யுவான் வாங் (Yuwan Wang-5) கப்பலின் வருகையுடன், இலங்கையின் மும்முனை கயிற்றிழுப்பு போட்டியானது, புதிய பரிணாமங்களை வெளிப்படுத்தியது. இலங்கையின், டாலர் தேடல் ஏற்படுத்தியிருந்த, எண்ணெய்-எரிவாயுக்கான நீள் வரிசைகளும் (பல கிலோ மீற்றர் நீளங்களில்) மக்கள் அவ்வரிசைகளில் மணிக்கணக்கில் வாடி நின்று, சிலர் அங்கேயே களைத்து வீழ்ந்து இறந்த நிலையும் (18க்கு மேல்)-போக- இன்று இவை ஓரளவு தணிந்து போன நிலையில், மேற்படி கப்பலின் வரவு, இப்போது அதன் அரசியலை முன்நிலை நோக்கி நகர்த்தி, தற்போதைய செய்திகளில் முதலிடத்தை பிடிப்பதாய் இருந்தது. இதற்கு சில தினங்களுக்கு முன்பாவே அமெரிகக்க-சீன தூதுவர்கள் நேரடியாக சந்தித்து, ஒருவர் கையை ஒருவர் பிடித்து குசலம் விசாரித்துக்கொண்ட செய்தியும் வெளிவந்திருந்தது.  கப்பலின் வருகையும், அதற்கு முன்னால் வந்த இந்த செய்தியும், ஓரளவு பேசும் பொருளாக சம்பந்தபட்ட வட்டாரங்களில் இருக்கவே செய்திருந்தது.

அமெரிக்கா, சீனத்தை பாவித்து, இலங்கையிலிருந்து, இந்தியாவை, அப்புறப்படுத்தப் பார்கின்றதா? அல்லது குறைந்த பட்சம் இந்திய நலனை இலங்கையில் ஒரு கட்டுக்குள் அடக்கி விட முயற்சிக்கின்றதா? அல்லது இந்தியாவிற்கான ஒரு அழுத்த புள்ளியை இலங்கையில் உருவாக்குவதோடு அதன் நோக்கம் முடிவடைந்து போகின்றதா- என்பது போன்ற பல்வேறு வினாக்கள், இக்கைகுலுக்களின் போது சர்வதேச மட்டத்தில் தோன்றி மறைந்தவைதாம்.

அதாவது, ஒரு பிரதேச கேள்வியானது, ஒரு சர்வதேச கேள்வியை விட முன்னிலை வகிக்கக் கூடுமா, அல்லது இரண்டுமே தொடர்ச்சியாய் தனித்தனி கேள்விகளாக ஜீவிக்க முற்படுமா என்பன போன்ற கேள்விகள் பூதகரமாய் தோற்றம் தர முற்பட்டிருந்த காலம் அக்காலம்.

சர்வதேச மட்டத்திலான புது கேள்விகள்:

கடந்த ஆறு மாதங்களுக்குள்ளாக, சர்வதேச மட்டங்களில், அநேக கேள்விகள் தோன்றியும் மறைந்தும் சென்றுள்ளன.

சென்றுள்ளன” என கூற முற்படுவது, விடயங்களை சற்று கறாராக பார்க்காத ஒரு தன்மையை சுட்டுவதாகவே உள்ளது. ஏனெனில் விடயங்கள் “சென்று” விடுவதில்லை. வேண்டுமானால், புதிய பரிமாணங்களை வழங்கிவிட்டு, அத்தொடக்க வினாக்கள், வெறுமனே ஒதுங்கிக் கொள்கின்றன என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.  இவற்றில் முக்கியமானது டாவோஸ் (Davos) பொருளாதார மாநாடு என்பதும் ஒன்று.

டாவோஸ் மாநாடு

கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்னால், கடந்த மே மாத இறுதிப்பகுதியில், நடந்து முடிந்த இந்த உலக பொருளியல் மாநாடு நான்கு நாட்கள் தொடர்ச்சியாய் நடந்தது. (எமது மனித உரிமை ஜெனீவா கூட்டத்தொடர் போல கோலாகலமாக, மே22 முதல் மே26 வரை).

