இலங்கை வடபுலத்தில் ஐந்து தீவுகள் சங்கமமாகும் இந்து சமுத்திரக்கரையோரத்தில் ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியளவு வாழ்ந்த மக்களின் பூர்வீகம் எழுவைதீவு கிராமம். பனையும் தென்னையும் பயன்தரு மரங்களும் மட்டுமல்ல ஆர்ப்பரிக்கும் கடலின் உணவுகளும்தான் அந்தக்கிராம மக்களுக்கு வாழ்வளித்தன. ஒருகாலத்தில் தீப்பெட்டிக்கும் எண்ணெய்க்கும் உப்புக்கும் மாத்திரம் கடைகளை நாடிச்சென்ற அந்தச்சிற்றூர் மக்களுக்கும் கனவுகள் இருந்தன. மின்சார வசதியில்லாத அக்கிராமத்து மக்களுக்கு தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கனவுகளும் அக்கறையும் இருந்தன.

எழுவைதீவு கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் 1954 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி பிறந்து, படிப்படியாக கல்வியில் உயர்ந்து, தான் பிறந்த ஊருக்குப்பெருமை சேர்த்தவர்தான் விலங்கு மருத்துவர் நடேசன்.

ஒருவரது வாழ்வு கனவுகளுடன்தான் ஆரம்பிக்கின்றது. இளமைக்காலக்கனவுகள் , வளரும் பருவத்தில் நனவாவது குறிப்பிட்ட பலருக்கு மாத்திரமே சாத்தியம்! மருத்துவமனை வசதியே இல்லாதிருந்த எழுவைதீவு மக்கள் ஒரு காலத்தில் படகில் சென்றுதான் அயலூர் மருத்துவமனைகளில்தான் சிகிச்சைபெற்று வந்தனர்.

கர்ப்பிணிப்பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அவ்வாறு அவதியுற்ற காலத்தில் அங்கு பிறந்த நடேசனின் கனவு, அவர் கடல் கடந்து அவுஸ்திரேலியா வந்ததன் பின்னர்தான் நனவாகியது. அதற்கான வழித்தடத்தை வழங்கிய கங்காரு தேசத்திற்கு நன்றி விசுவாசமாக வாழ்ந்தவாறு, இங்கும் பல சமூகப்பணிகளை முன்னெடுத்தவாறு இலக்கியவாதியாகியிருக்கும் நடேசன் அண்மையில் தமிழ்நாட்டில் தனது நாவலுக்காக கரிகாற்சோழன் விருதையும் பெற்றிருக்கிறார். எழுவைதீவு மக்களுக்காக ஒரு மருத்துவ மனையையும் சில வருடங்களுக்கு முன்னரே அமைத்துக் கொடுத்துள்ளார்.

எழுவைதீவில் தனது ஆரம்பக்கல்வியை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் மேலும் தொடர்ந்த நடேசன், உயர்தர வகுப்பில் தேர்ச்சிபெற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கு மருத்துவ பீடத்தில் தனது மேற்கல்வியைத் தொடர்ந்தார்.

இலட்சிய நோக்கத்துடன் வாழும் ஒவ்வொருவரது வாழ்விலும் மூன்று அம்சங்கள் தவிர்க்கமுடியாமல் இரண்டறக்கலந்துவிடும். அவை:- கனவு ( Dream) போராட்டம் ( Struggle) வெற்றி ( Success) நடேசனின் வாழ்வை கூர்ந்து நோக்கும்பொழுது இந்த அம்சங்கள் தவிர்க்கமுடியாதவையாக இருந்துள்ளன. ஒரு நோக்கத்தை கனவுகாண்பது. அதனை நனவாக்க கடுமையாக உழைப்பது. இறுதியில் வெற்றிபெறுவது. முன்னாள் இந்திய ஜனாதிபதியும் விஞ்ஞானியுமான பாரதரத்னா அப்துல்கலாம், இளையசமுதாயத்தைப்பார்த்து அடிக்கடி உதிர்த்த வார்த்தையே “கனவு காணுங்கள் “ என்பதுதான்.

பேராதனைப்பல்கலைக்கழகத்தின் விலங்குமருத்துவ பீடத்திலிருந்து ஒரு பயிற்சிபெற்ற மருத்துவராக வெளியே வந்த நடேசனை, முதலில் தொழில் நிமித்தம் வரவேற்றது சிங்கள மக்கள் செறிந்துவாழும் புறநகரப்பிரதேசம் மதவாச்சி. அதனைத்தொடர்ந்து மலையகத்தின் எழில்கொஞ்சும் ராகலை அவரது சேவையை உள்வாங்கியது. தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த வடபகுதியிலிருந்து கடலை அண்டியிருந்த ஒரு பின்தங்கிய, மண்ணையும் கடலையும் நம்பிவாழ்ந்த உழைக்கும் மக்கள் கூட்டத்திலிருந்து வந்த இவருக்கு, பரந்த மனப்பான்மையும் சேவை உணர்வும் ஏனைய பிரதேசங்களில் பணி நிமித்தம் வாழ நேரிட்டதனால் கிடைக்கப்பெற்ற புத்திக்கொள்முதல் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் தனது வாழ்வின் தரிசனங்களை பின்னாட்களில் அவரால் இலக்கியத்தில் படைக்க முடிந்திருக்கிறது.

