- பதிவுகள் இணைய இதழின் ஆரம்ப காலத்தில் முரசு அஞ்சல், திஸ்கி எழுத்துருக்களில் வெளியான படைப்புகள் 'பதிவுகள் அன்று' பகுதியில் ஒருங்குறி எழுத்துருவில் ஆவணப்படுத்தப்படும். இக்கட்டுரை அளவெட்டி சிறீஸ்கந்தராஜா பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரை. 28.09.2002 அன்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய அவரது உரையின் எழுத்து வடிவம். அதனை அவர் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியிருந்தார். -


பதிவுகள், அக்டோபர்  2002 இதழ் 34

நான் விமரிசனங்கள் எழுதப்புகுந்த இந்த பதினைந்து வருடங்களில் ஈழ இலக்கியத்தைப்பற்றி தொடர்ந்து மிக கறாரான , அதிகமும் எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லி வந்திருக்கிறேன். ஆனாலும் என் இலக்கிய நண்பர்களில் ஈழத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  தொடர்ந்து அங்கு வெளியாகும் நூல்கள் தொடர்ந்து என் பார்வைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கடுமையான விமரிசனம் தேவை என்று கோரப்பட்டு வரும் நூல்கள் அதிகம் . உலகமெங்கும் உள்ள ஈழ வாசகர்கள் என் ஆக்கங்கள் மீது மிகுந்த கவனம் அளித்து வாசித்தும் வருகிறார்கள். ஒரு முறை என் ஈழநண்பர் ஒருவரிடம் ஈழத்தவர்களுக்கு ஒரு நன்றிக்கடனாக என் விமரிசனங்களை நான் மென்மையாக்கிக் கொள்ளவேண்டுமா என்று கேட்டேன் . அதன் பிறகு உங்கள் குரலுக்கு மதிப்பிருக்காது என்றார் . இக்கூட்டத்துக்கும் சிறிசுக்கந்தராஜா என்னை அழைத்தபோது '' வந்து திட்டிவிட்டு போ'' என்றுதான் சொன்னார் .

சிறீசுவை எனக்கு மாண்டிரியல் நகரில் பழக்கம். தத்துவவாதியான கோமாளியின் சாயல்களை வெளிப்படுத்தும் உற்சாகமான நண்பராக இருந்தார். அவருடனான நாட்கள் எனக்கு மிகுந்த பசுமையான நினைவுகளாக உள்ளன. இந்நூல் அப்பசுமை நினைவுகளை மீட்பதாக இருந்தது.  1962 ல் வெளிவந்த வ. அ .இராசரத்தினம் அவர்களின் 'தோணி' என்ற சிறுகதையை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். எழுபதுகள் வரை ஈழ எழுத்தின் மிகப்பெரும்பாலான இடத்தை நிரப்பியிருந்த முற்போக்கு கதைகளின் மிகச்சிறந்த மாதிரிக் கதை அது. ஈழத்து தீவுப்பகுதியின் ஒரு குக்கிராமத்தில் நடக்கிறது கதை. பத்துபதினைந்து குடிசைகளும், வகிடுபோல அவற்றை இணைத்துச் செல்லும் பாதைகளும், உள்வாங்கிய கடலாலான ஆறும் உள்ள ஊர். மீனவச்சிறுவனின் இளமைப்பருவத்தை மிகுந்த உயிர்ப்புடன் சொல்கிறது . தன் தந்தையைப்போல  வெள்ளைப்பாயை விரித்து கடலுக்கு அப்பால் சென்று மாய உலகத்து செல்வங்களை அடைந்து விடவேண்டுமென கனவு காண்கிறான். முருக்குத்தடியில் ஓட்டைபோட்டு அவனும் தோணி செய்து தன் தந்தையை போலவே கடலில் செல்ல யத்தனிக்கிறான். அதை கண்ட தந்தை அவனையும் கடலுக்கு கொண்டு செல்கிறார். அவனுடைய முதல் வேட்டையே வெற்றிகரமாக அமைகிறது. அந்தமீனை விற்று தன் தாயாருக்கும் தனக்கும் என்ன வாங்கலாம் என்ற கனவுடன் கரை திரும்பும்போது தெரிகிறது படகு அவன் தந்தைக்கு சொந்தமானதல்ல என்று. மொத்தமீனையும் படகு சொந்தக்காரனுக்கு அளித்துவிடவேண்டுமென்று .

