- பதிவுகள் இணைய இதழில் வெளியான ஓவியர் ஜீவன் (நந்தா கந்தசாமி) பற்றிய அறிமுகமும், அவரது சுயதரிசனமும் ஒருங்குறியில் 'பதிவுகளில் அன்று' க்காக ஆவணப்படுத்தப்படுகின்றன. -


பதிவுகள், செப்டம்பர் 2003 இதழ் 45
ஓவியர் ஜீவன் (நந்தா கந்தசாமி) ஓர் அறிமுகம்

கனடாவைப் பொறுத்த வரையில் ஓவியர் ஜீவனுக்கு அறிமுகம் தேவையில்லை. நன்கு அறிமுகமானவர். தற்போது கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரிந்து வரும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில்  பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம்பெயர்ந்ததிலிருந்து இன்றுவரை ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நம்மவர் மற்றும் கனேடிய பிரதான சமூகத்தினர் மத்தியில் அவ்வப்போது நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை.

கனடாவில் இவரது கண்காட்சிகள் பல தொராண்டோ, ஹலிபக்ஸ் ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளன. தொராண்டோவில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.  கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார். இதுவரை காலமும் நடைபெற்ற இவரது ஓவியக் கண்காட்சிகள் தனியாகவும், குழுவாகவும் நடைபெற்றுள்ளன. இது தவிர இவரது ஓவியங்கள் Slide Show ஆகவும் தொராண்டோவில் காட்டப் பட்டுள்ளன. 'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன.

இவரது ஓவியங்களைப் பற்றி வெளிவந்த விமரிசனங்கள்...

The Suffering of my people, an art exhibit by Geevan, hung at the Ballroom Gallery, 5500 Inglis Street in February- March, 1997. The opening of the show appropriately coincided with a fund-raising coffee house hosted by the local chapter of Amnesty International. It was a perfect match, Geevan's work exemplified the importance and immediacy of the work of Amnesty.

Geevan's images demand our attention. His frames are filled with stark Black and white renderings of contorted bodies and severed souls. Drawings from his own experience, The Suffering of My People expresses the violence and oppression that was once part of the artist's life. Geevan depicts painful memories of a homeland in distress. The emotions live on in these powerfully suggestive works.....  review by Scott Donovan, 1997/04/18 (The Universalist Unitarian Church of Halifax)


"..the works are exceedingly strong, blatant poster sized explorations of the violence present in human life..." - Marcus & Euba Margus, Toronto




செப்டம்பர் 2003 இதழ் 45 -மாத இதழ்


பதிவுகள், அக்டோபர் 2003 இதழ் 46
ஓவியம் பற்றியதொரு சுயதரிசனம்!  - நந்தா கந்தசாமி (ஜீவன்)

ஓவியத்தின் மீதான நேசிப்பு எவ்வாறு ஏற்பட்டது?

என்னைப் பாதித்த பாதிக்கும் அனேகமானவற்றை பதிந்து செல்லும் ஆவலே என்னை ஓவியம் வரையத்து¡ண்டுகிறது. அதுவே எனது ஓவியங்களில் பிரதிபலிக்கின்றது. சின்ன வயசிலிருந்தே கோட்டு ஓவியங்கள் வரைவதில் மிகவும் விருப்பமுடையவனாக இருந்திருக்கின்றேன். எனது தந்தையார் நன்றாக படங்கள் கீறுவார். எங்கள் ஊர்க்கோவிலின் திருவிழாக்காலங்களில் சப்பறம் தேர்ச்சீலைகளில் வண்ணம் போயிருக்கும் உருவப் படங்களுக்கு வண்ணம் திட்டும் போதும் நான் அவருடனிருந்த ஞாபகங்கள் இருக்கின்றன. அவரின் நல்ல அழகிய கையெழுத்தே என்னை ஓவியத்தின் பால் ஈர்ப்புற வைத்ததெனலாம். கீறும் படங்களை வீட்டின் சுவரெங்கும் ஒட்டி வைத்து ஒரு காட்சிக்கூடமாக வைத்திருந்திருக்கின்றேன். அப்போதெல்லாம் புத்தன் காந்தி யேசு கால்மாரக் லெனின் மாவோ ஸ்ராலின் எல்லோரும் ஒரே சுவரில் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வயசில் அவை எனக்கு பிரதியெடுக்கும் பயிற்சியினை கொடுத்திருக்கின்றன. எங்களது ஊர் வாசகசாலையில் ருஷ்சிய சீன செய்திப் புத்தகங்கள் நல்ல வண்ணத்தாள்களில் அச்சிடப்பட்டவை அப்போ கிடைக்கும். படங்களைப் பார்க்கவும் பாடப்புத்தகங்களுக்கு உறை போடவும் என அப்போ என் சேகரிப்புக்களுக்கு அவை உட்பட்டிருந்தன. இப்பவும் ஞாபகத்திலிருக்கின்றது லெனின் முகத்தோற்றம் வரைவதற்கு மிகவும் இலேசானதாக இருந்தது.

