- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -


இந்த நான்கைந்து வருடங்களில் குறிக்கத்தக்க மாற்றத்தை, கண்டிருந்தது விடுதலை நகர். தெளிவான ஒரு காலை நேரத்தில் அவ் ஊரை நான் சென்றடைந்திருந்தேன். வானம் அற்புதமான நீல நிறத்தில் தெளிவாக இருக்க, கீழே தோட்டங்கள் தந்த பச்சை நிறம்… மேலும், காற்று மென்மையாக வீசி புத்துணர்ச்சியை தந்த ஓர் நளினமான காலை அது. பாதையின் ஒரு புறம், அன்று போலவே, இப்போதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தோட்டங்கள், தோட்டங்கள், தோட்டங்கள். கொத்தி கிளறப்பட்டு, கற்கள் அகற்றப்பட்டு, பண்படுத்தப்பட்டு, மிருதுவாக்கப்பட்ட செம்மஞ்சள் கலந்த சிவப்பு மண், எண்ணற்ற பாத்திகளாக, நீண்ட வரிசையில், பயிரிடப்பட்ட பகுதிகளாக, பச்சை பசேலென்று, கரட்டாலும், பீன்ஸ்ஸாலும், பயறு வகைகளாலும், அழகு பூண்டு, ரம்மியமான தோட்டங்களாக காட்சி தந்தது. மனித உழைப்பு, இப்புல்லுக்காட்டை, இப்படி ஓர் சௌந்தர்யமாய்; மாற்றியிருந்தது.

“வெறும் கோரப் புல்லா மண்டிக் கெடந்த எடம்” என்று விரியும் தோட்டங்களை காட்டுவார் அண்ணாமலை.

தோட்டங்களின் குறுக்காக, இப்போது வாகனங்களும் செல்ல, ஆங்காங்கு பாதைகள் வெட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் ட்ரக்டர்களும் நின்றிருந்தன. தோட்ட பரப்பில், சில வீடுகளும் கூட புதிதாய் முளைத்திருந்தன. அவற்றின் முன்னால் சில வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஐந்தாறு வருடங்களின் முன் இவை இங்கே காணப்படாத ஒன்று.

பிரதான பஸ் பாதையில் இருந்து, விடுதலை நகரின் குடியிருப்புகளுக்காய் செல்லும் மண் பாதையில் இருந்து பார்க்கும் போது, அத்தோட்டங்களின் ஒன்றின் நடுவே மிக அகலமான குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்தார்கள் ஆட்கள் கூடி. இரண்டு மூன்று கிணற்றின் சுற்றளவைக் கொண்ட, மிக பிரமாண்டமான குழி அது. குழியை சுற்றி, குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மென்மையான மண் சுற்றிவர ஓர் சிறு குன்றுப்போல் குவிக்கப்பட்டிருந்தது குவியலாய். பெரிய ஒரு குழாயும் குழியில் இருந்து வெளியே புறப்பட்டு வந்திருந்தது.

“சரியா தெரியல, தண்ணி எடுக்கறதுக்கா இருக்கும். இந்த துண்டை கீ நாட்டுகாரர் ஒருத்தர், அறுபத்தஞ்சு (லட்சம்) கொடுத்து வாங்கி இருக்காரு. மரகறி போட. நாலு ஏக்கர். அருமையான நிலம்;. இத வச்சிருந்தவென், முழுசா வித்துட்டு குடும்பத்தோட கீ நாட்டுக்கு, அவன் சொந்த ஊருக்கு பயண பட்டுட்டான்.”

“இல்ல… இல்ல… அவுங்க இலங்கைல இருந்து வந்தவுங்க இல்ல… அவுங்க இங்கேயே உள்ளவுங்க… அவுங்களுக்கு பட்டா (நில உறுதி) இருந்துச்சி…”

தெளிவுபடுத்தினார்: “இப்ப மூணு வகையான மனுசங்க இங்க வாழ்றாங்க… ஒன்னு நாங்க… மெஜாரிட்டி… மத்தது பூர்வீகமா இங்க இருக்கிறவங்க… அது நாலைஞ்சு குடும்பம்…”

“அடுத்து, புதுசா நெலத்த பணங் கொடுத்து வாங்கி, பெரிய அளவுல விவசாயம் செய்யிற குடும்பங்க – அதுவும் இப்பைக்கு நாலஞ்சு… கீ நாட்டு காரவுங்க…”