கோவிட், உக்ரேனிய யுத்தம், இவை இரண்டும் உலகுக்கு கொண்டுவந்து சேர்த்த பொருளியல் அதிர்வுகள், கால சுவாத்தியம் போன்ற விடயங்களை பேசு பொருளாகக் கொண்டு, நடந்து முடிந்த இம்மாநாட்டுக்கு, 2500 உலக தஹலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்  என்பதும், இவர்கள் உலகை எப்படி ஆள்வது அல்லது வழிநடத்துவது என்ற அறிவுரையை இவர்களுக்கு வழங்கும் பொருட்டே இத்தகைய மாநாடு, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒழுங்கு செய்யப்படுகின்றது எனவும் கருதுவோர் உளர். அதாவது உலகை ஆள்பவர்கள் பின்பற்ற வேண்டிய அரசியல் யாது என்பதனை ஓரளவில் வரையறை செய்துக்கொள்ள இம்மாநாடு நடத்தப்படுவதாய் கூறப்படுகின்றது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரில், ரஷ்யாவுக்கு சமாதி எழுப்பப்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்புடன் பலவித எடுத்துரைப்புகள் இம்மாநாட்டில் இடம்பெற்றதாக கூறப்பட்டது.

உண்மையில், உலக புகழ்பெற்ற தொண்டு கிழடுகளில் ஒன்றான- George Soros – (தன் 90ஐ கடந்த நிலையில்) - மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாகி விட்டது என்றும், இதனால் ரஷ்யாவுக்கு எதிரான ஒன்று திரளல் என்பது என்றை விடவும் இன்று அதிமுக்கிய தேவையான ஒன்று எனவும், தோற்றுக்கொண்டிருக்கும் ரஷ்யாவை நிர்மூலமாக்குவதும், அத்தகைய நிர்மூலமாக்கலை உறுதி செய்வதுமே இன்றைய உலகின் அதிமுக்கிய தேவை என்ற தினுசிலும் தனது வழமையான ரஷ்ய எதிர்ப்பு பணியை ளுழசழள அவர்கள் செவ்வனே நிறைவு செய்தார். (எமது புலம் பெயர், இணையத்தளங்கள் ஓரிரண்டைப்போல. “உக்ரைனுக்கு ஆதரவான உலக தமிழர்கள்” என்ற கோஷத்தையும் இவ்வகையில் நாம் நினைப்பூட்டிக்கொள்வது சிறப்பானது ; - இக்கோஷமானது புலம் பெயர் மக்களின் ஒரு சாராரின் இருப்பிலிருந்து பிறப்பெடுக்கக்கூடிய ஒன்று என்பதும் புரிந்துக்கொள்ள தக்கது).

ஆனால், இன்னுமொரு தொண்டு கிழமான கிசிஞ்ஞரின் உரை வேதனை  கவிந்ததாக, சோரோஸின் எடுத்துரைப்புகளுக்கு, எதிரான, நேரெதிர் தன்மையை காட்டுவதாக காணப்பட்டது.  ரஷ்ய-உக்ரேனிய போர் உடனடியாக நிறுத்தத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இதற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்று, இரண்டு  மாதங்களுக்குள்ளாக பூர்த்தி செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்டாக வேண்டுமென்றும், யுத்த களத்தில் காட்டிய அதே தீரத்தை உக்ரைன், அரசியல் களத்திலும் காட்டியாக வேண்டும். என்றும் அவர் கூறி நின்றார்.