முறையான பயிற்சிகளுடன் ஓவியத்தை செய்யத்துவங்கினீர்களா?

நான் ஒருநாள் கூட ஓவிய வகுப்பில் பாடமேதும் படிக்கவில்லை. அவ்வாறிருக்க முறையான பயிற்சி என்பது முயற்கொம்பே தான். அப்போவெல்லாம் ஓவியப்பாடம் ஆறாம் வகுப்பிலிருந்தே தான் பாடத்திட்டத்தில் இருந்தது. ஓவியப்பாடம் வீண்செலவினங்களை பெற்றோருக்கு ஏற்படுத்தும். வண்ணக்கலவைகள் வாங்கவேண்டும் கீறும் தாள்கள் வாங்கவேண்டியிருக்கும் எனவே சங்கீத வகுப்புகளிலேயே மாணவர்கள் நிரம்பியிருப்பர். அப்படியிருந்தும் எனது ஆறாம் வகுப்பில் சித்திரபாடத்தை தெரிந்தெடுத்து அதற்கான உபகரணங்களும் வாங்கிய பிற்பாடு பாடசாலையில் இருந்த ஒரேயொரு ஓவிய ஆசிரியர் மாற்றலாகிப் போனதனால் வேறு வழியின்றி சங்கீதபாடத்தை படிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கின்றேன். அந்தப்பாடசாலையிலிருந்து உயர்கல்விக்காய் வெளியேறும் வரை அங்கு ஒரு ஓவிய ஆசிரியர் கூட நியமிக்கப்படவும் இல்லை அந்த ஓவிய அறை திறக்கப்படவுமில்லை. எத்தனையோ நாடகள் ஏக்கத்துடன் ஓவிய  அறையின் வாசலினை பார்த்து தவித்திருக்கின்றேன்.  கிடைக்காத விடயத்தினுடனான இந்தத்தவிப்பும் ஓவியத்தின் மீதான என் தேடலுக்கும் நேசிப்புக்கும் காரணமாக இருக்கலாம்.

ஆரம்ப கல்விக் காலங்களைத்தவிர்த்து அதன் பின் ஏன் நீங்கள் ஓவியத்தை பயில நினைக்கவில்லை?

யாழ்ப்பாண சூழலில் உயர்கல்விக்கென்று ஒரு வரைமுறையொன்று அது இப்பவும் இருக்கிறது அந்த வரைமுறைகளுக்குட்பட்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்களில் நானும் ஒருவனாயிருக்கின்றேன். ஆனால் பின்னர் பிரான்ஸில்  நான் இருந்த காலங்களைச் சொல்ல வேண்டும்  பாரிஸின் வீதிகள் அனேகமானவற்றை எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது.

நவீன ஓவியத்துடனான உங்கள் ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது ?

எங்களது கிராமம் கடற்கரையுடன் கூடியது எனது சிறுவயது ஓவியங்களில் கடற்கரைக்காட்சி அது மாலையாக இருந்தால் என்ன காலையாக இருந்தால் என்ன திசைகளின்றி சூரியன் உதிப்பதும் மறைவதுவும் அந்த தரவைக் கடலிலேயே இருக்கும். இப்படியே வயலில் உழவு நீர்இறைத்தல் என கிராமம் பற்றியதாகவே இருந்திருக்கின்றது ஆரம்பத்தில் இவ்வாறிருந்த எனது ஓவியங்கள் திடீர் பாய்ச்சலாய் நவீனம் சார்ந்ததற்கு எம் தேசத்தின்மீதான போரே காரணம்.

போருக்கும் நவின ஓவியத்திற்கும் ஏதும் தொடர்புகளிருக்கிறதா?

