- ரொறொன்ரோ கல்விச் சபைத் தமிழ்ப் பாடநூல்கள் பற்றிய விவாதமொன்று பதிவுகள் இணைய இதழில் 2005-2006 காலப்பகுதியில் நடந்தது. அதில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம், 'காலம்'செல்வம்' , கவிஞர் செழியன் ஆகியோர் பங்கு பற்றினர். அதில் வெளியான கட்டுரைகள்.-

பதிவுகள்,  மார்கழி 2005 இதழ் 72
சந்திரனைக் காட்டிய விரலைப் பார்த்து அதுவா? என்று கைவிரலைப் பார்த்த அதிபுத்திசாலியின் கதையின் வெளிப்பாடு தான், சமீபத்தில் ரொறொன்ரோ கல்விச் சபையின் தமிழ்ப் பாடநூல்கள் பற்றி பத்திரிகைகளில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினைகளாக வெளிவந்த பிதற்றல்கள். அதை எழுதியவர்களில் ஒருவர் ‘ஆவி எழுத்தாளர்’ (ghost writer). ‘முப்பது காசுக்காக’ தன் ஆன்மாவை விற்றவர். மற்றவர், குழப்பவாதி. என் கட்டுரையின் நோக்கத்தையோ அதை ஒழுங்காக வாசித்துப் புரிந்து கொள்ளாமலோ, முட்டையில் மயிர் புடுங்குகிறார். ஆனால். அவர் சொல்லியதில் நான் புரிந்து கொண்டது, அது ‘வரைவு’ என்பதால், அதில் பல நூற்றுக் கணக்கான பிழைகள் உள்ளன, அவற்றை நாம் திருத்துவோம் என்பதே. அந்த அளவுக்காவது தங்கள் பிழையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

மற்றது. என்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ எழுதும் அவதூறுகள், அநாகாரிகமான தாக்குதல்கள், ‘வன்பொருள்’ பாவிப்போம் என்ற பயமுறுத்துதல்கள், கனடிய நாட்டின் குற்றவியல் சட்ட திட்டங்களோ, பத்திரிகைச் சட்ட திட்டங்களோ மனித உரிமை மீறல் சட்டதிட்டங்களோ தெரியாத இனவாதிகளின் (racist utterances) எழுத்துக்கள். ஆன்மாவை ‘முப்பது காசுக்காக’ விற்றவருக்காகவோ, நன்னூலாரின் கடை மாணாக்கா;களுக்காகவோ, இந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை. இதை நான் எழுதுவது இரண்டு காரணங்களுக்காக.

ஒன்று, இங்கு தமிழ் கற்பிப்பதற்குத் தகுதியும் திறமையும் அனுபவமும் பெற்ற பல நூற்றுக்கணக்கான தமிழாசிரியர்களின் மனம் புண்படும்படியாக மடத் தமிழாசிரியர்களை என்று அவர்களை அவதூறு செய்து ஒரு அக்கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இலங்கையிலும் மற்றும் நைஜீரியா, மாலைதீவு, எதியோப்பியா, செசல்ஸ். சாம்பியா, தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற பல நாடுகளிலும் கல்வி கற்பித்து நிறைய அனுபவம் பெற்றவர்கள்;, ஆசிரிய பயிற்சியை இலங்கையில் முறையாகப் பெற்று, அங்கு வகுப்பறை ஆசிரியர்களாக பல தசாப்தங்களாகக் கல்வி கற்பித்த அனுபவம் பெற்ற, இங்கும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ரொறொன்ரோ, பீல், டர்ஹம், யோர்க் போன்ற கல்விச் சபைகளில் தங்கள் தகைமைகளினால் முறையாக நேர்முகப் பரீட்ஷைகளில் தெரிவு செய்யப்பட்டு, பெற்றோர்களாகவும் அதேவேளை நல்லாசிரியர்களாகவும் தங்கள் பணியை ஒழுங்காகவும் கடமையுணர்ச்சியுடனும் செய்து வரும் பல நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் சார்பாகத்தான் இதை எழுதுகிறேன். கல்வித் துறையில், நேற்றடித்த கச்சான் காற்றுக்கு இன்று கரையடைந்த சிப்பிகளும் சோகிகளும் அல்ல, அவர்கள்.

