்றங்களை காண்கிறோம். நம் மனநிலையே சூழ்நிலைக்கு தக்கவாறு மாறிக்கொண்டே வருகிறது. இப்படி வரக்கூடிய மாற்றங்களை எப்படி எதிர் கொள்வது? மாற்றங்களை ஏற்காமல் அப்படியே இருந்து விடுவதா? இல்லை, மாற்றங்களுக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக் கொள்வதா? ஆளுமை வளர்ச்சிக்கு மாற்றங்களை எதிர் கொள்ளும் குணம் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி இந்த இதழில் உங்களுக்கு எடுத்துரைக்க போகிறேன். இதை பற்றி முதல் அத்தியாயத்தில் நான் ஏற்கனவே ஒரு குறளை மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறேன்.

                 "ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
                 கருதி இடத்தாற் செயின்".

என்று அன்றே வள்ளுவர் கூறினார். இதன் பொருள் என்னவென்றால்  "தகுந்த காலமறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், ஒருவன் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும்" என்பது. வெற்றிக்கான காரணங்கள் காலத்திற்கேற்றவாறு மாறுபடுகிறது. அந்தந்த காலத்தின் தேவைகளை புரிந்து கொண்டு, அந்த மாற்றங்களுக்கேற்றவாறு செயல்படுபவர்களே வெற்றிக் கனியை பறிக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த மாற்றம் பற்றி எழுதும் போது முக்கியமாக ஒரு விஷயத்தை பற்றி குறிப்பிட விரும்புகிறேன். விப்ரோ (WIPRO) ஒரு உலக புகழ் பெற்ற கணிணி மென்பொருள்(Computer Software) நிறூவனம். இந்த நி¢றுவனத்தின் தலைவர் அசிம் ப்ரேம்ஜியும் கூட மிக புகழ் பெற்ற மனிதர். உலகிலுள்ள மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர். கடும் உழைப்பாளி.. சமீபத்தில் அவர் மாற்றங்களை பற்றி குறிப்பிட்டு ஒரு நிகழ்ச்சியில்  பேசினார். அதிலிருந்து சிலவற்றை உங்களுக்காக சொல்கிறேன். இந்த சொற்பொழிவு ஒரு மிக பெரிய பாடமாக கருதப்படுகிறது. அவர் சொன்ன சாராம்சத்தை எடுத்துக் கொண்டு என் கருத்துக்களையும் சேர்த்து சொல்லுகிறேன்.

பாடம் 1: மாற்றங்களின் அறிகுறிகளை புரிந்து கொண்டு செயல்படுங்கள்

வாழ்க்கையில் மாற்றம் என்பது எல்லோருக்கும் வருவதுதான். சிலர் அதை உடனடியாக உணர்ந்து தக்க நடவடிக்கை எடுத்து தங்களை காத்து கொள்கிறார்கள். சில மாற்றங்கள் படிப்படியாக வருகிறது. சில மாற்றங்கள் வேகமாக வருகிறது. வேகமாக வரும் மாற்றங்களை பொதுவாக எல்லோரும் தெரிந்து கொண்டு செயல்பட்டு விடுவார்கள்.  ஆனால் படிப்படியாக வரும் மாற்றங்களை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். உதாரணமாக தவளை தண்ணீரில் இருக்கும் போது தண்ணீர் சுட ஆரம்பித்தால்  அதை தவளை உணராது. தண்ணீர் கொதிநிலைக்கு போகும் வரை கூட உணராது.ஆனால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதை உணர்ந்து அது தப்பிக்க முயற்சிக்கும். ஆனால் அது முடியாமல் போய் பெரும்பாலான நேரத்தில் கொதிநீரில் மூழ்கி செத்து விடும். அது போலத்தான் நம்மில் பலரும் மாற்றங்கள் படிப்படியாக வரும் போது அவற்றை உணராமல் இருப்பதால் வாழ்க்கையையே இழந்து விடுகிறோம். மாற்றங்களை உணர்ந்து செயல்படுபவனே, வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

பாடம் 2: "உங்கள் வாழ்க்கையில் எல்லாமே சரியாக போய்க் கொண்டிருக்கும் போது கூட, என்னென்ன மாற்றங்கள் வரலாம் என்று நினைத்து பாருங்கள்".