நீங்கள் கேட்பது புரிகிறது கலகங்களுக்கும் நவீனத்திற்கும் சம்பந்தம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. வானத்தை அண்ணாந்து பாரக்கும் போது வெளிர் நீலநிறமோ மாலை பொன்மஞ்சள் நிறமோ எனக்கு தெரியவில்லை. இரைச்சலுடன்  செட்டைவிரிக்கும் இயந்திரப்பிசாசுகளுக்கு ஒழித்தோடும் மக்களும் அவர்களின் அவலங்களுமே காட்சிகளாய் வந்து போகின்றன. எனவே இருண்டு கருகிப்போகிறது எனக்கான வானம்.  குண்டு பட்டு சிதறிச்சிதிலமாகிப்போகிறது பாடசாலைகள்  கோவில்கள் வீடுகள் மனிதர்கள் மிருகங்கள் என. இதனை ஆக்ரோஷமாய்  அதே கொடூரங்களுடன் சிதைவை சிதைத்தும் அழிவை அழித்தும் பதிவுசெய்ய மரபு வழிமுறைகளிலும் பார்க்க நவினம் அதிகம் கைகொடுக்கின்றது. வெளிச்சொல்ல வேண்டியதை சொல்லவும் குமுறிக்கொதித்து சொல்ல முடியாதிருப்பதை மறைத்து புதைத்து  சொல்லவும் என நவீனம் கருத்துப்புதையலாயிருக்கிறது. நவீனத்தில் வரைவிலக்கணங்களுக்கும் கோட்பாடுகளுக்குமென கட்டுப்பட்டிருக்க தேவையில்லாதிருப்பதும் அதன் விசாலமான ஒரு போக்கே.

எவ்வாறான மனநிலையில் நீங்கள் ஓவியத்தினை வரைகிறீர்கள்?

முன்பு கூறியது போல என்னைப்பாதிப்பவைகளை நான் கீறுகின்றேன். மக்களின் துன்பங்களும் துயரங்களும் என்னை வெகுவாக பாதிப்பவை. போர் எமது வாழ்வோடு இரண்டறக்கலந்துவிட்டது. இரண்டு சகாப்தங்களுக்கும் மேலாக போர் சப்பித்துப்பிய எச்சமாயிருக்கிறோம் நாம். தேசம் தொலைந்து அகதிகளாய் அவலப்பட்டுப்போன வாழ்க்கை இதுவெல்லாமே தான் எனது ஓவியங்கள்.

நிறத்தேர்வினை எவ்வாறு விளங்கிக்கொள்கிறீர்கள்?

வண்ணங்களும் அதன் கலவைகளினதும் தெரிவு ஓவியத்தின் கருப்பொருள்- அக புற தாக்கங்கள் மனநிலை போன்ற காரணிகளில் பெரும்பாலும் தங்கியிருக்கிறது. ஆரம்பகாலங்களில் கறுப்பு நிறத்தையே அதிகம் உபயோகித்திருக்கிறேன். தனியவே கறுப்பினால் சொல்லிய விடயங்களை நு¡று வண்ணக்கலவைகளால் சொல்ல முடியாத நிலமைகள் கூட ஏற்பட்டிருக்கின்றன். நிறங்களின் தெரிவில் கலாச்சார வாழ்வியலின் பாதிப்புக்களுக்கும் கணிசமான இடமுண்டு.

உங்களது ஓவியக்கண்காட்சிகளின் அனுபவங்களைச் சொல்லமுடியுமா?

இதுவரையில் எனது ஓவியக்கண்காட்சிகளெல்லாமே கனேடிய மண்ணிலேயே தான் நிகழ்ந்திருக்கின்றன. இது பல்லின மக்கள் வாழும் நாடு உலகின் முலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மக்கள் வந்து வாழ்கிறார்கள் பலர் எம்மைப்போன்று துரதிருஷ்டம் பிடித்த நாடுகளில் இருந்து வந்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான தேசங்களில் இருந்து வந்தவர்களின் கண்ணோரக் கசிவுகள் எனது ஓவியக்கண்காட்சிகளின் நிறைந்து போன அனுபவமாக இத்துன்பங்களும் துயரங்களும்  எமக்குமட்டுமேயான துன்பமாயில்லாமல் குண்டு விழுந்து சிதறிப்போகும் தேசம் எல்லாவற்றிற்கும் பொதுவானதாய் இருக்கிறது என்பதை சொல்லிச்சென்றிருக்கிறது. எனவே இங்கு அதனைச்சித்தரிக்கும் ஓவியமும் பொதுவானதொன்றாய் மொழியின் எல்லை கடந்து வாழ்பனுபவத்தை சொல்லி நிற்கிறது. இவ்வாறே தான் நவீன ஒவியம் தனக்காக்கான வரையறையை ஓரு பெருவெளியாய் விரித்து வைத்திருக்கிறது. அதுவே ஓவியனுக்கும் ஓவியத்திற்குமானதும் பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமானதுமென நீண்டு பரந்து கிடக்கிறது.

