1

உலகமே நடு நடுங்கிய, அமெரிக்காவின், தேசிய செயலாளர், அந்தனி பிளிங்கன் (2021-2025), ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லெப்ரோவை, சந்திக்கக் கோரியபோது, லெப்ரோவ் அதனை மறுத்து விட்டார் என்ற செய்திகள் வெளிவந்திருந்தன. உலகத்தைத் திகில்கொள்ளச் செய்த விடயம் இது. கிட்டத்தட்ட முதல் தடவையாக, இவ்வித மறுப்பானது, இவ்விரு நாடுகளுக்குமிடையே எழுவதாய் இருந்தது. “காசா-உக்ரைன்” படுகொலைகளுக்குத் தலைமை பொறுப்பு வகித்தவர் அந்தனி பிளிங்கன் என நியுயோர்க் டைம்ஸ் கோடிட்டிருந்தது (18.01.2025).

பிரதம மந்திரிகளை, தான் நினைத்தாற்போல் தனது பிரமாண்ட விமானம்தாங்கிக் கப்பல்களுக்குள் தள்ளி, அவர்களை அப்படியே முக்கி எடுத்து, பயமுறுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் வரலாற்றில், இப்படி ஒரு அவமானமா என விமர்சகர்கள் போர்க்கொடி உயர்த்தி நின்றனர். ஆனால், லெப்ரோவும் இதனுடன் நிறுத்தினார் இல்லை: “அணுவாயுத பிரயோகிப்புக்கான, சிவப்புப் பொத்தானை அழுத்த வேண்டிய தருணத்தில் நாம் யாருடனும் கதைக்க வேண்டிய அவசியம் இல்லை” என அவர் கூறியது ஒருபுறம் முகத்தில் அறைந்தது போல் இருந்தாலும், மறுபுறம், உக்ரைன் போரின் அல்லது உலக முகத்தின் மாறுதல்களை இது எமக்கு எடுத்துரைப்பதாக இருந்தது. (21.09.2024).

2

இதேதினங்களில்தான், ரஷ்ய ராணுவமானது, உக்ரைனிய போர்முனையில் பெருமளவு வெற்றி பெற்று முன்னேறியும் இருந்தது. இந்நாளிலிருந்து, கிட்டத்தட்ட, நான்கு மாதங்களுக்குள்ளாகவே, (மூன்று வருட காலப் போரில்) 97,000 உக்ரைனிய போர் வீரர்களை, கர்க்ஸ் பகுதியில் வைத்து, கொன்றொழித்து இருக்கின்றோம் என புட்டினும் அறிவிக்க நேர்ந்தது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிராக, பொருளாதார தடையானது, மேற்படி தினங்களில் (Sanctions) முற்றாகச் செயலிழந்த நிலையும் தோன்ற தொடங்கியிருந்தது. அதாவது, ஒருபக்கம் பொருளாதார தடையின் எடுபடாமை. மறுபக்கம் போர்முனையில் உக்ரைனும் நேட்டோவும், அடைந்த படுதோல்வி.

முதலாவதான, “எடுபடாமையை” எடுத்தால், ரஷ்ய மூலப் பொருட்களில் தங்கியிருந்த நாடுகளே “இப்பொருளாதார தடையை” நிர்மூலமாக்கியதில் முக்கிய பங்காற்றின என கூறுவதில் உண்மை இல்லாமலும் இல்லை. உதாரணம் சீனாவும், இந்தியாவும். இவ்விரு நாடுகளுக்கும் ரஷ்ய எரிவாயுவும், ரஷ்ய எண்ணையும் இப்போது மலிவாகக் கிட்டுவதாய் இருந்தன. இனி, இத்தகைய கொடுக்கல்-வாங்கலுக்குப் பொருளியல் தடை என்பது (Sanction) ஒரு தடைக்கல்லாக இருக்கும் பட்சத்தில், அத்தகைய தடையானது புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது சுக்குநூறாக நொறுக்கித் தள்ளப்பட வேண்டும் என்றாகின்றது (இதனை, இந்நாடுகள் செய்யத் துணிந்திருந்தன என்று கூறி வைப்பது பொருத்தமானது).

பொருளாதார தடையின் மொத்த விளைவுகள் இப்படி இருக்க, இனி, இரண்டாவது காரணமான, போர் பின்னடைவைப் பார்ப்போமெனில், இவற்றை வெளிப்படையாக உலக நாடுகளும் காணக்கூடியதாக இருந்தது. ஆக, இவ்விரண்டு காரணிகளும் சேர்ந்து, (பொருளாதார தடையும் உக்ரைன் போரின் நிலவரமும்) புட்டினை அழித்துவிடும் என்று நம்பப்பட்டது. ஆனால், இந்த நம்பிக்கையும் இறுதியில் பொய்த்துப் போவதாகத்தான் இருந்தது.