பல மனிதர்கள் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் வரை காத்திருப்பார்கள். அது  நடந்த பின்பு அவற்றை எப்படி கையாள்வது என்று பார்த்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். இது எப்படி இருக்கிறது என்றால் நோய் மிகவும் முற்றிய பிறகு டாக்டரிடம் போவது போன்றது. வண்டி முற்றிலும் பழுதான பிறகு, அதை பழுது பார்ப்பது போன்றது. உடம்பில் சிறிய மாற்றங்கள் தெரியும் போதே டாக்டரிடம் சென்றால் சிகிச்சை மிகவும் எளிமையாக முடிந்து விடும். முற்றிய பிறகு சென்றால் அது மிகவும் பத்தாகி விடுவது மட்டுமில்லாமல், செலவும் கட்டுக்கடங்காமல் போய் விடும். ஒருவரது எதிர்கால வெற்றிக்கு மிக பெரிய எதிரி யாரென்றால், அது அவரது கடந்த கால வெற்றிதான். கடந்த கால வெற்றிக்கு காரணமானவையெல்லாம், எதிர்கால வெற்றிக்கு வழி வகுத்து விடாது.

மேலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சுலபமாக எடுத்து கொண்டால் அங்குதான் பத்து ஆரம்பிக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் complacence என்று சொல்வார்கள். மாறாக நமக்கு தேவை, முன்கூட்டியே எதிர்நோக்கி செயல்படும் குணம் (anticipation). இதை பற்றி நான் ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதும் போது ஜப்பானியர்களின் "Anticipatory Management Techniques" என்று குறிப்பிட்டிருந்தேன். அதன் URL' ஐ உங்கள் வசதிக்காக குறிப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் internet மூலமாக அதை படிக்கலாம்.

http://www.deccanherald.com/deccanherald/mar12/av4.asp

அப்படி முன்கூட்டியே உணர்ந்து செயல்படுபவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை தவிர்க்க முடியும்.

பாடம் 3: மாற்றங்கள் மூலம் வரும் வாய்ப்புகள் என்ன என்பதை பாருங்கள்.

மாற்றங்களை எதிர்கொள்வது என்பது மனோபாவம் சம்பந்தபட்டது. ஒரு குவளையில் தண்ணீர் பாதியளவே நிரம்பியிருந்தால் அதை பாதி நிரம்பியது என்று சொல்வதும், பாதி காலியானது என்று சொல்வதும் எப்படி மனோபாவம் சம்பந்தப்பட்டதோ, அதை போலவே மாற்றங்களை எதிர்கொள்வதும் அப்படிப்பட்டதுதான். ஒவ்வொரு மாற்றத்திலும் ஏதோவொரு வாய்ப்பு ஒளிந்திருக்கிறது என்று நினைப்பவனே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். அப்படி ஒளிந்து கொண்டிருக்கும் வாய்ப்பை கண்டறிபவன்தான் உண்மையான புத்திசாலி. சில சமயம் வாய்ப்புகள் நம்மை தேடி வரும். பல சமயங்களில் நாம் வாய்ப்பை சாமர்த்தியமாக தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். வாய்ப்புகள் பல ரூபங்களில் வரும். அதனை  உணர்ந்து செயல்படுபவனே சாமர்த்தியசாலி.

பாடம் 4: "வழக்கத்தை சங்கிலி போல வளர்த்து கொள்ளாதீர்கள்"

வழக்கம் என்பது நம் அன்றாடம் செய்து பழக்கப்பட்டது. அதிலிருந்து எந்த மாறுதல்கள் வந்தாலும் நம் மனம் அவற்றை ஏற்று கொள்ள மறுக்கும். பழக்கமாகி போன விஷயத்தை ஏன் மாற்ற வேண்டும் என்று தோன்றும். அந்த வழக்கத்தில்தான் நாம் சிக்கி கொள்ள கூடாது. புதிய சிந்தனைகளையும், புதிய மாற்றங்களையும் வரவேற்று அதிலுள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும். வழக்கம் என்று சொல்லிக் கொண்டு பிரயோசனம் இல்லாத விஷயங்களை பின்பற்றிக் கொண்டு இருக்கக்கூடாது.

