- பதிவுகள் இணைய  இதழில் 2003இல் எழுத்தாளர் பா.ரவி (சுவிஸ்) எழுதிய புதிய மாதவியின் 'ஹேராம்'கவிதைத்தொகுப்ப்பு பற்றிய விரிவான திறனாய்வு. 'பதிவுகளில் அன்று' பகுதியில் ஆவணப்படுத்தும்பொருட்டு மீள்பிரசுரமாகின்றது. -

பதிவுகள்  ஜூலை 2003 இதழ் 43 -மாத இதழ்

என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது

கவிதாயினி  புதியமாதவியின் முகவரியைத் தேடி வர நேர்ந்தபோது ஹே ராம் கவிதைத் தோப்பை வந்தடைந்தேன். முகவரி தொலைந்த மனிதர்களுக்காகவே கவிதைகள் முகம்காட்டுகின்றன. ஒடுக்கப்படும் சக்திகளின் குரலாக, உணர்வுகளின் நுனி கரையும் மென்முனைகளாக, நட்புபற்றிய மேலான மதிப்பீடாக, இயற்கையோடு மனிதமொழியில் பேசுபவளாக  வரும் புதியமாதவி இந்தத் தோப்பில் -அதாவது கவிதைத் தொகுப்பில்- உலாவருகிறாள். ஆனால்,

எதற்காக எழுதவந்தேன்
தெரியவில்லை -தமிழ்
என்னால்தான் வாழுமென்றும்
சொல்லவில்லை.
.....
தமிழ் இனத்திற்காய் எழுதுகின்றேன்
இதுவே என் எல்லை.

என்று அக் கவிதையை முடிக்கிறார். கவிதைகளோ அவர் புலம்பும் எல்லைக்கும் அப்பால் சிறகசைத்துப் பறந்து திரிகின்றன. அதனால் அவை வலிமையும் பெற்றுவிடுகின்றன.

ஹே...ராம் என்ற கவிதை மனிதநேயம்கொண்ட ஒவ்வொரு மனிதனையையும் உசுப்பிவிடக் கூடிய வீச்சுக் கொண்டது.

நீ-
முடிசூட வரும்போதெல்லாம்
எங்கள் மனிதநேயம்
ஏன் நாடுகடத்தப்படுகிறது?
....
குரங்குகளின்
இதயத்தில்கூட
குடியிருக்கும் நீ
மனிதர்களின்
இதயத்தில்
வாடகைக்குக்கூட
ஏன்
வரமறுக்கிறாய்?
என வெளிச்சமிடும் கவிஞர்,

எங்களுக்கு
இனி அவதார புருஷர்கள்
தேவையில்லை
ஹே...ராம்
உன்னை இன்று
நாடு கடத்துகிறோம்!
என போர்க்குரலாகிறார்.

ஆப்கானில் தலிபான்கள்  புத்தர்சிலையை புழுதியாக்கியபோதும், அயோத்தியில் பாபர் மசூதியை காவியுடை இந்துவெறியர்கள் புழுதியாக்கியபோதும் மனிதவளர்ச்சியின் பாதையில் குண்டுவைத்து தகர்த்த புழுதியாக அவை வரலாற்றில் படிந்துபோயின. மேற்குலக தொலைக்காட்சிகள் மூன்றாமுலகின் ”அறிவியல் வளர்ச்சியாக” இதை காட்சிக்கோடிட்டன. வரலாறு ஒருபோதுமே மன்னிக்காத இச் செயலை கவிதை அதே வேகத்தோடு சொல்கின்றது.

அதேபோல் இனிக்குமா பொங்கல் என்ற கவிதையில்,

காயப்பட்டது மனிதநேயம் மட்டுமல்ல
அயோத்தி ராமனும்தான்
இடிக்கப்பட்டது பாபர் மசூதியல்ல
ராமன் இதயக்கோட்டையும்தான்.
...
அரச தர்மத்தை
அறிந்த ராமனுக்கு -நம்
தேர்தல் தர்மங்கள்
தெரிந்திருக்க நியாயமில்லை.
என்று கூறும் கவிஞர்,
நம் அகங்களில் பிறப்பது
பிறக்கப்போவது
புதிய கவிதை
இந்தப் புதுக் கவிதைகளில்
ராமனுக்கு மசூதி கட்டுவோம்
அல்லாவுக்கு கோவில் கட்டுவோம்
...
மனிதநேயத்திற்கு
மாலையிடாத மதங்கள்
இனித் தேவையில்லை
அந்த மதங்களுக்கு
வைப்போம் மலர்வளையம்.