இலங்கையில் எத்தனையோ பரீட்சைகளை எடுத்து சித்தியெய்து, ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் இரண்டு-மூன்று வருடங்கள் என்று ஆசிரிய பயிற்சிக் கல்வியும் எத்தனையோ முறை ஆசிரியர்களுக்கான ‘செமினார்கள், சிம்போசியம்கள், உள்வாரி, வெளிவாரிப் பயிற்சிகள்’ பெற்றவர்களுக்கு, ‘தகுதிகாண் தேர்வு’ வைக்கப் போகிறவர்களின் தகுதியை நாம் அவர்கள் ‘எழுதிய’ ‘பயிற்சி நூல்களில்;’ பல நூற்றுக்கு மேற்பட்ட எழுத்து, சொல், வாக்கிய அமைப்புப் பிழைகளுடன் எழுதியவற்றில் கண்டு கொண்டுள்ளோம். நாம் வேறிடங்களுக்குச் சென்று அவர்களின் தகைமைகளைத் தேட வேண்டிய அவசியமில்லை. The proof is in the pudding.

(It) was a tale told by an idiot, full of sound and  fury, signifying nothing என்று  சேக்ஸ்பியர், இவர்கள் சொல்லும் கதைகளைப் பற்றி, நன்றாகவே சொல்லியிருக்கிறார்.

இவர்கள் தமிழ் கற்றதோ, தமிழில் கற்றதோ தவறில்லை. பழந் தமிழ் இலக்கண இலக்கியம் மட்டும் கற்று, அவற்றுடன் காலத்தால் உறைந்து (fossilised)  போனவர்கள் இவர்கள். அவற்றைக் கற்றபின்னா நவீன மொழி வளர்ச்சி கருத்துக்கள் எதுவுமற்ற, தம் இரண்டு காசுக்கும் செலவாணியாகாத (two cents worth) கருத்துக்களை,  விவேகமும் பன்மொழி அறிவும் கொண்ட இங்குள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பலவந்தமாகத் திணிக்க முற்படுகிறார்களே அதைத் தான் தமிழ்ப் பெற்றோர்களும் ஆசிரியர்களும், தமிழில் உண்மையான ஆழ்ந்த அறிவும், பற்றுள்ளவர்களும் சேர்ந்து, தடுக்க வேண்டியிருக்கிறது.

இக்கட்டுரையை நான் எழுதுவதற்கு எனது இரண்டாவது காரணம் இதுதான்: இது என் முன்னைய கட்டுரையைப் படித்தவர்களுக்கு முக்கியம். ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட, வழக்கிலுள்ள சொற்களும் தவறான சொற்கள் என்று குறிப்பிட்ட பட்டியலில் உள்ள வார்த்தைகள் ஆசிரியர்களுக்குப் புரியவில்லை என்பதை அப்படியே எடுத்துக் கொண்டவர்களுக்கு, அதை நான் சொல்லவில்லை. அது உன் மூளைக்குள் புகுந்து விட்டதா என்று ஆசிரியர் கேட்க, வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மாணவன், ‘வால் இன்னும் மறையவில்லை’ என்று சொன்னானாம். அப்படிப்பட்ட கடை மாணவர்களுக்காகவும்  அது எழுதப்பட்டதல்ல. படித்த, பொதுப் புத்தியுள்ள, பெற்றோர்களுக்கு எழுதியதே அக்கட்டுரை.

அதாவது, கனடாவில் தமிழ் கற்கும் மாணவர்கள் தமிழை இரண்டாம் மொழியாகவே கற்கிறார்கள். அவர்களுக்கு சாதாரண நவீன நடைமுறையில் இருக்கும் நாளாந்த தமிழை, பொதுவான  ஊடகங்களால் -வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகள், தொலைக்காட்சி, சினிமா போன்றவற்றால்- வளரும் எளிய தமிழை, வீட்டில், வெளியில் பேசும் நாளாந்த தமிழை, புரிய வைக்க, பேச, வாசிக்க, எழுதக் கற்பிப்பதே பரம பிரயத்தனமாக இருக்கிறது.  அதற்கே, குழந்தைகளின் உளவியல், கற்பித்தல் முறைகள், கற்பித்தல் கொள்கைகள் படித்த, பயிற்சி பெற்ற, அனுபவம் பெற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் திண்டாடுகிறார்கள்.

அந்நேரத்தில், இலக்கியத் தமிழை, தூய தமிழை, நடைமுறையில் இல்லாத, நாளாந்தப் பாவனையில் இல்லாத தமிழ்ச் சொற்களை, வில்லங்கமாகப் புகுத்துவது பேதமை என்று சொல்வது தான் அக்கட்டுரையின் முதலாவது நோக்கம்.

