I

அண்மையில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை:  தமிழரசு கட்சியின் தேர்தல், லோகன் பரமசாமியின் வீரகேசரி கட்டுரை &    கலாநிதி அமீர்அலியின் 'விடிவெள்ளி'யில் வெளியான கட்டுரை.

இவை மூன்றும், இவ்வருடத்தின் ஜனவரி மூன்றாம்-நான்காம் கிழமைகளில் நடந்தேறி உள்ளன. இம்மூன்றின் முக்கியத்துவமும் தமிழ் அரசியலின் செல்திசை நோக்கி இவை கூடியிருக்க கூடிய அதேவேளை, அதற்குரிய விமர்சனங்களையும் இவை உள்ளடக்கச் செய்தன. தமிழ் தேசியம் என்பது ஒரு  30-40 வருடகாலமாய் தொடர்ந்து வரும் ஒன்றாகவே இந்நாட்டில் காணப்படுகின்றது. (பெருந்தேசியவாதத்தை போலவே).

தனிநாடு என்பதும் சமஷ்டி என்பதும் சுயநிர்ணயம் என்பதும் காலத்துக்கு காலம் தமது புது வடிவை ஏந்தியிருந்தாலும், பெரும்பாலும் இவை பெருந்தேசியவாதத்திற்கு எதிரான ஓர் எதிர்ப்பலையே. இதனாலோ என்னவோ இக்கோட்பாடுகளும் நகர்வுகளும் தமிழ் மக்கள் வாழ்வில் பாரிய தாக்கங்களை அல்லது வடுக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வை அவ்வவ் காலக்கட்டங்களில் நிர்ணயிப்பதாக இருந்துள்ளன. இச்சூழ்நிலையிலேயே அண்மைக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் என்ற விடயமும் இது பொறுத்து தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் உருவாகி உள்ளது. இப்பின்னணியில் தமிழ் தேசியம் என்பது பகிஸ்கரிப்பு என்ற வேலைத்திட்டத்திலிருந்து முன்னேறி, பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

13வது திருத்த சட்டத்தை ஒரு துவக்க புள்ளியாகவும் கொள்ளாது என்ற அடிப்படையில் தன் அரசியலை முன்வைக்கும் கஜேந்திர பொன்னம்பலத்தின் அணி, தமது தீவிர அரசியலுக்கு ஏற்ற வகையில் பகிஸ்கரிப்பு என்ற மருந்துச்சீட்டை தமது வேலைத்திட்டமாக முன்வைத்துள்ளது. மறுபுறத்தில், விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தம்மை பொது வேட்பாளராக நிற்கும்படி அனைவரும் வேண்டினால் தாம் நிற்கத் தயார் என விரும்பியும் விரும்பாதவர் போலவும் கூறி வைத்துள்ளார். ஆனால் இதனையும் எவரும் சீந்துவதாக தெரியவில்லை. ஆனால், மொத்தத்தில், இப்பகிஸ்கரிப்பு என்பதும் பொதுவேட்பாளர் என்ற கோரிக்கையும் தமிழ் மக்களிடமிருந்து சற்றே அந்நியப்பட்டு போகுமோ என்ற கேள்வி இன்று எழத் தொடங்கியுள்ளதும் குறிக்கத்தக்கதே. ஏனெனில் அங்கஜன் போன்றோரும் அரங்கில் உள்ளனர் என்ற பின்னணியை நாம மறந்து விடுவதற்கில்லை.  இந்த இடரான சூழ்நிலையிலேயே ரணிலின் அண்மித்த வடக்கு விஜயமும் அமைந்திருந்தது.

உண்மையைக் கூறினால் ரணிலின் விஜயமானது வேலன் சுவாமிகள் போன்றோரின் மாமூலான எதிர்ப்புக்களையும் இரண்டொரு மகளிர் அணியினரின் தார்மீக கோபாவேசங்களையும் மீறி வழமை தவறாது நடந்தேறியது–பாதுகாப்பு அணியினரின் துணையோடு. இருந்தும் ரணில், யாழ் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் என்பதும், 13வது திருத்தமே வடக்கின் தீர்வு திருத்தத்திற்கு தோதானது என அவர் அறிவித்ததும், இரண்டு, மூன்று நாட்களின் முன்னர் அவர் தோட்டத் தொழிலாளிக்கு 1700 ரூபா நாளாந்த கொடுப்பனவாக கொடுக்கப்பட வேண்டும் என அறிவித்ததை ஒட்டிய அரசியலாகும்.