கிசிஞ்ஞரின் இவ்வுரை, உக்ரைனாலும், உக்ரைன் சார்புடைய பல ஆய்வாளர்களாலும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது. காரணம், கிசிஞ்ஞரின் உரையானது, நேரடியாக பைடனின், இன்றைய அமெரிக்காவின் தற்போதைய அரசியலுக்கு நேரெதிரானதாக இருந்தது. (அவர், ரஷ்யா கைப்பற்றி இருக்கக்கூடிய-கிரைமியா உள்ளிட்ட நிலங்களை, ரஷ்யாவுக்கு விட்டுத்தருமாறு கூறிவிட்டார்,  என்ற கோதாவில்!). ஆனால், கிசிஞ்ஞர், தனது போராட்டத்தை, மேற்படி மாநாட்டுக்கு பின்னரும் பல படிமுறைகளுக்கூடு தொடர்வதாகவே இருந்தது.

டாவோஸ் மாநாடு நடந்த அதே தினங்களில்தான், பைடன் தனது (QUAD) சுற்றுப்பயணத்தையும் ஆரம்பித்திருந்தார் (22ஃ5ஃ2022). ஜப்பானில் நடந்த க்வாட் மாநாட்டை, தலையானதாய் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றுப்பயணத்தின் போது, “வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பைடன் அறிவித்த மறுதினமே, வடகொரியா, இரண்டு, மூன்று புதிய ஏவுகணைகளை ஏவி, வழமைப்போல் கைகொட்டி மகிழ்ந்திருந்தது. (25 May 2022).

இச்சுற்றுப்பயணத்தின் போது நடந்த இரு முக்கிய நிகழ்வுகள்: சீனா தன் கிழக்கு கடற்பரப்பில் ஜப்பானுக்கு அருகாமையில், அதாவது க்வாட் மாநாடு நடைபெற்ற இடத்திற்கு மிக அருகாமையில், ரஷ்யாவுடன் இணைந்து ஒரு போர் ஒத்திகையில் ஈடுபட்டது. இதே வேளை தாய்வானுக்கு எதிராக, சீனம் போர்த்தொடுத்தால் அமெரிக்கா போரில் இறங்குமா என்ற ஒரு கேள்வி, பத்திரிகை மாநாட்டில் (திட்டமிட்ட ரீதியில்) எழுப்பப்பட்ட போது, பைடனும், ஏற்கனவே திட்டமிட்டாற் போல, அல்லது எதிர்பார்த்து இருந்தது போல், தெட்டதெளிவாக, “அமெரிக்காவும் போரில் இறங்கும்” என பதிலளித்து விட்டார்.  மேற்படி விடயங்கள், நிச்சயமாய், அமெரிக்காவானது இனி பயணப்படப்போகும் திசையை சர்வதேச ஆய்வாளர்களுக்கு ஓரளவில் வெளிச்சம் போட்டுக் காட்டிய அதேவேளை, இவ்வெளிச்சமானது, நிச்சயமாய் யாரை விடவும் அதிகமாக கிசிஞ்ஞரை சென்றடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகளை அதிகமாக்கியிருக்கும்; என்பதில் சந்தேகம் எழுவதற்கில்லை.

சுருக்கமாக கூறினால், அமெரிக்காவின் தற்போதைய அரசியல் கொள்கையானது, எழுந்தமான ஒன்றல்ல மாறாக, மிக கவனமாக திட்டமிடப்பட்ட ஒன்றேயாகும், என்ற கூற்று சர்வதேச மட்டங்களில் வேகம் பெற்றது - இதன் விளைவுகள் தொடர்பில் யாரையும் விட, மிக அதிகமாய், கரிசனையுடையவராக கிசிஞ்ஞர் காணப்பட்டார் என்றால் அது மிகையாகாது.
கிசிஞ்ஞரின் கவலைக்கு காரணங்கள் இருந்தன.

