7

அவர்களது ஒடுங்கிய சாப்பாட்டு மேசையில் மூவரும் நெருக்கமாய் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம்.

‘நுளம்பு தைலத்தை’ நீட்டி தேய்த்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சிறிய குப்பியை என்னிடம் நீட்டினார்.

“கண்களைத் திறக்க முடியவில்லை...’’ என்று கூறியப்படி கண்களை இரு கரங்களாலும் அழுந்த தேய்த்து கொண்டே. அவள் வந்தாள.; “பித்தோவன், வேரியேசன் ஒஃப் பிரமத்தியூஸ் (Variation
Of Prometheus) என்று ஒரு ராகத்தை இசைத்துள்ளாரே...” கதை, அங்குமிங்கும் சுற்றி இறுதியில் அனிவத்த மாதா கோவிலில் வந்து நின்றது.

“அதை நீங்கள் பார்க்கத்தான் வேண்டும். எனது வீட்டு உதவியாள் என்னிடமிருந்து எதை எதையோ எடுத்துக்கொண்டு மறைந்துவிட்டாள். நீங்கள் இருவரும்தான் என் பெற்றோர்கள் என்று கூறுவாள். அப்படித்தான் நானும் பார்த்து வந்தேன். அவள் எடுத்துக்கொண்டு மறைந்ததும், யாருமில்லை. மாதாவிடம் சென்றுத்தான் முறையிட்டேன். மாதாவே, எனது நிலைமையை பார்த்தாயா என்றேன். இரண்டு நாட்களில் எங்கேயோ இருந்து வந்து சேர்ந்துவிட்டாள்”.

“எனது மகனுக்குத்தான் என்னை காட்ட முடியாது... நான் இல்லாவிடின் இவன்...”

“காலையிலிருந்து, ஒரே வேலை... பிறகு இரண்டு மணிக்கு பாடசாலை கூட்டம்... ஆறுமணிக்குத்தான் வீடு திரும்பினேன்... பிறகு அதிலிருந்து இப்போது ஏழு மணிவரை - கற்பித்தல். ம்... நான் செய்த பாவங்களுக்கெல்லாம் தான் இப்போது அனுபவிக்கின்றேன்...”.

“கண்ணை தேய்காதீர்கள்...”

“ம்... ம்... இப்போது நுளம்பு சரியாகிவிட்டது”

“நீங்கள் சாப்பிடுங்கள்... அவர் சாப்பிட மாட்டார்... அவரது பற்கள் அவருக்கு பிரச்சனை... இனி இந்த பற்கள் சரிவராது... இதை வீசிவிட்டு புதிதாக இம்ப்ளான்ட் செய்ய வேண்டியுள்ளது... கண்டியிலேயே பிரசித்தமான பல் நிபுணர் கூறியுள்ளார், எனக்கு இம்ப்ளான்ட் செய்யலாம், கட்டணமின்றி என. எனக்கு தேவையில்லை... நான் கட்டியுள்ள பற்களே, நன்றாக இருக்கின்றன... அதை மாற்ற வேண்டிய அவசியமில்லை... ஆனால் கூறிவிட்டேன்... எனக்கு பதிலாக எனது கணவருக்கு இதை செய்துவிடுங்கள் என்று... இதுதான் நான் இந்த குழந்தைக்கு இம்முறை அளிக்கும் பிறந்த நாள் பரிசு. இரண்டு இலட்சம் செலவாகுமாம்... ஆனால், அந்த டாக்டரின் பிள்ளைகளுக்கு நான் படிப்பிப்பதால், அவர் கட்டணமில்லை என்கின்றார்”.

“இனி படுப்பதற்கும் முன் அனைத்தையும் கழுவி, இந்த குழந்தையும் தூங்கப்போட்டு... பிறகு வேதம் ஓதி வணங்கி – அப்பாப்பா, எத்தனையை செய்வது...”.

8

சதாவை கூட்டிச் சென்றேன். எல்லா விளக்குகளையும் ஏற்றி, பிரகாசமூட்டி ஒவியங்களை நன்கு தெரியுமாறு செய்தார்கள். பேராசியரும் ஓர் விருந்தினனை வரவேற்க, உடுத்துவது போல் சீரான உடையை அணிந்திருந்தார். இவள் அறையை நோக்கி ஒரு குரல் கொடுத்ததும் முண்டி முண்டி தேய்த்து தேய்த்து நடந்து கொண்டு, கையில் ஓர் புத்தகத்துடன் அறை வாசலில் வந்து வாயிலை பிடித்தப்படிநின்றார். இவர் முகத்தில், வழமையாக வரும் வேதனை வந்திருந்தது. இன்று உங்களுக்கு என்ன என்று கூறி அவரருகே சென்று கையைப்பிடித்து இழுத்தாள் இவள்.