என்று இந்த மத எல்லைகளை எல்லாம் தாண்டி வந்து துணிச்சலாகக் கூறுகிறார்.

மனிதர்களுக்காக மதங்கள் என்றதுபோய் மதங்களுக்காக மனிதர்கள் என்று எல்லாம் தலைகீழானபோது எந்த மதமும் கேள்வியிலிருந்து தப்பிவிடமுடியாது. மதங்களின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனிதநேயத்திற்கு இன்னும் இதயவலியைத் தருபவை. மதங்களின் பெயரால் அதை நியாயப்படுத்தமுடியுமெனின் அவ்வாறான மதங்களை கேள்விகேள்விகேட்பது ஒரு மனிதஜீவியின் கடமை என்றாகிவிடுகிறது.

முஸ்லிம் மதவெறியர்களின் பக்கம் திரும்பும் கவிஞர், ஏ அல்லா.. என்ற கவிதையில்,

ஏ அல்லா!
எரிகின்ற புகைவண்டிகளில் -இனி
உன் குரான் ஒலிக்கட்டும்
....
விலைபேசப்படும்
வியாபாரச் சந்தையில்கூட
நியாய அநியாயங்களைப்
பட்டியல் போட்டு
பாடம் படித்தவனே...
மனித உயிர்களின் விலை
உன் பட்டியலிலிருந்து
எப்போது விடுபட்டது?
எப்படி விடுபட்டது?

என்கிறார் கவிஞர்.

பைபிளில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு மனித அறிவியல் மாறுபட்ட கருத்தைச் சொல்லவரும்போது மிரட்டப்பட்ட விஞ்ஞானியிலிருந்து கூட்டுப்படுகொலைவரை -கடந்துபோன வரலாறுகளில்- நிகழ்த்திக்காட்டிய கிறிஸ்தவ மதம் பக்கமும் திரும்புகிறார் கவிஞர்.

வானமும் பூமியும்
மறைந்துபோனாலும்
என் வார்த்தைகள்
மறையாது என்றவனே
உன் வார்த்தைகள் அழியவில்லை
ஆனால்
அதன் அர்த்தங்கள்தான்
சிலுவையில்.

என்கிறார் அர்த்தமுள்ள சிலுவை என்ற கவிதையில்.

என் தெய்வமே!
உன் வேதங்கள் என்னை
விலக்கிவைத்ததால்
நமக்குள் இடைவெளியா?
உன் மந்திரங்கள்
எனக்கு மறுக்கப்பட்டதால்
நமக்குள் மனக்கசப்பா?

என மதத்தின் சாதிய உள்ளடக்கத்தைப் பார்த்துக் கேட்கும் கவிஞர்,

இந்த இரண்டுமே
வேண்டாம் என்று
எழுந்து வாயேன்.
உன்
கடைசி அவதாரமாவது
எங்கள் சேரியில்
நடக்கட்டும்.
 (அவதாரக் கடவுள் என்ற கவிதையில்)

என்று சுவாரசியமாகக் அழைக்கிறார். பதில்...?

இங்கே
ஆண்டவனில்கூட
சாதிப் பிர்வுகள்.
பாலாஜி - பழநி
மாசானம்-மாடசாமி
காமாட்சி-மீனாட்சி
காளியாத்தா-இசக்கியம்மா
என்று புட்டுக்காட்டும் கவிஞர் இதையே தனது அடுத்த கவிதை வரிகளுக்கு உரமாக்குகிறார்.
மதம் எல்லாம் மறையல்ல
மனிதம் வைத்த சட்டம்தான்!
(மனிதனின் சத்தியசோதனை என்ற கவிதையில்)

தெய்வங்களே!
நீங்கள் தெய்வங்களாக
இருப்பதால்தான்
நாங்கள் மனிதர்களாக
வாழும் உரிமை
மறுக்கப்படுகிறது
...
இந்த அக்னிப்பிரவேசத்தில்
மீண்டும் மனிதர்களாக
மறுபிறவி எடுங்கள்
(தெய்வத்தின் மறுபிறவி என்ற கவிதையில்)

என ஒரு ஆத்மார்த்தமான வேண்டுகோளை விடுகிறார். மனிதத்தை நேசிக்கும் வெறிகொண்ட ஒரு ஜீவியால்தான் கடவுளை மனிதனின் நிலைக்கு அழைத்துப் பேசுவதும் சாத்தியமாகிறது.