3

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போமெனில், பொருளாதார தடையை அடுத்து, ரஷ்யா தனது ஆர்டிக் கடல் பாதையைத் திறந்து வைத்து, அதனை, தனது திரவ எரிவாயு பொருட்களின் ஏற்றுமதிக்காக (LNG) திறம்பட பாவிக்கத் தொடங்கிவிட்டது. பனிப்பாறைகளையும், பனிப்படலங்களையும் ஊடுருவி செல்லக்கூடிய 15க்கும் மேற்பட்ட பிரமாண்ட எரிவாயு கப்பல்களை அது களமிறக்கியது. இதன் முழுப் பயனையும் பெற்றோர், பயன் பெற்றோர் அதே சீனாவும் இந்தியாவுமே.

தடைகளின் நெருக்குதலால், ரஷ்ய கப்பல்களுக்கு மூடப்பட்டிருந்த சூயஸ் கால்வாயும் இந்த புதிய போக்குவரத்து திட்டத்தால், தனது வழமையான லாபத்தை இழக்கத் தொடங்கி விட்டது. இப்போது பயண செலவு 40 வீதத்தால் குறைவடைந்து போனது. இது இந்தியா-சீன வர்த்தகங்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதமானது. இது, மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதைத்தான்.

இதே நிலவரத்தை நாம், உக்ரைன் போர் முனையிலும் காணக்கூடியதாய் இருந்தது. உக்ரைன் போரின் நிலவரங்கள், உலக பொருளியல், வர்த்தக அல்லது சந்தை தொடர்பான நிலைமைகளை வெகுவாக பாதித்தன. (சூயஸ் கால்வாயை போல). இதேவேளை, ரஷ்ய சார்பான நாடுகள், மேற்படி நிலைமைகளைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்கத் தொடங்கி விட்டன. காரணம், இப்போது, இவர்களின் வர்த்தகங்களில் போட்டி விலைகள் குறைவாகவும், வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் காணப்பட்டது. (மீண்டும் சூயஸ் கால்வாய் உதாரணம்). வேறு வார்த்தையில் கூறினால், உலக சந்தையை விட இப்போது, ரஷ்ய எரிவாயுவும், ரஷ்ய எண்ணையும் மலிவாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் கிடைக்க ஆரம்பித்து விட்டன எனலாம். இது, ‘சீனத்தைக் கட்டுப்படுத்துவோம்’ என்ற அமெரிக்க ஆவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருந்தது. ஆனால், தனது நாட்டின் கோடிஸ்வரர்களின் நலன்களை பிரிதிநிதித்துவப்படுத்த பார்க்கும் ட்ரம்ப் சீனாவுக்கு எதிரான இன்னொரு போர் நடவடிக்கையை (அல்லது போர் நகர்வை) அறிவிக்க, நிர்பந்திக்கப்படுவது இயல்பானது. (ஆகவேதான், 145 சதவீத வரிவிதிப்பு. அது பின்னர் பேச்சுவார்த்தையாகி, அது பின்னர் ஒப்பந்தமாகி, இறுதியில்… அது வேறு கதை!). இருந்தும், இப்போது, புன்னகை பூக்கும் சந்தர்ப்பம் சீனாவின் சீ-ஜின்-பிங்கிற்கு கிட்டியது. (வரிவிதிப்பை இரு நாடுகளும் தற்போது 90 நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கின்றன. சீனாவுக்கான வரிகள் 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக மாறியுள்ளது. அமெரிக்காவுக்கான சீன வரிவிதிப்பு 10 சதவீதமாய் குறைந்துள்ளது–13.05.2025)

4

சீனாவும் ரஷ்யாவும், மொஸ்கோ கொண்டாட்டத்தின் போது, பேச்சுவார்த்தைகளில் நடத்தி சுமார் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன எனக் கூறப்படுகின்றது. சில சந்திப்புக்கள் (புட்டினுக்கும் சீ-ஜின்-பிங்கிற்கும் இடையே நடந்தவை) ஏழு மணிநேரம் நீடித்ததாயும் தகவல். ஆனால், இவ் ஒப்பந்தங்களில் எவை, எவை உள்ளடக்கப்பட்டன என்பதனை வெளி உலகிற்கு அறிவிக்காதது வழமையானது என்றும் இது மிகச் சிறிய நாடான இலங்கையில் கூட இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகின்றது எனவும் கூறப்பட்டது. (உண்மையாக இருக்கக் கூடும். ஏனெனில் இந்தியா சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களாக இருக்கட்டும் அல்லது சர்வதேச நிதி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட இலங்கையின் பேச்சுவார்த்தை முடிவுகளைக் கூறுவதாக இருக்கட்டும்-அவை என்றும் சரியாக அறியப்படாமலேயே இருக்கின்றன). இருந்தும், இவ் ரஷ்ய-சீன ஒப்பந்தங்கள் இரண்டொன்றைப் பற்றி மட்டும், சில செய்திகள் கசியவிடப்படுவது நடந்தேறியது.