அதன் பிறகு தோணி அவனுக்கு ஒரு இலட்சியக்கனவாகிறது .கடுமையாக உழைத்தும் அவனால் அந்த இலக்கை நெருங்க முடியவில்லை . தோணி சொந்தக்காரரின் மகளை மணமுடித்து ஒரு தோணிக்கு சொந்தக்காரராக ஆக எண்ணுகிறான். அந்த தோணி கடலில் மூழ்கி விடுகிறது .ஆனால் அக்கனவு அப்படியே தொடர்கிறது.எனக்கில்லாவிட்டாலும் என் மகனுக்காவது சொந்தமாக தோணி இருக்கும் . அவன் பிடிக்கும் மீன்களை அவனே விற்பான்.அவற்றை வாங்க விவசாயிகள் வருவார்கள் .அவர்கள் நிலம் அவர்களுக்கே உரியதாக இருக்கும் . இவ்வாறு முடிகிறது அக்கதை. எனக்கு பொதுவாக இம்மாதிரி 'நோக்கம்' கொண்ட கதைகள் பிடிக்காது .ஆயினும் இது அழகிய கதை.

இதன் சிறப்பியல்புகள் என்ன ? முதலில் சொல்லப்படவேண்டியது நேரடியான சித்தரிப்பு . சிறுவன் தன் கிராமத்தைப்பற்றி சொல்வதுடன் ஆரம்பிக்கிறது கதை . இரண்டாவது ,எளிய மொழி. நேர்ப்பேச்சு போல ஆனால் தூய உரைநடையில் கதை 'சொல்லப்படுகிறது' . எளிய சொற்றொடர்கள். உணர்வுகள் கூட செய்திகளாகவே முன்வைக்கப்படுகின்றன. உணர்த்தப்படுபவை என ஏதுமில்லை .இக்கதையில் நுட்பமான காட்சி சித்தரிப்பு உள்ளது . அந்த கடற்கரைக் கிராமத்தின் மண்ணை நம்மால் அறிய முடிகிறது .அதைப்போல அவர்களுடைய பேச்சுமொழியின் அழகிய மனச்சித்திரமும் நமக்கு கிடைக்கிறது .இக்கதையை நாம் 'நேர்த்தி ' என்ற சொல்லால் விளக்கலாம். இக்கதை  ஒரு 'நேர்கோடு' .

இன்றைய ஈழக்கதையில் இத்தகைய நேர்கோடுகள் குறைந்து வருகின்றன. அனைத்து தளத்திலும் வளைவு , சிடுக்கு என்ற இயல்பு நோக்கி நகர யத்தனிப்பவையாக உள்ளன அவை . முக்கியமான உதாரணமாக நான் இரு எழுத்தாளர்களின் படைப்புகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதுமை என்பதற்கு மேலாக வாழ்க்கையின் நுண்ணிய சித்திரத்தை எனக்கு அளித்த அழகனுபவங்களுமாக அவை இருந்தன என்பதனால். முதலில் அ .முத்துலிங்கம் அவர்களின் படைப்புகள் .அவர் பொதுவாக கதையை நேரடியாகச் சொல்வதைல்லை. கதைகளின் தொகுப்பாக இருக்கின்றன சில கதைகள் . சில கதைகள் மையத்தை விட்டு வேண்டுமென்றே அலைகின்றன . சில கதைகள் மையத்தை ஒளித்து வைத்துக் கொள்கின்றன. இந்த 'வளைகதைக்கோடு' அவரது படைப்புலகின் முக்கியமான சிறப்பியல்பாக காணப்படுகிறது .இரண்டாவது உதாரணம் ஷோபா சக்தியின் ' கொரில்லா' என்ற நாவல் . குறிப்புகளின் தொகுப்பாக , மைய ஓட்டத்தை சிடுக்காக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் நாவல் அது.

சிறிசுவின் இக்கதைகள் மொழி அமைப்பு விழுமியங்கள் ஆகிய மூன்று தளங்களிலும்'மீறலை ' தங்கள் அடிப்படை இயல்பாக கொண்டவை. வளைகோடுகளல்ல இவை, கதைச்சிடுக்குகள் .  இலக்கிய ரீதியாக சுயத்துவம் மிக்க முயற்சிகள் என்ற அளவிலேயே இவை முக்கியமானவை . ஆம், இவை முயற்சிகள் மட்டுமே. வெற்றிகள் அல்ல.