ஓவியத்திற்கும் ஓவியனுக்கும் பாரவையாளனுக்குமான தொடர்பு என்ன ? உங்களது ஓவியங்களுக்கு ஏன் நீங்கள் தலைப்பிடுவதில்லை?

ஓவியத்தினை வரையும் வரைக்குமே அவை படைப்பாளியினுடையவையாக இருக்கின்றன என்பது எனது கருத்து. அதற்கப்பால் அவை ஓவியங்களுக்கும் பார்வையாளனுக்கும் உரிய அவரவர்களுக்கான  வாழ்வியல் அனுபவம் சிந்தனை கிரகிப்புத் தளங்களின் தொடர்பு நிலைகளாகவே இருக்கின்றது. எனது எல்லா ஓவியங்களுக்கும் தலைப்புக்கள் இருக்கின்றன.  ஆனால் அவற்றை நான் பாரவையாளர்களுக்கு கொடுப்பதில்லை. இங்கு படைப்பாளி தலைப்பை கொடுத்து ஓவியத்திற்கான அடையாளத்தை நிலைநிறுத்தும் போது பார்வையாளனின் சிந்தனையின் எல்லையின் விரிவு மட்டுப்படுத்தப்படுகிறது. பார்வையாளனுக்கும் ஓவியத்திற்குமான பார்வை மொழியின் வீச்சை கட்டுப்படுத்தாது பரந்த ஒரு பெருவெளியினை அவர்களுக்காக விட்டு விடுதலே சிறப்பானது என நினைக்கிறேன்.

ஓவியத்தினை எவ்வாறு இரசிப்பது?

முதலில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். ஓவியம் பற்றிய வாசிப்புக்களில் அக்கறை கொள்ளவும் ஓவியங்களை கூர்ந்து கவனிக்கவும் அக்கறைப்படுவோமாயின் ரசிப்பது சுலபமாகலாம். எந்த ஒரு ஓவியத்திற்கும் அதற்கான தன்மை து¡ரம் காலம் என இன்ன பல காரணிகள் உண்டு.  பார்வைத்து¡ரம் ஒவ்வொரு ஓவியத்திற்கும் வேறுபடலாம் அது போன்றே  பார்வைக் காலமும் இது பார்வையாளனிலும் பெரிதும் தங்கியிருக்கின்றது . இவ்வாறான  தொழில் நுட்பத்தகவல்களடங்கிய புத்தகங்கள் நிரம்பவுமேயுள்ளன. வாசிக்க வேண்டும்.

ஓவியத்தின் முலம் செய்திகளைச் சொல்ல முயலும் போது அது தன் கலைத்துவத்தை இழந்து போய் விடும் சாத்தியக்கூறுகளை பற்றி பேசுவோர் பற்றி?

யாருக்கு தேவையாயிருக்கிறது கலைத்துவம் ? அழகியல் பற்றிய மரபுக் கோட்பாடுகளில் வளர்க்ப்பட்டவர்களினால் சொல்லப்படும் இது போன்ற அவது¡றுகளிலெல்லாம் நியாயமிருப்பதாகபடவில்லை. புதியன எப்பவுமே கண்டனத்துக்கும் உள்ளாவதும் அதனையும் மீறி அவை செல்வதும் தவிர்க்க முடியாதது. இது ஓவியத்துக்கு மட்டுமல்ல அனைத்து கலை இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தும். செய்திகள் எல்லாவற்றிலுமே சொல்லப்படுகிறன. அது கவிதையென்றாலென்ன நாடகம் கூத்து எதுவென்றாலும் அது மக்களுக்கான செய்திகளுடன் தான் போகிறது. போகவும் வேண்டும்.

ஓவியனாக இருக்கும் அனுபவத்தை சொல்ல முடியுமா?