சீன விண்வெளி ஆய்வுக்கூடம் திறப்பட்டது முதல், ரஷ்யா, சர்வதேச விண்வெளி ஆய்வுகூடத்திலிருந்;து 2024இல் விலகிக்கொள்ளும் என்ற அறிவிப்பு வரை, மற்றும் ஐரோப்பிய யூனியன்-இங்கிலாந்து-அமெரிக்கா போன்ற தலையாய மேற்கு நாடுகளின் வாழ்க்கைச்செலவும் -  எரிவாயு பற்றாக்குறையும் - விலைவாசி உயர்வுகளும் - பணவீக்கம் - இவற்றின் தலைவிரிப்பு - இனி, இவை அவ்வவ் நாடுகளின் யதார்த்த வாழ்க்கை நிலைமைகளில் கொண்டுவந்து சேர்த்துள்ள கோபதாபங்கள் - பின் அக்கோபதாபங்கள் கொண்டுவந்து சேர்த்த மாற்றங்கள் (போறிஸ் ஜோன்சன் பதவி நீக்கம் உள்ளாக) - இவை அனைத்தும் ஒரு புறமாய் நின்றாலும், ஐரோப்பிய யூனியனுக்குள், உக்ரைன்-ரஷ்ய போர் ஏற்படுத்தியுள்ள விரிசல்கள்- முக்கியமாக. ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணி என்ற ‘பெர்லின் சுவரில்” ஏற்படுத்தியுள்ள “விரிசல்கள்” - இவையணைத்தும், கிசிஞ்ஞரின் கவலைகளில் கீற்றிட்டு ஓடியிருக்கும் சித்திரமாகவே இருந்திருக்குமே அல்லாமல் மறைந்திருக்க முடியாது என்பதிலும் ஐயமில்லை. அதாவது, “பொருளாதார தடை” என்ற சாணக்கியமும் “கொரோனா” என்ற சர்வதேச பெருந்தொற்றும் வழுவிழந்து தோற்றுப்போன நிலையில், ஒரு உக்ரேனிய யுத்தம் தேவையுற்றதாகின்றது.- முக்கியமாக ரஷ்யாவை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பதென்றால்!

வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், உக்ரைனை ரஷ்யாவுடன் மோதவிடுவதன் மூலம், ரஷ்யாவை கட்டுப்படுத்துவது மாத்திரமல்லாமல்-“பெர்லின் சுவரை” ரஷ்யாவுக்கு எதிராக, மீண்டும் நிரந்தரமாக எழுப்பி அதன் மூலம் முழு ஐரோப்பாவையும் ரஷ்யாவுக்கு எதிராக திருப்பிவிட்டு, ஐரோப்பாவை அமெரிக்காவின் நிரந்தர கூட்டாளியாக மாற்றி விடலாம்- என்ற ஒரு நப்பாசையை கொண்டு இயங்குவதே மேற்படி சாணக்கியம் என்றானது. ஆனால், இப்புள்ளியிலேயே கிசிஞ்ஞரின் வேறுபாடும், அவரது பார்வை வித்தியாசங்களும் இடம்பெறுவதாக அமைந்தது.

கிட்டத்தட்ட 400 வருடங்களாய், ஐரோப்பாவுடன் உறவு கொண்டு, ஐரோப்பாவுடன் தன்னை இனங்காட்டி, தனது பிரதான கொடுக்கல் வாங்கல்களை செய்து வந்துள்ள ஓர் ரஷ்யாவை-கிழக்கு நோக்கி- முக்கியமாக - சீனத்தை நோக்கி தள்ளிவிடல் என்பது இறுதிவரை பொருந்தாத ஒன்று - எந்த சாணக்கியத்திற்குள்ளும் அடங்காத ஒன்று என்பதே கிசிஞ்ஞரின் அடிப்படை தத்துவமானது. ஆனால், அவரது வார்த்தை மொழிகள் அல்லது வார்த்தை பிரயோகம் இவ்வாறு இருப்பினும், அவரது விருப்பத்தின் பின்னணியில் கறாரான, “பொருளியல்-இராணுவ-சர்வதேச” கணிப்புகள் இருக்கவே செய்தன என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்: “மாறிய உறவு முறைகள், ஒரு புதிய ஒப்பந்தத்தை அல்லது ஒரு புதிய உறவு முறையை கோரி நிற்கின்றன. இவை, அவ்வவ் நாடுகளின் போர் மூலோபாய அல்லது போரியல் வலிமை சார்ந்த ஆற்றல் தொடர்புப்பட்ட வினாக்களாகும். இருந்தும் 'ஆற்றல் அல்லது வலிமை' என்பது அவையவற்றினது 'பொருள்கோடல்' சம்பந்தமானதே”. இவற்றுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் போது, இன்று உலக அரங்கில் பல நாடுகளின் தகுதியும் வலிமையும, நேற்றை விட இன்று மாறுபட்டதாகவே இருக்கின்றது. இம்மாறிய, உலக சூழல், ஓர் மாறிய உலக நடைமுறையை, கோரி நிற்கின்றது”

