1

போகும்போது, லைட்டையும் அணைத்துவிட்டு, காதுவரை போர்த்தி படுத்திருந்தார். போர்த்தியவாறே என்னை ஏறிட்டு பார்த்துவிட்டு… காய்ச்சல்… குளிர்காய்ச்சல்… என்று நடுநடுங்கிய குரலில் முனங்கினார். பதறி…  என்ன இது என்று நினைத்து தலைக்கடியில் மடித்து வைத்திருந்த, போர்வையினூடு வெளியே நீட்டியப்படி, இருந்த முழங்கையின் பின்புறத்தை தொட்டு, சுடுகின்றதா என்று பார்த்தேன். அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருக்க வேண்டும்… சில் என்று இருந்தது.

"பல்ல புடுங்கினன்… ஒன்று கிடந்து ஆடிக்கொண்டிருந்தது… ஒன்றும் சாப்பிட முடியாமல்… புடுங்கி போட்டன்… காய்ச்சலப்பா"…

நாற்காலியை இழுத்து அமரும் போது குமரனும் வந்து சேர்ந்தான்… எழுந்து உட்கார்ந்து கொண்டார்… சற்று நேரத்தில் காய்ச்சலின் அறிகுறியே இல்லை… பாரதி – புதுமைபித்தன் குறித்து அளவிலாவினோம்… "அவர்கள் இருவரும் தான்… இரு அசுர பிரமாக்கள்… பிரமாண்டங்கள்… இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியத்தில்… புதுமைபித்தன்… ஓ… தமிழின் நெகிழ்வுதன்மையை… இலாஸ்ட்டி  சிட்டியை அவன்தானே முதன்முதலாய் கொணர்ந்து சேர்த்தவன்… நல்லஅறிவு… ஆனால் ஏழையாய் தானே செத்தான்…”

“ராஜசம் பயில்…”

"செக் பண்ணிருவோமே… அந்த அகராதியை எடு… அஞ்சு என்று நினைக்கிறேன்…"

‘ரா..’ ராவில பாரப்பா…"

குமரன் தேடினான்… "இல்ல சார் அஞ்சுல இல்ல சேர் " என்று இன்னும் ஒன்றை எடுத்தான்…

"இல்லப்பா கடைசியில கிடக்கும்… லா… லு… வருதா… அதுக்கு முதல்ல கிடக்கனும்…"

"இல்ல சார்… அதுல இல்ல."

குமரன் வேறு தொகுதிகளை இழுத்தான்.
                    
நான் ஐந்தை எடுத்து புரட்டினேன்… அவர் கூறியதுப்போல் அதற்குள்  கிடந்தது  “ராவும்” ராஜசமும்… அதான்… அதான்… என்ன எண்டு போட்டுருக்காங்கள்… ஓ… அதான்… இரண்டு குணங்கள் காண்பதா கூறுவினம்… ராஜசம்… தாமசம்… தாமசம்  என்றால் ஓரு மந்தமான… சுறுசுறுப்பற்ற  Attitude..… ராஜசம்… என்றால்…"

2

“ஏழாது.. உது ஏழாத விஷயம்… அவங்கள் மண்டபத்தையும் புக் பண்ணி…”

“தம்பி - திருவுக்கு போடப்பா… சைபர், ஏழு, ஏழு… திரு, மகள் வரணும் என்டு அடம்பிடிக்கிறாள்… ஓ… மெத்த பெரிய நன்றியப்பா நன்றி”

அம்மா.. போடு ஒரு கோல் ….

அம்மா… இம்… ஏத்துக்கொண்டாங்கள்.. மனசுக்கு கஷ்டம்.. இம்… சரி… அப்ப வரலாம் தானே… இம் .. ஆசைப்படுதுகள்… இப்படி… இப்படி வந்து உட்காருங்களே… சோதியா.. ஓ… சோதி… யுனோ.. தே வோன்ட் டு கம.....