“இன்று சற்றுமோசம்”; என்று வழமையான அவரது பாடலைப்பாடி அவர் ஏதோ சமாதானம் சொல்ல முற்பட்டார். நான் சென்று, அவரது ஒரு கரத்தைப் பற்றிக்கொண்டு, நூலை மறுக்கையில் வாங்கிக்கொண்டு கூட்டி வந்தேன். நூல், நாற்பத்து மூன்று குழுவினரைப் பற்றியது. வந்து பியோனோவுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து, அப்படியே பியோனோவில் சாய்ந்துக்கொண்டு, இப்படி சாய்வதற்காகத்தான் இவ் இருக்கையை நான் தேர்வது என்று சதாவுக்கு விளக்கமளித்தார்.

“ஓ...நீங்கள் கெப்ரியலின் ஸ்டுடன்ட்... நல்லது... அப்படியென்றால் ஏதாவது அவருடனான ஞாபகங்களை எனக்கு சொல்லுங்கள்” என்றார். சதா பெரிதாக ஒன்றும் சொல்லாததால் அவர் தனது ஞாபகங்களை அவிழ்க தொடங்கினார்...

“அதற்கூடாக சென்றால் வீடு... பத்து பதினைந்து கிலோ மீற்றர் சைக்கிள் ஓட்டம். டொனால் ராமநாயக்க உடனும் நான் தொடர்பு கொண்டிருந்தேன். சிறப்பான மனிதர்கள் அவர்கள.; ஆனால் இவர்களில் யார் அதிக மனிதநேயம் பூண்டவர் என்று கேட்பீர்களேயானால் ‘அது பெயின்டர்தான்’. பெயின்டரின் ஓவியங்கள் நுவரெலியாவிலும் உண்டு – கண்டி திருத்துவ கல்லூரியிலும் உண்டு’.

தனது மாணவிகளுடன் குரல் எடுத்துப்பாடி, அவர்களுக்கு, சுரங்களையும் ராகங்களையும் கற்பித்துக்கொடுத்து கொண்டிருந்த இவள் குரல் கொடுத்தாள் : “சமையலறையிலும் அவரது ஒவியங்கள் உண்டு... சென்று பாருங்கள்...”

சமையலறையில் விளக்கு போடப்பட்டிருக்கவில்லை. இருந்தும், அவளாய் வந்து சதாவை சமையல்கட்டுக்கு கூட்டிச்சென்றாள். “ஒரு முறை இவர் இந்த படிகளில் அப்படியே குப்புற விழுந்து பலத்த அடிப்பட்டு மூக்கில் ரத்தம் சொட்ட தொடங்கிவிட்டது. நல்ல-வேளையாக அந்நேரம் மருத்துவராயிருந்த பெற்றோர்கள் இங்கு இருந்தார்கள். அவர்கள் அழைத்து சென்றார்கள். அழைத்து சென்றது மாத்திரமல்ல எங்கள் இருவரையும் அன்றிரவு அவர்களுடனே தங்கவைத்தும் கொண்டார்கள். பாருங்கள் மனிதர்களை. நாங்களோ, ஒரு காலை

புதைக்குழிக்குள்ளும் மறுகாலை வெளியிலும் வைத்து இழுத்துக் கொண்டிருப்பவர்கள்… எங்களுக்கு இப்படி ஒரு ஆதரவா?

9

தொலைபேசியில் கேட்டேன் : “முதலாவது கோல்... வாழ்த்து தெரிவிக்க... நிச்சயமாக வாருங்கள்... நான் எப்பொழுதே எழுந்துவிட்டேன்”.

உள்ளேசென்று அமர்ந்ததும் “தேனீர்” என்றாள்.

“நீங்கள் அருந்தும் வேளை இதுவென்றால் பரவாயில்லை” பதிலளித்தேன்.

“இல்லை... இல்லை... நான் காலையில் இரண்டு குவளை தண்ணீர் மாத்திரம். நீங்கள் கட்டாயம் அருந்த வேண்டும்” என்றாள். மறுத்துவிட்டேன்.

