"சங்ககாலத்திலிருந்து  புலவர்கள்,  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்  அரசியல்   பேசி வந்தவர்கள்தான்.   அவர்கள் அரசியல்வாதியாகவில்லையென்றாலும்,   சங்க காலப்புலவர்கள்   மன்னர்களை  புகழ்ந்து  பாடியே   வாழ்க்கையை   ஓட்டினர். விதிவிலக்காக"மன்னவனும்   நீயோ   வளநாடும்  உனதோ..." என்று தமது   தர்மாவேசத்தை   கொட்டிவிட்டு அரசவையை விட்டுப்புறப்பட்டவர்தான்  கவிச்சக்கரவர்த்தி கம்பர்.  

வள்ளுவரும்    இளங்கோவும்  அவருக்குப் பின்னர்  வந்த  பாரதியும் அரசியல், அறம்  பற்றியெல்லாம்  எழுதினார்கள். நவீனகாலத்து  எழுத்தாளர்கள் அரசியல்  பேசியதுடன்  எழுதினார்கள், அரசியல்வாதிகளாக  தேர்தல்களிலும்  தோன்றினார்கள்.    அரசியல் தலைவர்களை   நம்பி   அவர்கள்  பின்னாலும்  சென்றார்கள். " எனத்தொடங்கிய பதிவென்றை சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத நேர்ந்தது. காரணம் இல்லாமல் காரியம் இல்லையல்லவா..?

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நானறிந்த சில இலக்கியப்படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள் போட்டியிட்டனர். மலையகத்தில் வீரகேசரி  முன்னாள்   ஆசிரியர்  தேவராஜ்,   சக்தி தொலைக்காட்சி ‘ மின்னல்  நிகழ்ச்சி ‘ ரங்கா, மற்றும்   இலக்கியவாதி  மல்லியப்பு சந்தி  திலகர்  என  அழைக்கப்படும் மயில்வாகனம் திலகராஜன், ஆகியோரும்  யாழ்ப்பாணத்தில்  வல்வை  அனந்தராஜ் என்ற  எழுத்தாளரும்  போட்டியிட்டனர்.  அனந்தராஜ் ஆசிரியராகவும் பின்னர்  நகரசபையில் மேயராகவும்  அங்கம் வகித்தவர். முன்னாள்  உதயன்,  சுடரொளி  பத்திரிகைகளின்  சிரேஷ்ட ஊடகவியலாளர்  வித்தியாதரன்,  ஊடகவியலாளர்  யதீந்திரா,  கவிஞர் அதாவுல்லா,  எழுத்தாளர்கள்  செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் ,  அந்தனி ஜீவா ஆகியோரும் தேர்தல்களில் போட்டியிட்டனர்.  ஆனால்,  மல்லியப்பு சந்தி  திலகரைத்தவிர  மற்றவர்கள்  தோல்வியுற்றனர்.

மல்லியப்பு  சந்தி   திலகருக்கு  அதுவே  முதலாவது பாராளுமன்ற  அரசியல்  பிரவேசம்.  புதிய தலைமுறை. 'இவரிடமிருந்து ஈழத்து  இலக்கிய  உலகம்  குறிப்பாக   மலையக இலக்கிய   உலகம்  நல்ல செய்திகளை எதிர்பார்க்கிறது'  என்றும் எழுதியிருந்தேன். அவ்வாறு குறிப்பிடப்பட்ட மல்லியப்பு திலகருக்கு, அவர் சார்ந்திருந்த கட்சி, அடுத்துவந்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி தரவில்லை. அவரும் சுயேட்சையாக தனித்து நின்று போட்டியிட்டு, வெல்லும் வாய்ப்பிருந்தவருக்கு கிடைக்கவிருந்த வாக்குகளை சிதறடிக்கவில்லை.

இலக்கியத்திலிருந்து சினிமாவுக்குச் சென்ற ஜெயகாந்தன், எவ்வாறு தனது கௌரவத்தை காத்துக்கொள்ள அதிலிருந்து வெளியேறினாரோ, அவ்வாறே மல்லியப்பு திலகரும் தேர்தல் அரசியலிலிருந்து விலகி, தொடர்ந்தும் மலையக மக்களுக்காக குரல் எழுப்பிவருகிறார். இவரை முதல் முதலில் வத்தளையில் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களின் இல்லத்தில்தான் சந்தித்தேன்.

