- எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் பிறந்தநாள் ஜூலை 13. அவரைப் பதிவுகளும், அதன் படைப்பாளிகள், வாசகர்களும் வாழ்த்துகின்றார்கள்.  அவரது கலை, இலக்கியச் சேவையுடன், சமுக சேவையும் முக்கியமானது. அவரது தன்னலமற்ற சமூக,இலக்கியப் பங்களிப்பு போற்றுதற்குரியது. வாழ்த்துகள். - பதிவுகள்.காம் -


அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும்  நீர்கொழும்பு விஜயரத்தினம் மத்திய  கல்லூரி மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் தகவல் அமர்வும் அண்மையில் ( கடந்த 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ) கல்லூரியின் நூல் நிலைய மண்டபத்தில், அதிபர் திரு. ந. புவனேஸ்வரராஜாவின் தலைமையில் நடைபெற்றது. கடந்த பலவருடங்களாக,  கல்வி நிதியத்தின் உதவியைப் பெற்றுவரும் மாணவர்களுக்கான இந்த ஒன்றுகூடலில் இம்முறை நிதியத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியும்,  ஆசிரியர்களும் உதவி பெறும் மாணவர்களின் தாய்மாரும் கலந்துகொண்டனர்.

கல்வி நிதியத்தின் தொடர்பாளர் ஆசிரியை செல்வி லோஜினியின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சி, இக்கல்லூரியின் முதலாவது தலைமை ஆசிரியர் ( அமரர் ) பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மங்கள விளக்கேற்றப்பட்டு தொடங்கப்பட்டது.

தமது தந்தையை இழந்து வறுமைக் கோட்டின் கீழ் கல்வியை தொடரும்  இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36  வருடங்களுக்கும் மேலாக உதவி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவியை பெற்ற விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர்,  பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரிகளாகியிருக்கும் அதேசமயம்,  ஆசிரியர்களாகவும் பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராகவும் பதவிபெற்று பணியாற்றி வருகிறார்கள் என்ற நற்செய்தி  இந்த மாணவர் ஒன்றுகூடலில் தெரிவிக்கப்பட்டது. கல்லூரியின் முன்னாள் மாணவர்களான திருமதிகள் மதுரா சிவசங்கர்,  பரிமளஜெயந்தி நவரட்ணம், சூரியகுமாரி ஶ்ரீதரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கல்வி நிதியத்தின் பணிகளை சித்திரிக்கும் ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது.

உதவி பெறும் மாணவி செல்வி ராமச்சந்திரன் சாயிபிரதா,  வறுமைக்கோட்டில் வாழும் மாணவர்களை தெரிவுசெய்து உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்திற்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். இம்முறை இத்திட்டத்தின் கீழ் மேலும் சில மாணவர்களை இணைத்துக்கொண்டதற்காக அதிபர் திரு. புவனேஸ்வரராஜா கல்வி நிதியத்திற்கு நன்றி தெரிவித்தார். உதவிபெற்ற மாணவர்களுக்கும் தாய்மாருக்கும் மதியபோசன விருந்தும் வழங்கப்பட்டது.

மேலும் சில நிகழ்வுக் காட்சிகள்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.