ஒரு சாமியார் தான் பூஜை செய்யும் போது ஒரு பூனை அவரை தொந்திரவு செய்ததால், அந்த பூனையை அருகிலுள்ள கம்பத்தில் கட்டி வைக்கும்படி உத்தரவிட்டார். தினந்தோறும் இது வழக்கமாகி போன ஒன்றாகி விட்டது. பல வருடங்களுக்கு பிறகு சாமியார் இறந்து விடவே, அவரது சிஷ்யர்களில் ஒருவன் சாமியார் விட்ட பணிகளை தொடர ஆரம்பித்தான். பூஜை செய்ய தொடங்கும் முன்னர், தன்னுடைய சிஷ்யனை அழைத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு பிறகு,ஒரு பூனையை அந்த கம்பத்தில் கட்டி வை என்று சொன்னார். புரியாத அந்த புது சிஷ்யன் முழித்தானாம். உடனே அருகிலுள்ள இன்னொரு சிஷ்யன் அவர் சொன்னதை செய்யவில்லையென்றால் அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். எப்படியாவது பூனையை பிடித்து கட்டி விடு என்றானாம். சிஷ்யனும் அரும்பாடு, பெரும்பாடு பட்டு பூனையை தேடிப்பிடித்து கட்டி வைத்தானாம். சாமியாரும் பூஜையை பிறகுதான் தொடங்கினாராம். இது எப்படி இருக்கிறது? பூஜைக்கும், பூனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க யாருக்குமே துணிவு வரவில்லை. வழக்கம் என்ற பெயரில் நாம் இப்படித்தான் பல வேண்டாத செயல்களை இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்.

பாடம் 5: தெரியாத விஷயங்கள் நமக்குள் ஏற்படுத்தும் பயம் இயற்கையானது என்பதை நாம் உணர வேண்டும்.

சிலர் நினைப்பார்கள், தைரியசாலிகளுக்கு பயம் கிடையாது என்று. உண்மை அதுவல்ல. தைரியசாலிகள் பயத்தை எதிர்நொக்குகிறார்கள்.  அது வந்தே தீரும் என்ற உண்மை தெரிந்தவர்கள் அதை எதிர்நோக்க பழகி விடுகிறார்கள். அவ்வளவுதான். பயத்தை உணருங்கள்.ஆனால் அது உங்கள் மனதை ஆக்ரமிக்க "அனுமதிக்காதீர்கள். அதனை எதிர்கொண்டால் தைரியம் பிறக்கும். ஒரு விஷயம் நமக்கு புரியாத போது, அது நமக்குள் ஒரு பயத்தை உண்டு பண்ணூகிறது. அனுபவம் அந்த பயத்தை போக்கி விடுகிறது.ஆதலால் எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ள முற்பட்டீர்களானால் அதுவே பாதியளவு பயத்தை குறைத்து விடும். அற்¢யாமை ஒரு பிரச்சனையே அல்ல. அறிந்து கொள்ள முயலாமல் இருப்பதுதான் பிரச்சனை.

பாடம் 6: உங்களை புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.