“நாளை மறுதினம் கிறிஸ்மஸ்... அன்று இதே நாள்... எனக்கு முதல் குழந்தை... எனக்கு மாத்திரமல்ல... இருவரது குடும்பத்திலும், முதலாவது பேரப்பிள்ளை... ஏழு ராத்தல்... அவ்வளவு பெரிதாய் இருந்தான்... திகைத்துப் போனார்கள்... ஒரு பெரிய உடம்புக்காரிக்கு – அது சகஜம்... ஆனால் நானோ... இவ்வளவு சிறிசு... இந்நிலையில், இவ்வளவு பெரிய குழந்தை... மருத்துவர்களும் திகைத்து போனார்கள்... அவ்வளவு மருத்துவ கருவிகளையும் கொண்டு என் உடலை வேதனைக்கு உட்படுத்தி விட்டனர் - இவனை வெளியே எடுக்க. வலியான வலி... ஆனால் மூச்சுவிடவில்லை நான். வலி-வலியிலென்ன. வலி என்று ஏதுமில்லாமல் அப்படி என்ன வாழ்க்கை... கூறுவார்கள்... வாழ்வு சுமக்க முடியாத அளவு வலிகொண்டது என்று... முழு முட்டாள்கள்... எனக்கு வலிதரும் மனோ தைரியமே வேறு... மருத்துவர்கள் அவர்களுக்குள்ளேயே கதைத்துக்கொண்டார்கள் - எனக்கு கேட்கிறது. என்ன இவள்... பயங்கர ஒரு இராட்சச பெண்மணி... இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அவனுடன் பேசியாக வேண்டும்... நீயுசிலாந்தில் இப்போது பகலாக இருக்குமோ...”

10

“ஒரு நல்ல வரியை வாசித்தேன் இருங்கள்” – கொஞ்சம் இருங்கள்... சிறிய பத்திரிகை துணுக்கொன்றை அளவாய் வெட்டியெடுத்து கொப்பி ஒன்றில் கவனமாய் வைத்திருந்தாள். “கேளுங்கள் : ஒரு கொடுங்கோலன் இறப்பது அவனுக்கு எதிரான போராட்டங்களினால் அல்ல... ப10மியே தாங்கமுடியாத அளவில் அவனது பேராசைகளால் அவன் பீடிக்கப்பட்டுக் கொள்ளும் போது அவன் மரணிக்கின்றான்”.

வேறு ஒரு துண்டை தேடியெடுத்தாள்... பேராசிரியர் எழுதிய கவிதையொன்று அது. பேராசிரியர் கவிதைக்கு ABSOLVE (D)  என்று தலைப்பிட்டிருந்தார். அதன் கருத்து : காலத்தின் வருஷங்கள் என்னை முத்தமிடுகின்றன. உலர்ந்து போகிறேன் நான். ஆனால் “நீயோ, இன்னும் அதிகம் அதிகமாய் மிளிர்கிறாய். என தோன்றுகிறது. நல்லது. ஆனால் அதிகரிக்கும் இவ் அழகில், எனது பங்கும் இருக்குமா என் அன்பே” என்பது கவிதை.

இக் கவிதைக்கு பேராசிரியர் ‘பாவமன்னிப்பு’ என்று பெயரிட்டிருந்தாலும், முதுமையில் வந்துசேரக் கூடிய இவ்வளவு அழகை யார் எழுதக்கூடும் என்றுபட்டது.

