3

தமிழருக்கு எதிரான இனவாத அரசியல் என்பது இதுவரை இரு அடிப்படைகளில் செயல்பட்டு வந்துள்ளது. ஒன்று, இனப்படுகொலைகள் மலிந்த, வன்செயல்கள் பரவலாக நிகழ்ந்த 1977, 1981, 1983 காலப்பகுதியின் ஓர் அரசியல் வடிவத்தைக் கூறலாம். மற்றது, தேர்ந்த, குறுகிய எல்லைப்படுத்தப்பட்ட, அரசியல். உதாரணமாக குருந்தூர் மலை அல்லது மயிலத்தடு மேய்ச்சல் நிலம் அல்லது நினைவேந்தல்களில் இடையூறுகளை ஏற்படுத்துவது அல்லது பொன்னம்பலம் கஜேந்திரன் போன்றோரை உடல்ரீதியாக குண்டுகட்டாக கட்டி அப்புறப்படுத்துவது – என்றளவில் இனவாதமானது இந்நாட்டில் தனது இரண்டாவது முகத்தை காட்டியும் உள்ளது. அதாவது, ஒரு புறம் தமிழ் மக்களுக்கு எதிரான பரந்த ரீதியான வன்செயல். மறுபுறம், திட்டமிடப்பட்ட ரீதியில், முன்னெடுக்கப்படும் குறித்த எல்லைப்படுத்தப்பட்ட, பிரதேச ரீதியான இனவாத நகர்வுகள்.

ஆனால் இனி ஒரு 77 அல்லது 83 நடக்குமானால் (அதாவது, பெருவாரியான, இனப்படுகொலைகள் மலிந்த, பரந்துப்பட்ட வன்செயல்கள்) அது ஓர் இந்திய தலையீட்டுக்கு வழிசமைத்து விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் ஆட்டிப்படைக்கையில் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து, அவர்களை ஒரு  தலையாய சக்தியாக அங்கீகரித்த செயற்பாடானது, உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாகவே இருந்தது.அதாவது ஒருபுறம் இந்திய ஆக்கிரமிப்பு சம்பந்தமான அச்ச உணர்வு. மறுபுறம் ஜே.வி.பியினரை இந்தியா அழைத்து அங்கீகரித்த செய்கை. இவை இரண்டும், சர்வதேசிய நகர்வுகளை பின்தள்ள கூடியவை என்பதில் சந்தேகமில்லை.

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சியை பேச்சு மூச்சற்று அடக்கியதுப் போலவே, இலங்கையிலும் ஜே.வி.பியை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் அதற்கு, இவ்வகை இந்திய அழைப்பானது ஊறு விளைவிக்கும் செயலாகவே இருக்கப்போகின்றது என்பதும் - இதுவே இந்திய அழைப்பின் முக்கிய விளைப்பொருளாக உள்ளது என்பதனையும் நாம் மறுப்பதற்கில்லை.  வேறுவார்த்தையில் கூறினால், தமிழருக்கு எதிரான, பரந்துபட்ட இனவாதத்தை, இந்நாட்டில்; கட்டவிழ்த்துவிட எத்தனிக்கும் போக்குக்கு, எதிராக செயற்பட கூடிய தேவைப்பாடுகள், அல்லது சாத்திய கூறுகள், இன்றைய இந்தியாவுக்கு அதிகமாக உள்ளது எனும் போதே,ஜே.வி.பியையும் அது அழைத்து, விடயத்தின் பாரதூர தண்மையை, அதிகமாக்கியுள்ளது.

ஆக ‘தமிழருக்கு’ எதிரான இனவாத அரசியல் என்பது, மேற்படி எல்லைப்பாடுகளை தன்னகத்தே இன்று கொண்டதாகவே அமைகின்றது. ஆனால் ‘முஸ்லிம்களுக்கு’ எதிரான ஓர் அரசியல் என்பது இப்பொருளில் இருந்து வித்தியாசப்பட்டதாய் நகரமுற்படக் கூடும் - முக்கியமாக முஸ்லீம் மக்களுக்கு எதிரான நகர்வுகளில், இந்தியா எந்தளவில், எவ்விதத்தில் எச்சரிக்கையோடு பங்கேற்கும் என்பதெல்லாம் ஒரு கேள்வியாகவே இருக்கின்றது.

சுருக்கமாக சொன்னால், தமிழருக்கு எதிரான இனவாத திட்டங்கள் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத திட்டங்களில் இருந்து, சிற்சில வேறுபாடுகளை கொண்டதாகவே இருக்கின்றது.

