வேடன்
"Voice of voiceless" - Vedan | Malayalam Rap. Official Music Video
வேடன் என்றால் என்வென்று யோசிபீர்கள், சங்க இலக்கியத்தில் வேட்டுவன் என்ற சொல் பாவனையில் இருந்திருக்கிறது. வேடன் என்றால் வேட்டையாடுபவன் என்றும் பொருள் படலாம். நான் இங்கே சொல்ல வந்தது ‘வேடன்’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு பாடகனைப் பற்றியது. இவர் பாடல்களையும் எழுதியிருக்கின்றார். இன்று எங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படும் சொல்லாகவும் இந்த வேடன் சொல் இருக்கின்றது.
ஹிரந்தாஸ் முரளி என்று சொல்லப்படும் 30 வயதான இவரது தந்தை கேரளாவையும், தாயார் யாழ்ப்பாணத்தையும் சேர்ந்தவர்கள். இவர் திருச்சூரில் பிறந்தார். இவர் தனது மார்பிலே ‘அ’ என்ற தமிழ் உயிரெழுத்தின் முதல் எழுத்தைப் பெரிதாகப் பச்சை குத்தியிருப்பதால், தமிழ் இசைப் பிரியர்களின் பார்வை இவர்மீது திரும்பியது. பாலக்காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது இதுவரை இவ்வளவு கூட்டம் எந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கும் சேரவில்லை என்று அறிவிப்பாளர் குறிப்பிட்டார். கனடாவைச் சேர்ந்த ஒரு இளம் பெண்கூட இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப பாவனை செய்து தனது முகநூலில் பதிவிட்டிருக்கின்றார்.
ஒரு காலத்தில் மைக்கல் ஜாக்ஸன் எப்படி பரதநாட்டியத்தை தனது காணெளியில் கலந்து வெளியிட்டுத் தமிழர்களிடையே பிரபலமானாரோ, அதேபோல இவர் தமிழர்களின் பறை இசையைக் கலந்து கேரள மக்களைக் கவர்ந்து வருகின்றார். இதைவிட ஒடுக்குமுறை குறித்த துணிச்சலான இவரது பாடல் வரிகளுக்காக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தனது முதல் இசை காணெளி மூலம் அவர் பிரபலமானார். ‘பூமி என்ஜன் வாழுனிதம்’ என்ற இசைத்தட்டு அடுத்து வெளிவந்ததும் இன்னும் ரசிகர்கள் அதிகமாயினர்.
ஒருவர் தனது துறையில் வேகமாக வளர்ந்து பிரபலமாகும் போது, அவர்மீது அவதூறு சொல்லவும் சிலர் இருப்பார்கள். தங்களால் முடியவில்லையே என்ற ஆதங்கம் வெறுப்பாக மாறலாம். அதுவே பிரபலமனவரை பெண்களுடன் தொடர்பு படுத்தியோ அல்லது போதை வஸ்துவுடன் தொடர்பு படுத்தியோ சில பொது ஊடகங்களில் உள்ளவர்கள் அவதூறுகளை எழுதத் தொடங்கிவிடுவார்கள். இவர் முகநூலில் பெண்களைப் பற்றி தவறாக எழுதினார் என்றும், இவரது நண்பர்கள் போதை வஸ்;து வைத்திருந்தனர் என்றும், தனது கழுத்திலே புலிப்பல்லைக் கட்டித் தொங்கவிட்டார் என்றெல்லாம் இவர் மீது குற்றங்கள் சுமத்தப்படன. இசையுலகில் நீர்க்குமிழி போல உடைந்து போவாரா அல்லது இதையெல்லாம் கடந்து இவர் செல்வாரா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க முடியும்.
இவரைப் பற்றிய காணொளிகள்
1. - https://www.youtube.com/watch?v=JY1HkGYDCNE
2. https://www.youtube.com/watch?v=ZYdZWV2EEYI
பூமியில் விழப்போகும் சோவியத் விண்கலம்
சோவியத் ஒன்றியத்தால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட விண்கலம் ஒன்று தோல்வியடைந்ததால், மீண்டும் பூமியை நோக்கி அதிவிரைவாக வருவதாகவும், இந்த வார இறுதியில் பூமியில் வந்து விழலாம் என்றும் விண்வெளி நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் அது எந்தப்பகுதியைத் தாக்கப் போகிறது என்பது இன்னும் தெளிவாகக் கணிக்கப்படவில்லை.
காஸ்மோஸ் 482 என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் 1972 ஆம் ஆண்டு வீனஸ் என்று சொல்லப்படுகின்ற வெள்ளிக் கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. அப்போது இரண்டு விண்கலங்கள் ஏவப்பட்டாலும், ஒன்று தோல்வியடைய மற்றது வி71 - 670 வீனஸ் கிரகத்தைச் சென்றடைந்தது. ஆனாலும் வி71 - 671 என்ற இந்த விண்கலம் வீனஸ் பரிமாற்றப் பாதையில் செல்வதற்கு போதுமான வேகத்தை அடையவில்லை என்பதால், பூமியின் சுற்றுப்பாதையை விட்டு அதனால் வெளியேற முடியாமல் பூமியைச் சுற்றிக் கொண்டிருந்தது.
இது உடைந்த போது, இரண்டு பெரிய துண்டுகள் பூமியின் உயர்ந்த சுற்றுப்பாதையில் சிக்கிக்கொண்டன. அவற்றை விண்வெளிக் குப்பை என்று சொல்வார்கள். அவற்றில் சுமார் 1,100 இறாத்தல் எடையுள்ள ஒரு துண்டுதான் மே மாதம் 10 ஆம் திகதி வரையில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. காஸ்மோஸ் 482 தரையில் மோதினால், அது 52 டிகிரி வடக்கு மற்றும் 52 தெற்கு அட்சரேகைகளுக்கு இடையில் பூமியில் விழ வாய்ப்புள்ளது.
பூமியை விட 90 மடங்கு அடர்த்தியான வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைவதற்கு ஏற்றவகையில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டதால், பூமிக்குத் திரும்பும் போது வளிமண்டல உராய்வு காரணமாக எரிந்து போவதற்கான சாத்தியம் மிகக் குறைவானது என்றே கருதுகின்றனர். தற்போது 1.2 மில்லியன் குப்பைகள் விண்வெளியில் இருப்பதாகக் கணித்திருக்கின்றனர். தற்செயலாக உங்கள் பகுதியில் விழுந்தால் அதற்கு அருகே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.