நான் மனிதன் என்ற கவிதையில் சொல்கிறார்,
என் தெய்வமே
நீ எங்கே இருக்கிறாய்?
நாத்திக அறிவையும்
ஆஸ்திக மனசையும்
ஒரே உயிரில்
ஏன் ஒன்றாகத் தொடுத்தாய்?...

 என தனது கவிதையில் முரண்களை அருகருகே வைத்துப் பேசும் கவியாற்றலை வெளிப்படுத்தும் கவிஞர் அதே கவிதையில்,

அமைதியில்லாப் பூமியில்
என் உயிர் மிதக்கிறது.
நீ ஆத்திகனா?
நாத்திகனா?
உன் கேள்வி தடுக்கிறது
இரண்டும் இல்லை
நான் மனிதன் என்று
என் கவிதை பிறக்கிறது.

என்று தப்பிச்செல்கிறார். இரு எதிரெதிர் நிலைப்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதஜீவியை புரிந்துவிடமுடியாது. இந்த நிலைப்பாடுகளுக்கிடையிலும் பல முனைகள் இருக்கிறது என்ற பல பரிமாணங்களைத் தொடத் தயாராய் இருப்பவர்களாலேயே கனமான புரிதலைப் பெற வழியுண்டு. இங்கு புதியமாதவி என்ற கவிதாயினி நிற்கிறாள். ஒரு ஆஸ்திகனாக இருந்து நிகழ்த்தப்படக்கூடிய வன்முறைகளுக்கு குறைவாகவோ கூடுதலாகவோ வன்முறைகளை ஒரு நாத்திகனாலும் நிகழ்த்தமுடியும் என்ற சாதாரண உண்மையை அறிந்தவர்கள் -மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறை பற்றிப் பேசும்போது- நீ ஆஸ்திகனா நாத்திகனா என்ற கேள்வியின் அர்த்தமற்ற தன்மையை இலகுவில் உணரமுடியும். எனவே மனிதத்தை தனது வாழ்நிலையுடன் வரித்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் இங்கே புலப்படுகிறது.

கவிஞர் இப்போ வள்ளுவனைப் பற்றிச் சொல்கிறார்.
இத்தனையும் படைத்தவன்
அரசியலில்
ஆண்டவனைப் படைத்தானா?
என்று கேட்கிறார் கவிஞர்.
அதே கவிதையில்,
நாட்டுக்குத் தேவை
கோவில்கள் அல்ல
கல்விக்கூடங்கள்
மனிதனுக்குத் தேவை
மதங்கள் அல்ல
மருத்துவ மனைகள்.

என்று அறிவியலின் தேவையையும் அதன் சேவையையும் முன்வைக்கிறார். மதங்களையும் சாதியையும் பயன்படுத்தி அரசியல் நடாத்தும் பொறுக்கித்தனங்கள் மலிந்துபோயிருக்கிறது. மத தீவரவாத அமைப்புகள், சாதியச் சங்கங்கள், அறிவுஜீவித்தனத்தை பாவித்து சூழ்ச்சிகரமாக மக்களிடம் கருத்தியல்களை எடுத்துச் செல்லும் கேடான புத்திஜீவிகள்... என எல்லாம் அரசியலில் படர்ந்துபோயிருக்கிறது. இவை இல்லை எனில் அரசியலே இல்லை என்றாகிப்போயிருக்கிறது. இதை குத்திக் காட்டுகிறார் கவிஞர்,

எங்களிடம் சாதிகள் இல்லை
மதங்கள் இல்லை
அதனால்
உங்கள் தொகுதிகளில்
வேட்பாளராகும் தகுதியுமில்லை.
(இரவில் மட்டும் வருவதேன் என்ற கவிதையில்)

அவரது துளிப்பாக்கள் சுவாரசியம் நிறைந்தவை. சிறு ஊசி போன்ற கூர்முனையால் குத்துவதுபோன்ற சிறு அதிர்ச்சியை தருபவவை. சிந்தனையைத் தொடுபவையாக உள்ளன. உதாரணமாக,