வர்த்தகத்தை எடுத்துக்கொண்டால் இவ் ஒப்பந்தத்தின்படி, சீனா-ரஷ்யா வர்த்தகமானது இனி உச்சத்தைத் தொடப் போகின்றது என்பது மாத்திரமே கசியப்பட்ட விடயமாகியது. ஆனால், 2024லேயே, சீன-ரஷ்ய வர்த்தகமானது ஏற்கனவே 250 கோடி டாலர்களை எட்டிப் பிடித்து, ஒரு சாதனையை நிலைநாட்டி விட்டது என்பது கவனிக்கத்தக்கது. அப்படி என்றால், இனிமேல், மேலும் உச்சத்தைத் தொடப்போவது எந்த புள்ளியை நோக்கி என்பது கேள்வியானது. ஏனெனில், -இது உலகளவில் ஆற்றக்கூடிய தாக்கங்கள் எவையெவை என்ற கேள்வி இப்போது எழத் தொடங்கி விட்டது.

இது முதலாவது விடயம், இரண்டாவதாய், பேச்சுவார்த்தைகளின் போது, சைபீரிய Power-2 என்ற எண்ணைக்குழாய்கள் தொடர்பிலும் விரிவாகவே கலந்துரையாடப்பட்டன எனக் கூறப்பட்டது. (இக்குழாய்களானது 2800KM நீளமுடையது என்பதும் வருடாந்தம் 50 கோடி கியூபிக் மீற்றர் எரிவாயுவை சீனாவுக்கு விநியோகிக்கக் கூடியதாக இருக்குமென்பதும் ஆரம்பத்தில் கூறப்பட்டது). ஆனால், இப்போதைய இதன் உண்மைத்தன்மை யாது என்பது இனித்தான் ஆயப்பட வேண்டியுள்ளது என்பதும் இது சர்வதேச அளவில் எத்தகைய தாக்கங்களை உண்டுப்பண்ண போகின்றது என்பதும் நோக்கப்பட வேண்டியே உள்ளன. ஆகவே, மேற்கூறிய இரு அம்சங்களும் உலக வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் மிக மிக முக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இதுபோக, மூன்றாவதாய், இனிவரும் நாட்களில், இவ்விரு நாடுகளும், சர்வதேசம் தொடர்பிலான தமது நடவடிக்கைகளை, இணைந்த ஓர் அணுகுமுறையால், ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளன என அறிவிக்கப்பட்டது. இதுவே, பாரதூரமான விடயமாகக் கருதப்படுகின்றது. காரணம், இது மீண்டும் உலகினை எவ்வாறு தன்வழியே பாதிக்கப் போகின்றது என்ற கேள்வி முக்கியமானதாக எழுகின்றது-இப் புரிந்துகொள்ளலின், அடிப்படையிலேயே, இனி இவ்விரு நாடுகளும் தமது பரஸ்பர நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றன என்றால், விளைபயன் யாதாய் இருக்கும் என்பது கேள்வியானது என்பதும் அடிப்படையாகின்றது. வேறு வார்த்தைகளில் கூறினால், இதுவே இனி, வரப்போகும் நாட்களுக்கான பேசுபொருளாக இருக்கும் என்ற கருத்துநிலையும் நிலவுகின்றது. அதாவது, இனிவரும் எந்தவொரு நகர்வுக்கும், மேற்படி கருத்துநிலையே, புது அடித்தளமாக இனி அமைந்து இதனடிப்படையிலேயே உலகின் விதி இனி தீர்மானிக்கப்பட போகின்றதா என்பதே கேள்வியாகின்றது.

5

எனவே, ரஷ்ய வெற்றிக் கொண்டாட்டங்கள் பின்வரும் மூன்று விடயங்களை, தற்போது தெரிவு செய்ததாக இருந்தன:

i. உலகின் பல்முனை உருவாக்கம் (Multi Polar World) என்பது.

ii. சீன-ரஷ்யாவுக்கு எதிரானதாக, அமெரிக்காவின் “இருமுகக் கட்டுப்படுத்தல்கள்” (Dual Containment Strategy), பிரயோகிக்கப்படல்.

iii. இனி, இவை தொடர்பில், சர்வதேச அரங்கில், ரஷ்யா-சீனா ஆகிய இரு நாடுகளும், இணைந்து ஆற்றக்கூடிய கருமங்கள் அல்லது பாத்திரம் குறித்த பரஸ்பர சம்மதங்கள்.

6

கிஷோர் மஹுபானியின் கூற்றுப்படி, இன்று ‘சர்வதேச காவல்காரன்’ என ஒருவர் இல்லை எனவும் வேண்டுமானால் தனித்தனி நாடுகள், தத்தமது நாட்டின் பாதுகாப்பு கருதி(?) எல்லைப்படுத்தப்பட்ட முறையில்,ஒரு பொலிஸ்கார நடைமுறையை அவிழ்த்துவிடலாம் எனவும் கருதப்படுகின்றது. சுருக்கமாகக் கூறினால், அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய யூனியனோ அல்லது இங்கிலாந்தோ, தத்தமது சர்வதேச பாத்திரத்தை (காவல்கார பாத்திரத்தை) இனியும் நிறைவேற்றபடாதவிடத்து, அவ்விடம் வெறுமனே வெற்றிடமாக இருக்கக் கூடுமா என்ற கேள்வி எழச் செய்கின்றது. இந்நிலையிலேயே, இப்போது காணப்பட்டுள்ள சீன-ரஷ்ய புரிந்துணர்வுகள், ஒரு புதுப் பாதையை, உலக நாடுகளுக்கு, காட்டுவதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இது சிக்கல்கள் பலவற்றையும் உள்ளடக்கும் என்பது வெளிப்படை.

