7

தமிழ் இலக்கிய உலகில் இது எமது ஆ.மாதவனையும் சிங்காரத்தையும் நினைவுபடுத்தவே செய்யும்.

ஜெயமோகன் எழுதுவார்: “பொதுப்புத்தியாலும், புறவயமான தர்க்கத்தாலும் (REASON) அடையப்பெறும் உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை…” (பக்கம் 105: மேலது)

மேலும் கூறுவார்: “மனித மனதின் ‘இயல்பை’வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தை பொறுத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்துதல் தான்” (பக்கம்:89)

இப்பின்னணியோடு ஆ.மாதவனின் படைப்புலகை அணுகும் அவர், மாதவன் பொறுத்து கூறுவது: “மாதவன் சித்தரிப்பது தீமையை மட்டுமே… இதுதான் அப்பட்டமான வாழ்க்கை என்று அப்படியே காட்டும் பாவனை…” (கரிப்பும் சிரிப்பும்). மாதவனின் மேற்படி எழுத்துக்களின் உச்சநிலைகளை (கிளைமெக்ஸ்) ஜெயமோகன் வாயிலாகவே கேட்பது, எமது தரிசனங்களை இலகுவாக்குவதாக அமையும், (ரன்வேயில் ஓடத் தொடங்கலாம்): “‘மோகபல்லவி’ போல நேரடியான விமர்சனமே இல்லாத காமவேட்கையின் சித்தரிப்புகள்…”

“காமினி மூலம்’,‘சினிமா’ போல் விதவிதமான குற்ற சித்தரிப்புகள்…”

மேலும் கூறுவார்:

“அக்குற்றங்களுடன், நம் வாசக மனம், சுவாரஸ்யமாக (?) இணைந்து கொள்வதை, நாமே காணும் துணுக்குறுதல்தான், இவற்றின் அனுபவம்”. (பக்கம்:52: கரிப்பும் சிரிப்பும்)

இவ்விவரிப்பில் ஏற்படும் ‘அனுபவங்களை’ தனியாக விவரிக்கவும் அவர் தயங்குவதில்லை:

“‘சினிமா’…(என்ற) சிறுகதையில்… சாப்பிடும் போது வந்து ;மியாவ்’ கொட்டும் பூனையை வாலை எட்டிப் பிடித்து வாசற்கதவில் நச்சென்று மோதி எறிகிறான்” (பக்கம்:56: மேலது)

“மனைவியை சீண்டிய இளைஞனை காலை தடுக்கி விட்டு பால்கனியிலிருந்து விழச் செய்து கொல்கிறான்”

“‘காமினி-மூலம்”கதையிலும் ஒரு கொலை நடக்கிறது… பிரஞ்ஞைபூர்வமாக திட்டமிடவில்லை… ஆனால் அச்செயலை நடத்த அவனுள் இருந்தபடி அவனை ஒரு சக்தி வழிநடத்திச் செல்கின்றது…”

“‘எட்டாவது நாள்’…(என்ற சிறுகதையில்) வன்முறை, காமம் என்ற இரு மிருக வலிமைகளினால் இயக்கப்பட்டது சாலப்பட்டாணியின் வாழ்வு”

“மரண தரிசனத்தின் அடிப்படையில் தன் வாழ்க்கை சித்தரிப்புகளை முழுக்க தொகுத்து கொள்ள முயல்வதன் வெற்றிகரமான விளைவே ‘எட்டாவது நாள்’. (பக்கம்:53:மேலது) இறுதியில் முடிப்பார்:

“மாதவனின் கதைகளில் காமம் வெளிப்படுகிறது. இரை தேடும் மிருகங்கள் போல் மனிதர்கள் காமம் தேடி செல்கின்றனர்” (பக்கம்:57:மேலது)

“மாதவன் ‘மானுட தீமையின் கதைசொல்லி…’” (பக்கம்:60)