பசுவுக்குப் பூ¨ஐ
பெண்சிசுவுக்கு
கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால் வேற்றுமை
(பால்வேற்றுமை என்ற பாவில்)

வாடிய பயிருக்காக
போராட்டம்
குளுகுளு வண்டியில்
நடிகைகளின் பேரணி
(பேரணி என்ற பாவில்)

சுதந்திரம் அழகானது
சுதந்திர இந்தியாவின்
தேசியப் பறவை போலவே
நம் சுதந்திரம் அழகானது
இரண்டுக்கும் சிறகுகள் இருப்பது
பறப்பதற்கு அல்ல
விரிப்பதற்கு மட்டும்தான்.
(அழகான சுதந்திரம் என்ற பாவில்)

இந்த சுவாரசிய தொனி அவரது ஏனைய கவிதைகளிலும்கூட ஆங்காங்கே தெறிக்கின்றன.

ஆதி -திராவிடன்
தாழ்ந்தவன் என்றால்
மீதி -திராவிடன்
உயர்ந்தவனா?
...
அவள் கதறலுக்கு ஓடிவர
அவள் என்ன
அய்வருடன் படுத்த
தர்மராசனின்
தர்ம பத்தினியா?
.....
இரும்புக் கம்பிகளை
இருகையால் உடைப்பதற்கும்
எதிர்த்துவருபவனை
தனித்து அடிப்பதற்கும்
அவன் என்ன
வெள்ளித் திரையுலகின்
விளப்பர நாயகனா?
(போராளியின் பயணம் என்ற கவிதையில்)

இவ்வகை முத்துக்களை கவிதையிலிருந்து உருவி எடுத்தாலும் அது ஒரு தனி வித்தாகி முளைக்கும் வலிமைகொண்டதாக அமைந்துவிடுகின்றன.

”கருசுமக்கும் காலத்திலும் கல்சுமக்கும் சாதியிலே மாற்றுப் புடவை இல்லா...” வாழ்நிலையிலிருந்து எழுந்த ஒரு வீரமிகு போராளியாக சின்னாத்தாவை போராளியின் பயணம் என்ற கவிதையில் அற்புதமாக வரைந்திருக்கிறார்.  ஒரு போராளிக்கு இருக்கக்கூடிய வேகம் இந்தக் கவிதையிலும் ஏற்றப்பட்டிருப்பது இந்தக் கவிதையின் சிறப்பம்சம்.

பெண்களை தெய்வங்களாக்கி அவர்களை கட்டிப்போடும் சூழ்ச்சிநிறைந்த ஆணாதிக்கச் சிந்தனை அவர்களை வர்ணிக்கும்போதிலே மறுமுனைக்கு மாறி வெறும் பாலியல்பண்டமாக மொழிவிளையாட்டுச் செய்கின்றது.

மான்விழி மீன்விழி
மைவிழி மயில்விழி
கயல்விழி கருவிழி
காதலைத் தரும்விழி
தேன்விழி திருவிழி
தெய்வீக அருள்விழி
வாள்வலி வீரனெல்லாம்
வந்து சரணடையும்
பெண்விழி பாடுகின்ற
ஆண்கவிஞர் நடுவினிலே
எரிகின்ற அவள்விழியின்
சுடுகின்ற நீரெடுத்து
என் கவிதைப் பூங்காவில்
தெளித்துப் பார்த்தேன்
நெருப்புப் பூக்கள் பூத்தன

என்று ஆண்நோக்கிலான சுத்துமாத்து மொழிவர்ணனையை இழுத்தெறிந்து அங்கு நெருப்புப் பறவையை அனுப்புகிறார். ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகள் அந்த ஒடுக்குமுறையின் விளைவாக கொதித்தெழுவதை வன்முறைகளாக மட்டும் சித்தரிக்கும் அடிவருடிப் புத்திஐ£விகளும் மணிரத்தினம்வகையறா சினிமா பிரமாண்டங்களும் மலிந்த உலகம் இது. போராடுவது என்பதே வாழ்தலுக்காக என்பதையும் மனிதவிழுமியங்களை காத்துக் கொள்ளத்தான் என்பதையும் மனிதகுல வரலாறே போராட்டங்களின் தொடர்ச்சியில்தான் செம்மைப்படுத்தப்பட்டது என்பதையும் அதை சொகுசாக அனுபவித்துக்கொள்பவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள். இங்கு பெண்ஒடுக்குமுறைக்கு எதிரான கோபத்தையும் அதேநேரம் மனிதவிழுமியத்தையும் பதிவுசெய்கிறார் புதியமாதவி என்ற கவிதாயினி.,