உதாரணமாக, சிங்கபூர் அல்லது ஆசியான் போன்ற நாடுகள் (கிட்டத்தட்ட 10லிருந்து 11 வரை) சீனத்தின் காவல் அதிகாரி தோற்றத்தை அங்கீகரிக்கும் அதேவேளை, அவர்கள் சீனத்திலிருந்து சில நன்மைகளையும் எதிர்நோக்கவே செய்வர் என்பது வெளிப்படை. மேலும் இது, சீனத்தின், Belt-Road நடைமுறையை, ஒரு வழியில் பார்த்தால், அங்கீகரிக்கவும் செய்கின்றது.

மறுபக்கம், இது ஒரு ‘ஒன்றிய வாழ்வின்’ இருப்பை எடுத்துக் கூறும் உதாரணமாகவும் திகழ்கின்றது. இங்கே, “ஒன்றிய வாழ்வு” என்பது இன்றைய சீனத்திற்குப் பொருந்தி வரலாம். ஆனால், தனது சொந்த தலையிடிகளால் ட்ரம்பின் தலைவிரி கோலத்தைப் போல கிடக்கும் அமெரிக்கப் பொருளாதார நிலைக்கு இப்புதிய ஒன்றிய வாழ்வு சரிவருமா அல்லது புதிய தலையிடிகளை ஏற்படுத்துமா என்பது தெளிவு.

இவை அனைத்தையும் பார்க்குமிடத்து, தற்போது மாறிவரும் ஓர் உலக அமைப்பை அல்லது உருவாகும், ஓர் பல்முனை உலக ஒழுங்கை நோக்கி உலகம் சென்றுக்கொண்டிருப்பதைச் சுட்டுவதாய் உள்ளன. ஆனால், இதேகணம், கடந்த காலத்தின், இறந்த அல்லது மரத்துபோன கரங்களும், இந்த மாற்றங்களை எதிர்த்து, அவற்றைக் கட்டுப்படுத்தி, தமது சொந்த நலன்களுக்கு ஏற்ப, அவற்றை மீள் வடிவமைத்துக் கொள்ள முயலும் என்பதிலும் சந்தேகமில்லை. எனவே, உக்ரைன் போர் நிலையானது, இந்தியா-பாகிஸ்தான் போர்முனையும் புதிதாய் திறக்கப்படுகின்றது.

7

இந்தியா-பாகிஸ்தான் போர்முனை:

தெற்காசிய நாடுகளில், பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபால், இலங்கை போன்றவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இழுபறிகளை எதிரொலிப்பதாய் இருக்கின்றன. ரணில் விக்கிரமசிங்க முதலானவர்கள், எவ்வாறு அமெரிக்க நலன்களை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனரோ, அதேபோல அனுர குமார திசாநாயக்காவும் இந்திய நலன்களை அல்லது சீனத்து நலன்களை இலங்கையில் பிரதிபலிக்கக் கூடிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார். இதன்போது மூன்று சக்திகளுக்குமிடையே போர் சிலம்பம் ஆடுகின்றோம் என அவரவர் வேண்டுமானால் பெயரளவில் கூறித் திரியலாம். இருந்தும் விடயங்களானவை அப்படி இருப்பதற்கில்லை.

இதுகாலம்வரை, உலக வல்லரசாக திகழ்ந்த அமெரிக்காவானது, பாகிஸ்தான்-சீன உறவைத் தனக்குச் சாதகமான வழியில், (அதாவது, இந்தியாவை முழுமையாக கட்டுப்படுத்த பாவித்து கொள்ளும் வழியில்), செயற்பட்டு வந்துள்ளது. சீனாவின் பணத்தைக் கொண்டு, அதனைப் பாகிஸ்தானுக்கு வழங்கி, இந்தியாவிற்கு எதிராக அதைத் திரும்ப வைப்பதும், ஆயுதங்களை அதற்கு அள்ளி வழங்கி அதனை மேலும் பலப்படுத்துவதும், குறிப்பாக பாகிஸ்தானின் ஆட்சியாளர்களையும், அமைப்பையும், ராணுவ புலனாய்வு துறையினரையும் தமது கையில் போட்டுக் கொள்வதை உறுதி செய்வதுமாகவே அமெரிக்காவின் பாத்திரம், இன்றுவரை இருந்து வந்துள்ளது. ஆனால், அண்மித்த ரஷ்ய-சீன புரிந்துணர்வுகளின் ஒப்பந்தத்தை அடுத்து (09.05.2025), சீனாவின் முகம், இன்று சற்றே மாறுபட்டு, தெற்காசியாவில் ஒரு புதிய நிலைமையை உருவாக்க வழி செய்கின்றது என்ற நடைமுறை இன்று எழ தொடங்கியுள்ளது. அதாவது, ஒரு, “சீன-இந்திய” நல்லுறவு மேம்பட வாய்ப்புண்டா என்பதனையே மேற்குறிப்பிட்ட “புரிந்துணர்வு” எழுப்பும் கேள்வியானது.