தமிழ்ப்பிரதேசத்தில் பிறந்து, மத்திய பகுதியில் பல்கலைக்கழகப் பட்டம்பெற்று, முற்றிலும் அந்நியமான வேறிடத்தில் ஏனைய சமூகத்தவருடன் தொழில் நிமித்தம் வாழ்ந்த நடேசன், 1983 இல் நிகழ்ந்த வன்செயல்களினால் நாட்டைவிட்டுச்செல்லநேர்ந்தது. தமிழ்நாட்டில் சில வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தவேளையிலும் சமூகத்தின்பால் அவருக்கிருந்த அக்கறை குறையவில்லை. அவரது மனைவி சியாமளா பயிற்றப்பட்ட மருத்துவர். இருவரும் இணைந்து தமிழ்நாட்டிலிருந்த இலங்கை தமிழ் அகதிகளுக்காக மருத்துவ முகாம் நடத்தினார்கள். குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சைப்பணிகளை முன்னெடுப்பதற்காக (Medical Unit for Service of Tamils - MUST) என்ற அமைப்பினை உருவாக்கினார். அத்துடன் தமிழ்நாட்டில், செங்கல்பட்டுவில் ஒரு பண்ணையிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். அதன் பெறுதான் அவர் எழுதியிருக்கும் பண்ணையில் ஒரு மிருகம் என்ற நாவல்.

தேடல் மனப்பாங்கு, மனிதநேய இயல்புகள் , ஊர்சுற்றிப்பார்க்கும் பழக்கம் முதலான குணாதிசயங்களை இயல்பிலேயே கொண்டிருந்த நடேசன், 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் புலம்பெயர்ந்த பின்பும், விலங்கு மருத்துவ பணியையும் சமூகப்பணிகளையும் தொடர்ந்தார். சிட்னியில் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் MSc பட்டத்தை பூர்த்தி செய்துகொண்டு , தென் அவுஸ்திரேலியா மாநிலத்திலும் விக்ரோரியா மாநிலத்திலும் தனது தொழில்வாழ்வைத் தொடங்கினார். இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீவிரமடைந்த காலம் முதல் அறிவுபூர்வமான தெளிவான நிலைப்பாட்டுடன் சமாதான சகவாழ்வு குறித்து சிந்திக்கவும் செயற்படவும் முன்வந்தார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளின் நலன்குறித்து அக்கறையுடன் இயங்கிய அவருக்கு , அந்த உணர்வு அவுஸ்திரேலியா வந்தபின்னர் வேறு ஒரு திசையில் வளர்ந்தது. அவுஸ்திரேலியாவில் இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக வந்து குடியேறத்தொடங்கியதும் அவர்களின் நலன்குறித்தும் அக்கறை காண்பித்தார். அதனால் அந்தப்புரிதல் உள்ள சில நண்பர்களுடன் இணைந்து தமிழ் அகதிகள் கழகம் என்ற அமைப்பை தோற்றுவிப்பதற்கு முன்னின்று உழைத்தார். அந்த அமைப்பு பல நல்ல பணிகளை மேற்கொண்டது. இந்த நாட்டில் அகதிகளாக வந்து குடியுரிமை பெறுவதில் சிரமப்பட்ட பலருக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கினார். அத்துடன் இங்கு 1988 இல் உருவாக்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற அமைப்பினதும் ஸ்தாபக உறுப்பினாராக செயல்பட்டார். இந்த அமைப்பு இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 35 வருடகாலமாக உதவிவருகிறது.

மெல்பனில் நடேசன் குடியேறி மூன்று தசாப்த காலமாகிவிட்டது. இக்காலப்பகுதியில் அவர் மேற்கொண்ட சமூகப்பணிகளை இவ்வாறு பட்டியலிடலாம்.

அகதிகள் புனர்வாழ்வு.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சி.
எழுத்துத்துறை ஈடுபாடு,
ஊடகத்துறை செயற்பாடு.
சமாதான சகவாழ்விற்கான புரிந்துணர்வு அரசியல்பணிகள்.

பல வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் உதயம் தமிழ் - ஆங்கில இருமொழிப்பத்திரிகையையும் அவர் ஆரம்பித்து, சுமார் பன்னிரண்டு வருடகாலம் நடத்தினார்.