“ஆனா நாங்க வந்தப்ப, இங்க மண்டி கெடந்தது வெறும் கோர புல்லுத்தான்... பக்கத்து கிராமத்தவங்க – பட்டா வச்சி இருந்தவங்க - இல்லாதவங்க - இவுங்கெல்லாம் மனம் போன போக்குல நெலத்த புடிச்சி வளைச்சி போட்டுக்கிட்டு இருந்தாங்க…”

“கோர்ட் ஓடர் வந்திச்சோ… அரசாங்கம் அவங்கள எல்லாம் காலி பண்ண சொல்லிருச்சி… யார் யாருக்கு பட்டா இல்லையோ, அவுங்க எல்லாத்தையும் காலி பண்ண சொல்லி, எங்களுக்கு புடிச்சி கொடுத்தாங்க…”

“நாங்க, இந்த காட்டு தொங்கல்ல இருந்து அந்த காட்டு தொங்கல் வரைக்கும் முள்ளுசெடியா, கல்லுபாறையா இருந்த இந்த மண்ண – வெறும் கட்டாந்தரன்னு வைங்களே… அத ஒழைப்பாலையே மாத்துனோம்”

“–கட்டாந்தரை – நாலஞ்சு வீடு – பெறகு கிராமம் – அதாவது, விடுதலைநகர் கிராமம்…”

“கிராமம்” என்ற சொல்லுக்கு அவர் கொடுத்த அழுத்தம் வெளிப்படையாகவே தெரிந்தது அவர் குரலில். காட்டில் இருந்து ஒரு புது கிராமத்தை உருவாக்கியவனின், வாழ்வு தந்த அழுத்தம் அது என்பது எனக்கு புரிந்தது.
“முந்தி எல்லாம் இங்க பஸ் ரோட்டே கெடையாதே… அதுக்கே எவ்வளவு போராட்டம் – போலீஸ் அடிச்சதுல ஒருத்தனுக்கு மண்டையும் பொளந்திருச்சி… அதுக்கு பெறகுத்தானே பஸ்ஸே இங்க ஓட தொடங்குனிச்சி…”

“அந்த அறுபத்தஞ்சுக்கு வித்தான்னு சொன்னேனே – அவன் பூர்வீகமா கீ நாட்டு காரன்தான். அவனுக சகோதரனுங்க மூனு பேரு இங்க இருந்தானுங்க. மூனு பேரும் சண்டியனுங்க. ஊர் சண்டியனுங்க – தீபாவளி, பொங்கல்ன்னா மொதல்ல வீச்சருவாவ எடுத்துக்கிட்டு, வீடு வீடா போயி காசு வசூல் பண்ணுவானுங்க. கொடுத்தாகனும். ஆமா, கொடுத்தாகனும். இந்த பகுதியே அவனுகன்னா நடுங்கும். அவென் சொல்படித்தான் நடக்கும். மீச இந்தா இத்த தண்டி வச்சிருப்பானுங்க… எதுக்குன்னு தெரியாது… ஒரு வேல பயமுறுத்துறதுக்காக இருக்கும்… பொம்பளைங்க நடுங்குவாளுக…”

“வந்த புதுசுல எங்க சனங்ககிட்டயும் காசு வசூல் பண்ண வந்துட்டான்…சாதி ஒரு பக்கம்… நாங்க பூர்வீகம்…நீங்க சிலோன் – அப்பிடிங்கிற பேச்சு ஒரு பக்கம்… போலீஸ{ம் சாதி அடிப்படையில – அவுங்க பக்கம்…”

“இனி நாங்க என்னா செய்றது. கடேசியில கூப்பிட்டு நல்லப்படியா கேட்டோம். ஒனக்கு என்னா வேணும்… பணமா – எதுக்கு – நீ என்னா அரசாங்கமா – இல்ல – நீ வசூலிக்க வந்திருக்கது வரியா – என்னான்னு…”

“அடிச்சா அடி… வெட்டிபுட்டானுங்க பசங்க… புடிச்சிருக்காட்டி உசுரையே எடுத்தாலும் எடுத்திருப்பானுங்க… அவ்வளவு ஆத்திரம்… என்னென்ன கஸ்டப்பட்டு இங்க வந்து சேந்தவங்க நாங்க…”

“அதுல அடங்குனதுத்தான் அவனுக… அதாவது, எங்கனால, இந்த பக்கத்து ஊருக்கெல்லாம் ஒரு நன்ம கெடைச்சிச்சின்னு வச்சிக்கிங்களே… பக்கத்து ஊரெல்லாம் இவனுங்கன்னா நடுங்கும்… எதுக்கெடுத்தாலும் கத்திய உருவிக்கிட்டு கௌம்பிடுவானுங்க… அவனுங்க ராஜா மாதிரியில்ல இருந்தானுங்க… பக்கத்து ஊரு பொம்பளைகளுக்கும் நடுக்கம்… ஆம்பளைகளுக்கும் நடுக்கம்…”