இதே போலதான், அண்மைக்கால “பாகிஸ்தான்-சீன” உறவு நிலையானது, நல்ல நிலையில் காணப்படுவதில்லை என்றும், அது உடைந்து, ஏற்கனவே சீரழிய தொடங்கிவிட்டது என்ற கருத்தும் மேலெழத் தொடங்கியுள்ளது. காரணம், பாகிஸ்தானின், சீன கடன் விவகாரம் “சீரழிக்கும்” முக்கிய கூறுகளில் ஒன்றாய் திகழ்கின்றது. சீன-CPEC முன்வைக்கும் GWADAR துறைமுக வேலைகளும் (அது சார்ந்த அனைத்துத் திட்டங்கள் உட்பட!!). சீனப் பொறியியலாளர்கள், ஒரு தற்கொலைப் படையால், அண்மையில் கொல்லப்பட்ட விவகாரமும் இன்று பெரிதாய் இடம்பெறத் தொடங்கியுள்ளது. (ஐந்து சீனப் பொறியியலாளர்கள் தற்கொலை குண்டு படையினரால் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்- 26.03.2024) இவை அனைத்துமே சீன நலன்களுக்குச் சார்பானதாய் இருப்பதற்கில்லை எனத் தீர்க்கமாய் கூறலாம். (இவற்றுடன், ரஷ்ய-சீன புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்புபடுத்தி பார்த்தல் விரும்பத்தக்கது).

GWADER துறைமுக அபிவிருத்தி திட்டத்தின்படி சீனம், அரேபிய கடலில் ஈரான்-ஓமான் போன்ற நாடுகளை அடையுமிடத்து, இத்துறைமுகத்தை ஒரு சர்வதேசிய வியாபாரத் தளமாக (Commercial Hub) மாற்றக்கூடிய எல்லா சந்தர்ப்பத்தையும், இத்திட்டமானது, சீனாவுக்கு வழங்குவதாய் இருக்கும் எனவும் கூறப்பட்டது. அப்படியெனில், அமெரிக்க நிலை நின்று பார்க்கும் போது இத்திட்டத்தை முடக்குவது முக்கியமானது, என்பது தெளிவு.

மறுபுறம், இத்திட்டமானது, அமெரிக்கா உருவாக்கக் கூடிய, தடங்கல் மிக்க மலாக்கா நீரிணை பாதையையும் ஒரு சிரமமும் இன்றி கடந்து போக, சீனாவுக்குச் சந்தர்ப்பத்தை வழங்குவதாயும் உள்ளது. எனவேதான், சீனாவானது 62 கோடி டாலர்களை விழுங்கித் தீர்க்ககூடிய இப்பெருந்திட்டத்திற்கு உடன்பட்டு சம்மதிக்கவும் துணிந்தது. எனவே, ஒருபுறத்தில், இது சீனாவுக்குத் தரப்பட்ட வாய்ப்பு என்று பார்த்தால், மறுபுறத்தில், இதனாலேயே, இது அமெரிக்காவால் முடிவு கட்டப்பட வேண்டிய தேவையையும் கொண்டதாக உருப்பெறுகின்றது. (மறுபுறத்தில், இவை இப்படி நோக்குமிடத்து, இது, சீனாவுக்கும், இந்தியாவுக்கும் வைக்கப்பட்ட பொறிகள்தானா என்ற சந்தேகத்தையும் எழுப்புகின்றது).

எண்ணைக்கான தனது 12000 KM பயணத்தை, இத்திட்டத்தால், வெறும் 2395 KM ஆக சுருக்கி விடுவதை, இத்திட்டம் அறிமுகம் செய்கின்றது. இதற்கூடு கூட, சீனாவானது பெருத்த லாபத்தை சம்பாதிக்கும் எனவும் கருதப்பட்டது. எனவேதான், 2015இல் அமையப்பெற்ற இத்திட்டங்களில் GWADER சர்வதேசிய விமான நிலையம் போன்றவற்றை இலவசமாகச் செய்து தரவும் சீனா உடன்பட்டது. (240 மில்லியன் டாலர்கள்). அதாவது, இத்திட்டம் முன்மொழிந்த அரசியலை சீனமும் வழிமொழிந்தது-ஒரு காலத்தில்!

