ஆறு தசாப்தங்களுக்கு முன்னர், அதாவது 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரத் தொடங்கிய விவேகி மாத இதழின் அன்றைய விலை நாற்பது சதம்தான். “நாற்பது சதமா…?“ அது எப்படி இருக்கும் என்று சமகாலத்தில் எமது குழந்தைகள் கேட்பார்கள். இலங்கையில் பணவீக்கம் படிப்படியாக வளர்ச்சி கண்டு, அக்கால நாணயங்களை மதிப்பிழக்கச் செய்துவிட்டது. அதற்கு காரண கர்த்தாக்கலான அரசியல்வாதிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றிய அரசுகளும் நாணயமற்றுப் போனதன் விளைவை இலங்கை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

இன, மத, கட்சி சார்பற்ற இதழ் என்ற மகுட வாக்கியத்துடன் விவேகி இதழ், இலக்கம் 32, கண்டி வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியிலிருந்து 1960 களில் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. விவேகியின் கௌரவ ஆசிரியர்: மு.வி. ஆசிர்வாதம், நிர்வாக ஆசிரியர்: மாட்டின் . ஆசிரியர்கள்: செம்பியன்செல்வன், செங்கை ஆழியான். இதனை வெளியிட்டவர்கள் மட்டுமல்ல, இதில் எழுதிய பலரும் தற்போது நினைவுகளாகிவிட்டனர். சிலர் பின்னாளில் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளாகவும் விளங்கினர். சிலர் புலம்பெயர்ந்தனர்.

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தினை அன்று ஏற்படுத்தியிருக்கும் விவேகி இதழ்களை தற்போது நூலகம் இணைய ஆவணகத்தில்தான் பார்க்க முடிகிறது. அனைத்து இதழ்களையும் அதில் காணமுடியவில்லை. ஆயினும், 1963 முதல் 1970 வரையிலான காலப்பகுதியில் வெளியான சில இதழ்களை மாத்திரம் அவதானித்து இக்குறிப்புகள் எழுதப்படுகின்றன.

சிலவேளை சில மூத்த எழுத்தாளர்களின் வீட்டு நூலகங்களிலும் விவேகி இடம்பெறலாம். நூலகம் ஆவணகத்தில் விவேகி இதழ்களை தரவிறக்கம் செய்து பார்த்தபோது, அக்காலப்பகுதியிலேயே தரம்மிக்க உள்ளடக்கங்களை இவ்விதழ் பதிவேற்றியிருப்பது புலனாகின்றது. சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள், செய்திக் குறிப்புகள், விமர்சனங்கள், நாடகம், மொழிபெயர்ப்பு சிறுகதைகள், அரசியல் வரலாற்றுப்பத்தி எழுத்துக்கள் , கேள்வி – பதில், குறுக்கெழுத்துப்போட்டி முதலான விடயங்கள் விவேகியின் உள்ளடக்கச் சிறப்புகள்.

ஓவியர் ,( அமரர் )  'செள ' ,சௌந்தரராஜனின் கருத்துப்படங்கள் இதழ்களை அலங்கரிக்கின்றன. டக்… டக்… பதில் விவேகி - என்ற கேள்வி – பதில் பகுதியிலிருந்த ஒரு கேள்வி சுவாரசியமானது.
எழுத்தாளர் பாமா ராஜகோபால் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்…? பதில்: உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

தற்போது இந்தக்கேள்வியை எவரேனும் கேட்டால், “அவர் இங்கிலாந்திலிருந்து பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கிறார் “ என்று பதில் சொல்லமுடியும். டொமினிக் ஜீவா ( சாலையின் திருப்பம் ) நந்தி ( மலைக்கொழுந்து ) முதலானவற்றின் விளம்பரங்களையும் காணமுடிகிறது. செங்கை ஆழியானின் நந்திக்கடல் வரலாற்றுக்கதைத் தொடரும் வ. அ. இராசரெத்தினத்தின் தேய்பிறை கதைத் தொடரும் செம்பின் செல்வனின் ( அமைதியின் இறகுகள் மற்றும் மூன்று முழு நிலவுகள் - நாடகம் ) ஏ.ரி. பொன்னுத்துரையின் ஒலிவர் டுவிஸ்ட் என்பனவும் விவேகியில்தான் வெளியாகியிருக்கின்றன.

நகுலன் என்ற தங்கரத்தினம் ஆசிரியரின் கன்னிப்பெண் கதைத் தொகுதிபற்றிய மதிப்பீடு உட்பட, வேறு எழுத்தாளர்களின் நூல்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளும் வரவாகியுள்ளன. எழுத்தாளர் நகுலன் பல வருடங்களுக்கு முன்னர் வவுனியாவில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார் என்ற துயரச்செய்தியும் தற்போது நினைவுக்கு வருகிறது.