அதாவது தனது அறிவிப்பைத் தொடர்ந்து வடக்கு மக்கள் 13ஐ நிராகரித்து சமஷ்டியை நோக்கி அணிவகுத்து எதிர்ப்பு குரல் எழுப்பி தமது தேசிய உணர்வை வெளிப்படுத்துவர் என அவர் போட்டிருக்கக் கூடிய திட்டம் தூர்ந்து போயிருக்கலாம். வேறு வார்த்தையில் கூறினால் மலையகத்திலிருந்தும் வடகிழக்கிலிருந்தும் இந்தியாவை தூர் எடுக்க அவர் மேற்கொண்ட இப்படியான முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராயிற்று.

வேலான் சுவாமிகளின் தயவால் தெற்கில் ஒரு ஜாம்பவான் முகத்தைக் காட்ட மேற்கொள்ளப்படும் ரணிலின் முயற்சிகளும் முற்றிலுமாய் தோல்வியடைந்தன எனக் கூறவும் முடியாது. இதுபோலவே வடக்கில் ரணில் சிவில் சமூகத்தினரை சந்திக்கதக்கதாய் இருந்தது என்ற உண்மையையும் ரணிலின் செல்வாக்கானது வடக்கிலும் ஊடுருவ முயற்சித்து அங்கஜன் அரசியலின் தொடர்ச்சியை முன்னெடுக்க முயன்றது என்பதிலும் உண்மை இருக்கவே செய்தது.

இப்படியாக வடக்கிலும் தெற்கிலும் தனது தோற்றப்பாட்டை பதிய முனைந்ததும் மறுபுறத்தில் இந்தியாவை தூரெடுக்க முயற்சித்ததும் ரணிலின் வடக்கு சார்ந்த நகர்வின் பின்னணியில் இருந்த விடயங்களாகின்றன. உண்மையை கூறினால், இந்த நகர்வுகளை மேற்கொள்ள தேவைப்படும் சாணக்கியம் உடையவராக ரணில் இருக்கின்றார் என்பதில் சந்தேகம் கொள்ளலாகாது.

உதாரணமாக மிக அண்மையில் அணிசேரா மகாநாட்டில் (உகண்டாவில்) பாலஸ்தீன தேசமானது ஐந்து வருடங்களில் ஸ்தாபிக்கப்பட்டாக வேண்டும் - அதற்காக இம்மாநாடு ஒத்துழைக்க வேண்டும் என்ற அனாயசமாக ஓர் அதிர்வெடியை வீசி இருந்தார்.

குருந்தூர் அரசியலை உள்நாட்டில் முன்னெடுத்துக் கொண்டு (எந்தவொரு அதிகாரப் பரவலுக்கு இடமில்லாது செய்துக்கொண்டு) பின் பாலஸ்தீனிய தேசம் நிர்மாணிப்பது ஐந்து வருடங்களில் ஆக வேண்டிய ஒன்று என அவர் மாநாட்டை குழப்பியடிப்பது அவருக்கு கைவந்த கலையாகின்றது. போதாததற்கு தென்னாபிரிக்காவின் முயற்சியால் பாலஸ்தீன கொடுமைகளில் (இனவழிப்புகளில்) இஸ்ரேல்-அமெரிக்க பங்கேற்பு குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் கணக்கிலெடுக்கப் பட்டுள்ளதை விமர்சகர்கள் சுட்டிக்காட்ட தவறினார் இல்லை. அன்னாரின் உரையானது தென்னாபிரிக்காவின் பங்களிப்பையும் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறந்தள்ளுவதாக அல்லது மறக்கடிக்க செய்வதாக அமைந்திருந்தது என்பது குறிக்கத்தக்கது. அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விளையாட்டே அன்றி வேறில்லை இது என கூறலாம்.

