வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


2009 - 6

விடிந்திருந்த பொழுதும் விடியாததாக, மாசி மாதத்தின் ஊசிப் பனி குத்துகிற ஒரு அதிகாலைவேளையில் படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வேலைகளில் மும்முரமாயிருந்த செம்பவளம் உணர்ந்துகொண்டிருந்தாள். கிழக்குத் திசைக் களர் நிலத்திலிருந்து சூரியன் பனித் திரையைக் கிழித்து பிரகாசமாய்க் காலித்துக்கொண்டிருந்தும் அந்தளவான ஒரு மனமூட்டம் அவளிலிருந்தது. ஏனென்று அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. முன்னனுபவமற்ற ஒரு மந்த உணர்வு.

வித்தியா எழுந்து குளிக்க கிணற்றடி சென்றபோது கூடத்துள் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். மீண்டும் மஹாபாரதத்துள் அப்பாவின் வாசிப்பு சென்றிருந்தது. இரவு வாசித்த தடித்த அந்தப் புத்தகம் மேசையில் கிடந்தது. வாசித்துவிட்டு எத்தனை மணிக்கு தூங்கினாரோ? அவள் குளித்து வந்து அறைக்குள் வேலைக்கு வெளிக்கிட்டுக்கொண்டு இருந்தாள்.

அவளிடத்திலும் கலகலப்பான மனநிலையில்லை. வீட்டில் அம்மா கலகலப்பாயில்லாவிட்டால் எல்லாவற்றிலுமே அதன் தாக்கம் தெரியும். ஆனால் அதுவேதான் அப்போது அவளில் பிரதிபலித்துக்கொண்டு இருந்ததெனச் சொல்லமுடியவில்லை. உலகளாவிய தமிழரிடத்தில் அப்போது கொதித்துப் பொங்கிக்கொண்டிருந்த ஏக்கத்தின் கையறுநிலைபோலும் அது இருக்கவில்லை. எழுபத்தைந்து சதுர கிமீக்குள் அடங்கிவிட்ட போரின் இறுதி நோக்கிய நகர்வு எழுதக்கூடிய தோல்வியின் நடுக்கமும் இல்லை அது. அவையல்லாத இன்னும் ஏதோவொன்று.

வித்தியா சமையலறை போய் கருப்பட்டித் தேநீர் குடித்தாள். காலைத் தேநீர் எப்பொழுதும் அங்கே அப்பாவுக்காக கருப்பட்டியோடுதான். செம்பவளம் அவசரமாய் தேநீரோடு கணவரை அணுகினாள். அன்றைக்காவது தெண்டித்து அவரை ஆஸ்பத்திரி செல்லவைத்துவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டாள். கடந்த ஒரு வாரமாக கையுழையுதென்று அமுக்கி அமுக்கிப் பிடித்துக்கொண்டு திரிந்தவர், இரண்டு மூன்று நாட்களாக நெஞ்சைத் தடவிக்கொண்டு அல்லல்படுகிறார். ‘நெஞ்சுக்க என்ன செய்யிது?’ எனக் கேட்டு செம்பவளம் முகத்தில் ஏக்கம் விரிக்க, ‘அதொண்டுமில்லை. வாய்வாயிருக்கும். இந்தளவு நாளும் கையில நிண்டது இப்ப நெஞ்சுக்குள்ள இறங்கியிட்டுதுபோல’ என்றிருந்தார். ‘ரா ராவாய் அவளையே யோசிச்சுக்கொண்டு கிடந்தா? சண்டை முடிய நிஷா வருவாள்தான. நாங்களேன் அதையிதை யோசிச்சு அந்தரப்படவேணும்?’ என்று நெஞ்சை அவர் அழுத்தித் தேய்க்கிறவேளையிலெல்லாம் அவளும் சொல்லிக்கொண்டிருந்தாள். ‘அது வாய்வா இருந்தா இருக்கட்டும், எதுக்கும் நீங்கள் நாளைக்கு ஆஸ்பத்திரியில ஒருக்கா காட்டியிட்டு வந்திடுங்கோ’ என்று முதல்நாள் படுக்கப் போகிறபோது சொல்லியிருந்தாள். ‘ஓ’மென்று அவரும் தலையசைத்தார். ‘வித்யா வெளிக்கிடேக்க நீங்களும் கூடிக்கொண்டு போங்கோ’ என படுத்த பின் அவள் சொன்னதற்கும் ‘சரி’ என்றிருந்தார். ஆனால் இன்னும் எழும்பவில்லை. அவள் தேநீரை மேசையில் வைத்தபடி, “வித்யா வெளிக்கிட்டிட்டாள், எழும்புங்கோ’ என்றாள்.