சிறிசுவின் மொழி சீரான ஓட்டத்தை முற்றாக தவிர்த்து தவ்வித் தவ்வி செல்கிறது. அர்த்தமுள்ள அர்த்தமில்லாத தவ்வல்கள் '.... மொத்தத்தில் வளைய வரவும் மெல்லென கிறுகிறுக்க அதிர்ச்சிக்கும் துலாம்பரமான படமற்ற மாயக்கனவொன்று புகைவேகத்தில் முன்னகர்வதாக உணர்ந்தேன்.......நினைவுகளை கூரிய ஆயுதமொன்றினால் கோரமாக பிளந்து இல்லாவற்றினை ஒன்றுமிலாததிலிருந்து அகழ்ந்தெடுத்து உள்ளவற்றினை ஒன்றுமில்லாத சூன்யமாக துவம்சம் செய்வதில் போதை வல்லபமானது...' போன்ற வரிகளில் சீரான மொழி ஒருபோதும் சொல்லிவிடமுடியாத ஒரு தளம் தொடப்படுகிறது .ஆனால்  பெரும்பாலான இடங்களில் மனம் ஒரு குறிப்பிட்ட மொழிபழக்கத்தை கொண்டிருப்பதானாலேயே இந்த சிதைவுமொழி சாத்தியமாகியுள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் சிற்சுவின் எல்லா ஆக்கங்களிலும் பொதுவாக உள்ள அம்சம் அங்கதமே என்னும்போது இம்மொழி அவரது மன இயல்பின் ஒரு அம்சம் என்றே உணர முடிகிறது .அதை மேம்படுத்தியபடி மட்டுமே அவர் முன்னகர முடியும்.

இம்மொழியின் சிறப்பான இரு அம்சங்கள் வட்டார வழக்கை , வாய்மொழியை வரிவடிவாக்கும்போது உருவாகும் அழகுகளும் நுட்பங்களும் . ஒரு நேர்கோட்டு கதையில் வட்டாரவழக்கு   ' புனைவு நம்பகத்தன்மைக்காக ' மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அந்நிலையில் வட்டாரவழக்கின்  'பிரதிநிதித்துவ குணமுள்ள' விஷயங்களே அப்புனைவுக்குள் கொண்டுவரப்படுகின்றன .மாறாக அங்கதக் கதையில் அவ்வழக்கின் 'உச்ச கட்டங்கள்' புனைவில் கொண்டுவரப்படுகின்றன. அதாவது அபூர்வமான, நுட்பமான, வேடிக்கையான தருணங்கள்  அங்கதத்தின் எல்லைக்குள் வருகின்றன. ' கோதாரியிலே போவான் ...வல்லரக்கன்.உண்ணணை தங்கம்மா.. படுவான் தேய்ஞ்ச குண்டிப் படியாலை நிறுத்த பன்ரண்டு சுண்டரிசியை வீட்டிலே கொண்டுவந்து அளந்தால் பத்தரை பறை வெட்டியும் தேறேல்லை.......அறுவான் இரத்தவாதி வந்து கபையிலை தசை கழண்டுதான் பொலியறுவான்.." வசைகள் , வழக்காறுகள், நொடிப்புகள். இந்த மொழியில் நுட்பமான விளையாட்டையும் பல இடங்களில் சிறிசு ஆடுகிறார். அவரது படைப்புகளின் முக்கியமான கவர்ச்சிகளில் ஒன்றாக இது உள்ளது.

அதேபோல பண்டைத்தமிழை அங்கதத்தன்மையுடன் பயன்படுத்தி அரிய தருணங்கள் சிலவற்றை அவரது மொழி கண்டடைகிறது .ஆனால் பல சமயம் கொண்டுகூட்டினாலும் பொருள் கொள்ள முடியவில்லை .பல கதைகளுக்கு பாயிரம் அல்லது தொகுப்புரை போல வரும் வெண்பாக்கள் வித்தியாசமாக அனுபவத்தை அளிக்கின்றன.

சிறிசுவின் கதைகளின் அமைப்பு அங்கதக் கதைகளுக்கேற்ப 'போலி செய்தல்' [பாரடி]என்ற தளத்திலேயே உள்ளது. துப்பறியும் கதை , [கொலைஞனை தேடி] அறிவியல் கதை,[சிறீயரும் அவர்தம் ஏழில் செவ்வாயும் ] செவ்வியல் படைப்பு, [சிதைப்பதிகாரம்] என இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம் . இவ்வடிவங்களை அணுகும்போது இதில் நேர்த்தியான ஒரு கதையை கற்பனை செய்ய முயன்றால் மூளைக்களைப்பும் கதைகள் மீது உதாசீனமும் ஏற்பட வாய்ப்புண்டு. அவ்வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டு வாசித்துச் செல்வதே சிறப்பானதாக இருக்கும் என்று படுகிறது.