1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான விவேகியின் ஆசிரியத் தலையங்கம் கவனத்திற்குரியது. அத்துடன் ஐம்பத்தியைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றைய நிலையிலும், சமகாலத்துடன் பொருத்திப் பார்க்கவேண்டியது. அதிலிருந்து ஒரு பந்தி:

“ஒரு நாட்டின் இலக்கிய வளர்ச்சி, அந்நாட்டின் எழுத்தாளர்களின் எண்ணிக்கையாலோ பத்திரிகைகளின் எண்ணிக்கைகளினாலோ அளவிடப்படுவதில்லை. இலக்கிய இரசனை மிகுந்த மக்களின் எண்ணிக்கைகளினாலேயே அளவிடப்படும். இந்த உண்மையை இன்று எமது நாட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஏமாற்றமே எழுகின்றது. “

இதே இதழில் அன்பார்ந்த வாசகர்களே என்ற தலைப்பில் ஆசிரியர் செம்பியன்செல்வன் விடுத்திருக்கும் அறைகூவலும் கவனத்தைப்பெறுகிறது. அதன் உள்ளடக்கத் தொனிப்பொருள் இதுதான்:

விவேகி, யாழ்குடாநாட்டுக்குள்ளிருந்து வெளியானாலும், இங்குள்ள எழுத்தாளர்களுக்கு மாத்திரம் உரிய இதழ் அன்று, வெளிப்பிரதேச எழுத்தாளர்களும் எழுதவேண்டும். அதன்மூலம் தேசிய உணர்வை பலப்படுத்த முடியும். உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தவேண்டிய தேவையையும் சொல்லி, இளம் தலைமுறையினரை குறிப்பாக மாணவர்களையும் அரும்பு என்ற பகுதியில் விவேகி ஆசிரிய பீடம் இணைத்துக்கொள்ள விரும்பியதையும் தெரிவித்திருக்கிறது.

சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக சிறந்த கதைகளை எழுதும் எழுத்தாளர்களுக்கு 25 ரூபா பரிசு வழங்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. அத்தகைய கதைகள் மணிக்கதைகள் என்ற மகுடத்தில் வெளியிடப்படும் என்று அக்குறிப்பு சொல்கிறது. ஈழம் – இலக்கியம் – இயக்கங்கள் என்ற தலைப்பில் 1-4-67 இல் வெளியான விவேகி ஆசிரியத்தலையங்கமும் தேர்ந்த வாசகர்களை உருவாக்கவேண்டிய பொறுப்புணர்வுடன் பத்திரிகைகளும் இலக்கிய இயக்கங்களும் உழைக்கவேண்டும் என வலியுறுத்துகிறது. இதிலிருந்தும் அன்றைய காலப்பகுதியில் இலக்கிய உலகம் எவ்வாறிருந்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.

புத்தக வாரம் என்ற தலைப்பில் ( 1-7-67 இதழ் ) வெளியாகியிருக்கும் ஆசிரிய தலையங்கமும், வாசிப்பின் தேவையை உணர்த்தியுள்ளது. வாசகர்களை கவர்ந்திழுப்பதற்காகவும் விவேகி நகைச்சுவைத் துணுக்கு போட்டிகளையும் நடத்தியிருக்கிறது.

சுந்தர் அம்மான் – செல்லாச்சி என்று இரண்டு முதிய பாத்திரங்களை உருவாக்கி, அவர்களைப் போன்றவர்கள் உங்கள் ஊர்களிலும் இருக்கலாம் அவர்கள் இருவரும் உதிர்க்கும் நகைச்சுவைகளை தபால் அட்டையில் எழுதி அனுப்புமாறு விவேகி கோரியிருக்கிறது. சிறந்த நகைச்சுவைத் துணுக்கிற்கு பரிசு ஒரு ரூபா! அக்காலத்தில் இந்த ஒரு ரூபா பரிசை வென்ற எழுத்தாளர்கள் – வாசகர்கள் எத்தனைபேரோ…?!

அ. யேசுராசா, அக்காலத்தில் விவேகியில் எழுதியிருந்த குறிப்பும் கவனத்தை பெறுகிறது. ஒரே தலைப்பில் வேறு வேறு எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளின் பட்டியலை ( 1-7-67 இதழில் ) யேசுராசா தந்துள்ளார்.