கிசிஞ்ஞரின் கருத்துப்படி, இன்றைய இந்தியா, இன்றைய ஈரான், இன்றைய பிறேசில் ஆகிய நாடுகளின் தகுதியும் வலிமையும் இன்று மாறிவிட்டன. இனியும் அவற்றை ஒதுக்கி வைப்பது என்பது முடியாத ஒரு விடயமாகின்றது. இனி, இவற்றை, உலக ஒழுங்கில், எவ்வௌ; ஸ்தானத்தில் இணைப்பதென்பது முக்கியமான கேள்விகளில் ஒன்றாகின்றது என்பது அவரது கருத்தின் அடிப்படையாக அமைந்தது.

வேறு வார்த்தையில் கூறினால், அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறை ஏற்;கத்தக்கதா? என்பதே அவரது தலையாய கேள்வியாகின்றது. அதாவது, உலக பொருளாதார்-அல்லது உலக இராணுவ-விண்வெளி தொழிற்நுட்பங்களின் வளர்ச்சி என்ற ஓர் பின்னணியில், தனது முதலிடத்தை அமெரிக்கா இனியும் தக்க வைத்துக்கொள்ள முடியுமா-அல்லது அகல கால் வைத்து, இருப்பதும,; இல்லாமல் போகும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுமா - என்பதும் இதனை சரியாக நாடி பிடித்து உள்வாங்கிக் கொள்ள அரசியல் தலைமைகளை நாம் உருவாக்கி உள்ளோமா என்பதுமே கிசிஞ்ஞரின் அடிப்படை கேள்விகளாகின்றன.  இந்த பின்னணியிலேயே, தனது முடியாத வயதிலும் (99), “தலைமைத்துவம்: சர்வதேச சாணக்கியத்தின் ஆறு முகங்கள்” (Leadership : Six studies in world strategy) என்ற தன் அண்மித்த நூலை இவர் வெளியிட்டார.; (5.7.2022).

சர்வதேச சாணக்கியம்” அல்லது அவ்வவ் நாடுகளின் “வெளிவிவகார கொள்கை” என்பது அவ்வவ் நாடுகளின் “பொருளியல் பலம்” மற்றும் அந்நாட்டின் “இராணுவ பலம”  - இவை போன்ற தலையாய அம்சங்களில் தங்கி நிற்பவை என ஆய்வாளார்கள் குறிப்பர். இனி இவை இரண்டும், (“இராணுவ பலமும், பொருளியல் பலமும்”) மாறி வரும் ஒரு உலக ஒழுங்கில், இடையறா, மாறுதலுக்கு உள்ளாக கூடிய விடயப்பொருட்களாய் இருந்து வந்துள்ளது என்பதில் அபிப்ராய பேதம் இருக்க முடியாது.

இச்சூழலில் தான், அமெரிக்காவின் தற்போதைய அணுகுமுறையானது கேள்விகுறியானதாகின்றது என்பது கிசிஞ்ஞரின் கருத்து நிலையாகின்றது.

ரஷ்யாவை கட்டுப்படுத்த ஒரு உக்ரைன்!
சீனாவை கட்டுப்படுத்த ஒரு தாய்வான்!!
இந்த சமன்பாடு நடைமுறை ரீதியானது எனவும் கொள்ளப்படுகின்றது.