அவள் விழிநீர்
நெருப்பாகச் சுட்டாலும்
நெருப்பை அணைக்கும்
அவள் இருவிழியில்
நீம் நெருப்பும்
செர்ந்தே இருக்கும்
என்கிறார்.

மேலும் கவிஞர்களே பாடுங்கள் என்ற கவிதையில்,

பெண்களைப் பாடிப்பாடி
உங்கள் கவிதைகள்
சமைந்தது போதும்

என்று கவிஞன்களைப் பார்த்து கூறுகிறார். கவியரங்கமொன்றில் பாடிய இந்தக் கவிதையின் ஆரம்ப வரிகள் சந்திரபாபு பாடலை நினைவுபடுத்துகிறது.

மணக்கின்ற பூக்கள் எல்லாம்
மாலையாவதில்லை
மாலைபோட்ட மனிதரெல்லாம்
தலைவனாவதில்லை

... என கொசுறுத் தத்துவங்களாக தொடங்கப்பட்ட அந்த வரிகளை கவிதையின் மிகுதிப் பகுதிகள் அடித்துச் சென்றுவிடுகின்றன.அது தனக்கேயுத்தான பாதையில் பயணித்துவிடுகிறது.

பிள்ளையின் தேவைகளை பிள்ளையின் நிலையில் நின்று உணராமல் தமது நிலையில் நின்று -பிள்ளைக்காக செயற்படுவதாய் நினைத்துக் கொண்டு- இயந்திரவாழ்வை வாழ்ந்துமுடித்து ஒரு தாயின் குரலாக மகளே வந்துவிடு என்ற உருக்கமான கவிதை அமைகிறது. பிள்ளைகள்-பெற்றோர்கள் இடையில் எழும் எந்த முரண்பாட்டையும் ”தன்னுடைய பிள்ளை கூடாமல் வரவேண்டுமென்று யார்தான் நினைப்பார் எனவே... பெற்றோர் சொல்வதெல்லாம் செய்வதெல்லாம் சரி” என்றாகிவிடுகிறது. எந்த அலுப்புமில்லாத இந்தவகை விவாதங்களை அன்றாடம் கேட்டு சலித்துவிட்டது. இந்தத் தாய் சொல்கிறாள்,

நான் அண்ணார்ந்து பார்த்து
அதிசயித்த விந்தைகளை உன்
உள்ளங்கையில்
ஒளித்து வைப்பதற்காய்
ஓடிய ஓட்டத்தில் -நான்
தேடியது எதுவுமில்லை.

ஓர் அனுபவக்குரலுடன் இந்த கவிதைகொள் தாய் வந்துநிற்கிறாள்.

பெரியாரின் பகுத்தறிவின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட கவிஞராக புதியமாதவி இருக்கிறார்.

திராவிடத் தந்தையே
உன் வெண்தாடியின் முன்னால்
தேசப்பிதாவின்
ஊன்றுகோல்கூட
வளைந்து போனது

என்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரியாரின் மதம் பற்றிய, சாதி பற்றிய, பெண்ஒடுக்குமுறை பற்றிய, சுதந்திரம் பற்றிய புரிதல்களையெல்லாம் இக் கவிதையில் தொட்டுச் செல்கிறார்.

நீ
ஒரு தலைமுறைத் திராவிடனின்
கருவில் கலந்துவிட்டாய்.