இரண்டாவது நோக்கம், அவர்கள் வரைவு என்று சொல்லி அறிமுகப்படுத்திய நூல்கள், மாணவா¢ன் உளவியல் தெரியாத, நவீன மொழியியல் தொடர்பாடல் கருத்துக்கள் தெரியாத, குழந்தைகள் மையக் கல்வியை அறியாத, கனடியச் சூழல் தெரியாத,. தமிழை இரண்டாவது மொழியாக இங்கு கற்பிக்க வேண்டும் என்ற கற்பித்தல் அறிவு இல்லாத, கற்றுக்குட்டியால், ஏதோ கருத்தியல் நோக்கத்தில் எழுதப் பட்டுள்ளன. அவற்றில் எழுத்துப் பிழைகள், சொற் பிழைகள, வாக்கியப் பிழைகள் மலிந்து கிடக்கின்றன, அத்துடன், தேவையற்ற மொழிபெயர்ப்புக்கள், கிரந்த எழுத்துக்களில் வெறுப்பால் பெயர்கள் அனைத்தும், சிரிப்புக்கும், கேலிக்கும், கிண்டலுக்கும் இடமளிக்கும் முறையில் பரந்து கிடக்க, வரட்சியான தமிழில் எழுதப்பட்டுள்ளன.

ஆதலால், அப்புத்தகங்கள் குழந்தைகளுக்கு நன்மையிலும் பார்க்க தீமையையே விளைவித்து அவர்களை தமிழின்பால் வெறுப்படையச் செய்து விடும் என்ற நல்நோக்கம் கொண்டே சமூக மொழியியல் (sociolinguistics)  கருத்துக்களின் ஆதாரங்களுடன் அக்கட்டுரை எழுதப்பட்டது. அப்பயிற்சிப் புத்தகங்கள் (பொத்தகங்கள் -அவை நூல்களல்ல. நூல் என்ற காரணப்; பெயர் வந்ததே, பஞ்சு சொல்லாகவும், செய்யுள் இழையாகவும், அறிவென்னும் ஒளியுடன் எழுதப்படுவன என்பதால் என்று நன்னூலார் சொல்கிறார். அவை, ‘ஐயிர குற்றமும் அகற்றி’ ‘பத்து அழகும் சேர்த்து’ ‘இருபத்தெட்டு உத்திகளுடன்’ எழுதப்படவேண்டும்) அதை விடுத்து, கிடைத்ததை எல்லாம் சாப்பிட்ட பிச்சைக்காரன் அது செரிக்காமல் எடுத்த சத்தி மாதிரி . சகல குற்றங்களுடனும், எழுத்தாளர்களின் அறியாமையினாலும் அனுபவமின்மையாலும், தூய்மைவாத உணர்ச்சிகளாலும், (தூய்மைவாதம், இனத்துவத் தூய்மைவாதத்தின் -ethnic purity- அறிகுறியும், அடையாளமும் -symptom and identity- என்பது வேறு விஷயம்;.) எழுதப்பட்டுள்ளன. ஆதலால். எனது கட்டுரை, எமது இளம் சமுதாயம் குட்டிச் சுவராகி விடக் கூடாது என்ற நல்ல நோக்கம் கொண்டே வரையப்பட்டது,

 *‘அன்னம் ஆவே மண்ணொடு கிளியே,
  இல்லிக் குடம் எருமை நெய்யரி,
  அன்னர் தலை இடை கடை மாணாக்கர் (நன்னூல், 38)

இதன் பொருள் : அன்னம் பாலையும் நீரையும் வேறாக்கி, பாலை மட்டும் குடிக்கும். பசு புல்லை வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு, பின்பு மரத்தடியில் கிடந்து, சிறிது சிறிதாக அசை போட்டுத் தின்னும். அதேபோல ஆசிரியரிடம் நன்றாகப் பாடம் கேட்டு, பாடங்களைப் பற்றி பின்னர் நன்றாகச் சிந்திப்பவர்கள், அன்னமும், பசுவும் போன்ற முதல் மாணாக்கர். உழுவோரின் உழைப்புக்கேற்ப மண் பயன் கொடுப்பது போல, கற்றதைத் தவிர வேறொன்றையும் சொல்லத் தெரியாதவர் இடை மாணாக்கர். ஓட்டைக் குடத்தினுள் தண்ணீரை ஊற்ற ஊற்ற அது வடிந்து விடும். எருமை, குளத்து நீரைக் கலக்கிக் குடிக்கும். பன்னாடை, தேன் போன்றவற்றை கீழே ஒழுக விட்டுச் சக்கைகளை மட்டும் பிடித்துக் கொள்ளும். அவை போன்றவர்களே கடை மாணாக்கர்.