அவள் எனக்கு விளக்கினாள் : “பாவமன்னிப்பு என்பது, மாதா கோவிலில், தனது பாவங்களை எடுத்துரைக்கவும் மன்னிப்பு கோரவும் மீண்டும் இதனை செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி வழங்கவும் மனிதருக்கு செய்யப்பட்டுள்ள ஒரு ஏற்பாடு... எனக்கு தெரியாது... ஆனால் அவரில்லாவிட்டாள் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா... அதுவும் தெரியாது... எனது சகோதரர்கள் மிக மிக மோசமாக என்னை நடத்துவார்கள்... சிறுவயதில் என்னை கொடுமைப்படுத்தி திட்டுவார்கள்... தமிழச்சி... பக்கலி... என்றெல்லாம் திட்டுவார்கள்... பக்கலி என்றால் வளைந்த கால்களை உடையவள் என்று அர்த்தம்... உண்மையில் அந்த நாட்களிலெல்லாம் நான் அழகாகவே இருக்கவில்லை. என்னை அழகுப்படுத்திக் கொள்ள எதையும் நான் செய்தேனும் இல்லை... இவரை சந்தித்த பிறகுதான்... அந்த நாள் தொடக்கம் என்னை நான் அழகுப்படுத்தி கொண்டேன்... எனது வாழ்வில் அப்பொழுதுதான் ஒரு புது அத்தியாயமே திறந்தது... இது போலதான் நானும் அவருக்கு...” கதைத்து கொண்டு வந்தவள் திடீரென வாயடைத்து போனாள்... அவளால் பேசமுடியவில்லை... கண்களில் நீர் முட்டி திரள வெறித்து முகத்தை சுவரோரத்து ஜன்னலை நோக்கி திரும்பிக் கொண்டாள். “இல்லை, இல்லை... லுத்விக்தான் Lower Depths நாடகத்தைப் போட்டது... இவர் போட்டது Petty Bourgios. இவர் உள்ளத்தில், அதன் அடி ஆழத்தில், ஒரு இடதுசாரிதான்... ஆனால் இந்நாட்டில் இருக்கும் இடதுசாரிகள் போல கட்சி சார்பான இடதுசாரிகள்... அல்ல. இவர், வேறு விதமான இடதுசாரி. முதலில் இவரை நெருடியது மனிதாபிமான கேள்விகள்தான்... இதனால் இவருக்கு எத்தனை பிரச்சனைகள்... 1983ல்... இன வன்செயல். வளாகத்துக்குள்ளேயே தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள்... அவர்களை உடனடியாக காப்பாற்றாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்யப்போகின்றேன் என செனட்டுக்கு அறிவித்துவிட்டார்... அதன் பிறகு இவரை நீக்க வேண்டும் என்று இனவாத மாணவர்கள் குரல் கொடுத்தனர்... அப்பொழுது nஐயவர்த்தன காலம். இந்த இரண்டொரு மாணவருக்கு பின்னால் இரண்டொரு பேராசிரியர்களும் இருந்தனர்... ஆனால் இவர் அசையவில்லை...”.

“இவரின் மத நம்பிக்கை வித்தியாசமானது... இவரே கூறுவார்... பிரிஜெட்... உனது மத நம்பிக்கை இருக்குமளவுக்கு எனக்கு மத நம்பிக்கையில்லை... உன்னைப்போல் இருந்திருந்தால் எனக்கும் நன்றாகவே இருந்திருக்கும் போலப்படுகின்றது. இருவருக்கும், சில சில விடயங்கள் தொடர்பாக தனித்த கருத்துக்கள் இருந்தன... இருந்திருக்கலாம் தானே... நீங்கள் நாளை மறுதினம் உணவருந்த வந்தாக வேண்டும்...”

அவரது உடல், பேராதனை வளாகத்தில் இருந்தது. உடலும் உள்ளமும் ஆகிய தனது பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து, 1970 களில், அகற்றப்பட்டு தண்டனைக்கு உரிய ரீதியில் களனிய, விதியலங்கார பல்கலைக்கழகத்தில் ஒரு சில காலம் கழிக்க நேர்ந்தாலும் மொத்தத்தில் அவர்களது வாழ்க்கை பேராதனை வளாகத்திலேயே முற்றும் முழுவதுமாய் கழிந்தது எனக் கூறலாம்.

தனக்களிக்கப்பட்ட தண்டனையை பேராசிரியர் புன்னகையுடனேயே ஏற்றிருந்தார். அவரின் கீழ் பணிபுரிந்த விரிவுரையாளர்களில் ஒருவர் Tall என்பதனையும் Hight என்பதனையும் மாணவர்க்கு விளக்கம் செய்வதற்காக, காலஞ்சென்ற முன்னைய பிரதமர் ஸ்ரீமாவினையும், இலங்கையின் மலைகளில் ஒன்றான சிவனொளிபாத மலையையும் உதாரணமாகக்கொண்டு விளக்க முற்பட்டிருந்தார். இந்நிகழ்வினை, பேராசிரியருக்கு எதிராக, வளாக தலைமைக்கு ஆசைப்பட்டிருந்த ஒருவர், பிரதமருக்கு அறிவித்து விட, பேராசிரியர் வேறு அடிப்படையில் உடனடியாக இடமாற்றம் பெற்றார்.

