ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe)  & பிரிஜட் ஹல்பே (Bridget Halpe)

மும்மொழிகளிலும் அந்த பெயர் பலகையை காட்சிப்படுத்தி இருந்தார்கள். அவர்களின் வீடு தனித்து ஒதுக்குபுறமாய், ஒரு மலைச்சரிவில் ரம்மியமாய் கிடந்தது.  வீட்டைவிட மலைச்சரிவில் அமைந்து கிடந்த அவர்களினது வீட்டுத்தோட்டம் அற்புதமாய் இருந்தது எனலாம். கிட்டத்தட்ட ஒருகால் ஏக்கரில், புல் வளர்க்கப்பட்டு, அதன் இடையில் செறிவான முறையில் பல்வேறு விதமான பூ மரங்களும், பழ மரங்களும் நடப்பட்டு அற்புதமான ஒரு சிறுசோலையாக தோட்டம் காட்சித்தந்தது. தங்களின் ஓய்வுகாலம் நெருங்கும் தருவாயில், வெறும் மலைச்சரிவாய் இருந்திருக்ககூடிய இவ்வரட்டு நிலத்தை இவர்கள் வாங்கியிருக்ககூடும். பின்னர், தங்களது கலை உணர்வுக்கேற்ப, தங்களின் கனவு இல்லத்தை இவர்கள் நிர்மாணிக்க திட்டங்கள் தீட்டியிருக்கக் கூடும். கனவானது, வீட்டினுள்ளும் நன்றாகவே பிரகாசித்துக் கொண்டிருந்தது எனலாம்.

பிரதான பாதையிலிருந்து விலகி அவர்களின் வீட்டுக்குச் செல்ல ஒரு சிறுபாதை. அதன் இரு மருங்கிலும் பூச்செடிகள் நடப்பட்டு, செல்லும் போதே உங்கள் கண்களை மலரால் உரசும்படி செய்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்த உடன் முதலில் வாயிலில் தோன்றுவது அவளது பியோனோதான். ஒடுங்கி சென்ற அவ்வறைக்கு அடுத்ததாக விரிந்து கிடந்தது அவர்களது உட்காரும் அறை. அங்கே இரண்டு பியோனோக்கள் காணப்பட்டன. இடப்புறமாய் ஒரு பியோனோ. பின்னர் அறையின் தூரத்து மூலையில் மற்றுமொரு கிராண்ட் பியோனோ.

இரண்டடி உயரத்தில் இருந்த அடுத்தகட்ட அறைக்கு செல்ல மூன்று படிக்கட்டுகள் இருந்தன. அப்படிகட்டுகள் சமையலறைக்கு, சாப்பாட்டு அறைக்கு, வாசிப்பறைக்கு, படுக்கை அறைக்கு, மாடிக்கு இட்டுசென்றன.

         - ஆஷ்லி ஹல்பே (Ashley Halpe)  -

அதனிடை, ஒரு சிறுதடாகம். அதில், சிவந்த மீன்கள் இரண்டு, குட்டி மீன்கள் பத்து – பின் அவற்றுக்கு காற்றை வழங்கும் காற்று குழாய்கள் - பின் அருவியின் சலசலப்பை ஏற்படுத்தும் குழாய்கள் - இவையாவுமே அவர்களது கனவின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும். தடாகத்தின் ஓரமாய் அமைக்கப்பட்டிருந்த படிகட்டுகள் மாடியில் உள்ள அவர்களின் பிள்ளைகள் அறைகளுக்கு செல்வதாய் இருந்தது. மறுபுறத்தில், அவ்வீட்டின் சுவர் முழுவதும், இருக்க இடமில்லாமல் ஒட்டி ஒட்டியப்படி அத்தனை ஓவியங்கள் நிரம்பியிருந்தன. கீற்றின் ஓவியங்கள், டொனால்டின் ஓவியங்கள், பிகாசோபாணியில் தத்துவச் செறிவுகள் நிரம்பி வழிந்த ஓவியங்கள் - இப்படியாக கண்ணை திக்கு முக்காட செய்திருந்தன, ஓவியங்கள். “ஐந்து நாய் வைத்திருந்தோம்... மூன்று இறந்துட்டது... இதோ இந்தகுட்டி நான் சென்ற கிழமை கொண்டுவந்து சேர்த்தது... நிறைய சாப்பிடுகின்றது...”