இத்தகைய நுட்பமான நகர்வுகளின் மத்தியிலேயே பொதுவேட்பாளர் என்ற கோரிக்கை தமிழ் சிவில் சமூகத்தினரிடையை சூடு பிடித்துள்ளதாக காணக்கிட்டுகின்றது. மக்கள் தம் பின்னே அணி திரண்டு வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, தமக்கென வரையப்பட்ட பாதையில் கனவுகளோடு பயணிப்போம் என்ற தீர்மானத்தோடு பயணம் மேற்கொள்ளும் சிவில் சமூகத்தினரின் பயணிப்பு குறிக்கத்தக்கதாகின்றது.

இதனையே மிக நேர்த்தியான முறையில் திரு. யோதிலிங்கம் அவர்கள் தமது அண்மைக்கால கட்டுரை ஒன்றில் குறித்திருந்தார்;: தமிழ் மக்கள், சிங்கள ஆட்சியாளருக்கு எதிராக போராடுவதற்கு முன்னர், தமிழ் தேசியக் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் உள்ளனர். (வீரகேசரி 21.1.2024)

II

பொதுவேட்பாளர் என்ற கோரிக்கையானது தமிழ் மக்களின் ஒன்றிணைவை அல்லது ஒன்;றுபட்ட சக்தியை அல்லது திரட்டலை குறிப்பதாக உள்ளது என ஆரம்ப காலகட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தர்க்கம் சற்றே வித்தியாசப்பட்டு காணக்கிட்டுகின்றது. அதாவது தற்போதைய பூகோள அரசியலில் தாமும் ஒருசக்தியாக திகழ்ந்து தமக்கான பேரம் பேசுதலை முன்னெடுப்பதென்றால் இப்பொதுவேட்பாளர் என்ற ஒரு ஒருங்கிணையும் புள்ளி தேவையுறுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் இது தமிழர் ஆணை அல்லது தமிழர் மத்தியிலான வாக்கெடுப்பு என்ற எண்ணப்பாட்டை நோக்கி பரிணமிப்பதாகி விட்டது.

இதன்படி தமிழர் மத்தியில் வாக்கெடுப்பை நிகழ்த்த சர்வதேசமோ அல்லது தென் இலங்கையோ ஒருபோதும் உடன்பட போவதில்லை -எனவே இச்சந்தர்ப்பத்தினை (ஜனாதிபதிதேர்தலை) பாவித்து இதனை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றி,  தமிழர்கள் தமக்கிடையே வாக்களித்து சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும் என்பதே இக்கோட்பாட்டின் தர்க்கமாகின்றது. மறுபுறத்தில் சாணக்கியனின் கூற்று பின்வருமாறு இருக்கின்றது: 'ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளின்றி தனியாக சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டும் ஜனாதிபதி தேர்வு செய்யப்படலாம் எனும் நிலைமை காணப்படும் போது 'மட்டுமே" பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி அதற்கு ஆணை கோரும் சர்வஜன வாக்கெடுப்பாக அதனை பயன்படுத்தலாம்'.

அதாவது, யார் ஜனாதிபதி என்பதனை தீர்மானிப்பதில் தமிழ் மக்களின் வாக்குபலம் நிர்ணயமானது என கருதப்படும் பட்சத்தில் அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தை தமிழர்கள் விடமுடியாது என்பது அவரது நிலைப்பாடாகின்றது. மறுபுறத்தில் பகிஸ்கரிப்புக்கும், பொதுவேட்பாளர் என்ற கருத்தாக்கலுக்கும் இடையில் பெரியதொரு வித்தியாசத்தை காணமுடிவதில்லை என்பதனையும் கூறியாக வேண்டியுள்ளது.