வித்தியா கைப்பையை எடுக்கிற நேரம் கூடத்துள் தேநீர்க் கோப்பை விழுந்து கணீரிட்டுக் கேட்டது. அவளுடம்பு உஷாராகி நிமிர்ந்தது. தொடர்ந்து அம்மாவின், “என்னருங்கோ… என்னருங்கோ… இஞ்சே…” என்ற கதறல் எழுந்தது. வித்தியா கூடத்துக்கு ஓடினாள். “அப்பாக்கு என்னெண்டு பாரடி… அசையாமக் கிடக்கிறாரடி..” என்று குழறினாள்.

வித்தியா அப்பாவைத் தொட்டுப் பார்த்தாள்.

அவருடைய அசைவு மட்டுமில்லை, மூச்சும் நின்றிருந்தது. வாங்கிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த கை அசைய மறுத்து விறைத்துக் கிடந்தது. தூங்க ஆரம்பித்ததுமே மூச்சு சுழி மாறிப் போயிருக்கிறது. அப்பா அவ்வப்போது சொல்கிற சித்தர் வரிபோலவே முடிவை அடைந்திருக்கிறார்.
இருவரின் சாவோலம் நெடுகிலும் ஒலித்துக்கொண்டிருந்தும், குடிமனைகள் ஐதுபட்டிருந்த அவ்வூரில் நாலுபேர் வந்துசேரவே ஒரு மணி நேரத்துக்கு மேலேயானது.

அது ஒரு நல்ல சாவு என கூடிய அந்தக் கொஞ்சப் பேர்கள் கதைத்தார்கள். பசி தாகமில்லாமல், ஓடுகிற அவதியும் உயிர்ப் பயமும் கொள்ளாமல், அவயவங்கள் அந்தந்தப்படியே இருக்க சாவது நல்ல சாவுதானே? எவ்வகைச் சாவானாலும் உற்றவருக்கு அது மீளாத் துயரத்தையே செய்கிறது. ஆயினும் அந்த நீண்டநேர ஓலம், ஒப்பாரியாக அங்கே மற்றவர்களால் தொடரவில்லை.

மூன்று மணிக்கு மய்யத்தை எடுத்துப் போய் ஊரொதுக்கிலுள்ள சுடலையிலேயே எரித்துவிட்டு வந்தார்கள்.

தந்தையின் மரணத்தினால் தான் ஒரு வாரம் வேலைக்கு வரமுடியாதிருப்பதை கடை முதலாளிக்கு வித்தியா அறிவித்திருந்தாள். இரண்டாம் நாளும் வெளியில் அவளைக் காணாமல் கடைக்கு அதுபற்றி விசாரிக்கச் சென்ற ஶ்ரீமல் விஷயமறிந்து உடனேயே அவளது வீட்டுக்கு வந்திருந்தான். கூடத்துள்ளிருந்து ஆறுதலாய் அவளோடு நாலு வார்த்தைகள் பேசினான்.

அவள் அழுததும், அவன் தொட்டுத் தொட்டு ஆறுதல் படுத்தியதில் அவள் அடங்கியதுமெல்லாம் கண்டபடி சமையறையில் நின்றிருந்தாள் செம்பவளம்.