அவளிடம் மகனை ஒப்படைத்து கூறினேன் : “சரி. இசைக் கோவிலின் வாசலுக்கு வந்துவிட்டாய். இனி உள்ளே போவதும் வெளியே நிற்பதும் உன்னில்தான் தங்கியுள்ளது” என.

“இசை கோயிலா… நல்ல வர்ணனை… இது, அற்புதம்…”

அவளது சிறந்த மாணவனை நான் செல்லும் போதெல்லாம் எனக்காக வாசிக்கும் படி கேட்டுக்கொள்வாள்.

அற்புதமாக வாசிப்பான் அவன்.

இருந்தும் எங்களது செவிக்கு எட்டாத இசை தவறுகள் அவளது செவிக்கு மட்டும் எட்டிவிடும்…

“அப்படியில்லை…” என்பாள். அவனும் ஆமோதிப்பான். அவன் இசைக்கும் போது, இசையிலுள்ள சிரமங்களை, அதில் அடங்கியுள்ள அர்த்தங்களை எமக்கு அவள் எடுத்து சொல்வாள். முடிந்தவுடன், அவளே முதலில் மனதாரக் கைத்தட்டும் முதல் நபராகவும் இருப்பாள். எங்களிடமும் வேண்டிக்கொள்வாள், உரிமையோடு “தட்டுங்கள், உங்கள் கரங்களை சத்தமாய்” என. அவளது கணவன் ஒரு பேராசிரியர். இவளை விட அவர் பெயர் பெற்றவர். ஆங்கில பேராசிரியர். இலக்கியத்தில் விமர்சனங்களில், கிழமைதோறும், பத்திரிகைகளில். போகும் போதெல்லாம் யாருக்கேனும் ஒருவருக்கு அவர் ஆங்கில இலக்கிய பாடம் நடத்திக்கொண்டிருப்பார். அல்லது அங்கும் இங்கும் எதற்காகவோ கால்களை தரையில் தேய்த்து தேய்த்து நடந்து கொண்டிருப்பார். “அப்படி தேய்த்து தேய்த்து நடக்க வேண்டாம்… காலை உயர்த்துங்கள்… நன்றாக, அப்படிதான்…இனி, நடவுங்கள்”.

வயதானோருக்கே வரும் முடக்குவாதமோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றா என்பது நான் அறியாதது. அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் அவாவும் என்னிடத்திலில்லை. ஓவியங்களைப் பற்றி கூறுவார் : “ஓ… ஐரோப்பிய ஓவியங்களைப் பற்றி கேட்கின்றீர்கள்… இல்லை, அந்த கேள்விகளை அப்படியே விட்டுவிடுங்கள், பதில் இல்லாது. கேள்வியாக அவை இருப்பதே அவற்றின் கௌரவம். அதுவே தர்மம். அவர்கள் அனைவருமே அற்புதமானவர்கள். மாபெரும் ஓவியர்கள். அவரவரின் காலகட்டத்திற்;கு உரிய மகோனதமான மனிதர்களாக, ஓவியர்களாக இருந்தார்கள். இதில் ஒருவரை இன்னுமொருவருடன் ஒப்பிடுவது நல்லதல்ல. ஒருவரை இன்னுமொரு காலகட்டத்தின் பின்னணியில் வைத்து ஆராய்வதும் பொருந்தாதது”. “டர்னர்… நீராவியையும் சூரிய ஒளியையும் சூரியனையும் பொறுத்து அவர் வரைந்துள்ள ஓவியங்கள் பிரசித்தி பெற்றவை”.