பதிவுகள்.காம், ஜனவரி 2006 இதழ் 73

சீத்தலைச் சாத்தனாரின் சில மாணக்கர்கள்!   - என்.கே.மகாலிங்கம் -

ரொறொன்ரோ கல்விச் சபை தமிழ்ப் பாடப் பயிற்சி நூல்க் குழுவினர் தயாரித்து ‘வரைவு’ என்று கொட்டை எழுத்தில் எழுதி எல்லாரும் படிப்பியுங்கோ என்று ஆசிரியர்களுக்கும், எல்லாரும் படியுங்கோ என்று மாணவருக்கும் அறிவுறுத்தி எழுதிய, நாலாம் வகுப்புத் தமிழ் மொழிப் பயிற்சி நூலிலுள்ள முதலாவது பாடத்தில் ஒரு பந்தி மேலே தரப்படுகிறது. அப்பந்தியை அப்படியே உங்களுக்கு இங்கு சமர்ப்பிக்கிறேன். நீங்களே படித்து அதன் சீர்கேடுகளைக் கவனியுங்கள். அப்பந்தியை வாசித்து விட்டு அதன் கீழுள்ள கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் என்பதுதான் அப்பந்தி கொடுக்கப்பட்டுள்ளதற்கான காரணம். அதாவது அது ஒரு comprehension passage.
   
The Individual-Personal Hygiene
தனியாள் -தனிப்பட்ட தூய்மை

(ஆரம்பத்தில் சில சொற்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை விட்டு விடுகிறேன்.)

‘உடல், உடை, உறைவிடம் என்பன ஒருவரது தனி உடைமை ஆகும். இவற்றைத் தூய்மையாக வைத்து இருப்பதைத் தனிப்பட்ட தூய்மை என்பர். தனிப்பட்ட தூய்மை நல் வாழ்வுக்குத் தேவை ஆகும்.

பல். உகிர், தோல், தலைமுடி முதலியன உடல் உறுப்புக்கள் ஆகும். இவற்றை நாம் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.  நாம் உண்ட பின்பும் உறக்கத்துக்கு முன்பும் பின்பும் பல் துலக்க வேண்டும். உகிரை வெட்டித் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். நாள் தோறும் தோலின் தூய்மை பேண வேண்டும். தலையைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும்.

எப்பொழுதும் தூய ஆடைகளையே அணிய வேண்டும். அணிந்த ஆடைகளை மீண்டும் மீண்டும் அணியக் கூடாது. அவற்றைத் துவைத்து உலர்த்திய பின்பே அணிய வேண்டும். உரிய தொற்று நீக்கியைப் பயன்படுத்தி, ஆடைகளைத் துவைக்க வேண்டும். உள் ஆடைகளைக் கொதி நீரில் துவைத்தல் நல்லது.

எமது படுக்கை அறை, கட்டில், படுக்கை விரிப்பு முதலியவற்றைத் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும். படுக்கை அறையை அடிக்கடி பெருக்கித் துடைக்க வேண்டும். படுக்கை விரிப்பு, தலை அணை முதலியவற்றை உரிய இடை வெளியில் துவைக்க வேண்டும். இவற்றைக் கொதி நீரில் துவைப்பது நன்று.’

மேற்படி பந்திகளில், பல சொற்களின் கீழும்;, வாக்கியங்களின் கீழும் கோடிட்டிருக்கிறேன். அவற்றைக் கவனியுங்கள். ஒவ்வொன்றையும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

1.0 ‘ஒருவரது’ என்ற சொல்லைப் பிரித்தால் ஒருவர் சக அது. ஒருவர் என்ற உயர்திணைப் பெயருடன்;, அது என்ற ஆறாம் வேற்றுமை உருபை புணர்த்த முடியாது என்பது இலக்கண விதி. அது என்னும் உருபு அ·றிணைப் பெயருடன் சேரும். அதற்குப் பதிலாக உடைய, இன் போன்ற வேற்றுமை உருபுகளையே சேர்க்க வேண்டும். அது இலக்கண வழு. அப்படியென்றால் ஒருவருடைய அல்லது ஒருவரின் என்றே அச்சொல் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கொரு விதிவிலக்கை ஆறுமுக நாவலர் சொல்கிறார். அதை இப்பயிற்சிப் புத்தக எழுத்தாளர்களுக்குச் சாதகமாகச் சொல்லி அவர்களைக் காப்பாற்றி விட்டு மேலே செல்கிறேன். ஏனெனில் இவர்கள் தொல்காப்பியருடனும் பவணந்தியாருடனும் தங்கள் இலக்கண அறிவை முடித்துக் கொண்டவர்கள் மட்டுமல்ல, நாவலர் என்றவுடன் ஏதோ மலத்தில் மிதித்தவர்கள் போல கூச்சல் போடுபவர்கள் ஆச்சே.