பகிஷ்கரிப்பானது தமக்கிடையிலான ஓர் ஒருங்கிணைப்பையும் தென் இலங்கையை பொறுத்து ஓர் நிராகரிப்பையும் கொண்டுள்ளதை போலவே பொதுவேட்பாளர் நியமிப்பும் ஓரளவில் தென் இலங்கை சார்பாக ஓர் நிராகரிப்பினை தன்னகத்தே கொண்டுள்ளதாகவே படுகின்றது. இந்நிராகரிப்புகள் பொதுவில் ரணிலுக்கு வாய்ப்புதரக் கூடியது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதாவது வடக்கிற்கு யாதொன்றும் தராமலேயே, அவர்களை ஒதுக்கிவைப்பதன் மூலம் (அல்லது ஓதுங்க செய்வதன் மூலம்) அவர்களை மறைமுகமாக வெற்றிகொள்ளும் நிகழ்ச்சி நிரல் ஒன்று இங்கு அரங்கேறப் போகின்றது. அதாவது, ரணிலின் கணிப்பு பிரகாரம் அவரது அரசியல் சதுரங்க பலகையில் தமிழர்கள் ஒருகாயாக இருக்கப் போவதில்லை. எதிர் வாக்குகள் பற்றி அவரிடம் அக்கறையும் இல்லை. இவர்கள், இவர்களிடையே ஒளிந்து விளையாடுவதானால் விளையாடிவிட்டு போகட்டும் என்ற அவரது கருத்து, கிட்டத்தட்ட ஒற்றை கல்லில் இரட்டை மாங்காய்களின் வீழ்த்தல்தான்.

இது போன்ற அடிப்படைகளில்தான் இன்று பலவிதமான திசை திருப்பங்கள் அரசசார்புத் தளங்களில் இருந்தே எத்தனிக்கப்படுகின்றன. (உதாரணமாக, பொதுவேட்பாளர் கூடாது: வாக்குகள் பிரிபடும்: கூறியது: விஜயதாச ராஜபக்‌ஷா: 31.12.2023:தினக்குரல்)  அதாவது ஆடு நனைகின்றது என ஓநாய் அழுததாம்.

III

இப்பின்னணியில், அண்மையில் நடந்து முடிந்த தமிழரசு கட்சியின் தேர்தல் முடிவுகள், வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எத்தகைய செல்வாக்கினை செலுத்தப் போகின்றது என்பது கேள்வியாகின்றது. சிறிதரன்-சுமந்திரன் ஆகிய இருவரினதும் வித்தியாசங்கள், அவர்களின் 13வது திருத்த நிலைப்பாடு தொடர்பிலும், சமஷ்டி தொடர்பிலும் அவர்கள் புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தோடு பேணும் நெருக்கம் தொடர்பிலும் வேறுபடுகின்றது.

இதனடிப்படையில் பார்க்கும் பொழுதும், தமிழரசு கட்சி தேர்தலின் போது, புலம்பெயர் அரசியல் தமது செல்வாக்கினை பிரயோகித்திருக்கக் கூடிய வாய்ப்புகளே அதிகம் என்றாகின்றது. தவிர, எமது அனைத்து பல்கலைக்கழக மட்டங்களிலும் புத்தி ஜீவிகள் - சிவில் சமூக–ஊடக மட்டங்களிலும் புலம்பெயர் அரசியலின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இச்சூழலில் அண்மையில் லோகன் பரமசாமியால் எழுதப்பட்ட கட்டுரை விவாதத்துக்குரியதாக இருக்கின்றது எனக் கூறத் துணியலாம். (டயஸ்போரா நல்லதா? தீயதா? வீரகேசரி: 14.1.2023)

லோகன் பரமசாமியின் இக்கட்டுரையானது, இரண்டு விடயங்களை முனைப்பாக தொடுவதாக அமைந்தள்ளது. ஒன்று, இப்புலம்பெயர் மக்களை, பலம் பொருந்திய சர்வதேசநாடுகள் எவ்விதமாக பயன்படுத்துகின்றன அல்லது ஆட்டுவிக்கின்றன என்பது தொடர்பிலும் இதனடிப்படையில் இம்மக்களுக்கு  ஒரு சுயாதீன பார்வை உண்டா எனவும் கட்டுரையாளர் குறிக்கத்தக்க அழுத்தத்துடன் கேள்விகளை எழுப்பியுள்ளார் எனலாம்.

புலம்பெயர் அரசியல் தொடர்பான விமர்சன பார்வைகள் அண்மைக்காலத்தில் தொடர்ந்து வந்திருப்பதினை நாம் காணக்கூடியதாக உள்ளது என்பது உண்மையே. ஆனால், இவ்வகையான விமர்சனங்கள் அனைத்தும் பொதுவில் புலம்பெயர் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகளை முன்வைத்ததேயன்றி அவர்களில் உள்ளடங்கும் ஆழ் அரசியலை தனது பார்வைக்கு எடுத்ததாக இல்லை.