“ஆம். மௌன்ட்லெவன்யாவில் இருந்து அதன் மற்ற தொங்கலான – களனிக்கு நான் தினசரி பிரயாணம் செய்ய வேண்டி இருந்து. கிட்டத்தட்ட, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பேரூந்தில் செலவிட வேண்டிய நிர்பந்தம்”– சிரித்தார். யாரோ செய்த செயலுக்காக தான் தண்டனையை, ஏற்றார்.

“சிரமம்தான். ஆனால் முடியாத காரியம் என்று ஒன்றில்லை இல்லை”– கூறினார் மனுஷர்.

1971ல் மாணவர்கள் சிறையில் அடைப்பட்ட போது, அவர்களை சென்று சிறைச்சாலைகளில் பார்வையிட்டார். படிப்பை விட்டுவிடக்கூடாது. படியுங்கள். பரீட்சை எடுப்பதற்குரிய வழிவகையினை, நான், உறுதி செய்வேன் என்று உற்சாகப்படுத்தினார். அம்மாணவர்கள் பரீட்சை எடுப்பதனை ஊர்ஜிதம் செய்தார்.

இது போலவே, இன வன்செயலின் போது, “முழு மாணவரும் வகுப்புக்கு சமூகம் தரும் வரை,எனது பீடத்தில் கற்பித்தலொன்றும் நடைபெறாது. தமிழ் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்கின்றோம் என அரசு அறிவிக்க வேண்டும்.”

மடோல்தூவ என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். அது பொறுத்து கூறுகையில், கூறினார் : “மொழிபெயர்ப்பு ! அது எப்படி என்றால் நீங்கள், அவ்விடயத்தை, உங்கள் மொழியில் எழுதுவது எப்படியோ அது போன்று மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும்.”

இளம் விரிவுரையாளரான,  இளைஞன் ஒருவன்  இவரிடம் ஒருமுறை கூறினான் : “மத நம்பிக்கை இல்லாத என் இதயத்தில், நீங்கள் ஒரு கடவுளாகவே இருக்கின்றீர்கள்…” இவரது பதில் : “இருக்கலாம் - என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்த உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி, ஆனால் என்னை மனிதனாகவே இருக்க விடுங்கள்… நான் மனிதனாகவே இருந்து விட்டு போகிறேன்...”

11

பேராதனிய வளாகத்தின், இன்னுமொரு ஜாம்பவான் ஆகிய, நூலகர், இயன் குணதிலக்க தனது எழுபது வருட சேகரிப்பினை பேராதனிய பல்கலைக்கழகத்திற்கு ஆஷ்லி ஹல்பே ஊடாக கொடுத்ததும், பின்நாளில் அந்நிதியத்திலிருந்து பேராசிரியர்;, ராஜினாமா செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதும், குறிக்கத்தக்கது.

2004ல் பல்வேறு அமைச்சர்கள், மத்திய மாகாண ஆளுனர், பல்கலைக்கழகத் தலைவர், பேராசிரியர்;, விரிவுரையாளர் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர், இயன் - ரொசலின் குணதிலக்க கலையரங்க அடிக்கல் நாட்டு விழாவில். பிரதான உரையை நிகழ்த்திய பேராசிரியர்; ஆஷ்லி ஹல்பேவிடம் “இருபது லட்சத்துக்கான” காசோலை வழங்கப்பட்டது.

மேற்படி ஸ்தாபனத்திலிருந்து பேராசிரியர்; விலகி கொள்வதற்கான ராஜினாமா கடிதத்திற்கு, இறுதி வடிவம் கொடுக்க நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

மூவரும் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தோம்.

“நோக்கத்தை வெளிப்படையாக கூறமுடியாது. கடிதத்தில்” என்று கூறியவுடன் இருவரும் தலையாட்டி ஆமோதித்தனர்.

“சற்று நேரத்தில், தான் ராஜினாமா செய்கின்றேன்” என்பதனை தெளிவாக சொல்ல வேண்டும் என மீண்டும் சதுரம் ஒன்றுக்கு வழமைப்போல் திரும்பினர்.

இப்படியே அலைக்கழிவதும், சதுரம் ஒன்றுக்கு வட்டமடித்து மீண்டும் திரும்புவதுமாய் ஓர் அரைமணி நேரத்தை செலவிட்டோம்.

“பாருங்கள் - நேரமில்லை. களைப்பு...!