என மிகப் பொருத்தமான செய்தியை கவிதையில் வெளியிடுகிறார். இதேபோலவே வள்ளுவர் பற்றிய கவிதையிலும் வள்ளுவனை சாதி, மதம் கடந்த நிலையில் வைத்து அடையாளம் காணுகிறார். அதை வள்ளுவனின் அரசியலாக அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு வெளிக்கிளம்பும் புதியமாதவி  பெரியாரின் தமிழினம் தமிழ்மொழி பற்றிய வரைவுகளை காணாதவராக தமிழ் இனம் என்ற கவிதையில் வருகிறார். உலகின் மூத்தகுடி என்று -மற்றவர் வரலாறை தெரிந்துகொள்ளாமலே- கத்துவதும், தமிழ்மட்டுமே தெரிந்தவன் தமிழ்மொழிபோல் இனிய மொழி எதுவுமில்லை என்று கூச்சலிடுவதும் எந்த அறிவியலுக்கு உட்பட்டதோ தெரியவில்லை. இதை விமர்சிப்பவர்கள் தமிழனாக இருக்கமுடியாது என்ற மொங்கலுடன் வருவதற்கு கணிசமான ஆட்களை எமது வரலாறு உருவாக்கி வைத்திருக்கிறது. தனக்கு தமிழில் பற்றில்லை என்று சொல்லிவிடுவார்கள் என்ற அச்சத்துடன் இவைகளை சிலாகிக்க முன்வராதவர்களும் இருக்கிறார்கள். இந்த கவிதைத் தொகுப்பு (ஹே...ராம்) அறிமுகப்படுத்தும் புதியமாதவியும் வைரமுத்து முன்னிலையிலான கவியரங்கக் கவிதையில் காணாமல் போய்விடுகிறார்.

அவர் ...கிறார்,
என் தமிழினமே!
மனிதஇன வரலாற்றுக்கு
முன்னுரை போட்ட
என் தமிழினமே
...
என் தமிழினமே!
மனித நாகா¢கத்திற்கு
தொட்டில் போட்ட
என் தமிழினமே
...

இந்தக் கவிதையில் இப்படியெல்லாம் வரிகள் அரைக்கின்றன. அதுமட்டுமல்ல வைரமுத்துமுன் பாடுவது பெரும்பேறு என்பதாய்,

வெள்ளித்திரை உலகின்
விடிவெள்ளி முடியரசே
கள்ளிக்காட்டின்
கவிதைகளை வாழவைத்த
குடியரசின் இதிகாசமே

என்று கவிதையைத் தொடங்குகிறார். முகம்பார்த்து கவிதை செரிந்து கவிதைத் தொழில் செய்பவர்களுக்கு இது பொருத்தம். ஒடுக்குமுறைகளை சுட்டெரிக்கும் ஒரு கவிஞர் குறைந்தபட்சம் பெண்களின் ஆண்நோக்கிலான விபரிப்புகள்மீது காறி உமிழும் ஒரு கவிஞை வைரமுத்துவை இந்தளவுக்கு கண்டுகொள்ளவேண்டிய அவசியம் அவரின் எந்தக் கவிதைச் செய்திகளிலிருந்து கிடைக்கப் பெற்றதோ தெரியவில்லை.

நட்பு சம்பந்தமான புதியமாதவியின் சூர்யா-நட்புமண்டலம் என்ற (பதிவுகள் இணையத் தளத்தில் வரும்) தொடர் உரையாடலில் நன்றாக தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. மனித உறவுகளுக்குள் நட்பு என்பதை அவர் ஆழமான தொடர்பாகவே பார்க்கிறார். பல சந்தர்ப்பங்களில்  உள்ளத்தைத் திறந்து பரிமாறல்கள் நிகழ்த்தப்படக்கூடிய ஒரு களமாக நட்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

நெல்லிக்கனி என்ற கவிதையில் சொல்கிறார்.

என் நண்பனே
எங்கே நீ
ஒளிந்துகொண்டாய்?
துயரங்கள் சுமையாகும்போது
உன் தோள்களைத்
தேடுகிறேன்
சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

குடும்ப உறவுகளுக்கு அப்பாலும் காதலுக்கு அப்பாலும் ஒரு உயர்ந்த இடத்தில் அவர் நட்பு என்பதை வைக்கிறார்.

நம் நட்பு
ராக்கிக் கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும்விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்...
என்று கூறும் கவிஞை உச்சமாகச் சென்று,
நண்பனே
நட்பு தோல்வியடைந்ததாக
கதைகளில்கூட
கற்பனை செய்யாதே.
அந்தத் தோல்விக்குப் பின்னால்
மனிதநேயம்
மாண்டுபோய்விடும்
மண்ணில் உயிர்கள்
மறைந்து போய்விடும்

என்கிறார். நட்பின் ஆழத்தை உயிர்களின் வேர்கள்வரை கொண்டுசென்றுவிடுகிறார்.