“மொனே… பனியில் நீராவி புகைவண்டியின் எஞ்சினை கவனமாகப் பார்த்து…”

என்னுடன் ஓவியங்களைப் பற்றி விலாவாரியாக, புத்திகூர்மையுடன் கதைத்துக் கொண்டிருந்தவர், அதே கணத்தில், தன் மனைவி யாரோ வேறு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்த சம்பாசனையில் குறிக்கீடு செய்து ‘அது அப்படியல்ல’– என்று கூறி அவர்களின் அந்த சம்பாசனையிலும் சில திருத்தங்களை செய்த போது வியந்துப்போனேன்.

இந்த வயதில் பல்வேறு விடயங்களில் அவர் செலுத்த கூடிய அவதானமும் ஆர்வமும்; மிகுந்த வியப்பை என்னுள் உண்டு பண்ணியது.

ஒரு குறுந்தாடி, வழுக்கை தலை. பின் பரந்த நெற்றி – ஆனாலும் இங்கே ஏதோ ஒன்று தொக்கி நிற்பது போலவும் பட்டது.

அன்று ஒரு ஷேக்ஸ்பியர் நாடக அரங்கை பார்த்துவிட்டு எனது வாகனத்தில் இவர்களை அழைத்து வந்து கொண்டிருந்தேன்.

முன்னரே, நேரத்துடன் புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால் அவரது மனைவி போவோர் வருவோரிடமெல்லாம் கதைத்து முடிக்காது இருந்தாள். ஒரு மணிநேரம் கடந்துவிட்டது. சரி முடிந்தது என்று காரில் ஏறினாலும் - காரில் ஏறிய பின்னரும் அவள் விட்டப்பாடில்லை. யார்யாரோ ஓடிவந்து அல்லது இவள் கதவை திறந்து தாவி குதித்து எதையோ கூற துடித்து...

பின் இறுதியாய் அவளை அழுத்தி பிடித்து ஏற்றிவர நேர்ந்தது என்றால் - அப்படியில்லை உண்மையில். ஆனால் அது அப்படிதான், உண்மையில். காரில் ஏறியவுடன் தான் வாங்கவேண்டிய பொருட்களின் ஒரு அட்டவனையை சமர்ப்பித்தாள் அவள்.

இரவு உணவு, பின் தயிர், பின்...

இனி எங்கு வாங்குவது... சரி, பத்து மணி. இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. அந்த உணவு விடுதியை மூடுவதற்கு...

விடுதியை அடைந்ததும் அடையாததுமாக இவள் சிறுவனோடு வெளியே இறங்கி ஓடினாள்.

தயிரை வாங்கி தந்தனுப்பியவள், இனி உணவு பொருட்;களை வாங்க மீண்டும் வேகமாக உள்நுழைந்த போது, ஒர் பாதிரி தென்பட்டார் : இருவரும் முகமன்; கூறி ஆறுதலாக அளவளாவ தலைப்பட்டனர். பேராசிரியர் ஆத்திரப்படாமல் நிதானமாக முணுமுணுத்தார் : “எத்தனை ஆண்கள்; இப்படி பதுங்கி இருக்கின்றனர்… என்மனைவியை வழிமறித்து தாக்க... நம்பமுடியவில்லை... இப்போது பாருங்கள்... ஒரு பாதிரி..” வாய்விட்டு சிரித்தேன் நான். தரமிக்க நகைச்சுவை இது. அதுவும் ஒரு கணவர் சொல்லக் கேட்பது…

அவள் ஒருமுறை கூறினாள்! “ஆண்களின் பின்னால் தேடிச்சுற்றுபவளாய் நான் என்றும் இருக்கவில்லை. அவர்கள் அனைவரையும் நான் பெரிதாய் மதித்ததும் இல்லை... இரண்டொருவரை மாத்திரமே மதித்துள்ளேன்... உலகிலேயே நான் மதிப்பவர் என் கணவர்தான்”.