உதாரணமாக மிக அண்மையில், ஓர் இசை நிகழ்ச்சி தொடர்பில் நிலாந்தன் பின்வருமாறு எழுதியிருந்தார்: சிட் சிறிராம் இசை நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட தொகை மிகப் பெரியது. 200,000 கனடிய டாலர்கள். அதில் ஒருதுளி போதும்…மாவீரர்கள் குடும்பங்களையும் போராளிகளையும் பராமரிக்க… (தமிழ்வின்:28.11.2023).  இவ் உதாரணமானது பெருவாரியான இம்மக்களின் வாழ்க்கை தொடர்பிலான அணுகுமுறையை தொட்டுக்காட்டுவதாக இருக்கலாம். ஆனால் இப்பார்வையை தாண்டிய  ஒரு பார்வையை லோகன் பரமசாமி முன் வைத்திருந்தார்:

'வல்லமை கொண்ட நாடுகள் புலம்பெயர் சமுதாயங்களை தமக்கு சாதகமான வகையில் உபயோகப்படுத்த முனையும் அதேவேளை…தாம் அடைக்கலம் கொடுத்தவர்களை கருவியாக பயன்படுத்தி தமது மூலோபாய தேசியநலன்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிநிரலை உருவாக்கிக் கொள்வதில் (இவை) நாட்டம் கொண்டுள்ளன.'

சுருக்கமாகக் கூறினால், புலம்பெயர் அரசியலின் தாக்கம் எந்தெந்த நலன்களை முன்னெடுப்பதில் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது எமது கரிசனைக்குரியதாகின்றது.  இந்நோக்கில் பார்க்கும் போது கனடா வாழ் கனேடிய தமிழர் ஒருவர் (இந்திரகுமார் பத்மநாதன்) யாழ் ஜனாதிபதி மாளிகைக்காக ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டதும் (23.10.2023) அதுபொறுத்த இறுதி முடிவுகளை எடுக்கவேண்டியது சம்பந்தப்பட்ட நாடுகளின் பூகோள அரசியல் நலன்களாகவே இருக்கப் போகின்றது என்பதனையும் குறிப்பிட்டாகவேண்டி உள்ளது.  இதன்படி பார்க்குமிடத்து ஜனாதிபதி தேர்தலில் புலம்பெயர் அரசியலின் தாக்கம் எவ்வாறு இருக்கப் போகின்றது அல்லது எந்த அளவில் இருக்க போகின்றது என்பது கேள்வியாகின்றது.

IV

ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் கட்சி அனைத்தும் ஒன்றிணைந்து ஒருபொது வேட்பாளரை நிறுத்தக்கூடும் அல்லது அங்கஜன் போன்றோர் முன்னெடுத்த ஓர் அரசியலின் பின்னணியில் மக்கள் தமிழ் தேசிய கட்சிகளை நிராகரிக்க கூடும், அவ்வடிப்படையில் பார்க்குமிடத்து முன்பே நாம் குறித்த திரு. யோதிலிங்கத்தின் கட்டுரை கூறுவதைப் போன்று, தமிழ் கட்சிகள் என்பன மக்களுக்கு எதிரான போராட்டங்களை கட்டவிழ்த்து விடப் போகின்றனவா என்பதெல்லாம் தற்சமயம் வினாக்கள் வடிவிலேயே இருக்கின்றன.  இத்தகைய ஓர் சூழ்நிலையில்தான் பலம் பொருந்திய நாடுகளின் எண்ணப்பாடுகளும் வெளிக்கிளம்புவதாக உள்ளன.

நிகழ்நிலை காப்புச்சட்டம் நீதிமன்ற சிபாரிசுகளையும் மீறி நிறைவேறப்பட்டது போலவே பல விடயங்கள் இங்கும் நடந்தேறுவதாய் உள்ளது. (மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போது ஐம்பத்து நான்கு பேர் வாக்களிப்பில் கலந்துக் கொள்ளவில்லை என்றும் அரசின் சட்ட அமைச்சரான அலிசப்ரியே கலந்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது. மேலும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றும் கூறப்படுகின்றது.)