அ·றிணையுடன் கூடும் அது என்ற ஆறாம் வேற்றுமை உருபு சிறுபான்மை உயர்திணைப் பெயருடன் தற்காலத்தில் கூடும் என்கிறார் நாவலர். ஆகையால் நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள். அதேநேரம், Exceptions prove the rule  என்றும் சொல்வார்கள். அதையும் கவனத்தில் எடுங்கள்.
 
2.0 ‘உடல், உடை, உறைவிடம் என்பன ஒருவரது தனி உடைமை ஆகும்.’ என்றெழுதப் பட்டுள்ளது.

2.1 தனியுடைமை, பொதுவுடைமை என்ற சொற்கள் தனியார் சொத்துக்கள், பொதுச் சொத்துக்கள் என்று அர்த்தப்படும் சொல்லாடலில் ஓர் அரை நூற்றாண்டுக்கு மேலாக வழக்கில் உள்ளது. அதை இவர்கள் கணக்கில் எடுக்கவில்லை.

அத்துடன்,

2.2 உடலைத் தனி உடைமை என்று சொல்வதே இல்லை.

2.3 தனி உடைமை என்ற சொற்களைப் பிரித்து ஏன் எழுத வேண்டும்? ஒன்று இரண்டெழுத்துச் சொல். மற்றது, மூன்று எழுத்துச் சொல். அதைப் புணர்த்தி எழுதுவதே சிறந்ததும், இயல்பும்.  

2.4 இந்த வாக்கியத்தை வேறு மாதிரி எழுதுவதாலேயே, இவ்வெழுத்தாளர் விரும்பிய கருத்துத் தெளிவு பெறும். ஒரு விஷயத்தை நன்றாக ஜீரணிக்காமல், வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாமல் எழுதுவதால் வரும் கோளாறு இது.

3.0. ஆகும் என்ற வினைமுற்று இவ்விடத்தில் தேவையற்றது, அது இல்லாமலே இக்காலத்தில் அவ்வாக்கியம் தனியே நிற்கும்.

4.0 வைத்து இருக்க என்ற இரு வார்த்தைகளும் தனித்தனியே நிற்கும்போது வாசிப்பது செயற்கையாக இருக்கிறது. அவ்வார்த்தைகளை புணர்த்தி எழுதுவதே சிறந்ததும், இயல்பும். இலக்கண அமைதிக்கும் அது பொருந்தி வரும்.

5.0 என்பர் என்ற வார்;த்தையை இங்கு உபயோகிப்பதால் இவ்வுண்மை, வேறெவர்களாலோ சொல்லப்பட்டது போன்றும், அவ்வுண்மையில் ஏதோ நம்பிக்கைக் குறைவும் இருப்பது போலவும் தோன்றுகிறது. அவ்வார்த்தையை நீக்கி விட்டால் தூய்மை என்பது அனைவருக்கும் அவசியம் என்பது தெளிவாகி விடும்.  

6.0 ஆகும் என்ற வினைமுற்று அடிக்கடி ஒவ்வொரு வாக்கிய முடிவிலும் வந்து சலிப்பைத் தருகின்றது. இதுவரை பார்த்த மூன்று வாக்கியங்களில் இரண்டு வாக்கியங்கள்  ஆகும் என்ற வினைமுற்றுடன் முடிக்கப் பெறுகின்றன. அது தேவையற்றது மட்டுமன்றி வாக்கிய அமைப்பின் அழகையும் கெடுத்து விடும் தன்மை பெற்ற பழைய பாணி எழுத்து நடை.

7.0 ‘தனிப்பட்ட தூய்மை நல் வாழ்வுக்கு தேவை ஆகும்.’ இவ்வாக்கியம் தெளிவற்றது. ஏதோ ஆங்கில வசனத்தை மொழி பெயர்த்து எழுத வெளிக்கிட்டு தெளிவில்லாமல் எழுதப்பட்டதற்கு ஓர் உதாரணம் இது. இப்படிப்பட்ட வாக்கியங்கள் புத்தகங்கள் முழுவதுமே மலிந்து கிடக்கின்றன. ஆங்கில அறிவு ஆழமாக இல்லாதது மட்டுமல்ல, அதில் சொன்னதை எழுத்தாளர்; ஜீரணிக்கவும் இல்லை. தமிழுக்கு என்றொரு வாக்கிய ஒழுங்கும் அமைதியும் இருக்கின்றன என்பதையும் உணராமல், மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார் இவ்வெழுத்தாளர். மேற்படி வசனம் ¨அ¢நசளழயெட ஆக பொது உண்மையை எழுதுவது போல எழுதப்பட்ட ஒன்று. அதை நாம் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது அல்லது எழுதும்போது எமக்கு தேவையானதொன்றாக- personal need -ஆக்கும்போது அவர்களை முன்னிலைப்படுத்தி, நேரடி மொழியில் -direct language -எழுதும்போது அவர்கள் மனதில் அது ஆழ வேரூன்றும். ஆகவே, மேற்படி வசனத்தை வேறுவிதமாக மாற்றி, ‘நாம் எம் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது, எமது நல் வாழ்வுக்கு அவசியம்.’ என்று எழுதலாம்.