குறிப்பிட்ட உதயம் பத்திரிகை அரசியல் விமர்சன ஏடாகவும் வெளியானமையினால் எதிர்வினைகளையும் சந்தித்தார். எனினும் பத்திரிகா தர்மத்துக்குட்பட்டவிதமாக அவுஸ்திரேலியா ஊடக பதிப்புச்சட்டங்களை மதித்து அதனை தொடர்ச்சியாக வெளியிட்டார். உதயம் மாத இதழில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அரசியல் விமர்சனக்கட்டுரைகளும், நேர்காணல், நூல்களின் அறிமுகம் திறனாய்வு, சினிமா, வரலாறு , மொழிபெயர்ப்பு சிறுகதை , கவிதை, பத்தி எழுத்துக்கள், தொடர்கதைகள் என்பனவும் வெளியாகியிருக்கின்றன.

தமிழகத்தின் முக்கிய படைப்பாளிகளான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாவண்ணன் ஆகியோரினது பத்தி எழுத்துக்களும், தமிழகத்தில் தினமணியில் பணியாற்றிய சிரேஷ்ட ஊடவியலாளர் எஸ். எம். கார்மேகம் அவர்களின் தமிழக செய்திக்குறிப்புளும், இலங்கை அவுஸ்திரேலியா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களும் வெளிவந்துள்ளன. உதயத்தின் கலை இலக்கிய சமூக அரசியல் ஊடகப் பணிகள் குறித்து விரிவாக பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம். தமிழர் புகலிட நாட்டில் வெளியான பல தரமான கனதியான இதழ்களின் வரிசையில் உதயம் இதழும் இணைந்துள்ளது.

உதயம் இதழின் ஆண்டு விழாவுக்காக தமிழகத்திலிருந்து முன்னணி படைப்பாளி ஜெயமோகனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அழைக்கப்பட்டார். அவர் தமது பயணக்கதையை புல்வெளிதேசம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. உதயம் இதழின் வருடாந்த நிகழ்வு - ஓன்று கூடல்களை கருத்தரங்கு பாணியிலும் நடத்தினார். அவுஸ்திரேலியா வெள்ளை இனத்தவர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட சிங்களவர் தமிழர் முஸ்லிம் புத்திஜீவிகளும் குறிப்பிட்ட கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளனர்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததும் இலங்கை அரசாங்கம் அடுத்து மேற்கொள்ளவேண்டிய மக்கள் நலன்சார்ந்த பணிகள் குறித்து தெரிவிப்பதற்காக ஒரு தூதுக்குழு நடேசனின் தலைமையில் இலங்கை சென்றது. பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்க அரசியலும் மக்கள் நலன் அரசியலும் நடத்த முடியும் எனத்திடமாக நம்பிவரும் நடேசன், அதற்காக தொடர்ந்தும் பாடுபட்டுவருகிறார்.

உலக அரங்கில் பேச்சுவார்த்தைகள் என்பது முக்கியத்துவமானது. இதில் வெற்றி தோல்விக்கு அப்பால் மனிதநேயம் , மக்கள் நலன், பாதுகாப்பு , வாழ்வாதாரம் என்பனவும் கவனிக்கப்படல்வேண்டும் என்பதில் கருத்துறுதி கொண்டவரான நடேசன், விமர்சனங்களையும் சந்திக்கிறார். ஆனாலும் அந்த விமர்சனங்களையும் அறிவுபூர்வமாகவே உள்வாங்கமுடியும் என்றும் கருதுகிறார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து களமாடி, போர் முடிவுக்கு வந்தபோது சரணடைந்த முன்னாள் போரளிகளை சந்தித்து, அவர்களது தேவைகளை கவனிக்க பல தடவைகள் தமது சொந்தப்பணத்தில் பயணமானதுடன், அவர்களின் அடிப்படைத்தேவைகளுக்கும் உதவினார். முன்னாள் போராளி மாணவ மாணவிகளை தாமதமின்றி உடனடியாக மீண்டும் கல்விக்குத் தயார்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து பாதுகாப்புத்தரப்பு உயர் அதிகாரிகளுடன் உரையாடி, அவர்களை அதற்குச் சம்மதிக்கச்செய்தார்.

குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான மாணவர் களை G.C.E O/L -G.C.E. A/L பரிட்சைக்குத்தயார்ப்படுத்தி, அதற்கான செலவுகளை அவுஸ்திரேலியாவில் தாம் அங்கம்வகிக்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஊடாக நிதிதிரட்டி அம்மாணவர்களை பரீட்சைகளுக்கு தோற்றவைத்தார். அந்த மாணவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தாம் முன்னர் மேற்கல்வி கற்ற பேராதனை பல்கலைக்கழக விலங்கு மருத்துவ பீடத்தில் சில மாதங்கள் மாணவர்களுக்கு விருந்தினர் அடிப்படையில் விரிவுரையாற்றியதுடன், அங்கு தேவைப்பட்ட முக்கிய மருத்துவ உபகரணங்கள், கருவிகளையும் நன்கொடையாக வழங்கினார். இதனை அவரது நன்றிக்கடன் என்றும் கூற முடியும்.