உண்மையாக இருக்கலாம். இலக்கிய அடித்தளத்தை - இசைக்கு தேவையான அந்த இலக்கிய அடித்தளத்தை - இவர், இவளில், விதைத்திருக்கக் கூடும்.

மறுபுறத்தில், இவள் இல்லாதிருந்தாள் இவன் கட்டிலோடு கட்டிலாக கிடந்திருப்பான் என்பதுவும் திண்ணம்தான்.

‘ஏனெனில் இவரை இவள் அவ்வளவு கரிசனையோடு பராமரிக்கின்றாள் என்பதனை சொல்லித்தான் ஆக வேண்டும். தான், செல்லும் அனைத்து இடங்களுக்கும், இவரை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றுவிடுவாள். அவளை, இசை தன் அங்கீகாரத்துடன் - அவளை நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் அழைக்கவே செய்தது. காரில் அவரை இழுத்து ஏற்றுவதும்;, கார் நிறுத்தியவுடன் வேண்டாம் வேண்டாம் இறங்க வேண்டாம், தயவு செய்து. நான் வரும் வரை இறங்காதீர்கள் என்று ஓடிச்சென்று அவரது கரத்தைப்பற்றி அவரை காரிலிருந்து இருந்து இழுத்து இறக்குவதும், பின் நிமிர்த்துவதும் - ஆமாம் “வீணையடி நான் உனக்கு...”

2

அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். காலை-பகல்-மாலை என அவள் அலைந்து திரிந்தாள். உணவு எடுத்து செல்ல வேண்டிய தேவையில்லாத படியால், முக்கியமான ஒரு பளு குறைந்திருந்தது. முன்பு ஒருதடவை அனுமதித்திருந்த போது பால், பழம், சன்ட்வீச் என தனித்தனியாக கட்டி எடுத்து சென்று வற்புறுத்தி வற்புறுத்தி படுக்கையில் கிடக்கும் அவருக்கு ஊட்டி விட்டு பின் வாயை ஒரு சிறு கைக்குட்டையால் துடைத்து, பின் நீர் முதல் அனைத்தையும் பருகவைத்து வாயை மீண்டும் துடைத்து, ஒற்றி எடுத்து கைப்பையை இறுதியாய் பூட்டி வர நியாயமான நேரம் எடுப்பாள். இனி, இதை மூன்று வேளை செய்து... வைத்தியசாலையில் இருந்து வந்து… களைத்துப்போய் படுக்கையில் விழுந்தப்பின்… திடுத்திடுப்பென விழித்து அவசர அவசரமாய் தானும் எதையோ உண்டு, பின் அவனுக்கான உணவு தயாரிப்பில் மீண்டும் ஈடுபட்டு, பின் மீண்டும் புறப்பட்டு… அப்பப்பா…!

3

“இன்று எனது பெயரை சொல்லிவிட்டார்...” முகமெல்லாம் மலர குதூகலித்து சொன்னாள். உண்மையான குதூகலம் இது. ஏதோ பதின்வயது பெண் தன் காதலனைப்பற்றி தன்தோழி அல்லது தோழனிடம் நேருக்கு நேர் மகிழ்ந்து சொல்லுவதுப்போல்.

“இன்னமும் மூக்குக்;கூடாகத்தான் அவனுக்கு உணவு...”

இவ்வளவு அலைச்சலிலும் நேற்று மாத்திரமே தன் மாணவர்களின் வகுப்பை, அவள், இடைநிறுத்தினாள். உண்மையில், இடைநிறுத்தம் அல்ல அது. சனிக்கிழமைக்கு தள்ளிப்போட்டாள். அவ்வளவே.

“அப்பா, அங்கள் சாகப்போறாராம்...”

“யார் சொன்னது”

“டீச்சர்த்தான்”.