இன்னமும்  முழுநேரமாய் ஓவியதிற்காக ஒதுக்கமுடியாமல் இருப்பது பெரும் குறையாகவே நினைக்கத் தோன்றுகிறது. அதுமட்டுமன்றி ஓவியம் பற்றி அறியவும் தெரியவும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. நிரம்ப படிக்கவும் பார்க்கவும் வேண்டும். கீறவும் கீறிய படங்களில் கரைந்து போகவும் என நேரத்தை தேடவேண்டியிருக்கிறது. ஓவியன் என்று சொல்ல நிரம்பவுமே தயக்கமிருக்கிறது.

நவீன கருத்தியல் ஓவியங்களின் முன்னோடிகள்?

மனித நாகரீக வளர்ச்சிக்கட்டங்களில் மொழியின் செழுமையான விருத்திக்கு முன்பாகவே குறியீடுகளிலும் உருவ வரைவுகளிலுமென தமது வழித்தடங்களை எண்ணக்கருக்களை செய்திகளை ஓவியமாக வரைந்து போயிருக்கிறது மனிதவரலாறு. குறிப்பாக செய்திகளையும் வழித்தடங்களையும்  தத்தமது குழுக்களுக்கிடையேயான பரிபாசையாக சங்கேத குறியீடுகளில் மறைத்து வைத்து கருத்து ஓவியங்களுக்கான வித்தை அப்போதே இட்டிருக்கின்றனர் எமது முன்னோர்கள். பார்வையும் கிரகிப்பும் அவதானமுமென ஆதிமனிதரின் பார்வை மொழியின் விருத்தியில் நவீனம் தொடங்கப்பட்டதெனலாம்.

நவீன ஓவியங்களின் பெரும் குறையாய் அது விளங்குவதில்லை என்பது பற்றி?

எதுவுமே தானாக விளங்கிவிடுவதில்லை பார்த்து பழகி தொட்டு உணரும் போதே தான் அது எமக்கு புலப்படத்தொடங்குகிறது அது எதுவாக இருந்தாலும்  எனவே பரிட்சயப்படுத்துதல் அதற்கு எம்மை தயாரப்படுத்துதல் என்பன அவசியமாகின்றது. நவீன  ஓவியமானது கிரகிப்புக்கும் சிந்தனைக்கும் வாழ்பனுபவத்திற்கும் என பரந்து விரியும் அனுபவக் கோர்வையினுடே புரிந்து கொள்ள வேண்டிதாக இருக்கிறது. எனவே அனுபவிக்க விளங்கத் தொடங்கும்.

துன்பங்களையும் துயரங்களையுமே வரையும் போது அது எல்லா மக்களாலும் விரும்பப்படுமா?

எல்லோருக்குமான வரவேற்பறை ஓவியங்களை வரைவதில் எனக்கு உடன்பாடில்லை. எனது ஓவியங்கள் என் புற அக நிலமைகளே அவற்றை சுயமாய் பதிவு செய்யவும் அவற்றின் தாக்கங்களை  வெளிப்படுத்தவும் முயல்கிறேன். எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டுமென்ற தேவைகள் எதுவுமிருப்பதாக படவில்லை எனக்கு. நான் எனது ஓவியங்களையே வரைகின்றேன்.

ஈழத்து ஓவியர்களென நீங்கள் குறிப்பிட்டு சொல்ல யாரிருக்கிறார்கள்?

போரினால் சின்னாபின்னப்படுத்தப்பட்டுப்போயிருக்கின்றோம்.   வன்முறையின் அனைத்து முகங்களும் பதித்துப்போன வடுக்களை காவித்திரிகிறோம் ஆனாலும் இந்தப்போரும் வன்முறையும் அதன் பதிவுகளாய்  இலக்கியவியலாளர்களை கவிஞர்களை ஓவியர்களை நாடகவியலாளர்களை விமர்சகர்களை என எமக்கு அடையாளப்படுத்தியிருக்கிறது. போருக்குமுன்னும்  போரும்போருக்கூடாகவெனவும் இரு பிரிவு எனப்பார்த்தால் எமது முன்னைய தலைமுறை ஓவியர்கள் பலர் வின்சர் விடுமுறை ஓவியர்கழகத்தை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் காலத்தின் பயணத்தோடு விடாது தொடர்ந்து பயணித்த ஓவியர்களில் மார்க் மாஸ்ரர் குறிப்பிட்டு கூறப்படவேண்டியவர். அவரது ஓவியங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. இன்று போரினால் பாதிக்கப்பட்டு உடைந்த நிலையில் இருக்கும் அவரது வீடு ஓவிய கூடமாக்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும்.