ஈழத்து அகதியொருவருடனான தொடர்பாடலாக நீ அகதி அல்ல என்ற கவிதை இருக்கிறது.

நீ அகதி
என்று எழுதியது
என் சட்டம்
நீ அண்ணன்
என்று துடித்தது
என் ரத்தம்

என சகோதரியாக அருகில் வரும் புதியமாதவி, இந்தக் கவிதையில் ஆழமான வரிகளை விட்டுச்செல்கிறார். அவர் கூறுகிறார்,

நீ
விடியலுக்காகக் காத்திருக்கிறாய்
நான்
வெளிச்சமெல்லாம் விடியலல்ல
என்பதால்
உனக்காக விழித்திருக்கிறேன்.

விடியல் என்பதே ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு தனது இனத்தால் அல்லது தனது நாட்டவரால் ஆளப்படும்போது தானாகவே பிறந்துவிடுவதாக பலர் கனவுகாண்கிறார்கள். இதெல்லாம் பொய்த்துக்கொண்டிருப்பதை வரலாறும் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் தாய்ச்சிச் சட்டியிலிருந்து வழுவி அடுப்புக்குள் விழுந்த கதையாக விடுதலை தத்தளித்துப் போய்விடுகிறது. இன ஒடுக்குமுறை சாதி ஒடுக்குமுறை மத ஒடுக்குமுறை, பெண் ஒடுக்குமுறை, குழந்தைகள்மீதான ஒடுக்குமுறை என்பவற்றில் எல்லாம் செயற்படும் அதிகாரத்துவங்களின் சகல நுண்களங்களிலும்கூட மாறுதல் நிகழ்த்தக்கூடிய போராட்டங்களிலேயே விடுதலையின் அர்த்தத்தைத் தேடமுடியும். கவிதையில் வரும் வெளிச்சமெல்லாம் விடியலல்ல என்ற வரிகள் இந்தத் தேடலைநோக்கி எம்மை அழைத்துச் செல்கிறது.

ஹே..ராம் கவிதைத்தொகுப்பு இவ்வாறு பல தளங்களுக்கும் சென்று கவிதைகளை தொகுத்திருக்கிறது. மதவெறியை தோலுரிப்பவளாக பெண் ஒடுக்குமுறை பற்றிப் பேசுபவளாக மட்டுமல்லாமல் ஒரு நண்பியாக சகோதரியாக தாயாகவும் இக் கவிதைத் தொகுப்பில் புதியமாதவி உலாவருகிறாள். இத் தொகுதி பெண் ஒடுக்குமுறை பற்றிப் பேசுவதிலும் பார்க் க பல மடங்காக மத சாதி அரசியலை எதிர்த்து பேசுவதில் உள்ளடக்கம் பெற்றிருக்கிறது. வரிகளை கோர்ப்பதிலும் பிரிப்பதிலும் செழுமைப்பட்டிருக்கலாம் என்ற ஒரு அபிப்பிராயம் கவிதையை ஓசையுடன் வாசிக்கும்போது எழுகிறது. ஆனாலும் இது ஒரு குறைபாடாக கொள்ளமுடியாது. ஏனெனில் புதுக்கவிதையை வரைவுகளுக்குள் கட்டிப்போடும் சட்டம்பித்தனத்தில் பல இலக்கியப் பிரமுகர்கள் தோற்றுக்கொண்டே வருகிறார்கள். எனவே வாசிப்பின் தொனி வேறுபடலாம் என்பதால் வரிவடிவங்கள் எல்லோருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. உடைந்த ஊசி, எரியும் நட்சத்திரம், ஓடும் மனிதனே ஆகிய கவிதைகள் எந்த வாசனையையும் தரவில்லை என்பது சிறு செய்தி.  முடிவாக, ஹே..ராம் கவிதைத் தொகுப்பு வாசிக்கப்படவேண்டிய ஒரு தொகுப்பாக கண்டுகொள்ளப்பட வேண்டிய ஒரு கவிதாயினியாகப்  புதியமாதவியை எம்முன் நிறுத்தியுள்ளது.

வெளியீடு: மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.