சிறிசுவின் கதைகளில் உள்ள விழுமிய மீறல் அல்லது 'விழுமியமற்ற' தன்மை [ அப்படி ஒன்று உண்டு என நான் நம்பவில்லை ] நம்முடைய அன்றாட போதத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது . ஆனால் அது சிறிசுவைப்போன்ற வாழ்வுள்ள ஒருவருக்கு இயல்பானதே என நாம் உணர வேண்டும் .அவருடன் ஒருநாள் அலையும் போதே உலகில் உள்ள பலவிதமான உணவுப்பழக்கங்களை பற்றி சொன்னார் . அப்போது எனக்கு ஒன்று பட்டது உணவிலே அசிங்கம் என்று ஒன்று இல்லை .அது மனப்பிரமை. மேலும் தோன்றியது,உலகில் எங்காவது ' என்ன அசிங்கமான சனங்கள் பார் ,இட்லியை சாம்பாரில் தோய்த்து விழுங்குகிறார்கள்' என்று நம்மைப்பற்றி எண்ணக்கூடிய மக்களும் இருக்கலாம். ஒழுக்கம் என்பது ஒரு சமூக ஒப்பந்தமும் அதன் விளைவான நியதியே அல்லாமல் அது ஓர் அறமல்ல என்பதை இன்றைய புலம்பெயர்ந்த ஈழ எழுத்துக்கள் தமிழ் மனதுக்கு காட்டுவது மிக முக்கியமான திறப்பு.

சிறிசு மற்றும் அவரது வகைப்பட்ட படைப்பாளிகளினூடாக ப. சிங்காரம் மிக வலுவாக முளைத்தெழுவதை காணும்போது வியப்பே எழுகிறது .70 களில் எழுதிய சிங்காரம் அன்று புதைக்கப்பட்டு இப்போது எழுகிறார் என்று படுகிறது.இவர்களுக்கும் சிங்காரத்துக்கும் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது .அவரும் உலகம் சுற்றியவர் .போர்களை, அழிவை கண்டவர். அவரது மொழியில் வட்டாரவழக்கும் செவ்வியல்கூறுகளும் கலந்து எடுத்தாளப்படுகின்றன. அவரும் வீரகதை என்ற வடிவத்தை போலிசெய்தே எழுதியுள்ளார் .அவரது ஆக்கஙமும் அ-ஒழுக்க பிராந்தியத்தில்தன்னை நிறுவிக் கொண்டிருக்கிறது .சிங்காரமும் சிதைவின் கலைஞரே .அவரது மொழி எங்கு அதன் அனைத்து நியதிகளையும் மீறுகிறதோ அங்கே தான் ஆற்றலுடன் வெளிப்படுகிறது .
'
சிறிசுவின் இருகதைகளை சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யின் சந்தர்ப்பங்களுடன் ஒப்பிட்டு வாசிப்பது  ஆர்வமூட்டுவது .சிதைப்பதிகாரம் கதையை சிங்காரத்தின் நாவலில் பாண்டியன் குடித்துவிட்டு பினாங்கு தெருவில் வரும் போது 'கோவலன் செட்டியாரை' காணும் இடத்துடன் ஒப்பிடலாம். அதேபோல 'படுப்பது பற்றிய கதை ' யை சிங்காரத்தின் 'பஞ்சாங்' விடுதியுடன் . ஒரு பரிணாம மாற்றத்தை நாம் உணரலாம் . சிறிசுவின் தாவல்கள் மூர்க்கமாக இருக்கின்றன. சிங்காரத்தின் சிதறடிப்பின் நளினம் இவற்றில் இல்லை .விரிவான ஓர் ஒப்பீட்டுக்கு இது தருணமல்ல . சிங்காரம் சிலப்பதிகாரத்தை சிதைக்கும்போது அதில் ஓர் ஆழமான வரலாற்றுப்பிரக்ஞை செயல்படுகிறது . காலகாலமாக கறபரசியின் சிலம்பை விற்று கணிகைதெருவில் நிற்கும் கோவல- பட்டினத்தார்- செட்டியார்களின் மாறாத ஒரு வரிசை நம் கண்முன் விரியும்  அனுபவம் அது. பஞ்சாங் விடுதியில் 'மலை நாடியர் மங்கோலியர் மகளிர் கடை திறமின்! ' என மதுவுடனாட முடியாதபடி திருவள்ளுவரும் மணிமேகலையும் வந்து தொந்தரவு தருகிறார்கள் .ஆனால் ' லௌறா பொடிச்சி ' யை கொஞ்சநேரமாவது தடுக்கும் வேலிகள் ஏதுமில்லை .