ஏற்கனவே இந்தப்பத்தியில் குறிப்பிடப்பட்ட தமது சொந்தக்கிராமமான எழுவை தீவில் நீண்டகாலமாக நீடித்த மருத்துவமனை இல்லாத குறையை போக்குவதற்காக அங்கு ஒரு நிலையத்தை உருவாக்கினார். தனது சொந்தப்பணத்துடன் உலகெங்கும் வாழும் தமது நண்பர்களினதும் நிதிப்பங்களிப்பை அந்த நிலையத்தின் கட்டிட வளர்ச்சிக்குப்பெற்றுக்கொடுத்து தனது நீண்ட நாள் கனவை நனவாக்கினார்.

இந்தப்பணிகளைச் சாத்தியமாக்குவதற்கு அவரிடமிருந்த மூல உபாயம் ஆளுமை, நிதானம், ஆற்றல், அரவணைப்பு ஆகியனவே எனவும் கருதமுடியும். இன,மத, மொழி பேதம் கடந்த சர்வதேசிய பன்முக சிந்தனைவயப்பட்ட ஒருவராலேயே இத்தனை பணிகளையும் ஒரே சமயத்தில் சாத்தியமாக்க முடியும். அவரது பணிகளுக்கு என்றும் பக்கத்துணையாக விளங்குபவர் அவரது காதல் மனைவி மருத்துவக்கலாநிதி சியாமளா என்பதும் இச்சந்தர்ப்பத்தில் பதியப்படவேண்டிய ஒரு தகவல். இவர்கள் இருவரும் இந்த ( 2023 )ஆண்டு, இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வகையில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி, இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மருத்துவ தேவைகளையும் கவனித்து வருகின்றனர்.

நடேசனின் தீவிரமான வாசிப்பு அனுபவம், அவரை படைப்பிலக்கியவாதியாக்கியிருக்கிறது. தனது தொழில் சார்ந்த அனுபவப் பதிவு, மற்றும் பயண இலக்கியம், நாவல், சிறுகதை , அரசியல் பத்தி எழுத்து முதலான துறைகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வரவாக்கியிருக்கிறார்.  அவரது வண்ணாத்திக்குளம் நாவல், ஆங்கிலத்தில் Butterfly Lake என்ற பெயரிலும் சிங்களத்தில் சமணல வெவ என்ற பெயரிலும் வெளியாகி, வாசகர் கூட்டத்தை அவருக்கு சம்பாதித்துக்கொடுத்துள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு அவுஸ்திரேலியா அமெரிக்கா நூலகங்களிலும் வாசிக்கக்கிடைக்கின்றன. இந்த நாவலுக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்த திரைப்பட இயக்குநர் ‘ முள்ளும் மலரும் மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுதி திரைப்படமாகத் தயரிக்கவும் முயன்றார். ஆனால், இலங்கையில் அதனைத் திரைப்படமாகத் தயாரிக்கும் சூழ்நிலை இருக்கவில்லை. அந்த நாவல் தற்பொழுது சிங்கள மொழியிலும் கிடைப்பதனால், சிங்கள தொலைக்காட்சி நாடகமாக்குவதற்கு எவராவது முயற்சிக்கலம். காதலையும் அரசியலையும் இந்நாவல் சித்திரிக்கிறது.

உனையே மயல்கொண்டு ( நாவல் ) ஆங்கிலத்தில் Lost In You என்ற பெயரிலும் அசோகனின் வைத்தியசாலை (நாவல் ) King Asoka's Veterinary Hospital என்ற பெயரிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது சிறுகதைகளும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலுருப்பெற்றுள்ளன.

இவரது நூல்கள் :

சிறுகதை தொகுப்புகள்: மலேசியன் ஏயர்லைன் - 370 , அந்தரங்கம், பிள்ளைத்தீட்டு,

நாவல்கள்: வண்ணாத்திக்குளம் , உனையே மயல் கொண்டு, அசோகனின் வைத்தியசாலை, கானல் தேசம், பண்ணையில் ஒரு மிருகம், தாத்தாவின் வீடு

பயண இலக்கியம் : நைல் நதிக்கரையோரம்.

கட்டுரைத் தொகுப்புகள்: வாழும் சுவடுகள் ( மூன்று பாகங்கள் ) -

எக்ஸைல் - கரையில் மோதும் நினைவலைகள்.

இம்மாதம் தனது பிறந்த தினத்தை கொண்டாடும் நண்பர் நடேசனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.