ஆனால், இதன் பிறகே, இப்போது, மாஸ்கோ கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி, பல புதிய பரிமாணங்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. இது, தற்போதைய “சீன-பாகிஸ்தான்” உறவினில், அல்லது “சீன-இந்திய” உறவினில் ஓர் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதாவது, சீனத்தைக் கட்டுப்படுத்த நினைக்கும் Containment Theory ஒரு புதிய நிலையை அடைய, “சீன-அமெரிக்க” உறவானது ஓர் புதிய நிலையினைத் தொட ஆரம்பிக்க, இதனைத் தற்போதைய உலக மாற்றங்கள் தூண்டிவிட்டு விட, GWADER திட்டத்தில் அமெரிக்கj் தலையீடு என்பது கருப்பொருளாகின்றது.

8

அண்மையில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரி முனீர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டு, இந்த CPEC திட்டங்கள் தொடர்பில், மேலும் கடன்களை பாகிஸ்தானுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குத் தெண்டித்த வேளை, சீனாவானது நம்பிக்கை மிக்க ஒரு பதிலைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்ததாக இல்லை. பண நெருக்கடிக்குள் உள்ளான பாகிஸ்தான் 2 கோடி டாலரை அவசர, அவசரமாக சீனாவிடம் கேட்டபோதும், அது, தர மறுத்துவிட்டதாய் தெரிகின்றது. (27.01.2024) (ஜுன்-2024). அதாவது, எந்த சர்வதேச சீதோஷ்ண நிலையின் கீழும், நிரந்தர நண்பனாக வர்ணிக்கப்பட்ட “சீன-பாகிஸ்தான்” உறவு முறை என்பது, “இப்போது மாறியுள்ளது” எனக் கருதப்படுகின்றது. தனது பொறியியலாளர்கள் கொல்லப்பட்ட விடயத்தில் இக்கெடுதல் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் (பாகிஸ்தான், இதுவரை இது தொடர்பில் எந்தவொரு உருப்படியான நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை என்பது உண்மை). “ரஷ்ய-சீனா புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்பது முக்கிய ஒரு விடயமாகின்றது. (இதனை ஏனைய உலக மாற்றங்களுடன் ஒப்பு நோக்க வேண்டிய அவசியமானது மேலே கதைக்கப்பட்டுள்ளது).

இதே போன்று காஷ்மீர் படுகொலைகளின் போது யார் இவர்களை இயக்குவித்தது?, இவர்களின் பின்னால் இருக்கக்கூடிய மறைகரம் யாது போன்ற கேள்விகளுக்கெல்லாம், பாகிஸ்தான் இதுவரை மௌனத்தையே பதிலாய் வழங்கி வந்திருக்கின்றது. மிஞ்சி மிஞ்சி போனால், தான் பொறுப்பில்லை எனக் கைவிரிப்பதே அதன் சுருக்க விடையாகின்றது. ஆனால, இந்த மௌனம், தற்போது, கலைய வேண்டிய சூழல் தொடங்கிவிட்டது எனக் கருதப்படுகின்றது.

உதாரணமாக, மேற்கின் ஊடகங்கள், சீன வெளிநாட்டமைச்சரை “சீன விமானங்கள் அல்லது ஆயுதங்கள்” தொடர்பில் வினவியபோது, (அவை எதிர்ப்பார்த்திருக்காத விதத்தில்) அது பற்றி தாம் அறிந்திருக்கவில்லை என்பதைத் திட்டவட்டமாக சீனா கூறியிருப்பது எதிர்பாராதது. (08.05.2025).

இரண்டாவதாய், இரண்டொரு தினங்களின் முன்னால், சீனத்தின் Y-2 ரக விமானங்களின் மூலம் சீனா, “இவ்யுத்தத்தின் போது” தேவைப்படும் ராணுவ உதவிகளைப் பாகிஸ்தானுக்கு அள்ளிச் சென்றது என்ற செய்தி வெளிவந்ததையிட்டு, சீனா கவலைத் தெரிவித்தது. அதுமாத்திரம் அல்லாமல் இதனைக் கடுமையாக மறுத்தும் பேசியிருந்தது (Global Times -12.05.2025). (சீனத்தின் இம்மறுதலிப்பானது, எந்தவொரு மேற்கு ஊடகங்களிலும் பிரசுரமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

இவை, மாறிவருகின்ற, ஒரு சீன முகத்தைத் தெளிவுற காட்டுவதாய் இருக்கின்றன (இவை, மாஸ்கோ கொண்டாட்டங்களின் பின் அல்லது அதை ஒட்டிய தினங்களில் நடைபெற்றன என்ற உண்மை இலகுவில் புறந்தள்ள முடியாதது). இவைபோக, இன்றைய பாகிஸ்தானின் போர் பின்னணியை, நுணுக்கமாக நாம் நோக்க வேண்டியதும் விரும்பதக்கதாகின்றது.