இதனையே வேறுவகையில், சர்வதேச–பிராந்திய அரசியலை பின்னணியாக கொண்டு பார்க்குமிடத்து, தமிழ்மக்களுக்கு எதிராக இனி நடாத்தப்படக்கூடிய ஓர் 77 அல்லது 83ஐ போன்ற பரந்துப்பட்ட இனப்படுகொலை என்பது, தற்போதைய இந்தியாவில் நிலவக்கூடிய அரசியல் நிலவரங்களால் ஓரளவில் கட்டுப்படுத்தப்படுவதாகவே படுகின்றது. அதாவது, அரசாட்சியில் இருக்கும் ஓர் ஆதிக்க சக்தியானது, தனக்கு விரோதமான ‘அரகல’ போன்ற அரசியலை முறியடித்து, அதற்கூடாக தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடன், தமிழருக்கு எதிரான ஓர் பரந்துப்பட்ட இனவாத தாக்குதலை கட்டவிழ்க்க விரும்பினாலும், அது இந்தியா போன்ற ஓர் பிராந்திய வல்லரசின,; அத்தருண அரசியல் இருப்பு நிலைகளோடு, பின்னிபிணைந்ததாகவே காணப்படுகின்றது. எனவே பரந்துப்பட்ட ஒரு இனவாத வேலைத்திட்டத்தை களமிறக்க எண்ணுவது, மேலே கூறியவாறு, அநேக சங்கடங்களை உண்டுபண்ண கூடியதுதான். ஆனால், முஸ்லீம் மக்களின் விடயத்தில் இச்சங்கடங்கள் இருக்கின்றனவா – அல்லது அவை, வேறு விதத்தில் செயற்படத்தக்கவையா என்பதுமே இங்கு அழுத்தம் பெற வேண்டிய எண்ணக்கருக்களாக இருக்கின்றன.

4

இதனையே, மீண்டும் ஒரு முறை, மீட்டு கூறுவதானால்: இந்நாட்டின் ஆதிக்கசக்திகள், தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, களமிறக்கும் இவ்வகை இனவாத வேலைத்திட்டமானது, இருவகைப்படுகின்றது. ஒன்று, பரந்துப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுவது, மற்றது குறுகிய எல்லைக்குள்; மட்டுப்படுத்தப்படுவது.

குறுகிய எல்லைக்குள், கட்டவிழ்த்து விடப்படும் குருந்தூர் அல்லது வெடுக்குநாறி இனவாதமானது, ஓரளவில் இந்திய நலன்களோடு இணைந்தே பயணிக்கக்கூடியதுதான.; ஆனால் பரந்துப்பட்ட இனவாத வேலைத்திட்டங்கள் என்பவை இதுபோலல்லாது, இந்திய நலன்களை நேரடியாக பாதிப்பன என்பதால்;, இந்தியா அவற்றில் தலையிடுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு என்பதற்கான சான்றுகளே அதிகமாக உள்ளன. அதாவது, இலங்கையின் இனவாதம் தொடர்பிலான, இந்திய நகர்வுகள் இருவகைப்படுகின்றன. உதாரணமாக, அண்மையில் முன்னெடுக்கப்பட்டஇந்திய வம்சாவளி தமிழரின் இன அடையாள அழிப்பு திட்டத்தை எடுத்தால்;, அது இடைநடுவே நிறுத்தப்படுவதற்கு இந்தியாவின் திரைமறைவிலான நகர்வுகள் காரணமாக இருந்திருக்கலாம், என்ற ஐயப்பாடு நிலவவே செய்கின்றது.

அதாவது, இத்தகைய இழுபறிகளின் மத்தியில், அதாவது, ‘அரகல’ அரசியலை ஒடுக்குவது அல்லது வலிமை பெற்றுவரும் ஜே.வி.பியினரின் இருப்பை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது இலங்கையின் ஆதிக்க சக்திக்கு இன்று தேவைப்பட்டதாக இருப்பினும்;, இது அநேக சவால்களுக்கு உட்பட்டதுதான் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், இச்சவால்கள் அனைத்தும் இவ்வகை வேலைத்திட்டங்களை களமிறக்கப்படுவதில் தடையாக இருந்து விடப்போவதில்லை என்பதினையும் நாம்கூறியாக வேண்டும். மொத்தத்தில், இவ்வகை  எல்லைக்குட்படுத்தப்பட்ட, குருந்தூர்மலை அரசியலானது இந்தியாவின் நேரடி தலையீட்டை வரவழைக்க போவதில்லை என்பதால், இதனை முன்னெடுக்கலாம் என அரசு நினைத்தப் போதிலும் இதற்கான நடைமுறை யதார்த்தம் இலங்கையில் நலிவுற்றே வருகின்றது என்பதே மன்சூரின் கட்டுரை வாதமாகின்றது. இவ் வாதம் முஸ்லீம் விவகாரங்களுக்கும் ஏற்புடையதாகுமா என்பதே தற்போது எம்முன் எழும் வினாவாகின்றது.