அனைத்தையும் கற்றவர்கள் யாரும் இந்த உலகத்தில் இல்லை. "கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு" என்பது ஆன்றோர் வாக்கு. நம் வேலையை இன்னும் சிறப்பாக செய்ய இன்னும் என்னென்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நாம் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது உயரே செல்ல ஒரு படிக்கட்டு. அவ்வளவுதான். அதுவே முடிவல்ல. அது ஒரு ஆரம்பம்தான். Phd. படித்தவன் கூட எல்லாவற்றையும் கற்று விட்டதாக எண்ண கூடாது. காலம் மாறும்போது, காலத்திற்கேற்ற கல்வியை பல வகைகளில் கற்க வேண்டியது காலத்தின் கட்டாயமகி விடுகிறது. இன்று அமெரிக்காவிலும் மற்ற பல வெளிநாடுகளிலும் தங்கள் மகன், மகளோடு தொடர்பு கொள்ள பல பெரியவர்கள் எழுபதை தாண்டியவர்களெல்லாம் மின்னஞ்சல் கற்று வைத்திருப்பது சாதாரண விஷயமாகி விட்டது. வேண்டாம் என்றிருந்தால் அது அவர்களுக்குதான் சவுகரிய குறைவு. புரிந்து நடப்பவன் புத்திசாலி. புரிந்து கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்

ஆகவே கல்வி என்பது ஒரு முடிவில்லா பயணம். கற்பதற்கு எந்த எல்லையும் கிடையாது. புதிது, புதிதாக பல விஷயங்களை கற்று கொள்ளுங்கள். உங்களை புதுப்பித்து கொண்டே இருங்கள். அது உங்கள் மனதையும் நிறைவு செய்யும்.

பாடம் 7: திறந்த மனப்பான்மையும், மாற்றத்திற்கு தயாராக  உள்ளவர்களும், உங்களை சுற்றி உள்ளார்களா என்று பாருங்கள்.

உங்கள் நண்பன் யார் என்று சொல்லுங்கள். உங்களை பற்றி சொல்லுகிறேன் என்று சொல்லுவார்கள். ஒருவருடைய சகவாசமே அவரை பற்றி பலருக்கும் எடுத்துரைக்கும்.

நீங்கள் யாருடன் நட்பு கொண்டிருக்கிறீர்கள் என்பது மட்டும் முக்கியமல்ல. யாரை விட்டு விலகி இருக்கிறீர்கள் என்பதும் முக்கியம். உங்களை சுற்றி உள்ளவர்கள் மாற்றத்தை எதிர்ப்பவர்களாக இருந்தால் நாளடைவில் அது உங்களையும் விடாது. உங்கள்ஆலோசகர்களை நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உங்களை சரியான பாதைக்கு அழைத்து செல்லுபவரா என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும்.

நல்ல நண்பர்களின் பழக்கமே, உங்களை நல்ல பாதைக்கு அழைத்து செல்லும். சூழ்நிலை மனிதனுக்கு மிக அவசியமான ஒன்று. நல்ல நண்பர்கள் சூழ்ந்திருப்பது மனிதனுக்கு ஒரு கவசம் போன்றது.

பாடம் 8: வெற்றிக்காகவே விளையாடுங்கள்

வெற்றிக்காக விளையாடும்போது, உங்கள் மனம் வெற்றிக்கான காரணங்களை தேடும். வேறு எதையும் பற்றி சிந்திக்காது. மனம் ஒரு நிலைப்பட்டு செயல்படும். வெற்றி  பெற வேண்டும் என்று நினைத்து விளையாடும் போது பல வழிகளை மனம் தேடும். அதில் நல்ல சிந்தனையை மட்டும் பயன்படுத்துங்கள். நேர்வழியிலேயே செல்லுங்கள். அதில் கிடைக்கும் சந்தோஷம் நிச்சயமாக குறுக்கு வழியில் வெற்றி பெறும் போது கிடைக்காது. உங்களால் முடிந்த வரை போராடி விட்டு மிச்சத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுங்கள். உண்மையான உழைப்பும், நல்ல சிந்தனையும், போராடும் குணமும் உங்களை கரை சேர்த்து விடும்.

பாடம் 9: உங்களை மதியுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த உலகம் உங்கள் வெற்றிக்காக உங்களை கொண்டாடும்.

எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். தோல்வி எல்லோருக்கும் வரும். னால் அந்த தோல்வியிலிருந்து பாடம் பெற்று, வெற்றி பெறுபவன்தான், உண்மையான வெற்றி பெற்றவனாகிறான். தோல்வியென்னும் அடித்தளத்தின் மீதுதான் பல மனிதர்கள் தங்கள் வெற்றி கட்டிடத்தை கட்டினார்கள். பிரகாம் லிங்கன், எடிசன், காந்தி  என்று எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். இதை பற்றி ஒரு அருமையான கதை ஒன்று சொல்லுகிறேன்.