“அழுதாங்களா? ”

“இல்ல டாக்டர் சொன்னாராம். திரும்பியும் ஐ.சி.யுக்கு மாத்திட்டாங்களாம்”.

இன்று, சனிக்காலை. இவளுக்காகவே சென்றிருந்தேன். யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். முடிந்த உடன் வந்து கூறினாள் : “ இறைவனின் மகிமையை என்னவென்பது. டாக்டர்கள் எல்லாம் - இனி வீட்டிற்கு கொண்டுப்போய் விடுங்கள், இருந்து ஆகப்போவதில்லை என்று கைவிரித்த நிலையில், பாருங்கள், ஒரே ஒரு டாக்டர் மாத்திரம்- திரும்பியும் ஐ.சி.யுக்கு கொண்டு போய்... இப்போது கதைக்கின்றார்... என்னை அடையாளம் தெரிகின்றது...”

வாழ்க்கையின் இன்னுமொரு சகஜ விடயமாக கூறினாள் : “நேற்று வீட்டுக்கு வந்தவுடன், எனது உதவியாளருடன் சேர்ந்து, இங்கே கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களை எல்லாம் ஒதுக்கி துப்பரவுபடுத்தி, ஓர் மரண வீட்டுக்குரிய அனைத்து காரியங்களையும் செய்தேன். எவ்வளவு பேர் வருவார்கள்… இடமிருக்க வேண்டும்… எல்லாவற்றையும் ஒதுக்கி, துப்பரவுப்படுத்தி – அப்போது தான், இந்த புதிய வைத்தியர், வந்து சற்று பொறுங்கள் என தடுத்து ஓர் புதிய நடைமுறையை ஏற்படுத்தினார்”.

“இரவு ஒன்பது மணி இருக்கும்… ஒரு போன். அவரது மாணவி ஒருத்தி. இப்போது இங்கிலாந்தில் இருக்கின்றாள். சென்ற கிழமைத்தான் இலங்கைக்கு வந்திருந்தாள். கேள்விபட்டவுடன் கம்பகாவிலிருந்து கார் ஒன்றை ஒழுங்குப்படுத்தி கொண்டு வந்து சேர்ந்துவிட்டாள். அவளுக்கு தெரிந்த வைத்தியர் ஒருவரின் உதவியுடன் வாட்டுக்குள் அந்த நேரத்தில் சென்றுபார்த்து, என்னை தெரிகிறதா என்று கேட்டிருக்கின்றாள். தெரிகிறது… நீ வந்தது எவ்வளவு சந்தோசம் என இவரும் பதில் சொல்லியிருக்கின்றார். பின் அங்கிருந்து, இங்கு, அந்த இரவில் எனைப்பார்க்க வந்தாள். கொடுக்க ஒன்றுமேயில்லை. உணவில்லை. குடிப்பதற்கும் நான் ஒன்றும் கொடுக்கவில்லை. பரவாயில்லை என்கிறாள். சரி இந்த நேரத்தில், இனி இங்கு தங்குகின்றீர்களா என்றால், இல்லை, வந்தேன் - பார்த்துவிட்டேன் - இனி கம்பாகாவிற்கே செல்வேன் என்று சென்றுவிட்டாள்”. “இன்னுமென்று. யார் யாரோ எனக்கு பணம் அனுப்பி வைக்கின்றார்கள். தயவு செய்து பணமாக எண்ணாதீர்கள் - இவையணைத்தும் ஓர் உணர்வு தெரிவிப்பு – அவ்வளவே – என்று பணத்தை ஒரு கூட்டில் போட்டு தருகின்றார்கள்”.

“அதுதான் குமார் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். மனிதர்களில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. அனைவருமே நல்லவர்கள். அவர்கள் பாவம். சில நேரம் கெடுதல் செய்தாலும், ஏதோ ஒன்றால் பாவப்படுத்தப்பட்டுத்தான், அக்கெடுதலை அவர்கள் புரிந்து தொலைக்கின்றார்கள்”.