சம்மணம் போட்டிருந்த காலை, இரு கரங்களாலும் தேய்த்துவிட்டு கொண்டு தொடர்ந்து கூறினார். “அப்பிடி இருக்கையில, அவனுகவுட்டு மக ஒருத்திய நம்மாளுவுட்டு பையன் ஒருத்தன் எடுத்துக்கிட்டான்;… நாங்கெல்லாம் சேந்து கல்யாணமும் செஞ்சி வச்சுட்டோம்… கொழந்தையும் பொறந்திருச்சி…”

“பெறகு, சமாதானம் ஆகுறோம் அப்படின்னு ஆகுற மாறி ஆகி, பொண்ண வீட்டுக்கு கூப்பிட்டு கெணத்துல தள்ளி கொன்னுட்டானுங்க – போலீஸ் அது இதெல்லாம் அவங்க இனமா போச்சுல… அதுல வேற காசு வெளையாடிருச்சி… எல்லாத்தையும் கொடுத்து அப்படியே அமுக்கிட்டானுங்க… இவனுங்க யாரு… சிலோன்காரனுங்க – இவனுங்க எப்படி நம்ம பொண்ண கட்டலாம்…”

“அவனுக்கு மூணு மகென். ஒரு பொண்ணு. ஒரு பொண்ண இப்படி கொன்னு அழிச்சிட்டானுங்க. அதோட விஷயம் முடியல. பெறகு ரெண்டு மகனுங்களும் செத்து போயிட்டானுங்க… நஞ்சு குடிச்சி. நெல தகராறுத்தான். அவனுங்களே நஞ்ச குடிச்சானுங்களா இல்லாட்டி இவனுக குடிக்க வச்சானுங்களா அப்படிங்கிறது ஊர் ரகசியம். இப்ப ஒரேடியா நெலத்த வித்துட்டு ஒத்த மகனோட கீ நாட்டுக்கு போய் சேந்துட்டானுங்க… பாருங்க வாழ்க்கைய…”

“இந்த வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்காட்டித்தான் அதிசயம். தன் பொண்ணையே கெணத்துல தள்ளி கொல்றதுங்கிறது இங்கெல்லாம் பெரிய அதிசயம் இல்லைங்க. அப்படி ஒரு ஒலகம் இது…”
“எல்லாம் நெலம் செய்யுற வேலத்தான்..”

“பூமாதேவியா…ம்… நல்லா சொன்னிங்க… ஹ்ஹ…ஹா…”

“பூமாதேவி…? அப்ப பூமாதேவியா நஞ்சு வச்சி கொல்ல சொல்லுது… பொண்ண புடிச்சி கெணத்துல தள்ள சொல்லுது… நெலத்த இங்க ஆட்டி வைக்கிறது எல்லாம் பூமாதேவி இல்லைங்க. எம தூதருங்க… பூமாதேவிக்கிட்ட இருந்து பிச்செடுத்துட்டானுங்க… நெலத்த… நெலத்தால எத்தன சாவு இங்க… ஒன்னா ரெண்டா… தெனம்… அப்ப எந்த பூமாதேவி மனுசன் மூளைக்குள ஏறி இப்படி கொல்ல சொல்லுது… அந்த பொண்ணு அப்படி என்ன பாவம் செஞ்சா…”

“கீ நாட்ல அப்படித்தாங்க… என் மகள கட்டிக்கொடுத்திருக்கேன் – அவுங்க வித்தியாசமானவுங்கத்தான் –”

“அதுக்கு காரணம் இல்லாம இல்லைங்க…”

குரலை தாழ்த்தி முணுமுணுப்பாய் ரகசியமாய்; சொன்னார், அவர் எனக்கு மட்டும் அந்தரங்கமாய் கேட்க வைப்பது போல்.