ஒரு வண்ணாணின் கழுதை ஒன்று, ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. வண்ணான் எவ்வளவோ முயற்சித்தும் கழுதையை மேலே தூக்க முடியவில்லை. வண்ணான் யோசித்தான்.அந்த கிணற்றையும் மூட வேண்டும், கழுதைக்கும் வயசாகி விட்டது. தலால் மணலை அள்ளி கிணர்றுக்குள் போடுவது என்று முடிவு செய்தான். மண் வெட்டியை எடுத்து ஒவ்வொரு தட்டாக மணலை போட ஆரம்பித்தான். அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஒவ்வொரு முறையும் மணம் தன் மேல் விழும் போது கழுதை தன் மீது விழுந்த மணலை உதறி விட்டு மணல் மேல் ஏறிக்கொள்ளும். இப்படியே அது கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி வந்து விட்டது. நம் வாழ்க்கையிலும் தோல்வி என்ற மணல் நம் மீது கொட்டப்பட்டுக் கொண்டே வரும். நாம்தான் சாமர்த்தியமாக அந்த கழுதையை போல தோல்வியை உதறி விட்டு வெற்றியை நோக்கி மேலே ஏற பழகிக்கொள்ள வேண்டும்.

பாடம் 10: மாற்றிக் கொள்ளாதீர்கள்; உங்கள் அடிப்படை நற்பண்புகளை மட்டும்.

இவ்வளவு நேரம் மாறுங்கள். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி கொண்டிருந்தேன்.ஆனால் இப்பொது சொல்லுகிறேன். மாறாதீர்கள். உங்களை மாற்றி கொள்ளாதீர்கள். ஒரெ ஒரு விஷயத்தில் மட்டும். அது உங்கள் அடிப்படை நற்பண்புகளில் இருந்து. நற்பண்புகளை சார்ந்த உங்கள் அடிப்படை கொள்கைகளை மட்டும் மாற்றிக்கொள்ளவே, கொள்ளாதீர்கள். நற்பண்புகள் உங்களை ஒரு நாளும் கைவிடாது.

பாடம் 11: மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில்  வெற்றி பெறுவதென்பது, வெறுமே நம்மை காப்பாற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கையை விட பெரிய விஷயம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நமக்கு பலவற்றை கொடுத்த இந்த உலகத்திற்கு திருப்பி எப்படி நாம், நம் கடனை செலுத்த போகிறோம் என்பது மிக முக்கியமான விஷயம். "பட்ட கடனை தீர்த்து விடலாம். ஆனால் நாம் பெற்ற கடனை மட்டும் தீர்க்கவே முடியாது" என்று ஆன்றோர்கள் சொன்ன வார்த்தைகளை எண்ணி பாருங்கள். எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்று உங்களுக்கு விளங்கும். நம்முடைய வாழ்க்கையில் நாம் பெற்ற வெற்றிகளுக்கும், சந்தோஷங்களுக்கும் யார் யார் காரணம் என்று எண்ணி பாருங்கள். நேரடியாக சிலரும், மறைமுகமாக பலரும் முகம் தெரியாதவர்களும், இயற்கையும், இறைவனும் இன்னும் பலரும் இருப்பார்கள். நம்மை உருவாக்கிய இந்த பிரபஞ்சத்திற்க்கு நாம் எதனை விட்டு செல்ல போகிறோம் என்று எண்ணி பாருங்கள். நம்முடைய நற்செயல்கள் மட்டும்தான். ஆகவே இந்த உலக வாழ்க்கையில் எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள்.அளவிட முடியாத பணத்தை நம் அடுத்த சந்ததியினர்க்கு சேர்க்க வேண்டும் என்ற சாதாரண எண்ணத்தை விட, நற்செயல்கள்தான் நம்மை காலத்திற்கும் பேச வைக்கும். இ¢ந்த பூமிக்கும், வானத்திற்கும், மழைக்கும், வெயிலுக்கும், தாவரங்களுக்கும், காற்றுக்கும் நாம் செய்ய வேண்டியதெல்லாம் நன்மையோ இல்லையோ, நிச்சயமாக தீங்கு செய்யா கூடாது என்று நினைத்தாலே போதும் அந்த நினைப்பே நம்மை நல்ல செயல்களை செய்ய தூண்டும். நமக்கும், நம் சந்ததியினருக்கும் நாம் யோசிக்காமலேயே நல்ல வாழ்க்கை கிடைக்கும். இதை பற்றி உங்களுக்கு ஒரு உண்மை கதையொன்று சொல்லுகிறேன்.