சிறிசுவின் கதைகளின் குறைபாடு என்ன என நான் எதை சொல்கிறேன் என இப்போது ஒருவாறு விளக்கியிருப்பேன் என நம்புகிறேன். சிதைவு என்பது இலக்கியக்க்லையின் மிக முக்கியமான ஓர் நிகழ்வேயாகும். எந்த இலக்கியப்படைப்பும் தன்னளவில் ஒரு சிதைவை நிகழ்த்தவே செய்கிறது . கட்டும் இலக்கியம் என்பது கலாச்சாரம் என்பது இருக்கும் வரை சாத்தியமல்ல . இடித்துக் கட்டுவதே எந்த இலக்கியமும் செய்யும் செயல். ஆனால் சிதைவு மட்டுமே ஒரு போதும் இலக்கியமாகிவிடாது. இலக்கியம் என்பது சிதைவாக்கம். ஒன்றின் சிதைவு இயல்பாக பிறிதொன்றின் ஆக்கமாக மாறிவிடுகிறது. ஒரு பெரும்கோபுரம் இடிக்கப்பட்டு விழுகிறது, விழுந்தவடிவம் பிறிதொரு கட்டுமானமாக இருக்கிறது .அதுவே இலக்கியக்கலை .இவ்வெண்ணத்தை மாற்றும் எந்தப்படைப்பையும் நான் இன்றுவரை படிக்கவில்லை . படைப்பு எந்த தர்க்கத்தையும் மீறலாம், அதனால் மீறமுடியாத ஒன்று அது உருவாக்கும் புனைவுத்தர்க்கம்தான்

ஏன் வடிவமின்மை ஓர் இலக்கியமாக இருக்கக் கூடாது? ஏனெனில் வாழ்க்கை என்பது வடிவற்றது என்பதே. வாழ்க்கை இலக்கற்றதாக , ஒழுங்கற்றதாக, தர்க்கமற்றதாக , கட்டுப்பாடற்றதாக, அர்த்தமற்றதாக இருகிறது. இலக்கியம் அதை ஏதேனும் ஒரு முறையில் அர்த்தப்படுத்திக் கொள்ளும் முயற்சியே. அதுதான் இலக்கியத்தின் பிறவிக்காரணம். அதை அது மீற முடியாது .இதோ பேசிக் கொண்டிருக்கும்நான் வெளியே போய் ஒரு விபத்தில் சாகலாம் . ஒரு காரணமும் இல்லை. ஆனால் அது இலக்கியத்தில் சாத்தியமில்லை . நான் சாக புனைவுத் தர்க்கம் சார்ந்த  ஒரு காரணம் தேவை. அப்படி எந்த காரணமும் இல்லை என்று காட்டுவதும் புனைவுத்தர்க்கமேயாகும். சிறிசுவின் கதைகளை படித்து முடிக்கும்போது ஒர் சீண்டல் மட்டுமே நம்மை வந்தடைகிறது . தன்னை கலாச்சாரம் ,மதம், கருத்தியல் சார்ந்து இறுக்கமாக வைத்திருக்கும் பழமைவாதிக்கு அச்சீண்டல் ஒருவேளை வாள்த் தீற்றலாகப் படலாம். முதிர்ச்சியுள்ள இலக்கியவாசகனுக்கு ஒரு புல் அரம் உரசிப்போவதற்கப்பால் அது ஏதுமில்லை . ஆம் ,இக்கதைகள் முயற்சிகளே,  வெற்றிகளல்ல.

சிறிசு மேலும் ஊக்கத்துடனும் தீவிரத்துடனும் தனது சிறந்த கதைகளை கண்டடைவார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

[ 28.09.2002 அன்று சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு கூட்டத்தில் பேசியது ]

பதிவுகள், அக்டோபர்  2002 இதழ் 34