“சில வேள பதினஞ்சு நாளைக்கு கூட ஒங்களுக்கு, ஒரு வேலையும் கெடைக்காது. நம்புங்க – சும்மா இருப்பீங்க – ஒன்னுமில்லாம – அப்ப மொதல்ல ஒங்களுக்கு கெடைச்ச காசு, செஞ்ச அறுவட – இத கவனமா பொத்தி வச்சி, பொத்தி வச்சி சிக்கனமா செலவழிக்க தெரியனும் ஒங்களுக்கு. உதாரணமா, ஒரு அவசரம்ன்னா, இங்க ஒரு அஞ்சாயிரத்த ஒரு நாளையில பொரட்டிரலாம் – ஆனா கீ நாட்டுல, ஒரு அஞ்சு ருவா கூட பொரட்ட ஏலாது – நல்லா பழகுனவங்க கூட கைய விரிச்சிருவாங்க…”

“எனக்கு மட்டும் ஒடம்பு நல்லா இருந்திருந்தா – இந்நேரம் – இந்த வீட்டுக்கு முன்னாடி ஒரு வண்டி நிக்குங்க – அப்படி ஒழைப்பு இங்க – அப்படி ஒரு மண்…”

உண்மை. சென்ற முறையை விட இம்முறை சற்றே தளர்ந்து போயிருந்தார் இந்த மாபெரும் உழைப்பாளி. மாரடைப்பு வந்ததற்காய் தான் செய்துக்கொண்ட அறுவை சிகிச்சை தழும்புகளை, சட்டையை தூக்கி தொட்டு தொட்டு காட்டினார். கால் நரம்புகளை வேறு வெட்டி எடுத்திருந்தார்கள்.

“முந்தியெல்லாம், எம்பது மூட்ட கெரட்ட, தனி ஆளா, ஒரு லாரியில ஏத்திருவேன்…”

“எல்லாமே போடுவேன் – பயறு, கரட், பீன்ஸ்ஸ{ – பயறிலேயே செலவெல்லாத்தையும் தேடிருவேன்… அப்ப மீதி எல்லாமே ஒரு சேமிப்பு தானே…”

“அங்க இப்ப நெலம எல்லாம் எப்படி இருக்கு…? ம்…தலையை குணிந்து நிலத்தை பார்த்தவாறே சொன்னார் – எங்க பெறந்து, எப்படி ஓடி… இங்க வந்து… அட வாழ்க்க எப்பிடி எப்பிடி ஓடிரிச்சு…”

“அடுத்த தடவ வரையில தோட்டத்துக்கு ஒங்கள கூட்டிக்கிட்டு போறேன்… தூரம் கொஞ்சம் கூட… எங்க தோட்டம் காட்டு தொங்கல்ல இல்ல இருக்கு… ரெண்டு மூனு ஏக்கர் - பயிர் போட்டாச்சுன்னா, ராவு காவலுக்கு நான்தான் போவேன்.”

“எல்லாமே வருமே… காட்டுமாடு, பன்னி, எல்லாமே… அதுல மிச்சம் டேஞ்சரான படவா காட்டுமாடு தாங்க… ஒரு முற என்னைய குத்தி கிழிக்க இருந்துச்சி… நாய்த்தான் காப்பாத்துனிச்சி…”

நடக்கும் போது, இம்முறை, நின்று மூச்சு வாங்கினார் மனிதர்.

எந்த ஒரு அழுத்தமும் தராமல், போகிற போக்கில், வழமையான குசலம் விசாரிக்கும் பாணியில், சிரித்த சிரிப்புடன் விசாரித்தார்.

“இனி எப்ப வருவீங்க…”

மகன் தனியாக என்னிடம் கூறினார்: “அப்பாவ அங்க ஒரு தடவ அனுப்பி எடுத்தா நல்லது – எல்லாத்தையும் பாத்திட்டு வந்திரட்டுமே ஒரு தடவ. எப்பவும் அதே பேச்சு – அடுத்த தடவ நீங்க வந்தா ஒங்களோடையே டிக்கெட் எடுத்து அனுப்பிறலாம்… அப்பாவுட்டு தம்பி ஏர்போட்ல நிப்பாரு … அப்பா சொன்னாரு…”

விடைபெறும் போது, இரண்டு மூன்று முறை என் கைகளை பிடித்து தன் மொர மொரப்பான உழைத்து முரடான கைகளால் அழுந்த குலுக்கினார். அந்த அழுத்தத்தில், அவர் சொல்லாத எத்தனையோ விடயங்களை அவர் சொல்ல துடிப்பதாய் பட்டது. அழுத்தமான ஒரு மனிதர் அவர்.

மாலை, விடுதிக்கு வந்து சேர்ந்து அயர்ந்த போது, ஃபோன் வந்தது. மகன். நாளைக்கு பக்கத்து ஊர்ல திருவிழா… வர முடியுமா… நல்லா இருக்கும். ஆனால் மறுநாள் நான் புறப்பட வேண்டிய நாள், கொடைக்கானலை விட்டு, என் நினைவுகளுடன்.

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.