நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன.  அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளிப்பை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.

பொன்னம்மா ரீச்சர்

முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன.
ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது.

பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நிர்வாக ரீதியாக எப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலும், கந்தர் மடமென்றே ஊரில் பெயர்பெற்றிருந்தது. அந்த கந்தர் மடம் பள்ளிக்கூடத்தில் விருப்பத்தோடு நான் படிக்கச் செல்லவில்லை. என்னை வில்லங்கமாய்க் கொண்டுபோய்ச் சேர்த்து படிக்கவைத்தார்கள் அங்கே. அவ்வாறு என் விருப்பமின்றி படிக்க நான் சென்ற அரிவரி வகுப்பில் ஆசிரியராக இருந்தவர்தான் பொன்னம்மா ரீச்சர் – என் முதலாவது ஆசிரியர். அங்கே பொன்னம்மா ரீச்சர் நீண்டகாலம் படிப்பித்திருப்பாராக இருக்கும். ஏனெனில் அந்தப் பள்ளியில் எந்த ஆசிரியரையும்விட ஊரவர் தம் பிள்ளைகளைக் கூட்டிவந்து வகுப்பில் விட்டுவிட்டு அவரோடேயே நிறைய கதைத்துப் போனார்கள்.

பொன்னம்மா ரீச்சர் என்று எண்ணும்போதே எனக்கு அவரது முகம்தான் எப்போதும் ஞாபகம் வரும். அது வட்டமான முகம். இரண்டு வட்டக் கண்கள் அதில். நடு வகிடெடுத்து படிய வாரி கொண்டை போட்டிருப்பார். மூக்குத்தி அணிந்திருந்தார். கழுத்திலே சங்கிலியெதுவுமோ, கையிலே காப்பெதுவுமோ நான் கண்டதில்லை. சின்ன முகமுள்ள வெள்ளி நிற மணிக்கூடு கட்டியிருந்தார்.

எப்போது நேரம் பார்ப்பாரோ, ஆனால், வகுப்பு முடியும் நேரத்துக்கு தம்பிப்பிள்ளை வாச்சர் மணி அடிக்கிறபோதுமட்டும் கையைத் தூக்கி தவறாமல் பார்ப்பார். அப்போதும் அவர் முகத்தில் சிரிப்படையாளம் நான் கண்டதில்லை.

அவர் அதிகமாகவும் பச்சைச் சேலை கட்டி பள்ளி வருபவராக இருந்தார். பச்சையென்றால் தனிப் பச்சை ஒருநாள், பூப்போட்ட பச்சை இன்னொரு நாள், கோடு போட்ட பச்சை வேறொரு நாள், கடும் பச்சை, குருத்துப் பச்சையென்று மீதி நாட்களிலும் இருந்ததுதான் என் மனத்தில் அழியாத ஞாபகப் படிவு.

அவரது மாநிற முகத்தில் எப்போதாவது அவர் சிரிக்கும்போது பற்களின் வெண்மை பளீரிடக் கண்டு திகைத்திருக்கிறேன். வேப்பம் குச்சியால் பல் விளக்குவாராயிருக்குமென அப்போது எல்லாம் நான் நினைத்தேன்.

இவற்றின்மூலம் அவர் அடிக்கடி சிரிப்பதில்லை என்பதாக அர்த்தமாகிறதல்லவா? ஆம், அவர் பெரும்பாலும் சிரித்ததில்லை. அதனால் அவர் முகம் இருண்டதுபோல் எப்போதும் இருந்திருக்கும். அது அவர் பெருமளவு துக்கத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தார் என்பதாகத்தானே ஆகிறது? ஆம், அவர் அதிகமான வேளைகளிலும் துக்கமாகவேதான் இருந்தார். அவர் கறுப்புப் பொட்டு வைப்பதிலிருந்து அவருக்கு இன்னும் கல்யாணமாகவில்லையென நான் கருதிக்கொண்டேன். கல்யாணமானவர்கள் குங்குமப் பொட்டு வைப்பார்களென்று எனக்கொரு புரிதலிருந்தது.

எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது. விருப்பமில்லாமல் படிக்கச் சென்ற நான் காலம் செல்லச் செல்ல விருப்பத்தோடு கற்கத் தொடங்கிவிட்டேன். அதனால் அகரத்திலிருந்து அகேனம் வரை எழுதவும், ‘அம்மா’, ‘ஆடு’, ‘இலை’, ‘ஈட்டி’, ‘உறி’ தொடங்கி “ஔவை’வரை எழுத்துக் கூட்டி வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்பார்கள். அந்தளவில் எனக்கு அவர் எல்லாரையும்விட மேல்தான்.

அந்தக் கடவுளை நினைக்கிற வேளைகளில் அவர் ஏன் அதிகமான வேளைகளில் சோகமாக இருந்தாரென்றும், அவர் சோகமாக இருந்ததால் கல்யாணம் செய்யாதிருந்தாரா, கல்யாணம் செய்யாததால் சோகமாக இருந்தாராஎன்றும் நான் யோசித்திருக்கிறேன். அவர் அழுததை நான் கண்டதில்லை. ஆனால் கண்களை தன் சேலைத் தலைப்பால் ரகசியமாய்த் துடைப்பதை பல முறையும் கண்டிருக்கிறேன்.
காலையில் மிக வெள்ளெனவாக பள்ளி வந்துவிடுபவராதலால் அவர் எவ்வாறு வருகிறாரென நானறிய வாய்ப்பு வரவில்லை. ஆனால் மற்ற ரீச்சர்மார் மூன்று நான்கு பேர் காரில்தான் வந்து போகிறார்கள்.

மேலும் அவர் இரண்டு கட்டை தூரத்தை ஒவ்வொரு நாளும் நடந்துதான் வந்து போகிறாரென அறிந்த நாள் முதல், ஏனோ அவர் இன்னும் பரிதாபத்துக்குரியவராக என்னில் ஆக்கிவிட்டார். தனக்காக என்னுள் ஊறும் இந்த இரங்கல்களை பொன்னம்மா ரீச்சர் கொஞ்சமேனும் உணர்ந்திருப்பாரா, எனக்குத் தெரியாது. அவ்வாறான அறிகுறியேதும் அவர் கண்ணில் நான் காண என்றும் கிடந்ததில்லை. ஒருவேளை, தானே துன்பத்தில் மூழ்கியிருப்பவர்போல் அவர் ஆகாதிருந்திருந்தால் என் மனநிலையைப் புரியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டிருக்கலாம்தான். காலம் போதுமானதாய் இருந்திருந்தாலும் அதற்கான சாத்தியம் இருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய? ஓராண்டு முடிந்து, முதலாம் வகுப்புக்கு வகுப்பேற்றப்பட்டதால் அடுத்த ஆண்டிலிருந்து வள்ளியம்மை ரீச்சரின் வகுப்புக்குப் போக நேர்ந்துவிட்டேன்.
என்றாலும், முதலாம் வகுப்பிலிருந்து சிலேட்டில் கிறுக்கப் பழகிக்கொண்டே, பொன்னம்மா ரீச்சரையும் அவ்வப்போது நான் பார்த்துக்கொள்வதுண்டு.

அவ்வாறிருக்கும்போதில் பள்ளியில்லாத ஒருநாளில் சந்தைக்குப் போய்வந்த ஒரு ஆச்சி எங்கள் ஒழுங்யைில் நின்று யாருடனோ பேசுகையில், ‘பொன்னம்மா ரீச்சரை வைச்சு சுடலைக்குப் போற வழியில செத்தவீடு கொண்டாடுறாங்கள்’ என சொன்னார். நீண்டநேரத்தின் பின் பொன்னம்மா ரீச்சர் செத்துப் போனா என்பதை நான் புரிந்துகொண்டேன். ஆனால் அவரை வைச்சு செத்தவீடு கொண்டாடுறாங்கள் என அந்த ஆச்சி சொன்னதைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

ஒருபோது பொன்னம்மா ரீச்சரின் நினைப்பினூடாக அந்த ஆச்சி அன்று சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வந்து, அதைப்பற்றி நான் யோசித்துப் புரிவதற்கு எனக்கு இருபது வருஷங்கள் தேவைப்பட்டு விட்டன.
அன்று அந்த ஆச்சி சொன்னதன் அர்த்தம், பொன்னம்மா ரீச்சரின் பிரேத ஊர்வலம் குதிரை வண்டி, பாண்ட் வாத்தியம் சகிதமாய் சுடலையைநோக்கிச் செல்கிறது என்பதுதான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*[டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]