9

26.04.2025, (இரு கிழமைகளின் முன்னால்) நடந்த காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, மோடி, இடைவெளியில் தனது பயணத்தை நிறுத்தி நாடு திரும்பினார் என்பதனைத் தவிர இந்தியா, ஆரம்பத்தில் எத்தவொரு நடவடிக்கையையும் குறிப்பிடத்தக்கதாய் எடுத்ததாய் இருக்கவில்லை. பாகிஸ்தானுக்கு, இந்தியா பாடம் புகட்டி விடும் என்ற தினுசில் இந்தியாவும் சிற்சில வழமையான அறிக்கைகளை வெளியிட்டதுடன் சரி. கிட்டத்தட்ட, 12 நாட்கள் கழிந்துவிட்ட நிலையிலேயே, இறுதியில், இந்தியா, தனது ஏவுகணை தாக்குதலைத் தொடங்கி இருந்தது எனப் பதிவுகள் கூறின (07.05.2025). இந்த 12 நிசப்த நாட்களுமே, உலகத்தை அதிகம் கவர்ந்த நாட்கள் எனச் சொல்லிக்கொள்ளலாம்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தியதின் பின், ட்ரம்ப், மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமெரிக்காவின் முழு ஆதரவும் இந்தியாவுக்கே என்று கூறி, அதற்கூடாக, மறைமுகமாக நீங்கள் யுத்தத்தைத் தொடங்கி பாகிஸ்தானுக்கு அடிக்கலாமே எனக் கூறியுள்ளதும் பதிவாகியுள்ளது. ஆனால், இதற்கு நன்றி தெரிவித்த இந்தியா தொடர்ந்தும், பதிலடியை ஆரம்பிக்காமல், செயலின்மையைக் கடைபிடித்தது. (இப்படி தூண்டப்பட்ட போதும், இந்தியாவானது, பதிலடியை ஆரம்பிக்காமல், செயலின்மையைக் கடைப்பிடித்தது ஆச்சரியத்தை உண்டுபண்ணியது).

இதற்கெல்லாம் சொல்லி வைத்தது போல, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரும், இந்தியாவின் வழமையான குற்றச்சாட்டான, பாகிஸ்தானே பயங்கரவாதிகளை பயிற்றுவித்து, முகாம்களைப் பயங்கரவாதிகளுக்கு அமைத்துக் கொடுத்து, நிதியுதவி அளித்து, மொத்தத்தில் அவர்களைப் போசித்து வளர்க்கின்றது என்ற வழமையான இந்திய குற்றச்சாட்டை இப்போது, ஏற்றுப் பின்வருமாறு கூறி இருந்தார்: “நாங்கள் 30 வருடமாய் இந்தப் பணியை (பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பணியை) ஆற்றி வருகின்றோம். இதற்காய், எமக்குப் பக்கபலமாய் நின்றவர்களில் முக்கியமானவர்கள் அமெரிக்கர்கள்” (30.04.2025).

அதாவது, ட்ரம்ப் மோடியிடம் யுத்தத்தை நடத்துங்கள் என மறைமுகமாக கூறியதன் மறுநாளே, பாகிஸ்தானின் இந்த ஏற்றுக்கொள்ளும், உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கின்றது. பாகிஸ்தானில் காணப்பட்ட இந்த மாறுதல், உலக மாறுதல்களின் எதிரொலி எனக் கருதப்பட்டது. (இந்திய மௌனம் என்பது, இந்தப் பின்னணியில் பார்த்து, புரிந்துகொள்ளப்பட வேண்டிய தேவையும் எழுகின்றது). அதாவது, இந்த அறிவிப்புக்களால் இந்தியாவைப் போருக்குள் இழுத்துவிட பகீரத பிரயத்தனம் செய்யப்படுவது வெளிப்படையானது. அவற்றைச் செய்வது ஒருபுறம் அமெரிக்காவும் மறுபுறம் பாகிஸ்தானுமே எனக் கணிக்கப்பட்டன.

திட்டமிடப்பட்ட இத்தாக்குதலின் பின்னால், (காஷ்மீர் தாக்குதல்) பெரியதோர் சர்வதேச அரசியல் திட்டம் அரங்கேற உள்ளதா என்பது கேள்வியாகின்றது. இந்தியா மௌனத்துடன் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. இங்கேயே, சர்வதேச அரசியலின் தாக்கங்களும் தெற்காசியாவின் அரசியலும், முட்டி மோதி உலகத்தின் முக்கிய திருப்பத்தைப் காட்டும் நிகழ்வுகளாகின்றன. அதாவது, உலகின் சர்வதேச நிலைமைகளும் (உக்ரைன் போன்ற), பாகிஸ்தானின் உள்ளக நெருக்கடிகளும், அமெரிக்காவின் சொந்த தலையிடிகளும் இம்மாற்றங்களுக்கு அடிப்படை அமைத்திருக்கக் கூடும் என கருதப்படுகின்றது.