பூரணி, அக்கரைச்சீமையிலே, இலக்கியக்கலை, தரங்கிணி, நாசகாரக்கும்பல், மனக்கண், பிறந்த மண், மணிபல்லவம், சடங்கு, பசி, நீரோட்டம், முள்ளும் மலரும், ஆதாரசுருதி. தலைப்பு ஒன்றானாலும் உள்ளடக்கம் வேறாகியிருக்கிறது என்றும் யேசுராசா குறிப்பிடுகிறார். இது 1967 இல் அவரது கணிப்பு. பின்னாளில் இதில் சிலவற்றின் தலைப்பில் மேலும் சிலர் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.

சாலை இளந்திரையன், து. வைத்திலிங்கம், ஐ. சாந்தன், மு. கனகராசன், வி. கந்தவனம், இமையவன், மருதூர்வாணன், துரை மனோகரன், தாளையடி சபாரத்தினம் முதலான சிலரின் ஆக்கங்களுக்கு அன்று களம் வழங்கியிருக்கும் விவேகி, அக்காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களில் பயின்ற கலை, இலக்கிய ஆர்வம் மிக்கவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சில பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது.

விவேகியில் இணைந்திருந்த செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் ஆகிய இருவருமே பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்திலேயே இலக்கியப் பிரவேசமும் செய்தவர்கள். தம்மைப்போன்று மேலும் எழுத்தாளர்கள் உருவாகவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடமிருந்தமையால், விவேகியையும் அதற்குத் தக்க முறையில் பயன்படுத்தியிருப்பது தெரிகிறது.

விவேகிக்கு எழுதும் எழுத்தாளர்கள் விவேகியில் எட்டுப் பக்கங்களுக்குள் அடங்கத்தக்கதாக எழுதவேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் பத்திரிகைகள், இதழ்கள் இத்தனை சொற்களுக்குள் எழுதி அனுப்பவேண்டும் என்ற எழுதாத சட்டத்தை எழுத்தாளர்களிடம் பிரயோகித்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. கணினியில் எழுதுவோருக்கு கணினியே எத்தனை எழுத்துக்கள் எனச்சொல்லிக்கொடுத்துவிடும். ஆனால், காகிதத்தில் பேனையால் இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எழுதிய சொற்களை ஒவ்வொன்றாக எண்ணவேண்டியிருக்கும். இவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஆனால், அன்று விவேகி தனது பக்கங்கள் குறித்தே அறிவுறுத்தியிருக்கிறது!

விவேகி வெளியான காலத்தில், தமிழகத்திலிருந்து பல வணிக இதழ்கள் இலங்கைக்குள் படையெடுத்திருந்தன. அவற்றின் சந்தையாகவும் இலங்கை திகழ்ந்திருக்கிறது. அதற்கு எதிராகவும் விவேகி போர்க்குரல் எழுப்பியிருக்கிறது.

1-10-67 விவேகி இதழின் ஆசிரியத்தலையங்கம் ( தவறு எங்கே இருக்கிறது? ) இதுபற்றி இடித்துரைத்துள்ளது. இவ்விதழில் செம்பியன் செல்வன் எழுதிய ஈழத்து சிறுகதை மணிகள் தொடரும் ஆரம்பமாகியிருக்கிறது. வைத்திலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன், தாளையடி சபாரத்தினம் முதலான ஈழத்து மூத்த சிறுகதை இலக்கிய கர்த்தாக்களை அறிமுகப்படுத்தும் இத்தொடரில் அவர்கள் பற்றிய அரிய குறிப்புகளுடன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதையையும் வெளியிட்டு வந்துள்ளார். இத் தொடர் பின்னர் நூலாகவும் வெளியானது.

இதுபோன்று விவேகியில் வெளியான செங்கைஆழியானின் படைப்புகளும் பின்னாளில் நூலுருப்பெற்றுள்ளன.

சிறந்த மலையாள, சிங்கள சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளுக்கும் விவேகி, களம் வழங்கி அந்நாட்களிலேயே முன்னுதாரணமாக விளங்கியிருக்கிறது. குயிலோசை என்ற மகுடத்தில் விவேகி கவிதை ஏடு என்ற சிறப்புப்பகுதியில், கருவை தமிழரசன், காரை சுந்தரம்பிள்ளை, மஹாகவி உருத்திரமூர்த்தி, வே. குமாரசாமி ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

மொத்தத்தில் அன்று வெளியான விவேகி, கலை, இலக்கிய, இதழியல் பரப்பில் விவேகமான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். காலப்போக்கில் விவேகி வெளிவருவது தடைப்பட்டிருந்தாலும், அதில் எழுதியவர்கள் பின்னாளில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளாக திகழ்ந்தார்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.