மலையகத்தில்   வட்டகொட  பிரதேசத்தில்  வடக்கு   மெதகொம்பரதோட்டத்தில்  1973  ஆம்  ஆண்டு  பிறந்திருக்கும்   மயில்வாகனம்  திலகராஜன் கொழும்பு  பல்கலைக்கழகத்தின்   முகாமைத்துவ பட்டதாரி. மல்லியப்பு சந்தி  இவரது கவிதைத் தொகுதி. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி நீண்ட விரிவான முன்னுரையும் தந்திருக்கிறார். அதில் திலகரின் எழுத்துலக எதிர்காலம் பற்றியும் துல்லியமாக சொல்லியிருக்கிறார்.

அன்றைய தேர்தலில் திலகர் வெற்றிபெற்றதும் தொலைபேசியூடாக  வாழ்த்துக் கூறினேன். மீண்டும் அவருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட வேளையிலும் தொடர்புகொண்டேன். இலக்கிய உலகில் நான் பெரிதும் நேசிக்கும் சகோதரன் அவர். சமகாலத்தில்  'மலையகம் 200'  பேசுபொருளாகியிருக்கிறது. ஆனால், திலகர் நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே  'மலைகளைப் பேசவிடுங்கள் – மௌனத்துக்கு கீழே பல குமுறல்கள்'  என குரலற்ற அம்மக்களின் குரலாக பேசிவருபவர். இலங்கைக்கு நான் வரும்போதெல்லாம் தவறாமல் சந்திக்கும் இலக்கியவாதி அவர்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் கடந்த செப்டெம்பர் மாதம் சிட்னியில் நடத்திய 23 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் அவரது உரையை காணொளி வாயிலாகப்பெற்று ஒளிபரப்பினோம். அவ்விழாவில் மலையகம் 200 என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கு அமர்வினை இங்கிருக்கும் எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான கானா. பிரபா ஒருங்கிணைத்திருந்தார்.

"அரசியல், இலக்கிய ஆளுமைகளைக் கவனப்படுத்துவதில் திலகரின் பணிவும் அக்கறையும் தனித்து நோக்கத்தக்கது. ஒரு Eccentric போக்குடையவராக கருதப்படும் சக்தீ அ. பால அய்யா அவர்களை இறுதிவரை பாதுகாத்துப் பேணியவர் திலகர். பேராசிரியர் கா. சிவத்தம்பியை அவரின் இறுதிக்காலங்களில் சந்தித்து, உரையாடி அவருக்கு பலமாக இருந்திருக்கிறார். மலயகத்தின் மகத்தான இலக்கிய வியக்தியாகத்திகழும் தெளிவத்தை ஜோசப் அவர்களை என்றும் கனப்படுத்தி வருபவர் திலகர். இன்றும் தங்கள் வீடமைத் திட்டங்களுக்கு மலையகப் பெரியார்களின் பெயர்களை வைத்து கௌரவம் செய்திருக்கும் செயல் திலகரின் பெயரை என்றும் நிலைநிறுத்தும். வயதில் இளையவரானாலும் முதிர்ந்த அரசியல் ஞானியின் பக்குவம் அவருக்குச் சித்தித்திருக்கிறது"  என்று திலகர் பற்றி லண்டனில் வதியும் எழுத்தாளர் மு. நித்தியானந்தன் விதந்து குறிப்பிட்டுள்ளார் . ( மலைகளைப் பேசவிடுங்கள் – நூல் )

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டேபர் மாதம் மறைந்துவிட்ட தெளிவத்தை ஜோசப் அவர்களுக்காக தமது இல்லத்தில் ஒரு நினைவு அறையையே உருவாக்கி, காட்சிப்படுத்தியிருக்கிறார் திலகர். இதிலிருந்து மல்லியப்பு திலகரின் இலக்கிய நேசிப்பு எத்தகையது என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் ! " என்று அமரத்துவம் எய்திவிட்ட தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆன்மா பேசக்கூடும் என்பது எனது குருட்டு நம்பிக்கை. திலகர், பாராளுமன்ற அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தாலும், தொடர்ந்தும் பல்கலைக்கழக மட்டத்தில் படித்துக்கொண்டிருக்கிறார். ஆய்வுகளில் ஈடுபட்டுவருகிறார். மலையக மக்கள் தொடர்பாக குரல் கொடுத்துவருகிறார்.
நாடற்றவர்களாக்கப்பட்ட மலையக மக்களின் வரலாற்றை திலகரின் பதிவுகளிலிருந்து தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளமுடியும்.

ஊடகக் கற்கைநெறி தற்போது பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இடம்பெற்றுள்ளது. இந்தத் துறையில் பயிலும் மாணவருக்கு திலகரின் மலைகளை பேசவிடுங்கள் நூல் சிறந்த உசாத்துணையாக பயன்படும். இத்துறை சார்ந்த பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும் கவனிப்பார்களா..?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.