அவனை அனுப்பிவிட்டு வித்தியா திரும்பி வந்தபோது, ‘ஆமிக்காறனா? எப்பிடி உனக்குப் பழக்கம் வந்தது? தங்கச்சி இயக்கத்திலயெண்டது ஞாபகமோ இல்லையோ? வீட்டில நடந்த நன்மை தின்மைக்கு வாறளவுக்கெண்டா எத்தினை நாள் பழக்கம் உங்களுக்குள்ள?’ என்றெல்லாம் வித்தியா நினைத்திருந்தபடி அம்மா கேட்கவில்லை. அனுமானத்தில் எல்லாவற்றையும் கணக்குப் போட்டுக்கொண்டிருப்பாள். அவளது சனிக்கிழமைத் தாமதங்கள், வழக்கமற்ற விதமாய் வரும் வேறு நாட்களின் தாமதங்களை அவள் கவனித்திருக்கவில்லை, புரிந்துகொண்டிருக்கவில்லையென யார் சொல்லமுடியும்? மகளின் மேலான நம்பிக்கையிலோ, குடும்பத்தின் மானம் அதில் இழையோடியிருந்ததின் காரணமாகவோ, அப்பா இருந்தவகையில் அதை அவரே கவனித்துக்கொள்ளட்டும் என்பதுபோலவோ அவள் ஒன்றும் பேசாமலே இருந்தாள். குடும்பத்தின் முழுச் சுமையும் அவளது தோளில் ஏறியிருக்கிற அப்போதைய நிலையிலாவது அவள் அதுபற்றி பிரஸ்தாபித்திருக்க தேவையிருந்தது. ஆனால் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் அவள் நின்றுகொண்டிருந்தாள். அவளது அதிகாரம் அந்த வீட்டில் அவளது கணவரது மரணத்தோடு இறக்கம் கண்டுவிட்டிருந்தது. அதை வித்தியா எடுத்துக்கொள்ளாவிட்டாலும் இனி அது தாழ்ந்தே தொங்கிக்கொண்டிருக்கச் செய்யும். வன்னியிலே யுத்தம் வெடித்து போராளிகளும் மக்களும் பேரழிவுக்குள் சிக்குண்டிருக்கிற நிலையில் நிஷாபற்றியும் தகவலெதுவும் அவளால் அறிய முடியவில்லை. அதுவே கணவரின் சாவுத் துக்கத்தின் மேலான இன்னொரு துக்கமாய் அவளை அழுத்திக்கொண்டிருந்தது. அவளது நினைவின் தகிப்பே தன் கணவரை எரித்ததென்று தெரிந்திருந்தும் செம்பவளம் உணர்ந்தது அப்படித்தான்.
தாமதமாய் சாவுச் செய்தியறிந்து பின்னர் வந்தவர்களும் போரின் அழிவுகளையே பேசிச் சென்றார்கள். அது அவர்களது மனத்திலிருந்த அவலமாயிருந்தது. செம்பவளம் மேலும் மேலும் கனதியானது அதனால்தான்.

அன்று சாப்பிடுகிற நேரத்தில் வித்தியாவே ஶ்ரீமல்பற்றி பேச்செடுத்தாள். ‘கண்டு கண்டு வந்த பழக்கம்தான், அம்மா. நல்ல குணமாயிருந்ததில பிறகு நானும் பேச்சுவைச்சன், வேறயொண்டுமில்லை.’

அம்மா மௌனமாயிருந்துவிட்டு சொன்னாள்: “சும்மா பழக்கமாயிருக்கிறதில என்ன இருக்கு? பிழையாயொண்டும் நடக்காட்டிச் சரிதான்.”

“ஶ்ரீமல் நல்லது, அம்மா.”

“ம்.”

அடுத்த வாரத்திலிருந்து வித்தியா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். அடுத்தடுத்த நாள் மாலை அவள் வேலை முடிந்து தனியாக மினிபஸ் ஸ்ராண்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, சைக்கிளோடு ஶ்ரீமல் அவளுக்காகக் காத்திருந்தான். ஒரு விநாடி அவளால் அவனை அடையாளம்காணவே முடியாது போனது. தலையிலே பிளாஸ்ரர் போட்ட ஒரு காயத்தோடு மூக்கும் கொழுக்கட்டைபோல் வீங்கி கறுத்து நின்றுகொண்டிருந்தான்.

“என்ன ஶ்ரீமல், என்ன நடந்தது?” என அவள் பதற்றப்பட்டதற்கு, “அது ஒண்டுமில்லே. ஒரு சின்ன அக்ஸிடென்ற் சைக்கிள்ல” என்றான் அவன்.
“எனக்கு ஒழிக்கவேண்டாம், ஶ்ரீமல். அக்ஸிடென்ற் பட்டமாதிரி பாக்கத் தெரியேல்ல. உண்மையைச் சொல்லு” என்று விடாப்பிடியாக நின்றாள் வித்தியா.