“வகுப்புகள் - சமையல் - பின்னர் இதோ இவரின் அலங்கோலங்களை துப்பறவு செய்வது...”

நான் அடிமனதிலிருந்து ஆமோதித்து கூறினேன் : “நீங்கள் நிறுத்த கூடாது. இதுதான் உங்களை நிமிர்த்தி வைத்துள்ளது...”

பேராசிரியரை யாரோ வாள்கொண்டு இரண்டாக கிழித்து பிளந்ததாய் இருந்திருக்க வேண்டும் - துணுக்குற்று ஆழ்ந்த வேதனையுடன் கனநேரம் தாமதமின்றி வெடித்து வெளிவந்து விழுந்தன அவரது வார்த்தைகள் : “நீ இல்லாமல்... அதை கற்பனைக்கூட பண்ணி பார்க்க முடியாது...”

தொடரும் முன், நான் குறிக்கிட்டு பேச்சை மாற்றினேன். அவள் தொடர்ந்து முறையிட்டாள் :

“இன்று காலை, பாலை கொட்டி விட்டார். பால் பைக்கட்டை, நான் கவனமாக கத்தரிப்பேன். கவனமாக கத்தரித்தால், கொட்டும் போது பால் சிந்தாது, நான் வர முன் - அத்தனை அவசரம்... பால் கொட்டி மேசையின் அடி, விளிம்பு வரைக்கும் ஊறி போய் விட்டது...”

“என்ன செய்வது... இன்றுதான் இப்படி நடந்துள்ளது.” இவர் சமாதானம் கூறினார்.

“இன்று மட்டுமா? சென்ற கிழமை... கபர்ட் எல்லாம் கொட்டி தீர்த்து... அதற்கு முன் - புதன் கிழமை...”

“ஒன்று வீண்விடயம்... மற்றது மீண்டும் உட்கார்ந்து சுத்தம் செய்தல்...”

அவள் கோபத்துடன் கதைக்க தொடங்கினாள்.

“சரி, சரி சிந்திப்போன பால் குறித்து இனி பேசி என்ன பயன் (Don’t cry over spilled milk)).

சிரித்து விட்டாள் வாய்விட்டு. அவளது கோபமான முகபாவம் சடுதியாக மாற்றமடைந்தது. அவரது இந்த சொற்பிரயோகத்தை ஆமோதித்து, பாராட்டி புன்னகைத்து கூறினாள் : “மொழியிலுள்ள உங்கள் அறிவை பாவித்து நீங்கள் இப்படித்தான் தப்பி விடுகின்றீர்கள்.”

அவளது மகள் ஒருமுறை கூறினாள் : அம்மா ஆரம்பத்தில் சாதுவாகத்தான் இருந்தாளாம.; ஆனால் எனது தந்தையை காக்கும் பொருட்டு, அவள் சமயத்தில் உலகத்தை கையாண்டு இருக்கின்றார். எனது தந்தையை நீங்கள் அறிவீர்கள் - சாது-பரமசாது - அதிலும் அவரது விடயத்தில் - அவருக்காக அவர் போராடவே மாட்டார் - ஒதுங்கிக்கொள்வார் - இவற்றை கேட்கத்துணிந்தது அம்மா ஒருத்தித்தான் - அதுவே இவளை இப்படியாக மாற்றியிருக்கின்றது...

இதனுடன் அவர் கூறியிருந்ததும், அவள் கூறியிருந்ததும் நினைவில் தட்டின :

"என்னை மனிதனாகவே இருக்க விடுங்கள்" என அவர் உரைத்ததும் 'இனி - இந்த குழந்தையை தூங்கப்போட்டு, வேதங்களையும் ஓதி..." என்று  முன்னர் ஒருமுறை அவள் உரைத்திருந்ததும்  .... என்  நினைவில் தட்டியது. கூடவே, கண்ணன்-சிவன் ஆகிய இரு கடவுளாரின் மனையாள்களும், ஐதீகங்களின் படி, தத்தமது கணவர்களின் கழுத்தை கணநேரத்தில் நெறித்தவர்கள் தாம்- ஒருவர், விஷம் பருகுதலை தடுக்கவும்- மற்றவர் குசேலனுக்கு சொத்துக்கள் முழுமையாக சென்று,  ஆண்டியாவதை  தடுத்து நிறுத்தவும்.... இவையும் கூட என் நினைவில் தட்டுப்படவே செய்தன.. இப்போது.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.