நழுவும் சாரத்தை இரண்டு பருத்த விரல்களால் பிடித்து தொந்திக்கு மேலாய் பேருக்கு கட்டிக்கொண்டார்…  இது சாரத்துக்கும் தெரியும்… எந்த அளவுக்கு வழுக்கி விடலாம் என்று. நான் சொல்கிறேன்…
ஓ பிராமணியத் தாக்கம்தான்... இவன் பிள்ளையல்லவோ… அவன் ஏன் திட்றான்… தினமணியா அது... அதுலயே பெயர் போடாமல் எத்தனையோ கதைகளை எழுதினான்… ஏனா.. கடைசி நேரத்துல… பத்திரிகை வெற்றிடத்தை நிரப்பனுமே… தமிழ்நாட்ல சாதி,.. ஓ… அது எப்படி எப்படி வளைஞ்சு, ஊடுருவி கிடக்குது.. கம்யூனிஸ்ட் பார்ட்டிய எடுப்போமே.. சிபிஎம்.. பிராமின்ஸ்தான.; சி.பி.ஐ வேறமாதிரி.. விஜய பாஸ்கரன், பாண்டியன் எல்லோருமே… யாழ்பாணத்துல… ஒரு கணம் கண்னை மூடி யோசித்தார்.

"இல்ல அப்படி சொல்ல ஏலாது சோதி… ... அது  கோவியர். .. அது... நளம்………… அதுவும் நளம்.. "

ஓவ்வொரு ஆளாய் பிடித்து இழுத்து மனக்கண் முன் நிறுத்தி தள்ளிவிட்டார். பின் கண்களை திறந்து,

 "இல்ல சோதி அப்படி சொல்ல முடியாது. என்மேல இருக்கிற பெரிய குற்றச்சாட்டு ஒன்னே ஒன்டுதான் சோதி… இவர் மார்க்ஸிஸ்ட்… ஆனா சமயத்த ஏத்துக்குவார்… அதுசரி சோதி… என்ட பின்ணனி அப்படி... அப்பா பண்டிதர்… நல்ல பண்டிதர்… அம்மா… ஒரு சரியான - மிக சரியான வார்த்தைய பாவிக்கனும் என்டா… கல்வியறிவில்லாத பெண்... மூன்றாம் வகுப்பு வரைக்கும் போயிருக்கா... வாத்தியார் அடிச்சுப்போட்டார்… எங்க - பொண்ண இவங்க அடிக்குறதா எண்டு நிப்பாட்டி போட்டுனம் .... அப்பா.. நல்ல சோதிடமும் பார்ப்பார்.  அப்ப, இப்படித்தான் நான் வளர்ந்தேன்... அம்மா... சரியாய் சொன்னாள்… பொல்லாதவள்… "

வாய்விட்டு சிரித்துவிட்டு கூறுகின்றார் - கரங்களால், இரு பக்கத்தின்; கட்டிலைப்பற்றியவாரே, தலையை சற்று முன்னுக்குத் தள்ளி மெல்ல தனக்குள் ஆமோதிப்பதுபோல் மேலும் கீழுமாய் ஆட்டியவாரே, சிரித்து, அந்த பருத்த மேனி…

"இம்... ஓம் ஓம்... அம்மா பொல்லாதவள் தான்… அவளால... ஓ... சிரித்துகொண்டே... எல்லோரும் வந்திருக்கையிலே என்னைப்பற்றி படுமோசமா சொல்லிடுவா… "