5

மேற்படி வாதங்களை சீர்தூக்கி பார்க்குமிடத்து மன்சூரின் கட்டுரை விளம்புவதுபோல, ஒட்டுமொத்த இனவாதமென்பது இலங்கையில் காலாவதியான கதையாகிவிட்டது என்ற வாதங்களை நம்புதற்கில்லை என்பதனை சொல்லித்தான் தீரவேண்டும். தமிழருக்கு எதிரான பரந்துபட்ட, இனவாத செயற்பாடுகள் வேண்டுமானால் (மன்சூரின் கூற்றுப்படி) தற்சமயத்தில், ஓரளவில் முடிந்த கதைப்போல் தென்படலாம். ஆனால் முஸ்லீம் மக்களை பொருத்தமட்டில், இவ் இனவாத முரண்பாடானது, வளர்த்தெடுக்கப்படும் ஒரு சூழ்நிலையிலேயே காணப்படுகிறது என்பதிலேயே இவ் அபாயத்தின் ஆணிவேர் குடிக்கொண்டுள்ளது என கூறலாம்.

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், தமிழ்மக்;களின் விடயத்தைப்போல் “அல்லாது”, முஸ்லீம்மக்களின் விடயத்தில் ஓர் சர்வதேசத்தின் மறைகரம் செயற்படும் விதத்தில், வித்தியாசங்கள் இருக்கின்றது இதுபோலவே, பிரதேச வல்லரசின் ஊடுருவும் தன்மையிலும் வித்தியாசங்கள் இருக்கின்றது. இக்காரணத்தால், அபாயத்தின் மூலைக்கல், வௌ;வேறு வடிவங்களை பெறுவதாகவுள்ளது எனலாம்.

6

உயிர்த்த ஞாயிறு  தாக்குதலுக்கு முன்பாக, முஸ்லீம் தீவிரவாதத்தை வளர்த்து அதன் பண்பலைகளுக்குத்  தீனி போட்டது, உள்நாட்டு பாதுகாப்பு சேவையினர்தாம் என்ற குற்றச்சாட்டு, இலங்கையின் கிறிஸ்துவ மதகுருக்கள் தொடக்கம் சமூகத்தின் பல்வேறு அரச–அரசல்லாத மட்டங்கள் வரை வியாப்பித்திருப்பதாகவே இருக்கின்றது. உதாரணமாக சுபத்திரா அவர்கள் பின்வருமாறு எழுதுவார்:

‘குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லது அவர்கள் பற்றிய உண்மைகளை மறைப்பதற்கு அரச புலனாய்வு பிரிவாளர்களே முற்;பட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இப்போது பல்வேறு தரப்புகளிலிருந்தும் வருகின்றது. முன்னால் சட்டமாஅதிபர் தம்புள்ள டி.லிவேரா இந்த சந்தேகத்தை முதலில் வெளியிட்டார். பேராயர் மெல்கம் ரஞ்சித்தும் வெளியிட்டார்.இப்போது முன்னாள் சி.ஐ.டி பணிப்பாளர் ரவி செனிவிரத்னவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளார்’. (வீரகேசரி : 24.09.2023)  விடயம், இப்போக்கின் அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், இச்சதியின்;, பின்னணியில் இருந்த மறைக்கரங்கள் யாருடையவை? அவை சர்வதேசிய அல்லது உள்ளுர் அல்லது இரண்டும் இணைந்த ஒன்றுதானா? இப்போக்கினது தற்போதைய நிலைமை இலங்கையில் எந்தளவில் ஜீவிக்கின்றது என்பதுவே முக்கியமான கேள்வியாகின்றது.

இக்காரணங்களே, “நல்லிணக்கத்தின் ஊடாகவே, அபிவிருத்தி அடைவதுதான,; அரசாங்கத்தின் நோக்கம் என” ரணிலை இப்போது கூற வைத்திருக்கலாம். (காசா போர் நிறுத்தம் பொறுத்து அமெரிக்கா இன்று நாளும் கதைப்பதைப் போல் ரணிலின் கதையும் இவ்வாறு இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டிகாட்டாமல் இல்லை! உதாரணமாக, அண்மையில், அல்ஜீரியா, ஐ.நா பாதுகாப்பு சபையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போது,அதனை நிறுத்த அமெரிக்கா தன் வீட்டோ  அதிகாரத்தை பயன்படுத்தியது. (20.02.2024)  இருந்தும், அதற்கு அடுத்து வந்த தினங்களில், இஸ்ரேல்-காசா யுத்தநிறுத்தம் அமுலுக்கு வருகின்றது, என அமெரிக்கா கூறி, உலகை சமாதானப்படுத்தியது. அதாவது, தொட்டிலையும்; ஆட்டி குழந்தையையும் கிள்ளுவதே கைக்கொள்ளப்படும் தந்திரமாகின்றது.)

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.