“மாதவன் உலகில்…சார்ந்து வாழும் வாழ்க்கையும், பரஸ்பரம் நுகரும் காமமும் மட்டுமே உறவுகளின் அடிப்படையாக உள்ளன.” (பக்கம்:60)

இப்பின்னணியில், மாதவன் தொடர்பான ஜெயமோகனின் இறுதி தீர்ப்பு பின்வருமாறு உளது: “பேரிலக்கியங்கள் மானுட தீமையின் பெரும் சித்தரிப்புகளில் இருந்தே தொடங்குகின்றன. அவ்விருளின் வழியாகவே அவை ஒளியை நோக்கி முகம் திருப்புகின்றன. அவ்வகையில் பார்த்தால் ஒரு மாபெரும் தரிசனத்தை நோக்கிய நகர்வுகளே இவ்உண்மை தேடல்கள். இலக்கியம் உண்மைகளிலானது. பேரிலக்கியம் அதி உண்மைகளிலானது. இத்தீமை சித்தரிப்புகளுக்கு என்ன அர்த்தம் என்றால், உண்மை மட்டுமே என்றுதான் பதிலிறுக்க முடியும்…” (பக்கம்:66:மேலது) அதாவது, இறுதியில், ‘தரிசனத்தையும்’ நாம் கண்டாகி விட்டது.

மாதவனின் சிறுமை கொண்ட படைப்புலகம் குறித்த ஜெயமோகனின் மேற்படி இறுதி நியாயப்பாட்டில், “ஒளியை நோக்கி முகம் திருப்பல்”, “மாபெரும் தரிசனம்”, “உண்மை தேடல்கள்”, “அதி உண்மை”– போன்ற வார்த்தைகள் சகஜமாக பாவிக்கப்பட்டிருப்பது, எமது கவனத்தை கவருபவைதாம்.

திருவனந்தபுரத்தில், செல்வி ஸ்டோர்ஸ், என்ற தனது வர்த்தக நிலையத்தில் இருந்து, ஜன்னல் வழியாக கடை தெருவை எட்டி பார்த்து, வாழ்வை இப்படியாக படம் பிடிப்பது அல்லது சித்தரிப்பது மாதவனின் படைப்புலகத்தின் அடித்தளம் ஆகின்றது.

இதற்கு, ‘ஆழ்மனம்’ என்று பெயர் சூட்டத் தடை இல்லைத்தான். முக்கியமாக தனது தொகுதியின் முகப்பில், (காமினி மூலம்) கதைகளுக்கு முகப்புரை போல ரிக் வேதத்தின் கவிதையிலிருந்து சில பகுதிகளை எடுத்து மாதவன் கையாண்டிருப்பதை இட்டு ஜெயமோகனும் மகிழ்வுடன் பதிவு செய்துள்ளதை இணைத்துப் பார்க்கும் போது. இனி, இவை, வேறு எங்கு இருந்துத்தான் உதிக்க முடியும் - ஆழ்மனதை தவிர, கடை வீதிகளில் இருந்தா, என்ன? மொத்தத்தில், கிளிம் நாவலின் வாசிப்பு, இப்படியாய் எமது தமிழ் இலக்கிய உலகில் இடம் பெறும் மேற்படி நிகழ்வுகளை, நினைவில் கிளறுபவையாக உள்ளது ஓர் தற்செயல் நிகழ்வல்ல.

தொடர்ந்து வெலன்டைன், கேட்பான், கிளிம்மிடம்: “நீங்கள் செனினை வாசித்ததுண்டா…?”

“அப்படியென்றால்… இது நீட்சேயின், தனிநபர் வாதத்தை – முன்னெடுக்கும் கொடுமையான அங்கதமா (SATIRE)”?