“சரி உங்கள் விடயத்தை கூறுங்கள் உங்களுக்கு வீட்டாள் கிடைத்துவிட்டாரா… கதைத்துள்ளேன்… இதோ நம்பர். போன் பண்ணுங்கள்”.

4

“இவர் அப்படியே மயங்கிவிட்டார். இது நடக்குமாம். கதைத்துக்கொண்டிருக்கும் போதே, மூளைக்கு இரத்தம் போவது திடீரென நின்று நினைவிழக்குமாம். நல்ல வேளையாக இவரை பார்க்க வந்தவர்கள் சுற்றிலும் இருந்தார்கள். பிடித்து, தலைகீழாக நிறுத்தி பிடித்துக்கொண்டோம். அதன் பிறகுதான் உணர்வு வந்தது. டாக்டர் கூறினார் இது ஸ்டோர்க் இல்லையாம்… வயது போனவர்களில், இது சகஜமாம்…” அவள் பயந்திருப்பதை அரிதாக – மிக அரிதாகவே கண்டேன்.

            - பிரிஜட் ஹல்பே (Bridget Halpe)  -

5

வளைந்து வளைந்து சென்றது பாதை. மரங்கள் நிறைந்த பாதை. கருக்கல் வேறு. இதனால் மரங்கள் கருமை நிறங்களில் மௌனமாய் நீண்டு நின்றிருப்பதுப் போல் நின்றிருந்தன. சில மரங்களை இவள் மகிழ்ந்து காட்டினாள் - எவ்வளவு பெரிய மரம்… கிளைகளைப் பார்த்தீர்களா…

இவர்களை, இவர்களது நண்பனொருவன் மாலை விருந்திற்கு அழைத்திருந்தான். அவ் விருந்தானது, ஓர் இலக்கிய - இசைசாயல் கலந்து தரப்படுவதாய் அழைப்பிதழ் கூறி நின்றது. சில கவிதைகள் - இசை- பாடல்கள் - மாலை உணவு. இதைவிட, “அவர்கள் மூன்று மாதங்களில் சென்றுவிடுவார்கள்”. ஓர் இளம் பிரெஞ்சு சோடியைப்பற்றி கதை வெளிப்பட்டது. அவர்களை ஏற்கனவே இவர்களது வீட்டில், இசை நிகழ்வுகளின் போது சந்தித்திருக்கின்றேன். “அவள் மூன்றுமாத கர்ப்பிணி…” காருக்குள் அமைதி நிலவியது. பாதை வளைந்து வளைந்து கருக்களில் அமைதியாக சென்றது. காரின் ஓசையும் பெரிதாக எழவில்லை.

சற்று அமைதிக்குப்பின் இவர் மெதுவாக கேட்டார் : “உனக்கு அது நினைவிருக்கின்றதா… நாமும்; வீட்டை நோக்கி வந்து சேர நேர்ந்ததா…”

“எதைக் கூறுகின்றீர்கள்...”

“முதல் பிள்ளையின் போது… நினைவில்லையா…”

மெதுவாக முனங்குவதுப்போல் கேட்டார் சிந்தனையுடன்.

இவ்வளவு காலம் கழிந்து, இம் முதிய பெரியவர்கள், எப்படி தங்கள் காலத்தை நளினமாக மீட்டு, எண்;ணிப்பார்க்கின்றார்கள்…

6

நேற்றுதான் அவரது மரணச்சடங்கு. அவரது உடலை சுமந்த கார் ஒன்று, ஏற்கனவே அவரது பல்கலைக்கழகம்; நோக்கி சென்று சேர்ந்திருந்தது.

தான் காதலித்த பல்கலைக்கழகம் அவரை இன்று இறுதி முறையாக வருமாறு அழைத்திருந்தது.