8.0 ‘பல். உகிர், தோல், தலைமுடி முதலியன உடல் உறுப்புக்கள்; ஆகும்.’ உடல் உறுப்புக்கள் என்று பொதுவாக மேற்சொன்னவற்றை நாம் சொல்வதில்லை. கை, கால், தலை, கண், காது, வயிறு போன்றவற்றைச் சொல்வதே வழக்கம். ஆகவே, மேலே சொன்னவற்றை ஏன் உடல் உறுப்புக்கள் சொல்ல வேண்டும்? அவற்றை அப்படிச் சொல்லாமல், அவற்றை தூய்மையாக வைத்திருப்பது நல்லது என்றால் போதாதா? பிள்ளைகளின் மனதில் குழப்பத்தை விளைவிக்கக் கூடாது. அதேவேளை வேறு மாதிரி நன்றாகச் சொல்ல முடிகிற ஒன்றை தெளிவில்லாமல் குழப்பி எழுத வேண்டும் என்ற அவசியம் என்ன? இதுவும் எங்கிருந்தோ பொறுக்கிய ஆங்கில வசனத்தை அப்படியே மொழிபெயர்த்ததின் விளைவென்றே என்னை ஊகிக்கத் தூண்டுகிறது.

8.1 உகிர் என்றால் உங்களுக்குத் தொ¢யுமா? அது நகம். மேலே அவர்கள் தந்திருக்கும் சொற்பட்டியலில் நகம் என்று உகிர் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் போட்டிருக்கிறார்கள். நகம் என்றால் என்ன, தமிழ்த்தாய் தன் தூய்மையை இழந்து நிர்வாண கோலமாகி விடுவாளா? நகம் என்ற சொல்லைத் தானே நாம் அன்றும், இன்றும் பேசியும் எழுதியும் வருகின்றோம். இனிமேலும் சொல்லுவோம், எழுதுவோம். அப்படி லேசாக அதை வெட்டி எறிந்து விடக் கூடிய ஊற்றை நகமா அது? அது சாத்தியமா?

9.0 ‘நாம் உண்ட பின்பும் உறக்கத்துக்கு முன்பும் பின்பும் பல் துலக்க வேண்டும்.’ இந்த வாக்கியத்தை இரண்டு வாக்கியங்களாகப் பிரித்து எழுத வேண்டும். அல்லது நாம் உண்ட பின்பும், என்ற துணை வாசகத்திற்குப் -உடயரளந- பின் ஒரு காற் புள்ளியை இட வேண்டும். அப்பொழுதுதான் இதில் ஓரளவு தெளிவு பிறக்கும். தொல்காப்பியர் காலத்திலோ ஏட்டில் எழுதுகிற காலத்திலோ காற்புள்ளி, அரைபுள்ளி போன்றவை கண்டு பிடிக்காததற்கு, எழுத்தாணியால் எழுதும்போது ஏடு கிழிந்து விடும் என்ற காரணமும் இருந்திருக்கலாம். வீரமா முனிவருக்குப் பின், மேல் நாட்டவரின் வருகையால் அச்சு யந்திரம் வந்த பின், கடதாசித் தாள்களில் பேனையால் எழுத வெளிக்கிட்ட பின், கருத்துத் தெளிவிற்காக புள்ளிகளைப் போடுவது வழக்கம். ஏடுகளில் எழுதும்போது, வாக்கியம் முடிந்து விட்டது என்பதைக் காட்டுவதற்காக முற்றுவினைகளைப் பெய்து எழுதும் வழக்கம் முன்பு இருந்தது என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருந்தும்.  

9.1 ‘நாம் உண்ட பின்பும்’ என்ற அவர்களின் வாக்கியத்தில் செயப்படுபொருளை ஊகித்துத் தான் அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நாம் உணவு உண்ட பின் என்று உணவு என்ற சொல்லைச் சேர்த்தால் அதன் கருத்து மேலும் தெளிவடையும்.