“உண்மைதான் நான் சொன்னது” என்று சிரிக்க முயன்றபடி, “ஸ்ராண்டுக்குத்தான, வா, நடப்பம்” என்று சைக்கிளை உருட்ட முயன்றான் அவன். அவள் ஹான்ரிலில் கைவைத்து அவனை மறித்தாள். “என்ர மனசுக்குள்ள தெரியுது, எதோ நடந்திருக்கெண்டு. மறைக்காமல் சொல்லு, என்ன நடந்தது?”

அவன் சிறிதுநேரம் அவளையே பார்த்தபடி நின்றுவிட்டு, “உனக்குத் தெரியாம இருந்தா நல்லம் எண்டுதான் நான் நினைச்சது. முந்தநாள் கொஞ்சம் குடிச்சிருக்கிற நேரத்தில அங்க சண்டையாய்ப் போச்சு” என்றான்.

“ஏன் சண்டை வந்திது?”

அவன் முதலில் தயங்கினான். பிறகு அவளும் அது அறிந்திருக்க வேண்டியவளேயென்று எண்ணி நடந்ததை விபரித்தான்.
“நாங்கள் பழகிறதில அவங்களுக்கு என்ன வந்தது? அவங்களேன் கோபப்படவேணும்?” என புதிரோடு அவனைநோக்கி நிமிர்ந்தாள் வித்தியா.
“நீ கோபம் என்டிறது. ஆனா அது கோபமில்லை, வித்யா. அதுதான் துவேஷம். எங்கயும் கொஞ்சங் கொஞ்சம் அது இருக்கு. ஒருநாளைக்கு இப்பிடி வரும்னு எனக்கு நல்லாத் தெரிஞ்சது அப்பவே. தமிழாக்கள பற்றி கதைச்சா சண்டைதான் வருகிது. நான் கொட்டியாக்கு சப்போர்ட்டான்டு சண்டைக்கு வந்தாங்கள்.”

“நீ திருப்பி அடிச்சியா?”

அவன் சிரித்தான்.

“திருப்பியும் அடிக்கேலாத நீ பிறகென்னத்துக்கு ஆமியில சேந்தனீ?” என்று கடுகடுத்தவள் பின்னர் தெளிந்து, “நீ பாவம்தான், ஶ்ரீமல். உனக்கு அப்பிடியெல்லாம் நடக்கத் தெரியாதுதான். உனக்கு துவேஷமும் இல்லை, கோவமும் இல்லை” என்றாள்.

“இது ஒரு வேலைதான எனக்கு. இதுக்கானமாதிரி எனக்கு மிச்சம் நல்லா நடக்க தெரியாதெண்டது சரிதான். நீ தமிழாள் எண்டதால உன்னில நான் விருப்பம் துவக்கேல்ல. எனக்கு உன்னை பிடிச்சிருந்திது, விருப்பம் வந்திது. அதுதான் நான் எல்லாரிட்டயும் சொல்றது. நான் என்னை மாத்தி ஒண்டும் செய்யமாட்டன். நான் இப்ப வந்தது… என்னை கிளிநொச்சிக்கு மாத்தியிருக்கிறது உனக்குச் சொல்லத்தான். நாளைக்கு நான் அங்க போறதுக்கு இருக்கு. நீ ஒண்ணும் யோசிக்கவேணாம். நான் கெதியில வரத்தான் பாப்பன்.”

வித்தியாவுக்கு கண்கள் கலங்கி வந்தன. உதடுகள் துடித்து நெளிந்தன. ஶ்ரீமல் அவசரமாய் சொன்னான்: “அழுதிடாத, வித்யா. மிச்சம் ஆக்கள் பாக்கிறது.”

அவள் சிரமத்துடன் அழுகையை அடக்கினாள். “நீ சண்டைக்குப் போகேல்லயே?”

“சண்டைக்கு இல்லை. அது முடிஞ்சுகொண்டுதான இருக்கு. சனங்கள் இருக்கிற இடத்திலதான் எனக்கு வேலை வந்திருக்கு.”

“என்னெண்டு சொல்லக்குடாதாக்கும்?”

“உனக்குச் சொல்லுவன். அங்க கனக்கக் கனக்க ஆயுதம்களும், பவுண்களும் தாட்டிருக்கு. அதை எங்கயெண்டு அறியவேணும்.”

“கவனமாயிரு.”

“நீயும் இஞ்ச கவனம்.”