இதற்கு, பதிலளிக்கும், வெலன்டைன், கிளிம்மிடம் கூறுவான்: “இது உண்மையில், அங்கதமா, இல்லையா என்பது சாத்தானுக்குத்தான் வெளிச்சம்…”

விடயம், பாதாள உலகத்து நாயகர்களை, வெளியே கொணர்ந்து திரியவிடும் அம்சங்களும், பின் அவர்கள் ‘தங்கள்’ ‘தங்கள்’ ‘சுதந்திர’ வாழ்வின் கருமங்களை கிரமமாக ஆற்றி முடித்த ஏற்பாடுகளும் முடிந்தபின், இவை, - ஒன்றுமில்லை, - “அதிகார மையங்களைத் தகர்க்கும் எழுத்திவை” அல்லது மேலே மாதவனின் எழுத்து தொடர்பில் கூறப்பட்ட, “ஒளியை நோக்கி புறப்படும் தரிசனங்கள்”- பேரிலக்கியங்கள்-என்று எம்மிடை கொண்டாடப்படும் நாகரீகம் இருக்கின்றதே – அதே போன்று, இருந்ததே அன்றைய ரஷிய இலக்கிய உலகும், என்பதே நாவல் இங்கு வெளிக் கொணரும் நிகழ்வாகின்றது.

வெலண்டைன் சிபாரிசு செய்யும் செனின் (SANIN-1930) என்ற நூலின் கதாப்பாத்திரம் ஓர் இளைஞன். நீண்ட காலத்தின் பின் கிராமத்துக்கு, வரும் இவன், அனைத்து சமூக நெறிகளையும் உதறித் தள்ளி, கிராமத்து கன்னிப் பெண்களை தன் இச்சைக்கு பலிகடாக்களாக்கும் பணியை செவ்வனே மேற்கொள்கிறான். சுருக்கமாக கூறினால், வெலண்டைன், மேலே, விஸ்தாரப்படுத்தும் அல்லது பட்டியலிடும், ஆர்ட்சிபெலவ்வின் அனைத்து சித்தாந்தங்களுக்கும், ஏற்ற உரைகல்லாக, இருக்கிறான், ஆட்சிபெஷவின், செனின் கதாநாயகன்.

ஆர்ட்சிபெஷவ் பொறுத்து, மரீனாவின் நிலைப்பாடும், நூலில், வித்தியாசப்பட்டு ஒலிப்பதாக இல்லை. உண்மையில், அது வெலண்டைன், நிலைப்பாட்டை விஞ்சிய ஒரு நிலைப்பாடாகவே இருக்கின்றது: “எமது இளைய தலைமுறையினரின், பாவிக்கப்படாமல், களஞ்சியப்படுத்தப்பட்டு, தேங்கி கிடக்கும் சக்தியை, அவிழ்த்து விட்டு, அது ஓடுதற்கான வாய்க்கால் வழியை அல்லது சரியான வடிகாலை சரியான நேரத்தில் காட்டி நின்றது ஆர்ட்சிபெஷவ்வே. வெளிப்படையான, இதயம் கொண்ட, எழுத்தாளன் அவன். அவனது, ‘செனின்’, உண்மையாகவே ஓர் ஆதர்ஷ மைல்கல், எனக் கூறலாம்…”

மரீனாவின் இந்த நிலைப்பாடு, எமது தமிழ் இலக்கிய உலகிலும் ஜெயமோகன் முதற்கொண்டு, பலராலும், வௌ;வேறு விதமாக எதிரொலிக்கத் தவறவில்லை. “வாழ்க்கை குறித்த முழுமையான எதிர்நிலை நோக்கு தமிழ் நவீனத்துவத்தின் முதிர்ச்சி நிலை என்று இக்காலகட்டத்தை கூறலாம்” என்று மரீனாவைப்போல, இங்கேயும் கொண்டாட முனைவதை நாம் கேட்கத்தான் செய்கின்றோம். இதில் உள்ளடங்கும் கூர்மையான அரசியலை நாம் பிறிதாக வாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. (மரீனாவின் அரசியலைப் போல்)

வன்முறை, காமம் என்பவற்றை தலையாய சித்தரிப்பாக கொண்டுள்ள மாதவனின் இத்தொகுதி உண்மையில் ஆழ்மனதில் இருந்து உதித்ததா அல்லது வெறும் கடை வீதியில் இருந்து உதித்ததா என்பதெல்லாம் தேவைப்படாததாகின்றது - இவற்றை ஒரு தரிசனம் என தூக்கிப் பிடிக்கும் மனிதர்களை எண்ணும் போது.