தனது பருத்த வலதுகரத்தை நீட்டி விரலால் சுட்டி…

"இவனா… இவன்.. வீட்டுல திருடி படம்பாக்க ஓடுபவன்... மானத்த வாங்கிடுவாள்… படிக்காதவள்… படிக்காதவள்தான.; ஆனா… அங்கேயும் எப்படிப்பட்ட கலாச்சாரம்... எப்படிப்பட்ட தமிழர்கள்… ஒரு சொல்.. ஒரு சொல்… அத ஒரு நாளும் மறக்கமுடியாது… நான், என்ட சிஸ்டர்ஸ் எல்லாரும் ஏதோ படிச்சு அதபத்தி பேசிக்கொண்டிருந்தோம்... அப்ப இடையில இவ ஏதோ கதைச்சா... நாங்க சொல்லிப்போட்டம்… அம்மா உனக்கு இதெல்லாம் புரியாது…  அப்ப ஒரு வார்த்த சொன்னா… ஒரே ஒரு வார்த்த...  அடேய்... நான் படிக்காதவளா இருக்கலாம்… ஆனா ஒரு  பண்டிதருக்கு பெண்ணிருந்தவள்…|

‘சோதி.. இந்த பெண்ணிருந்தவள் என்ற ஒரு சொல்லில்... அப்பா… "

மீண்டும் தன் பருத்த வலக்கரத்தை இடது கர விரல்களால் தொட்டும் தொடாமலும், கீழிருந்து மேலாக, தோள் வரை ஒரு இழுப்பு இழுத்து விட்டு தலையை ஆட்டி வாயை மூடி பிதுக்கி பின் தலையை இருப்புறமும் ஆட்டி,

"புல்லரித்துப்போட்டுதடா.. புல்லரித்து போட்டுது.. எப்படிப்பட்ட சொல் - அந்தளவு கண்ணியமான சொல்.. அந்தளவு சாரம் பொதிந்த சொல்... அதுல அவ்வளவும் அடங்கிப்போட்டதே… அப்படி நிறைய சொற்கள்… ஒரு பெண்ணைப் பார்த்து சொல்லுவா... அவள் ஒருத்தனுக்குதான் முந்தி விரித்தவள்… அப்ப... இது வெல்லாம் ஒரு வாழ்க்கை நடப்பாக இருந்திருக்கு…  கரவெட்டியில… இருந்தார்... அவர்தான் அங்க பெரிய ஆள்... சொன்னால் ஒருத்தரும் ஒன்னும் செய்ய முடியாது… சூரன் போர.;.. அவர் சொல்லிப்போட்டார.;.. இவன்தான் சட்டிய தூக்கனும் என்டு… அப்பாவுக்கும் ஒன்டும் சொல்ல முடியாது… பின்ன நான் தூக்கி ஓடி… தடுக்கி விழுந்து... இந்தா… இந்த கை… "

ஒரு பழைய தழும்பை காட்டினார்… " நெருப்பு சுட்டது - இப்படித்தான் என் வாழ்க்கை...  ஓ… எல்லோரும் பெண்கள்... நான் மட்டுமே... ஆம்பளை… அப்ப தெரியாதா… செல்லம்… அந்த அக்கா… இன்டைக்கு வரைக்கும் தோசைய அங்க இருந்து சுட்டு எடுத்துகொண்டாருவா…"

அறையின் திரைச்சீலையை ஊடுறுவி இரகசியமாக பார்த்து விட்டு இரகசிய குரலில் அடக்கி கூறுவார்! கண்ணை அறையின் அந்தபுறமாக அசைத்து காட்டிவிட்டு… இவளுக்குப் பிடிக்காது… மேலும் இரகசிய குரலில் பெரிதும் அடக்கிக் கூறினார்…

"அத புரிஞ்சுக்கொள்ள முடியாது… இன்டைக்கு அந்த குளத்துல யார்யாரோ குளிக்கினம் என்டு கேள்வி – பிழைதான் சோதி – ஆனா மனம் வேதனைபடுது… கஷ்டப்படுது"

பெரிய ஓர் பெருமூச்சுவிட்டார்.