இனி, இவ்விரண்டு நாடுகளும், இவ்விதம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் உலகு தொடர்ந்தும், ஓர் “ஒற்றைத்துருவ” (UNIPOLAR) ஒழுங்கு முறைக்குள் இருக்காது- கூடவே அவ்வொழுங்கு முறைக்கு, தான், இனியும் தலைமை தாங்கும் ஒரு நாடாக இருக்கவும் போவதில்லை என்பதே தற்போதைய அமெரிக்காவின் அடி மனது வேதனையாகின்றது.

இதனையே, ரஷ்ய அதிபர், புட்டின் பின்வரும் வார்த்தைகளில் கூறியிருந்தார்: “அண்மைகால பெலோசியின் சீன விஜயம் - ஓர் விதிவிலக்கான, எழுந்தமான, பொறுப்பற்ற ஓர் ஆசாமியின் அல்லது தனிநபரின் விசித்திரமான நடவடிக்கையாக கொள்வதற்கில்லை. இது மிக மிக கவனமாக திட்டமிடப்பட்டு சீராக யோசிக்கப்பட்டதின் எதிரொலியாகவே தோன்றுகின்றது” என. புட்டினின் இவ்வெளிப்படையான குறிப்பை சீனம் மிக கடுமையாக வரவேற்றிருந்தது என்பதும் அவதானிக்கத்தக்க ஒன்றே.

இருந்தும், இப்புள்ளியிலேயே கிசிஞ்ஞரின் பயங்களும் குடியேறுகின்றன. அதாவது, இந்த நடைமுறை அல்லது அணுகுமுறை அல்லது தந்திரோபாய நகர்வுகள் அல்லது அரசியல் சாணக்கியங்கள், மாறிவரும் ஓர் உலக ஒழுங்கில் சாத்தியமான ஒன்றாகுமா அல்லது நின்று பிடிக்க தக்கதாகுமா என்பதே அவரது கேள்வியின் சாரமாகின்றது.

பெலோஸ்கியின் விஜயத்தை அடுத்து, சீனா, தாய்வானின் கடற்பரப்பை சூழ்ந்து, ஆக்கிரமித்து கொண்டாற் போல், அந்நாட்டை சுற்றிய, ஆறு பிரதேசங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அங்கே தன் போர் ஒத்திகையை அரங்கேற்றப்போகின்றோம் என கூறிக்கொண்டு, அங்கே, அனைத்து நாடுகளின், கடல்-வான் போக்குவரத்தை முற்றாக தடை செய்தது (6.8.2022). இப்பிரதேசங்களில், சில 20கிலோமீற்றர் தூரத்தையே தாய்வானிலிருந்து கொண்டிருந்தது என்பதும், தாய்வானில் அமெரிக்கா தந்திருக்கும் ஏவுகனைகள், ராடர்கள், நவீன விமானங்கள் என்று இருந்;த போதிலும், சீனா, தாய்வானின் கடற்பரப்பிலும,; வான் பரப்பிலும் மிக சுதந்திரமாக ஊடுறுவி அட்டகாசம் புரிவதாய் இருந்தது. (Crossing the median line) இது போக, சைபர் தாக்குதல்களும், தாய்வானுக்கு குறுக்காக அதன் வான் பரப்பில் அதன் ஏவுகணைகளை செலுத்தியும், சீனா தனது பலத்தை காட்சிப்படுத்தியது.  “சும்மா கிடந்த வாய்க்கு மெல்ல அவல் கிடைத்த கதைதான் இது” என பெலோஸ்கியின் விஜயத்தை அரசியல் விமர்சகர்கள் (ட்ரமப் உட்பட) விமர்சனம் செய்தாலும், பைடனின் இவ்வணுகுமுறையானது இப்பார்வைக்கு எதிரான ஒன்றாகவே தொடர்ந்தும் இருந்தது.

இத்தகைய ஒரு பின்னணியிலேயே, சீன கப்பல், யுவான் வாங் - 5 இலங்கை விஜயமும் அமைந்திருந்தது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.