- திருப்பூரின் மூத்த எழுத்தாளர் அமரர் தி. குழந்தைவேலு -
ஏப்ரில் 26 சனிக்கிழமையன்று மறைந்தார் நாவலாசிரியர், திருப்பூரின் மூத்த எழுத்தாளர் தி. குழந்தைவேலு அவர்கள், அவருக்கு வயது 89. திருப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். மின்சார தொழிலாளர்கள் சார்ந்த சிறந்த நாவல்களை உருவாக்கினார். புகழ்பெற்ற எழுத்தாளர் நீல பத்மநாபன் அவர்கள் எழுதிய ’மின் உலகம்” போல் பல பரிமாணங்கள் கொண்ட நாவல்கள் அவை. விளிம்புநிலைமக்களுடைய வாழ்க்கையை, சிரமங்களை பல சிறுகதைகளாக எழுதினார். சமீபத்தில் பல ஆண்டுகளாக ஒரு மாதிரி கோமோவில் இருந்தார. சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவருடைய படைப்புகள் எல்லாம் திரும்பத் திரும்ப மறுபடியும் மறுபிரசுரம் செய்யப்பட வேண்டும் என்று வாசகர்கள் விரும்பினார்கள்.
காவ்யா பதிப்பகத்தில் இரண்டுநாவல்களை கொண்டுவர முயற்சித்து வெற்றி பெற்றார். அவருடைய படைப்புகள் எங்கும் பதிவு செய்யப்படாத சாதாரண மக்களின் அவலங்கள், அதுவும் வால்பாறை பகுதிகளில் தற்காலிக மின் ஊழியராக இருந்து மின்விநியோக கட்டமைப்பு சார்ந்த அவரை அனுபவங்களைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். வால்பாறை பழங்குடி மக்களின் வாழ்க்கை சார்ந்து அவரின் சித்திரங்கள் அற்புதமானவை. திருப்பூர் கனவு இதழில் சிறுகதைகள் எழுதினார். செம்மலர், தாமரை. உண்மை போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் கட்டுரைகள் எழுதினார். பகுத்தறிவு சிந்தனையோடு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"திருப்பூர் குழந்தைவேலுவின் நாவல்களில் வரும் ஆதிவாசிகள் மின்சாரத்துறை அதிகாரிகளால் தொழிலாளி அந்தஸ்து தரப்பட்டு, பலியாக்கப்படுகிறார்கள். இதை அவரின் மின்சார வேர்கள், மலையக மல்லன் போன்ற நாவல்களில் காணலாம்." [ சமீப தமிழ் நாவல்கள் - மாறிவரும் உலகில் அறவியல் - சுப்ரபாரதிமணியன் - சாகித்ய அகாதமி பொள்ளாச்சியில் நடத்திய ‘இந்திய மொழிகளில் அறவியல் நூல்கள்’ கருத்தரங்கில் படிக்கப்பட்டக் கட்டுரையிலிருந்து)
அவருக்கு அஞ்சலி கூட்டம் சனியன்று பாண்டியன் நக்ர் அரசு பள்ளி எதிரிலான நாலேஜ் செண்டரில் நடைபெற்றது. திருமதி பாசிதாபானு தலைமை தாங்கினார். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இயக்கிய ” நாணல் “ குறும்படம் அறிமுகம் செய்யப்பட்டது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய “ பாதுகாப்பு “ என்ற சிறுகதையை மையமாகக் கொண்டது. திரைக்கதை வசனத்தை கிளமண்ட் விக்டர் எழுதினார், இதை ஒளிப்பதிவு செய்த மோகன் சென்றாண்டு அகால மரணம் அடைந்தார். சுப்ரபாரதிமணின் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன. நாணல் அவரே இயக்கியது.
திருப்பூர் தி. குழந்தைவேலுவின் நாவல்கள்
1. மலையக மல்லன் (காவ்யா பதிப்பகம்)
2. மின்சார வேர்கள் (காவ்யா பதிப்பகம்) - திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்ற நாவல்.
3. தந்திரகவசம் (பாரதி பதிப்பகம்)
சிறுகதைத்தொகுப்பு
1. அகழாத நினைவுகள் (பாரதி பதிப்பகம்)
சிறுகதை - புதையல் - தி.குழந்தைவேலு (சிறுகதை.காம் தளத்திலிருந்து) -
கீற்று இணைய இதழில் பிரசுரமான பதிப்புரை: மலையகமல்லன் நாவல் - சு.செம்மலர்
- மலையகமல்லன் -தி. குழந்தைவேலு, காவ்யா பதிப்பகம் - சென்னை - 24, பக்:112, விலை:ரூ.70 -
எத்தைனையோ விதமான குடும்ப நாவல்களைப் படித்திருக்கிறோம். போராட்ட நாவல்களை படித்திருக்கிறோம். அழகு மிகுந்த காதல் இலக்கியங்களை படித்திருக்கிறோம். மன்னர்களின் வரலாற்றுக் காவியங்களை படித்திருக்கிறோம். இத்தனைக்கும் மத்தியில் தான் சாதாரண மக்களின் வாழ்க்கைக் காவியங்களும் எழுதப்படுகின்றன.