"நானொரு புத்திசாலியும் இல்ல… எல்லாம் அந்த சந்திநாதன் தந்ததப்பா… இப்ப உங்களிட்ட கதைக்கும் போதும், ஒரு வெட்டு… யார் தந்தது… எல்லாம் அவன்… ஒரு உண்மை சொல்ல வேண்டும்… நான் சின்ன புள்ளையா இருக்கையில ஒன்டும் பிரிலியன்ட் இல்லை… எட்டாம் வகுப்பு… ஜேஎஸ்சி… என்னை கண்டியில எந்தனிஸ் கொலேஜ்ல சேர்த்தாங்கள்… டேஸ்கொலர்… அக்குரணையில் இருந்தேன்… மெல்ல முணுமுணுத்தார்: எனக்கு பிடிக்கல… ஜேஎஸ்சி ஃபெயில்…

பின்ன மீண்டும் விக்னேஷ்வரா… ஊர்… இவனோ சீரோ… சின்னதுல ஏஎல்… சஹிராவில… டை பொயிட் வேற… நான் சொல்லி போட்டன், இல்ல டெஸ்ட் எடுப்பேன் என்டு… ஏஎல் பெயில்… அடுத்த முறையும் முடியல.  சரி கிளார்க் உத்தியோகத்துக்கு போடுவோம் என்றிருக்கையில் சோதி, அப்பா சொன்னார்… இல்ல தம்பி… நீ படி… அவருக்கு ஒரு முடிவு… இவன் பிரகாசிக்க முடியும் என்டு…
அதுவும் நல்லதுதான.; அதனால நான் பேராதெனியவில மூணு வருஷம் படிக்க முடிந்தது. இல்லையென்டால் நான் அந்த கால வழக்கப்படி கொழும்புலையும் கண்டியிலையும், வேலை பாத்திருக்க வேண்டும்.

பின்னர்… மாஸ்டர்ஸ்… நான், கைலாஸ், தில்லை - மூன்டு பேரும் ஒன்டா பாஸ் பண்ணினோம்… பேராதெனியவிலே தொடர்ந்து மூன்று ஆண்டு – நாடகம், டிபேட் டீம் - இதுல எல்லாம் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைச்சுது. அதுக்கு பிறகுதான் கல்யாணம் - காட்சி…

செம்மூக்கன் நடராஜனின் மகள்… ஏன் சொல்ல வேண்டும்… அந்த நாள்ள ஆகப்பெரிய பணக்காரர் என்டால் அவர்தான் என்று சொல்லலாம்... ஆனா… அவ்வளவும் ஸ்மக்லிங் தான்… அதில் தேடியது… கல்யாணம் கட்டி எங்கள ஒரு பொம்புளையிடம் அனுப்பினார். அவ, இவள"

திரையை மீண்டும் கண்ணால் ஜாடை செய்கிறார் ,

"அவ சொந்த மகள் போல தடவி, கட்டிப்பிடித்து… என்னையும் சொந்த மருமகனைப்போல மரியாதை செய்து… இந்த அளவு - விரலை நீட்டி நீளத்தை காட்டி – கரை – அப்படிப்பட்ட வேட்டியெல்லாம் தந்து…"

இரகசிய குரலில்… "எனக்கொரு டவுட் - அது அவரோட கீப் என்று நினைக்குறேன்…  வேட்டிய கட்ட சொல்லி ஒரே தொந்தரவு… நான்… பின்னே கட்டுறேன் என்டு...  அடேய் ,சிவத்தம்பி – என்னடா இது… சொன்னேன்… என்ன செய்வது பொலிடிக்ஸ், சயன்ஸ், அரசியல் விஞ்ஞானம்,இலக்கியம்…  ஆக நான் மாக்ஸிட் - இலக்கியத்துல – அதை திணைக்கோட்பாட்டிற்கு பாவித்தேன் - எல்லாம் - அவன் தந்ததுதான். இதுதாண்டாப்பா என்ட நம்பிக்கையின் அடிப்படை."