மொத்தத்தில் விடயங்கள் பாகிஸ்தானைப் போல் இங்கேயும் ஆட்டுவிக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழ தொடங்கியுள்ளன.  ஏனெனில், 83பில்லியன் டாலர்களை கடனாகக் கொண்ட இலங்கைத் திருநாட்டின் 50 வீதத்திற்கு அதிகமான கடன், வெளிநாட்டு பணக்கும்பல்களின் திறைசேரி கடன்களை சுமந்ததாய் உள்ளது. பாகிஸ்தானைப் போலவே, இங்கும் சர்வதேச நிதிநிறுவனமே நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் கட்டமைக்கும் நிறுவனமாகின்றது.  இப்பின்னணியில் நின்று பார்க்கும் போது, மேற்படி சட்டமூலங்கள் இயற்றப்படுவது ஓர் நிர்ப்பந்தமாகின்றது.

இச்சட்டமூலமானது ஒருசிலரால் மக்களின் சுதந்திரத்திற்கு அடிக்கப்படும் சவப்பெட்டியின் இறுதி ஆணி என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இருந்தும் இச்சட்டமூலத்தின் நிறைவேற்றம் ஜனாதிபதியின் தேர்தல் தொடர்பானது என்பதில் ஐயமில்லை. ஒன்று அதனை நடத்த அல்லது நடத்தாமல் விட அல்லது தகுந்த குளறுபடிகளோடு நடத்திக் காட்ட - இவை மூன்றுக்கும் மேற்படி சட்டமூலம்தான் வரும் நாட்களில் கை கொடுக்கப் போகின்றது என்பது விமர்சகர்களின் கணிப்பாகும்.

பாகிஸ்தானில், வரும் எட்டாம் திகதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நடக்கப்போகும் தேர்தலில், சிறைவைக்கப்பட்டிருக்கும் இம்ரான்கானோ அல்லது அவரது கட்சியோ போட்டியிட முடியாது என்று கூறப்படுகின்றது. மேலும் நாட்டைவிட்டு துரத்தி அடிக்கப்பட்ட நவாஸ் ஷரீஃப் தற்சமயம் பாகிஸ்தானுக்கு வரவழைக்கப்பட்டு தேர்தலில் இறக்கிவிடப்பட்டுள்ளார். இது கிட்டத்தட்ட எமது நாட்டில் புதிய கூட்டணி என்ற பெயரில் சந்திரிக்கா அம்மையாரை அல்லது அத்தகைய வேறு நபரை களமிறக்க திட்டம் தீட்டியது போன்றதாகும். அதாவது பாகிஸ்தானில் இம்ரான் அலையை திசைத்திருப்புவது போல துஏP யின் அலையை திசைத்திருப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளது எனலாம்.

அண்மையில் வெளிவந்த செய்தி ஒன்றின் பிரகாரம், எமது அமெரிக்க தூதுவர் ஜேவிபியின் வளர்ச்சியை காரணம் காட்டி ரணிலை பாதுகாக்க வேண்டும் எனக் கூறி இருந்ததாய் செய்திகள் வெளிவந்தன (Colombo Telegraph: 13.01.2024).

மேற்படி செய்தியை சஜித் பிரேமதாசவும் பீரிசும் மறுத்ததாக செய்திகள் வந்திருந்தாலும் அமெரிக்க தூதுவராலயம் மேற்படி செய்தியை மறுக்கவோ ஏற்கவோ இல்லை. (இதுவும் திட்டமிட்ட ஒரு நகர்வாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை). அதாவது, மேற்படி செய்தியின் உண்மைத் தன்மை யாது என்பது அறிய முடியாவிட்டாலும் இச்செய்தியின் உள்ளே புதைந்திருக்கும் தர்க்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. இத்தர்க்கத்தை அடியொட்டியே மேற்குறிப்பிட்ட சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் சிபாரிசுகளை மீறி நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. சுருக்கமாகக் கூறினால் இலங்கையின் கடன் சுமை ஒருபுறம். அரசியல் அதிகாரம் மறுபுறம்.

V

இவற்றையெல்லாம் தொகுத்து கூட்டிபார்க்குமிடத்து கிட்டத்தட்ட 60 வீதம் வளர்ச்சி கண்டுள்ளது என கூறப்படும் ஜேவிபியின் அரசியலானது, நசுக்கப்படல் வேண்டும் என்பது தேவையானதாகி விடுகின்றது. ஆனால் இதனை தனியாக செய்வதைவிட கூட்டாக செய்வதுதான் புத்திசாதுரியமிக்க செயலாக இருக்க கூடியது. இப்புள்ளியிலேயே எமது தமிழ் தேசிய அரசியலின் நிலைப்பாடுகளும், புலம்பெயர் அரசியலின் தீவிரமுகமும் வந்து சேர்ந்து விடுகின்றது.