“குமார் உங்களது வீட்டு பிரச்சனை எவ்வாறு உள்ளது”. ஆழ்ந்த கரிசனை கொண்ட மெல்லிய கரகரத்த குரலில் அன்போடு வினவுவார் அவர். இவரது இந்த கரகரத்த குரல், கார்கியின் ர்நுசுஆஐவு என்ற சிறு கதையில் வரும் ஒரு பாத்திரத்தின், கரகரத்த மென் குரலை நினைவுப்படுத்தியது. கார்கிதனது பாத்திரங்களில் சித்தரித்தது போன்ற ஏதோ ஒன்று இது. இது போலவே எனது நெருங்கிய உறவினர் ஒருவரும் பேசுவது உண்டு.

பல்கலைக்கழகத்தில், இவரது நடவடிக்கைகள் பல்வேறு வகைப்பட்டவை. மிக மிக ஆழமான மனித நேயம். இலக்கிய புலமை. இசை, இலக்கியம், சேக்ஷ்பியர், நாடகம், மாணவர் போராட்டம், கவிதைகள் - என இவர் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம். பல்கலைக்கழகத்தின் ஒரே PROCTOR ஆகவும், குறைந்தது இரு முறை கலைவளாகத்தின், தலைவராகவும் (Dean), பேராதனை பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி மாணவனுமான (1952) இவர் அதே பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாய் விரிவுரையாளராக, பேராசிரியராக, பின் டீனாக, புரெக்டராக கடமையாற்றி உள்ளார் - ஒரு ஐம்பது நீண்ட ஆண்டுகள். அவரது மனைவி -பிரிஜெட் ஒரு பாரம்பரிய செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தாலும் (வளவ) - இவரை பல்கலைக்கழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார்.

ஒருவர் என்னிடம், கதைக்கும் போது, கூறினார் : “நம்பமாட்டீர்கள். மிக மிக சிறிய விடயம்” “அதைசெய்ததற்கு எத்தனையோ வார்த்தைகளில் நன்றி கூறி கொண்டிருப்பார்”. இவரது இந்த எளிமை எங்கிருந்து வந்தது என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது.

“இவரது எளிமை : அது அனைத்தும் கலாசாரம்தான். ஆழமான கற்கை. இவையே இந்த பண்பை இவரில் கொண்டு வந்திருக்கலாம்”. இந்த கருத்தை ஏற்க என்மனம் சற்று சங்கடப்பட்டது. ஆழமான கல்வி, அகங்காரத்தையே தோற்றுவிக்கும் என்ற கருத்தும் உலகில் உண்டென்பதை அறிந்திருந்தேன். ஆனால் ஹியுகோ என்ற நண்பர், கேட்ட மாத்திரத்திலேயே, பதிலை தயாராக வைத்திருந்தவர் போல கூறினார் : “ஏழ்மை”. “ஆம்”, “பணிவுமிக்க, ஏழ்மையான ஓர் குடும்ப சூழல். அது, இந்த எளிமையை கொண்டுவரத்தான் செய்யும்”.

இவள் கூறினாள் : “சிறுவயதில் இவர் மிகவும் கஷ்டப்பட்டவர்தான்.

‘ஏழு பிள்ளைகள். நினைத்து பாருங்கள் குமார்’. “ஏழு குழந்தைகள். தந்தை ஒரு ஆசிரியர். தாய் வெறும் இல்லத்தரசி. பாவம், காலை சாப்பாட்டுக்கு மூன்றே மூன்று இடியாப்பங்களை எண்ணி தருவார்களாம். நிலைமையைப் பாருங்கள்”.

அபர்னா பிறக்கும் போது – சிசேரியன் - வயிற்றை இரு கையாளும் இறுக்கி பிடித்து – எப்படி எடுத்தார்கள் - இவர் வந்து பார்த்தார் - பார்த்துவிட்டு, ‘பார்த்துவிட்டேன்… என் குழந்தையை’ இனி கடமைக்கு சென்றாக வேண்டும் என்று பல்கலைக்கழகம் சென்றுவிட்டார் படிப்பிப்பதற்கு…’

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.