அவரது ஆளுமை கணங்களில் மாறுவதை பார்த்தேன். குளித்துவிட்டு மனநிறைவுடன். அமர்ந்திருக்கும் ஒரு  பிரமாண்டமான கரடி கணத்தில் முழுவதுமாய்  Mood ஆகி ஒரு சிரத்தை மிக்க தீவிர உலகுக்குள் சடாரென அவர் பிரவேசித்துக் கொள்வதைக் கண்டேன். எல்லாம் அவனருள் என்று பத்தோடு  பதினெட்டாய் கதை சொல்லிக் கொண்டிருந்தவர் தனது துறையில்...

"அதில் சமரசமோ ஈவிரக்கமோ கூடாது - இல்லை "  என்று தலையை உறுதிப்பட இடமும் வலமுமாய் ஆட்டி கூறுவார்.

"ஓர் ஆழமான பற்றையும் உறுதியையும் - இறுதிவரை என்னால் முடிந்தமட்டில் சமரசமற்ற அந்த வட்டத்தில் இயங்கி வந்துள்ளேன்" என்று உறுதி கொப்புளிக்க கூறும் திறனும் இருந்தது.

மலைபாம்பைப்போல சினந்து நெளிவார்… பின் கரடியைப்போல் கோமாளித்தனம் மிக்க விளையாட்டு மூடில் இருப்பார்…

பிராமணியத்தை பொருத்து ஒரு  சர்ச்சைக்குரிய பார்வையை கொண்டுள்ளார.

" சிபிஐஎம் - அது பிராமிணியத்தின் நலன்களை உள்ளுக்குள் கொண்டதுதான். விஜயபாஸ்கரன் முதல் எத்தனையோ பேர் இதை எனக்கு தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்கள். சிபிஐ – அது ஒரு இடதுசாரி அமைப்பு. இதையெல்லாம் இவர்கள் தாண்டி வந்ததாய் இல்லை " என்று கொதிக்கவே செய்தார்.

நந்தியிடம் கேட்டார் "வோர் என்ட் பீஸ்… ரஷ்யனில் வாசிப்பதற்கும் ஆங்கிலத்தில் வாசிப்பதற்கும் வேறுபாடு உண்டா என…"

நந்தி கூறினார்"  இரண்டும் ஒப்பிட முடியாத அளவில்…"

"நினைத்தேன் " என்றார் இவர்.

கைலாசபதியையும் இவரையும் ஒப்பிட முடியாது. இருவரும் வேறுவேறானவர்கள் என இன்குலாப் கூறுவார். இருந்தும், இன்குலாப், இவர் பொருத்து ஆழமான நேசம் பாராட்டினார்.

குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த ஒரு பொழுதில், தெனியானை வழியனுப்பி வைத்துவிட்டு, "கவனம் தெனி கவனமாய் போய் சேருங்கள்"  என கூறிய பின், அவர் சென்று மறையும் வரை கேட்டடியில் நின்ற வண்ணமாய் இருந்ததை, ஒரு  சந்தர்ப்பத்தில் தெனியான் எழுதினார்:

"தெருக்கோடியில் சென்று திரும்பி பார்த்தேன். கவலைத்தோய்ந்த கண்களுடன் நான் மறைவதை பார்த்தவாறு, வீட்டினுள் இன்னும் நுழையாமல், கேட்டடியிலேயே நின்றிருந்தார்".  இவரது ஆளுமை இப்படியாகத்தான் கிளைப்பிரிவதாக இருந்தது.

தனது விவசாயப் பண்பலையை தாண்டி வரமுடியாத வாழ்வு இவரது. இதனை அவரும் ஏற்றக்கொள்வார் என்பதுவே சிறப்பு. தனது பாரம்பரியத்துடன் இதனை இணைத்து வேர் என அவர் வரையறுப்பதுண்டு. ஆனால் இப்பாரம்பரியமானது நம்பிக்கைகள், உறவுகள், பண்பாடுகள், இவற்றுக்கு மேலாக மதப்பிடிப்புகள் என்பவற்றோடு இணைந்ததாகவே வரக்கூடும் என்பது தெளிவு.

