அண்மையில்  பொது ஊடகங்களில் வெளிவந்த விளையாட்டுத்துறை சார்ந்த இரண்டு நிகழ்வுகளும், விண்வெளி சார்ந்ததொரு நிகழ்வும் பலரின் கவனத்தையும் பெற்றிருந்தது. ஒன்று இங்கிலாந்திற்கும் ஸ்பெயினுக்கும் நடந்த உலகக் கிண்ணத்திற்கான பெண்கள் உதைபந்தாட்ட இறுதிப் போட்டி, மற்றது பதினெட்டே வயதான பிரக்ஞானந்தாவின் உலகக் கிண்ணத்திற்கான சதுரங்க ஆட்டப் போட்டி, மூன்றாவது சந்திரனின் தென்துருவத்தில் தரையிறங்கும் போட்டி. இந்த மூன்று நிகழ்வுகளும் விளையாட்டுத்துறை மற்றும் விண்வெளித்துறையில் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமல்ல, ஏனைய பொதுமக்களின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்திருந்தன.

பெண்கள் உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றாலும், அவர்களின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு சோகக்கதை இருந்தது. சிட்னியில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் மோதிக் கொண்டன. ஸ்பெயின் அணியின் தலைவியான 23 வயதான ஒல்கா காரமோனா ஒரு கோலைப் போட்டு ஸ்பெயினுக்கு வெற்றியைத் தேடித்தந்திருந்தார். ஸ்பெயின் வெற்றியைக் கொண்டாடிய போது, இந்த வெற்றிக்குக் காரணமாக யார் அந்தக் கோலை அடித்து வெற்றியை ஸ்பெயின் நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தாரோ, அவரிடம் ஒரு சோகச் செய்தி பகிரப்பட்டது, அது என்னவென்றால் அவரது தந்தையார் திடீர் மரணத்தைத் தழுவிக் கொண்டார் என்பதேயாகும்.

போட்டி ஆரம்பிப்பதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாகவே ஒல்காவின் தந்தை மரணமாகியிருந்தார். இந்தச் செய்தி ஒல்காவைப் பாதிக்கும் என்பதால், தந்தை மரணமடைந்த செய்தியை உடனடியாக அவருக்கு அறிவிக்கவில்லை. ஸ்பெயினின் அணித்தலைவி என்ற வகையில் வெற்றிக் கிண்ணத்தை அவர் பெற்ற பின்புதான் அந்தத் துயரசம்பவம் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு நிலைப்பாடு இருந்ததாலும், விளையாட்டு அணியினரின் நான்கு வருடக் கடின உழைப்பின் பிரதிபலனை எதிர்பார்த்து அவர்கள் இருந்ததாலும் இந்த விடயம் வேண்டுமென்றே தாமதித்துத் தெரிவிக்கப்பட்டது. துயரச் செய்தியை வேண்டுமென்றே தாமதித்ததால்தான் ஒரு நன்மை கிடைத்தது, அதாவது அதனால்தான் இன்று ஸ்பெயின் அந்த உதைபந்தாட்ட வெற்றிக் கிண்ணத்தை பெருமையுடன் ஏந்தி நிற்கிறது.

மற்ற விளையாட்டுத்துறைச் செய்தி சதுரங்கம் பற்றியது. இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தாவின் தனிப்பட்ட திறமை சார்ந்தது. அசர்பைஜானில் நடைபெற்ற உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கான போட்டியில் அமெரிக்கரான பாபியானோ கருணாவை எதிர் கொண்ட போது, இருவரும் சமநிலையில் இருந்தனர். அதனால் சமநிலை தவிர்ப்புக்கான போட்டி இருவருக்குமிடையே நடைபெற்றது. இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குத் தெரிவானார். வயதில் குறைந்த ஒருவர் சதுரங்க இறுதிச் சுற்றுக்குத் தெரிவானது இதுவே முதற்தடவையாகும்.

இறுதிச் சுற்றில் நோர்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் காரல்சென் என்பவருடன் போட்டியிட்டார். மேக்னஸ் காரல்சென் ஐந்து முறை உலக சாம்பியனாக வந்தவர்.  முதலாவது ஆட்டம் வெற்றி தோல்வி இன்றிச் சமநிலையில் முடிவுற்றது. இரண்டாவது ஆட்டமும் வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவுற்றதால், வெற்றி தோல்வியைக் கணிப்பதற்காக நேரக்கட்டுப்பாட்டோடு அதிரடியாகச் சமநிலை தவிர்ப்பு விளையாட்டாக மாற்றப்பட்டது. இதில் அனுபவம் மிக்க மேக்னஸ் காரல்சென் இறுதியாட்டத்தில் வெற்றி பெற்றார். 18 வயதான பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு எதிர்காலம் நிச்சயம் காத்திருக்கும்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் விளையாட்டுத் துறை சார்ந்ததாக இருக்க மூன்றாவது போட்டி விண்வெளித்துறை சார்ந்ததாக இருந்தது. நிலவின் தென்துருவத்தில் முதலில் யார் பாதுகாப்பாகத் தமது தரையிறங்கியை இறக்குவது என்ற போட்டி ரஸ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்தது. இந்தியாவுக்கு முன்பாகத் தான் தென்துருவத்தில் இறங்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையோடு அவசரமாக ரஸ்யா அனுப்பிய லூனா – 25 சந்திரனின் தென்துருவத்தில் இறங்கும்போது, தரையில் மோதி உடைந்து விட்டது. ஆனால் இந்தியா திட்டமிட்டபடி நிதானமாக தனது சந்திராயன்- 3 தரையிறங்கியான விக்ரத்தை 23-8-2023 அன்று வெற்றிகரமாகத் தரையிறக்கி இருந்தது.

இது இந்தியாவின் மிகப்பெரியதொரு சாதனையாகும். சந்திரனின் தொன்துருவத்தில் தரையிறக்கும் போட்டியில் இஸ்ரேல், யப்பான், இந்தியாவின் சந்திராயன்-2, ரஸ்யாவின் லூனா-25 ஆகியன சமீப காலங்களில் முயற்சி செய்தாலும் பலன் கிடைக்காமல் தோல்வியில் முடிந்தன. தோல்விகள்தான் வெற்றியின் ஏணிப்படிகள் என்பதால், அந்த அனுபவத்தால், முதன்முதலாக இந்தியாவின் சந்திராயன் - 3 சந்திரனின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கிச் சாதனை படைத்திருகக்கின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.