10.0 ‘நாள் தோறும் குளித்து, தோலின் தூய்மை பேண வேண்டும்.’ இந்த வசனத்தில் நாள் தோறும் என்பதை ஒவ்வொரு நாளும் என்று எழுதினால் அவ்வசனத்திற்கு அழகும் தெளிவும் இருக்கும்.

10.1 ‘தோலின் தூய்மை பேண வேண்டும்.’ தோலின் தூய்மையைப் பேண வேண்டும். என்றே எழுத வேண்டும். ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபு அவ்வாக்கியத்திற்குத் தெளிவை ஏற்படுத்தும். அது அவசியம். அப்படி இல்லாவிட்டால், ‘தூய்மை பேணப்பட வேண்டும்’ என்று வந்திருக்க வேண்டும்.

10.2 ‘தோலின் தூய்மை பேண வேண்டும்’ என்ற வாக்கியம் தெளிவில்லாமல் நிற்கிறது. அவ்வாக்கியத்தைச் சீராக்கினால், நாம் தோலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது இன்னும் அதைத் தெளிவாக்கும். எப்பொழுதும் நேரடியாகச் சொல்வதில் அழகும் தெளிவும் அர்த்தமும் இருக்கும். அப்படி இல்லாவிட்டால், அவ்வாக்கியத்தின் வீரியம் குறைந்து ஏனோதானோ என்று பட்டும் படாமலும் ‘நீ செய்தாலும் ஒன்று தான், விட்டாலும் ஒன்றுதான், நாசமாகப் போனாலும் ஒன்றுதான்,’ என்ற ரீதியில் சொன்னதாகப் போய் விடும்.

11.0 ‘தலையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்’ என்பது அடுத்த வசனம். நல்ல வேடிக்கையான வசனம். தலையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டுமாம். உண்மை, உண்மை. அது நமக்கெல்லாம் தேவையான ஒன்றுதான். ஆனால் எப்படி அதை வைத்திருப்பது என்பது தானே எமது பிரச்சினையே. இப்பயிற்சிப் புத்தக எழுத்தாளர்கள் சொல்ல வந்தது தலை மயிரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதையே. ஜீரணிக்காத பண்டம் வயிற்று வலியைக் கொண்டு வரும், ஆகவே, நன்றாக மென்று சாப்பிடு. சாப்பிட்ட பின் எழுது, மகனே!

12.0 ‘அணிந்த ஆடைகளை மீண்டும் மீண்டும் அணியக் கூடாது.’ இந்த வசனத்தை எப்படித் திருத்துவது என்று பார்ப்போம். முன்பு அணிந்த ஆடைகளை அணியாமல் நாம் என்ன ஒவ்வொரு முறையும் புதுசு புதிசாக வாங்கியா அணியப் போகிறோம்? அதற்குப் பணமிருக்கிறதா? அதை எழுதியவர்கள் தோய்க்காமல், சுத்தம் செய்யாமல் அல்லது அவர்களின் வார்த்தையில் துவைக்காமல் உடுக்கக் கூடாது என்பதைத் தான் எண்ணி இருப்பார்கள். ஆனால், அவ்வார்த்தையைக் கைநழுவ விட்டு விட்டார்கள். இப்பந்தியை மெய்ப்புப் பார்த்த அசகாய ச+ரனின் கண்ணுக்கும் அது தென்படவில்லை. அல்லது எழுதியவரும், மெய்ப்புப் பார்ப்பவரும் ‘தெளிவுறவே சிந்திப்பவர்கள்’ அல்லர். அணிந்த ஆடையைச் சுத்தம் செய்யாமல் அல்லது துவைக்காமல் மீண்டும் மீண்டும் அணியக் கூடாது, என்று எழுதியிருக்கலாம்.

13.0 ‘தொற்று நீக்கியைப் பயன்படுத்தி ஆடைகளைத் துவைக்க வேண்டும்.’ என்றால் என்ன? அதென்ன தொற்று நீக்கி? தொற்று நோய் நீக்கியா? பேய், பிசாசுகள், ஆவிகள், பூதங்கள், எல்லாம் எல்லாவிடங்களிலும் இப்பொழுது உலாவுகின்றன. சில எழுத்தாளர்களிலும் அவை ஏறி விட்டன. அதைவிட, நாம் உடுத்திருக்கும் தரையைக் கூட்டும் கரை வேட்டி, நிறம் நிறமான சால்வை போன்ற உடுப்புக்கள் மூலமாகவும் தொற்றி உள்ளனவே. அதில் ஒன்று, மொழிப் பிசாசு. அதையும் இந்தத் ‘தொற்று நீக்கி’ நீக்கி விடுமா? அப்படியானால் அதற்கு நாங்கள், இப்பொழுதே மொத்தமாக வாங்குவதற்கு ‘ஆர்டர்’ கொடுக்க வேண்டும். ஐய! மொழி பெயர்ப்பு ஐயத்துக்கு இடம் வைக்கக் கூடாது,