ஆனால், மரீனாவின் செனின் குறித்த, மேற்படி நிலைப்பாடு, பல்வேறு மேற்கத்தைய, மிதவாத விமர்சகர்களின் நிலைப்பாடுகளோடு ஒப்பிடும் போது கூட, அவற்றை விஞ்சியதாகவே காணப்படுகின்றது, மாதவன் தொடர்பிலான எமது நியாயப்பாடுகள் போன்று.

புரட்சியின் எதிர்ப்பலைகள், முளைக் கொண்டு அரும்பி வந்த ஒரு காலப்பகுதியில், மரீனாவால், ஆற்றப்படும் மேற்படி கூற்றுகளின், அரசியல் முக்கியத்துவம், நூலில், வெளிப்படையாக கூறப்பட்டதாகவும் இல்லை, கிளிம், அதை அறிந்ததாகக் காட்டி கொள்வதாகவும் இல்லை.

அதாவது, மரீனா, ‘எந்த நலனின்’ அடிப்படையில் அடிஆழத்து தீர்க்கதரிசிகளாய், இவ் எழுத்தாளர்களை, வரையறுக்கின்றாள், அல்லது, கண்டுகொள்கின்றாள் என்பது குறித்து, நூல் வெளிப்படையாக, மௌனமே சாதிக்கின்றது. இருந்தும், மேற்கத்தைய விமர்சகர்களே கூறுகின்றார்கள்: ‘குறித்த காலப்பகுதியில், பல கன்னிப் பெண்கள், தத்தமது கன்னி தன்மையை இழக்க இந்நூல் வழி செய்யாமலும் இல்லை என…”. உண்மையாக இருக்கலாம். ஆனால் மரீனாவோ, ஒரு படி மேலேயே சென்று இவ் இளைஞர்களுக்கான, ஒரு வடிகாலை, தோற்றுவிக்க வேண்டியதின் ‘அரசியலை’ சரியாக புரிந்து கொள்கின்றாள் என்பதிலேயே அவளது ‘ஆழம்’ காணக்கிட்டுகின்றது. இந்நூல்களை மிக கவனமாக வாசிக்கும் கிளிம், சில சந்தர்ப்பங்களில் தன்னை அறியாமல் அவற்றை தூக்கி வீசி, தனக்;குள் கூறி கொள்வான். ‘இவர்களைப் போல்; இல்லை நான்’ என.

இவன், அவன் இல்லை என்றால், இவன் யார் என்பது, நாவல் தொடர்ச்சியாக முன்வைக்கும் ஒரு கேள்வியாகின்றது.

இது ஒரு புறம் இருக்க, இப்போது கிளிம்மை, ஆட்டிப் படைக்கும் கேள்விகளில் ஒன்று: யார் - இவள் - மரீனா?

இவளது பின்னணி என்ன?

மேற்படி, இலக்கிய – அரசியல் நிலைப்பாடுகளுடன், ஏற்கனவே குறித்தது போல், மரீனாவின் சொத்து சேர்க்கும் விதமும், அவளை சுற்றிச் சுழலும் நபர்களும், அவர்களது எண்ணங்கள் - நடத்தைகள் - அனைத்தும் ஒன்று சேர, அவை, கிளிம்மில் மேற்படி கேள்விகளை மேலும் இறுக்கமாக்குகின்றன.

[தொடரும்]