வேறு வார்த்தையில் கூறுவதானால், பாரதியின் ‘விட்டு பிரிந்த’ அல்லது “விட்டு பிரியும்” மனநிலையை இவர் தன் வாழ்நாளில் அடைந்தார் என்பதற்கில்லை இங்கே, பாரதி என்ற ஒரு ஆளுமையின் ஆழமும் தாற்பரியமும் வெளிக்கிளம்புவதாய் உள்ளது என்பது வேறொரு விடயம்தான. ஆனால் தர்க்கமும், புதினமும் இவருக்கு நன்கு பிடித்த ஒன்றாக இருக்கவே முற்படுகிறது;.

“வானம் வசப்படல் வேண்டும்” என்ற அவா, இவரிடை ஏதோ ஒரு வழியில் ஜீவித்திருந்தாலும், இருவரின் வேர்களும் வித்தியாசம் கொண்டவையே. ஏனெனில் , தர்க்கமும் புதினமும் என்பதை விட பாரதிக்கு மானுட காதல் என்பது மிகப்பெரியதாய் இருந்துள்ளது. அதன் மிச்சசொச்சம் இவரிடமும் ஒட்டாமலில்லை என்பதனையே தெணியானின் சொல்லாடல் குறிப்பிடுகின்றது.

ஆனால் இருவரின் தொடுகையும் தேடலும் அவையவற்றின் பரிமாணத்தில் வித்தியாசம்  பூண்டவை. ஆழமும் தீவிரமும் கொண்டதாய் பாரதியின் தேடல் இருந்தது. இருந்தும், தமிழ் இலக்கிய உலகானது, இருவரிடமிருந்தும் வித்தியாசமான பரிமாணங்களில் தனக்கு வேண்டியதை பெற்று செழுமையுறும் எனலாம். மாக்ஸிசத்தை  Methodology யாகப்  பார்த்து, அதனை தனது multidisciplinary அணுகுமுறையோடு ஒன்றாக சேர்த்துகொள்வது இவருக்கு பிரியமானதுதான். ஆனால் இதே போன்று, இந்த விடயமானது, இந்த சமூக அமைப்பின் பல்வேறு அடித்தளங்களுக்கும் ரொம்பவும் பிரியமானதுதான். இதனாலேயே மாக்ஸிசத்துக்கு பின்னர்  மாக்ஸியத்திலிருந்து இத்தகைய  ஒரு சாரத்தைப் பிரித்து நிறுத்த முற்பட்ட போது அதனது அடி நாதமான போர்குணத்திற்கான தேவைப்பாட்டை நிலைநிறுத்த லெனின் என்ற மாமனிதன் வரலாற்றில் எழவேண்டி இருந்தது.

எனவே, இவரது, படைப்புகளும், ஆளுமையும் மேற்படி பின்னணியில் வைத்து நோக்குவதை உலகு  விரும்பக்கூடும். “நீங்கள் பாரதியின், மகாத்மா காந்தி பஞ்சகம் வாசித்துள்ளீர்களா…நந்தலாலா… இதன் முழு அர்த்தம் குறித்து அறிவீர்களா…” விஷமம் பொதிந்த அவரது கூற்றுக்களின் முக்கியத்துவம் பின்நாளிலேயே எனக்கு விளங்கியது. விடை தெரியாத சிறுவனாய் அன்று இருந்தேன் என்பேன்.

பின்குறிப்பு :

பேராசிரியர் ,சிவத்தம்பி அவர்களின் பல்வேறு உரையாடல்கள் முக்கியமானவை. இவையிடையே, மேற்படி சித்திரத்தின் தளம் ஒருவகையில் வேறுபட்டது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.