அவன் சொல்லிக்கொண்டு விலகுகிற நேரத்தில் அழுகையை அடக்கியிருந்தும் அவளால் சிரிக்க முடியவில்லை.

அன்று வீடு வந்த வித்தியா எல்லாம் எண்ணி அழுவதற்குப்போலத்தான் கிணற்றடிக்கு அவசரமாகச் சென்றாள். பெண்களின் கண்ணீரின் கதைகளையும், ஆசாபாசங்களின் சலிப்புகளின் விரக்திகளின் காரணமான எல்லா புலம்பல்களையும் கிணற்றடிகள்தானே கண்டிருக்கின்றன!
வித்தியா அழுவதைக் கண்டுவிட்ட செம்பவளம் பதைத்துக்கொண்டு ஓடிவந்தாள். “என்ன, வித்யா? என்னடி நடந்தது? ஏன் அழுகிறாய்?”
வித்தியா ஒன்றுமில்லையெனக் கூறி கண்ணீரைத் துடைத்தாள். தாய் மேலும் வற்புறுத்த, “ஶ்ரீமல் வன்னிக்குப் போகுதாம் நாளைக்கு. அதுதான்…” என்றுவிட்டு மேலும் தாயாரின் முன்னால் அழமுடியாமல் வீட்டுக்கு நடந்தாள்.

ஶ்ரீமல் வன்னி போவதை நினைத்தே வித்தியா அந்தளவு துடித்தாளென்பது அதன் அர்த்தமாக இருந்துவிடக்கூடாது. உண்மையில் வெவ்வேறு இனத்தவர்களுக்கிடையிலான காதலுக்கு விளைகிற எதிர்ப்புகளின் காரணமாக அவன் தாக்கப்பட்டதையே வித்தியா நினைத்திருக்க முடியும். அவன் வீட்டில் அம்மா தங்கைகளுக்கு அவளை ஏற்பதில் தடையில்லாதது மட்டுமில்லை, மகிழ்ச்சியே இருந்ததை ஶ்ரீமல் அவளுக்குச் சொல்லியிருந்தான். ஆனால் நண்பர்களிடத்திலேகூட துவேஷத்தைக் கிளப்பும் அந்த உறவு குறித்து அவனது அயலும் ஊரும் என்ன நினைக்குமென அவள் எண்ணவே வேண்டும். சாதாரணர்களுக்கு துவேஷமிருக்காதென எதைக்கொண்டு உறுதிகொள்வது? கொழும்பில்கூட அப்படியொரு துவேஷம் மெல்ல மெல்ல வளராதென்பதற்கு உத்திரவாதமுண்டா? அதுபோன்ற துவேஷங்களின் ஒரு திரட்சிதானே 1983 ஜுலை 23இல் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் பெருந்தொகையை அங்கே வதம்செய்ய காரணமாயிருந்தது?வ்வளவும் அவள் எண்ணவேண்டியதில்லை. இவற்றில் எந்தவொன்றுமே அவளை வெடிக்கவைக்க போதுமானது. எந்த ஒன்றுமே அவளது காதலின் ஈடேற்றத்தின்மீதான நம்பிக்கைகள் அனைத்தையும் பஸ்மமாக்க வல்லது.

கிணற்றடியில் நின்றிருந்தபடி வித்தியா செல்வதையே நோக்கியிருந்தாள் செம்பவளம். அப்பாவின் மரணத்துக்குக்கூட அந்தளவு அழுதவளில்லை வித்தியா. தங்கையொருத்தி போராளியாக அவ்வளவு கெடுபிடியாக யுத்தம் நடக்கும் வன்னி மண்ணில் இருந்துகொண்டிருக்கிறதை எண்ணி அழவேண்டாம், தன்னோடு அதிகமாய்ப் பேசவும் செய்யவில்லை அவள். ஆனால் சும்மா பழக்கமென்று சொன்ன ஶ்ரீமல் வன்னிக்குப் போவதில் அவள் கண்ணீர்விட்டு அடக்கமுடியாமல் குலுங்கி அழுகிறாள்.

எல்லாம் நினைத்தபோது செம்பவளத்தை திகைப்பு விழுங்கியது. அது துக்கமாய் விருத்திபெற்றது. என்ன ஆகுமோவென்று அவள் கண்ணீர் சிந்தாமல் அழுதாள்.

[தொடரும்]