உதாரணமாக, புலம்பெயர் அரசியலின் தீவிரமுகத்தை பிரதிபலிக்கும் திரு. யோதிலிங்கம் கூறுவார்: பெருந்தேசிய வாதமானது மேற்குலக எதிர்ப்பு-இந்திய எதிர்ப்பு–தமிழீழ எதிர்ப்பு ஆகிய மூன்று தூண்களில்தான் கட்டப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் இந்த மூன்று தூண்களையும் பேணக்கூடியதரப்பு ஜேவிபிதான். (வீரகேசரி: 21.1.2024)

இத்தர்க்கத்தின் வாயிலாக திரு.யோதிலிங்கம் அவர்கள் சிபாரிசு செய்வது பொது வேட்பாளரேயே. இச்செயற்பாடு ரணிலைக் காப்பாற்றுவதும் ஜேவிபியை ஒடுக்குவதுமாக இருப்பது தவிர்க்க  முடியாததாகின்றது. இச் சூழ்நிலையிலேயே பகிஸ்கரிப்புகள் அல்லது பொதுவேட்பாளர் என்ற தெரிவு தனது புதிய பரிணாமத்தை பெறுகின்றது.

லோகன் பரமசாமியின் கட்டுரையானது அழுத்தம் திருத்தமாய் பின்வரும் பகுதியை முன் வைப்பதாய் இருக்கின்றது: மேலைத்தேய வல்லரசுகளின் நலன்களுக்கு ஒத்திசைவாக இருப்பதால் மட்டுமே, இத்தகைய புலம்பெயர் சமுதாயத்தினர் முன்னிலைப்படுத்தப் படுகின்றனரே தவிர அந்த சமுதாயத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அரச அராஜக நிகழ்வுகளுக்காக அல்ல லோகன் பரமசாமி, தனது கட்டுரையை இவ்வாறு முடிக்கின்றார்: பொதுவாக இவர்களது பயன்பாடு முடிநததும் (இவர்கள்) கைவிடப்படுவது உறுதி.  இதுவும் கூட உண்மையாக இருக்கலாம். உதாரணமாக, மேற்குநாடுகளில் இன்று எறத்தாழ அழிந்து போனநிலையில் உள்ள இனமாக சிவப்பிந்தியர்கள் இருக்கின்றனர் என்ற உண்மை குறிப்பிடத்தக்கது.

இவர்கள், அமெரிக்கா–கனடா போன்ற தேசங்களிலிருந்து, வருடத்திற்கு ஒருமுறை ஒன்று கூடுவது உண்டு. இந்நிகழ்விற்கு பாவோ (Pow Wow) என்று பெயர். இந்நிகழ்வின் போது. தமது கடந்தகால வீரசாகச வாழ்வையும் தமது புல்லாங்குழலையும் கட்டுக்கடங்காத தமது குதிரைகளையும் இவர்கள் நினைவூட்டிக் கொள்வது வழமை.

1492களில் இவர்கள் அமெரிக்க கண்டத்தினை ஆண்ட பரம்பரையினர் ஆவார். ஆனால் 2000ம் வருடத்தை எட்டியபோது இவர்கள் அழிந்த ஓர் பூர்வீககுடிகளானார். கிட்டத்தட்ட 4300,000 சிவப்பிந்தியர்கள் அமெரிக்காவில் கொல்லப்பட்டனர் என்று ஒரு பதிவு கூறுகின்றது. இவர்களுக்கு எதிரான வன்முறை 1970 வரைக்கும் கடுமையாக திட்;டமிட்ட வகையில் அமுல்படுத்தப்பட்டதுக்கான சான்றுகளும் உண்டு. .இன்று மேற்கத்தேய அருங்காட்சியகத்தில் நுழையும் ஒருவர், அங்கே வெள்ளையரும் சிவப்பிந்தியரும் கடுமையாக போர்புரியும் பிரமாண்டமான சித்திரங்களை காணநேரிடும். இருதரப்பினரும் தியாகத்துடனும் வீரத்துடனும் போர்புரிவதாக சித்திரம் தீட்டப்பட்டிருக்கும். இது இருபாலாரையும் திருப்திப்படுத்தும். ஆனால் இருபாலாரும் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வரும் போது, புதிய வன்மத்துடன் வெளிவருவர். தமது பரம்பரைகளுக்கு இழைக்கப்பட்ட துன்பங்கள் தியாகங்கள் வீரங்கள் குறித்த எண்ணப்பாடுகளுடன் இவர்கள் வெளிவருவர். இப்படித்தான் துரோகங்களும் குரோதங்களும் தீன் போட்டு மறு வளர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.