ஒரு முறை Fleming என்ற ஒரு குடியானவன் ஒரு கூச்சலை கேட்டான். ஒரு சிறுவன் ஒரு நாயிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள போராடிக்கொண்டிருந்தான். அந்த சிறுவனை நாயிடமிருந்து காப்பாற்றி மீட்டான் அந்த குடியானவன்.

மறுநாள் காப்பாற்றப்பட்ட அந்த சிறுவனின் தந்தை படகு போன்ற ஒரு காரில் குடியானவனின் வீட்டிற்கு வந்தார். குடியானவனிடம் சொன்னார், உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன் என்று. பிறகு அவரே சொன்னார், " உன் மகனை நான் அழைத்து சென்று கல்வி பயில வைக்கிறேன். அவன் தந்தையை போன்ற குணம் உடையவனாக இருந்தால் அவன் பெரிய மனிதனாக வருவானென்று". பிற்காலத்தில் அந்த குடியானவனின் மகன்தான் புகழ்பெற்ற பென்சிலின் மருந்தை கண்டுபிடித்தான். அத்தோடில்லாமல், அந்த பணக்காரரின் மகனை காப்பாற்றவும் அந்த மருந்துதான் பயன்பட்டது. அந்த பணக்காரரின் மகன் வேறு யாருமல்ல.  இங்கிலாந்தின் புகழ் பெற்ற ப்ரதம மந்திரியான வின்ச்டன் சர்ச்சில் தான். குடியானவனின் மகன்தான் அலெக்சாண்டர் பிளெமிங்.

ஆகவே, உங்கள் திறமை, உழைப்பு, சிந்தனை ஆகியவற்றை எப்போதும் நல்ல செயல்களுக்கே பயன்படுத்துங்கள். அது உங்களை ஒரு போதும் கைவிடாது.

மறுபடியும் கூறுகிறேன். இந்த உலகில் மாறாத ஒன்று உண்டென்றால், அது மாற்றம்தான். நல்ல செயல்களுக்காக மாறுங்கள். நல்ல மாற்றத்தை கொண்டு வாருங்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். உங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற மின்னஞ்சலுக்கு எழுதி அனுப்புங்கள். நன்றி. வணக்கம்.

- பதிவுகள் , நவம்பர் 2003 இதழ் 47 -

[ தொடரும் ]

கே.ஷங்கர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


-  கி. ஷங்கர் (பெங்களூர்)  திரு .கே.சங்கர் ஒரு  இயந்திரவியற் பொறியியலாளர். சந்தைப் படுத்தலில் MBA பட்டம் பெற்றவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் அதிகமான கூட்டுஸ்தாபன அனுபவம் பெற்றவர். தற்போது தொழில்நுட்பம், நிர்வாகம், மனித வள அபிவிருத்தி ஆகியவற்றில் நிபுணராகப் பணியாற்றி வருபவர். அத்துடன் ஊடக எழுத்தாளராகவும் , பேச்சாளராகவும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றுபவர். அவர் வாழ்வின் வெற்றிக்கு அவசியமான ஆளுமை அபிவிருத்தி பற்றிய ஆக்கங்களைப் 'பதிவுகளி'ல் தொடர்ந்து எழுதவிருக்கின்றார். இது அவரது முதலாவது ஆக்கம். -