ஊட்டி, வால்பாறை போன்ற மலைப்பகுதியில் தேயிலைத்தோட்டங்கள் உருவாக்கப்பட்டபோது தனது ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தி உரமாகிப் போன சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை அழுத்தமாகப் பேசும் நூல் ’எரியும் பனிக்காடுகள்’ இது போன்ற பல்வேறு வாழ்க்கைகளின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாவல்களின் வரிசையில் தனக்கென தனி இடத்தை பிடித்தபடி வெளி வந்ததுள்ளது மின்சாரத் தொழிலாளி தி. குழந்தைவேலு எழுதியுள்ள ’’மலையக மல்லன்’’ நாவல்!
குந்தா மலைப்பகுதிகளில் மின் இணைப்பு இல்லாமல் இருண்டு கிடந்த காலத்தில் மலைப்பகுதி முழுவதும் ஒளி விளக்கேற்றிய மனிதர்களின் வரலாறு. கழுத்திலே அணியும் அணிகலன்கள் அழகானது தான்! ஒளி வீசுவது தான்! ஆனால் அதற்கான மனிதர்களின் உழைப்போ, இருளின் பிடியில் மூச்சடைக்கும் சுரங்கங்களில் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான்! குந்தா மலைப்பகுதியில் மின் இணைப்பு தர பணியாற்றிய ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்துப் பேருக்கும் இதே நிலைதான்! உயரமான மலைகள்! அடந்த காடுகள்! உயிர்பயம் ஏற்படுத்தும் மலைப்பாம்புகள்! கூட்டம் கூட்டமான யானைகள்! செந்நாய்கள்! இடுக்கிப்பிடி போடும் கரடிகள்!, இவைகளுக்கு மத்தியில் இணைப்பு வேலைகள்!
மரம் செடி கொடிகள் வெட்ட படி அமைக்கவேண்டும். குழி மார்க் செய்து குழி தோண்டி ஆங்கில் நட வேண்டும். கம்பி இழுக்க வேண்டும். இது போன்ற முன் தயாரிப்புப் பணிகள் பல மைல்தூரங்களுக்கு செய்யும் போது கொடிய மிருகங்களை சந்திக்க வேண்டும். ஆட்கள் செல்லும் வழியில் எந்தெந்த மிருகங்கள் எப்போது வருமோ! முதல் பலி யாரோ? என்ற பயம் மிகுந்த சூழலே வேலை முன்னேற்றத்தை தடுக்கிறது.
இதிலிருந்தெல்லாம் ஊழியர்களைப் பாதுகாக்க முன் அறிந்து செயல்பட கிடைத்தவன்தான் மல்லன். மலையக மல்லன். ஆம்! உறைய வைக்கும் பனி குளிரிலும் உடம்பில் கோவணத்துணியோடும் கையில் கொம்போடும் காட்டில் கிடைக்கும் தேன், பலா முதலிய பொருள்களோடும் திரிந்த மலைவாசி மல்லன் முதல் மின் ஊழியனாகி மின் ஊழியர்களைப் பாதுகாக்கும் கேடயமாய் அமைகிறான். இவனின் வாழ்க்கைதான் தி.குழந்தை வேலுவின் எழுத்தில் நம் முன் வருகிறது. நாவலாக விறுவிறுவெனப் படிக்க வைக்கும் எழுத்து நடை. காட்டின் பயங்கரத்தை வர்ணிக்கும் இவரால் சுவை குன்றாமல் காதலையும் வர்ணிக்க முடிகிறது. இத்தனைக்கும் மேல் நாவலின் நாயகனான மல்லனின் பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் ஒட்டு மொத்த மலையகத்தை நம் கண்முன் நிறுத்துகிறார்.
சுருக்கமாகக் கூறினால் இந்நாவலுக்கு அணிந்துரை செய்துள்ள எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி கூறியுள்ளது போல தி.குழந்தைவேலுவின் எளிமையே உண்மையின் வலுவாய் உள்ளது. முன்னுரை வழங்கிய தி.மு.ராசாமணி குறிப்பிட்டுள்ளது போல ஒரு பாட்டாளி படைப்பாளியாக முடியும் என்பதற்கு உதாரணமாய் மட்டுமல்ல; சிறகை விரித்துப் பறக்கும் முயற்சி படிப்படியாய் வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என நமக்குணர்த்தும். மின்தொழிலாளியாய் இருந்து 5 நாவல்களை எழுதி நம்மை பரவசப்படுத்த வைக்கும் தி.குழந்தைவேலுவின் எழுத்து முயற்சியின் மைல் கல் இந்நாவல்.
இந்நாவலை வாசிப்பதன் மூலம் வாசிப்புக் களத்தை விரிவுபடச் செய்வதே இந்நாவலுக்கு நாம் அளிக்கும் முதல் விருது. இவ்விருதை நாம் இவருக்குத் தயங்காது தருவோம். வாழ்வின் இருள் அகற்றி ஒளி தங்க நம் முன்னோர்களை வாழ்த்துவோம். படிப்பறிவில்லா மலைமக்கள் நம் வாழ்வில் ஒளி வீச ஆற்றியுள்ள அரிய பங்கைப் போற்றுவோம்! மின்சாரம் தனியார் மயமாகும் இச்சூழலில் இந்நாவலை அனைவரும் வாங்கி படித்து நம் தலைமுறையுடன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியமானது.
நன்றி: கீற்று.காம் - https://www.keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-may10/8317-2010-05-07-10-09-39
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.