இத்தகைய ஓர் பின்னணியில் தான் சர்வஜன வாக்கெடுப்பு அல்லது பொதுவேட்பாளர் போன்ற கோசங்கள் எம்வீட்டுக் கதவை தட்டுவதாய் உள்ளன. இவற்றில் உள்ளடங்கும் நடைமுறை அரசியலின் யதார்த்தத்தை அல்லது பூகோள அரசியலின் தன்மைகளை சரியாக உணராமல் கனவுநிலை கொண்டு மாற மறுப்பவர்கள், இவற்றுக்கான மொத்த விலையை மக்களுக்கூடாக வழங்கப்போவது உண்மை.

புலம்பெயர் அரசியலைப் பொறுத்தமட்டில், கனவுநிலையில் வாழ்வதும், அக்கனவுகளில் புனிதங்களைக் காண்பதும்,  ஒரு   யதார்த்தம் என்பதை விட, லோகன் பரமசாமி கூறுவதுபோல தேவையான ஒன்றாகக் கூட இருக்கலாம். ஆனால் சரியான அரசியல் என்பது கனவுநிலைக்கடந்து யதார்த்தத்தோடு சரிவரக் கலப்பது என்பதாகும். இப்புள்ளியில், பொதுவேட்பாளர் அல்லது பகிஷ்கரிப்பு போன்ற கோரிக்கைகள் ஆயத்தக்கதே.

VI

அண்மையில் கலாநிதி அமீர்அலி அவர்கள் விடிவெள்ளியில் எழுதிய தனது கட்டுரையில் தமிழ் தேசியமோ அல்லது இஸ்லாமிய தேசியமோ இலங்கையில் முஸ்லிம்களையும் தமிழர்களையும் காப்பாற்றப் போவதில்லை என கூற துணிகின்றார்.

அவரது கூற்று வருமாறு: "இறுதியாக ஒன்று. தமிழரின் பிரச்சினைகளுக்கு இந்தியாவும் சர்வதேசமும் உதவப்போவதில்லை எனும் அந்த பாடத்தை 2009இலேயே உணர்த்தியிருக்க வேண்டும். அதேபோன்று முஸ்லிம்களும் 'இஸ்லாமிய உம்மா' தங்களுக்கு உதவும் என்ற கனவைக் கலைக்க வேண்டும். அதனை இப்போது காசாவில் நடைபெறும் இன சுத்திகரிப்பு தெளிவுப்படுத்துகின்றது".

'எதிர்வரும் தேர்தலை ஒருஜீவ மரண போராட்டமாக கருதி தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்குவது நல்லது. இது இலங்கை அரசியலின் யதார்த்தத்தை விளங்கியதனால் விடுக்கப்படும் ஒரு தூரத்து நோக்குனனின் பக்கசார்ப்பற்ற வேண்டுகோளாகும்'. (விடிவெள்ளி:25.01.2024)  இக் கூற்றானது திரு யோதிலிங்கம் அவர்களின் கூற்றோடு ஒப்பு நோக்கத்தக்கது. இப்புள்ளியிலேயே சுமந்திரன்-ஸ்ரீதரன் பார்வைகளும், அவர்களுக்கிடையான போட்டியும், புலம்பெயர் அரசியலின் நெருக்கமும் இணையக் கூடும் என்றாகின்றது.  எது எப்படினும் தமிழர்கள் மீண்டும் ஒரு வரலாற்று சந்தியை சந்தித்துள்ளனரா என்பது கேள்வியாகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.