சுருக்கமாகக் கூறுவோமானால், “ரஷ்யா-இந்தியா-சீனா” என்ற கூட்டு இடம்பெறுமானால், அது உலகின் பல்முனை துருவங்களுக்கு (Multi Polar World) துணைபோகும் என்பது மாத்திரமல்ல தனது முக்கிய அரசியலானது, தெற்காசியாவில் இனி எடுபடாது, என்ற அருட்டுணர்விலேயே அமெரிக்கா எழுந்து நடமாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காகவே, என்றுமில்லாத விசித்திரமாய், பாகிஸ்தான் தனக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டான பயங்கரவாதத்தை, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், அங்கீகரிக்கவும் செய்தது. இருந்தாலும், ட்ரம்ப் எதிர்ப்பார்த்த நிகழ்வுகள் இப்போரால், தெற்காசியாவில் ஏற்படவில்லை என்பது தெளிவு.

முதலாவதாக, சீனம் இப்போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாய் நிற்பதில்லை என முடிவு செய்திருப்பது முதலாவதாகின்றது. மறுபுறத்தில், இந்தியாவின் போர் நுணுக்கமானது அதிதீவிரத்துடன் செயற்பட தொடங்கியிருந்தது. “Dog-Fight” என்பதை விண்வெளியில் நடத்தவும் இந்தியா துணிந்தது. (03.05.2025). இதுவும், எதிர்ப்பார்க்கப்படாதது. அதாவது, பாகிஸ்தானின் மேல் இந்தியா தனது தாக்குதலைத் தொடுக்கும் முன்னர் இத்தகைய அதி நவீன யுத்த நகர்வுகளில் அது இறங்கியது.

இதுபோக, ரஷ்யாவின் S-400 ரக விமான/ட்ரோன்/ஏவுகணைகள் எதிர்ப்பு ஆயுதத்தை, தனக்கு ஏற்ற வகையில் இந்தியா மீள்வடிவமைப்பு செய்து கொண்டது. இதுவும் எதிர்பாராததே. இதுபோக, சில போர் நுணுக்க முறைகள், நவீன முறையில் புதிதாகக் களமிறக்கப்பட்டதும் இந்தியாவின் நடைமுறையானது. இதுவும் எதிர்பாராததே. அதாவது, இவை யாவுமே, பாகிஸ்தானும், அதற்கு ஒத்தூதிய அமெரிக்காவும், எதிர்பாராத விடயங்களாகின்றன.

இச்சூழ்நிலையில், இப்போது, தானே பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு எழுந்தது. (இதுதொடர்பிலேயே, துருக்கியின் நடவடிக்கைகள் புரிந்து கொள்ள வேண்டியதாகின்றது). ஆனால், உக்ரைன் போரின் நிலவரமும், இந்திய போர் நவீனத்துவமும், சீனத்தின் மறுப்பும் Plan-B யை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளின. (அமெரிக்காவையும்-பாகிஸ்தானையும்). ட்ரம்ப், இப்போது, தனது முந்தைய போருக்கான அறைகூவல்களை நிறுத்தி, உடனடியாக ஒரு  போர்நிறுத்தத்திற்கு கூக்குரலிட நேர்ந்தது. அதாவது, ட்ரம்ப் அவர்கள் “அமைதிப் பிரியர்” என்ற புதிய வேடம் தரிக்க நிர்ப்பந்தப்பட்டு போனார்.

இதற்கிடையில் இடம்பெற்ற இரு விடயங்கள் முக்கியம் வாய்ந்தவையாக காணப்பட்டன: ஒன்று, அமெரிக்க மத்தியஸ்தத்தை, இந்தியா நிராகரித்தது என்பது. (11.05.2025). இரண்டாவது, போர் நிறுத்தத்தையும் அணு பிரயோகத்தையும், மேலும், இந்தியாவுக்கு தான் வழங்க முற்பட்டதாய் கூறும் வர்த்தக நலன்களையும் ட்ரம்ப் ஒருபோதும் பிரேரித்தார் இல்லை என இந்தியா, ட்ரம்பை மறுத்துரைத்தது. (12.05.2025).

இவை அனைத்தும் இன்றைய உலகில் எதிர்விளைவுகளை உண்டுபண்ணியிருக்கின்றன என்பது தெளிவு. அதாவது, மறுபுறத்தில், உலகின் மாற்றங்கள் இப்படியான நிகழ்ச்சி நிரல்களை இன்று அரங்கேற்றச் செய்கின்றன என்பதிலும் ஐயமில்லை. இப்பின்னணியிலேயே, உக்ரைன், அல்லது இந்தியா-பாகிஸ்தான் போர்கள் நோக்கப்பட்டு, இதனுடன் சேர்த்து ட்ரம்பின், பைடனை போன்றே சறுக்கி விழும் நிகழ்ச்சிகளும் பார்க்கத்தக்கன.

சுருக்கமாகக் கூறுவோமெனில், இது Multi Polar World ஒழுங்கை உருவாக்குகின்றதா என்பதே அடிப்படை கேள்வியாகின்றது. இக்கேள்வியே தெற்காசியாவின் அரசியல் பாத்திரங்கள் அல்லது அரசியல் செல்லக்கூடிய நகர்வுகளை நிர்ணயிக்க கூடியது என்றும் கூறத்தக்கதாய் இருக்கின்றது.

(தொடரும்…)

* ஓவியம் - AI ChatGPT

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.