14.0 ‘பெருக்கி’ என்பதிலும் பார்க்க துடைப்பத்தால் கூட்டி என்பதுதான் எம்மிடம் அதிகம் வழக்கத்தில் உள்ள சொல்.

15.0 தலை அணை-இதைப் புணர்த்தி எழுதி இருக்க வேண்டும்.

15.1 ‘படுக்கை விரிப்பு, தலை அணை, முதலியவற்றை உரிய இடைவெளியல் துவைக்க வேண்டும்.’ அதென்ன உரிய இடைவெளியில்? இடைக்கிடை அல்லது அடிக்கடி என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘உரிய இடைவெளியில்’ என்று எழுதி இருக்கின்றார் என்றே நினைக்கிறேன்.

15.2 தலை அணையை அடிக்கடி துவைப்பதில்லை! தலையணை உறையைத் தான் அடிக்கடி தோய்ப்பார்கள்.

மேலே உள்ளவை, ஏறக்குறைய அரைப் பக்க அளவில் உள்ள சிறிய, நாலு பந்திகள். அவற்றில் நான் கண்டுபிடித்தவை இத்தனை பிழைகள். எல்லாமாக 24. இவற்றுக்கும் மேல், என் திண்ணைப் பள்ளிக்கூடத் தமிழ் அறிவிலும் பார்க்க பல்கலைக் கழகம்வரையும் அதற்கும் மேலாகவும் சென்று அதிகம் கற்றவர்கள் இன்னும் எத்தனையோ தவறுகளைக் கண்டுபிடிக்க முடியும். ஆகவே, 78 பக்;கமுள்ள அந்த நாலாம் வகுப்புப் புத்தகத்தில் எத்தனை பிழைகள் இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். அவற்றைவிட, அவர்கள் எழுதிய மற்ற ஏழு பயிற்சிப் புத்தகங்களிலும் எத்தனை எத்தனை பிழைகள்! ஆண்டவன் தான் கல்விச் சபையில் கற்பிக்கும் தமிழாசிரியர்களையும் மாணவர்களையும் காப்பாற்ற வேண்டும். இவற்றைத் திருத்தாமல் அப்படியே கொடுத்து, ஆசிரியர்களே இவற்றைக் கற்பியுங்கள்! மாணவர்களே இவற்றைப் படியுங்கள்! பெற்றோர்களே உங்கள் குழந்தைகளுக்கு இவற்றைக் கற்பிப்பதற்கு உதவுங்கள்! என்று கேட்டால், ஒழுங்காகக் கல்வி கற்ற ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தலை கிறுகிறுத்து, மயங்கி விழாமல் என்ன செய்வார்கள்,

நான் சீத்தலைச் சாத்தனாராக (சீழ்+தலை சீத்தலை. இவர் மாணவர் விடும் ஒவ்வொரு பிழைக்கும் தானே தன் தலையில், தான் வைத்திருந்த எழுத்தாணியதால் குத்துவாராம். அதனால் அவருக்கு எந்த நேரமும் தலையிலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டே இருக்குமாம். அதனால் அவருக்குக் கிடைத்த காரணப் பெயர் அது. அவர் வன்முறையில் நம்பிக்கையில்லாத, அந்தக் காலத்து நல்லாசிரியர்களில் ஒருவராக இருக்க வேண்டும்.) இருந்து, இதை எழுதியவர்கள் என்  மாணவர்களாக இருந்து, புத்தகத்திலுள்ள அத்தனைக்கும், எழுத்தாணியால் என் தலையில் ஒவ்வொரு முறையும் குத்தி இருந்தால், எப்போதோ என் தலையில் சீழ் பிடித்து, அதனால் ஏற்பு வைத்து, நான் இறந்து, சாம்பலும் அள்ளிக் கொள்ளிக் கொட்டி இருப்பார்கள் இப்பொழுது. நல்ல காலம் இந்த மாணவ மணிகள் என்னிடம் பாடம் கேட்க வரவில்லை. கடவுளும்; என்னைக் காப்பாற்றி விட்டார்.  
   
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.