இவரின் மாணவர்கள் பலர் இன்று ஓவியத்துறையில் ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். இவர்களில் கிருஸ்ணராஐ¡ அருந்ததி வாசுகி கருணா என்போர் குறிப்பிடத்தக்கவர்கள் நிலாந்தன் இவர் மிகவும் கவனத்துக்குள்ளாக வேண்டிய ஒருவர்.  இவரின் கோட்டு ஓவியங்களை ஒரு சில கவிஞரும் ஓவிய விமர்சக துறையில் பட்டம் பெற்றவருமான அகிலனின் வீட்டில்  பார்க்க கிடைத்தன - ஓவியத்துறையில் பட்டப்படிப்பினை படித்தவரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரக இருக்கும் சனாதனனின் ஓவியக்கண்காட்சி கொழும்பில் பாரக்கக்கிடைத்தது. மற்றும் கொன்ஸ்ரன்ரைன் (இவரது ஓவியங்கள் இணயத்தளங்களில் பார்க்கக்கிடைத்தன) போன்றவர்கள் குறிப்பிடப்படவேண்டியவர்கள்  மற்றும் கனகசபை, ஆசை ராசையா ரமணி, சிவனேசன் போன்றவர்களை யாழ்ப்பாணத்தில் சந்திக்க கிடைத்தது. இங்கு மேலே குறிப்பிட்டவர்கள் நான் சந்தித்த அல்லது இணையத்தளங்கள் சஞ்சிகைகள் முலம் அறிந்து கொண்டர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கின்றேன் விடுபட்டிருப்பவர்கள் மன்னித்துக்கொள்ளவும்.

ஏனைய கலை இலக்கிய முயற்சிகள் ஆவல்கள் பற்றி ...

கவிதை கதை என ஆர்வமுண்டு. ஓவிய சிற்ப துறைகளிலேயே அதிக அக்கறை கொள்ள  நினைக்கிறேன்.  எமது மண்ணில் ஒரு ஆர்ட்  கலரி ஒன்றின் பலவீனமான விருப்பும் அடிமனதிலுள்ளது சிலைகளும் ஒன்றிரெண்டென செய்யத்தொடங்கியுள்ளேன் மேலும் பல அவற்றிற்கென வரைபடங்களாக உள்ளது அகதியென்னும் (4"x6"x8") Cast Iron சிலையொன்றினை யாழ்ப்பாணத்து மையத்தில் செய்து வைத்துவிட விருப்பமுள்ளது.

ஓவிய புதிய கோட்பாடுகள் பற்றி?

நவீன கலையிலக்கியவியலாளர்களின் தேடல்களும் படைப்புக்களும் மக்களுக்கானதாக  இருபதாம் நு¡ற்றாண்டின் தொடக்கத்திலேயே பெரியதொரு மாற்றத்திற்கானதாகின்றன. டாடாயிஸ்டுக்கள் அடித்தட்டு மக்களல்லாதோர் ஓவியங்கள் யாவற்றையும் அடித்து நொருக்கவும் அழித்தொழிகக்வும் செய்கின்றனர். மன்னர்களையும் மகாராணிகளையும்  மாளிகைகளையும் என கீறிக்கொண்டிருந்த ஒவியர்கள் தங்கள் து¡ரிகைகளை உழைப்பவர்கள் பக்கமும் துன்பம் துயரங்களின் பாலும் திருப்பும் மாற்றங்கள் நிகழத்துவங்குகின்றன. மன உளவியல் ஆய்வுகளும் கோட்பாடுகளும் உருவாகின்றன. இவற்றின் தாக்கங்கள் கலை இலக்கியத்துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகிறன. புதிய ஓவியக்கோட்பாடுகளும் சிந்தனைகளும் உருவாகின்றன. இம்பிரசனிசம் போஸ்ட் இம்பிரசனிசம் பியுட்சரிசம் டாடாயிசம சர்ரியலிசம் கியுப்பிசம் என அவை ஏராளமாய் விரிவாகின்றன. கலை இலக்கியவியலாளர்கள் தமக்கேயுரியதாய் படைப்புக்களை படைக்கவும் விமர்சகர்கள் கொள்கைகள் கோட்பாடுகள் என அவை பற்றிய சார்பியக்கங்களை தேடவும் என தொடங்குகிறது இருபதாம் நு¡ற்றாண்டு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பதிவுகள், அக்டோபர் 2003 இதழ் 46 -மாத இதழ்