ஈழத்தின் மூத்த கவிஞரும், பாப்புவா நியுகினி, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து, கடந்த 2024 ஆம் ஆண்டு சிட்னியில் மறைந்தவருமான அம்பி அவர்களின் செல்லப்பேத்தி அஷ்வினி சிவக்குமரன் அம்பிகைபாகர் , கடந்த மே 03 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் சிட்னி Barton தொகுதியில் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு, 66 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். எமது மனமார்ந்த வாழ்த்துக்களை அஷ்வினி அம்பிகைபாகருக்கு தெரிவிக்கின்றோம்.

அஷ்வினியை குழந்தைப் பராயத்திலிருந்தே நன்கு அறிவேன்.

சிட்னியிலும், மெல்பனிலும் நடைபெற்ற கவிஞர் அம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கும், அஷ்வினி, கடந்த 2024 ஆம் ஆண்டு, சிட்னியில் தமது அபிமானத்திற்குரிய தாத்தா அம்பி அவர்களின் இறுதி நிகழ்விலும் உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அஷ்வினி, கவிஞர் அம்பியின் மூத்த புதல்வி மருத்துவர் உமாதேவி – பொறியியலாளர் சிவகுமாரன் தம்பதியரின் மூத்த புதல்வியாவார். சிட்னியில் ஹார்ட்ஸ்வில் பிரதேசத்தில் நீண்ட காலம் வசித்த அஷ்வினி, இங்கு தனது ஆரம்பக்கல்வியையும் உயர்தரக்கல்வியையும் பயின்றார். சிட்னி பல்கலைக்கழகத்தில், விஞ்ஞானத் துறையிலும் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையிலும் பயின்று பட்டம் பெற்றார்.

சமூகப்பணிகளிலும் தன்னார்வத் தொண்டுகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்திருக்கும் அஷ்வினி, கடந்த 2022 இல் தாம் நீண்ட காலம் வாழ்ந்த சென். ஜோர்ஜஸ் பிரதேசத்தில், Georges River Council இல் , கவுன்ஸிலராகத் தெரிவானார்.

மூத்த படைப்பாளி, எஸ். பொ. அவர்களின் புதல்வன் மருத்துவர் பொன் . அநுராவின் ஏற்பாட்டில், 2004 ஆம் ஆண்டு சிட்னி, ஹோம்புஷ் ஆண்கள் உயர் நிலைக் கல்லூரியில் நடத்தப்பட்ட இலக்கியப் பெருவிழாவில், கவிஞர் அம்பியின் பவளவிழாவும், அன்னாரின் அந்தச்சிரிப்பு கவிதை நாடக நூலும், எஸ் பொவின் மித்ர வெளியீடுகளான ஆசி. கந்தராஜாவின் உயரப்பறக்கும் காகங்கள், தமிழச்சி சுமதி தங்கபாண்டியனின் எஞ்சோட்டுப்பெண், நடேசனின் வண்ணாத்திக்குளம், எஸ்.பொ.வின் சுயசரிதை வரலாற்றில் வாழ்தல் இரண்டு பாகங்கள், எஸ்.பொ. ஒரு பன்முகப்பார்வை, மற்றும் பூ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

அவ்வேளையில், கவிஞர் அம்பியின் துணைவியார், பாப்புவா நியூகினியில் இருந்தார். அதனால், கவிஞரின் அன்புப் பேத்தி அஷ்வினிக்கு மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தினோம்.

அதே ஆண்டு மெல்பனில் நடந்த கவிஞர் அம்பி பவளவிழாவிலும், அஷ்வினி கலந்து சிறப்பித்தார்.

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியாவில், இளம் தலைமுறையைச் சேர்ந்த ஆளுமை மிக்க பெண், அஷ்வினி அம்பிகைபாகர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, எமது சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிட்னி வாழ் அனைத்து இன மக்களுக்கும் சேவையாற்றிவரும் அஷ்வினி அம்பிகைபாகர், தொடர்ந்தும் தனது தெரிவான அரசியல் பாதையூடாக சிறந்த பணியாற்றுவார்.

இந்த நல்ல செய்தியை காணாமல் கவிஞர் அம்பி அவர்கள் விடைபெற்றுவிட்டார் என்பது மனதை நெருடுகிறது. எனினும், அம்பி அவர்களின் ஆத்மா, பேத்தியை மானசீகமாக வாழ்த்தும் என ஆறுதலடைவோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.