- மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளை குடும்பத்தினருடன் நிற்கும் காட்சி -

வேலுப்பிள்ளையின் எழுத்துக்கள் மூன்று கட்டங்களாக பிரிபடலாம். ஒன்று, காந்தியாலும் தாகூராலும் கவரப்பட்ட நிலையில், அவர் இளைஞனாய் இருந்த போது, தோன்றிய மனக்கசிவுகள். மற்றது, நேருவின் ஆசிர்வாதத்துடன், இலங்கை இந்திய காங்கிரசானது ஸ்தாபனமுற்ற நிலையில் வேலுப்பிள்ளை தொழிலாள சாரியுடனும் தொழிற்சங்கத்துடனும் இணைந்த ஒரு காலப்பகுதி.  மூன்றாவது, திருமணம் முடிந்து, ஒரு குடும்ப மனிதனாகிவிட்ட ஒரு காலப்பகுதி.

தொழிற்சங்கத்தில் இணைந்து தொழிலாளர் அணியுடன் கட்டிப் புரண்ட காலப்பகுதியிலேயே (போலிஸ் வேனிலும் அடைப்பட்ட போது) முகிழ்த்து கிளம்பியதே ‘தேயிலைத் தோட்டத்திலே’ எனும் இந்நெடுங்கவிதை.

இக்காலத்தை ஒட்டி பிறப்பெடுத்ததே மற்றுமொரு காவியமான ‘உழைக்க பிறந்தவர்கள்’ (Born to Labour) என்னும் மலையக மக்களின் வாழ்வியல் சித்திரங்கள்.

இதன் பின்னரான காலப்பகுதியில், இவரது இறுதி எழுத்துக்களாகவே, ‘வீடற்றோர்’ அல்லது ‘நாடற்றோர்’ போன்ற நவீனங்கள் உருவாகியவை.

இந்த மாற்றங்கள் குறித்தே – முக்கியமாக – ‘தாகூரின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இளைஞன்’ என்று இவ் வேலுப்பிள்ளையை, வியக்கின்றார், ஜெக் மோகன்.

இப்பின்னணியில் வேலுப்பிள்ளையின் குடும்ப Photo அனேக விடயங்களை எமக்கு எடுத்துரைக்க வாய்ப்பளிக்கின்றது.

                               -  இளைஞனாய் வேலுப்பிள்ளை... -

கோபமுற்று, கைக்கட்டி இருக்கும் தாத்தாவின், பின்னால் நிற்கும் இளைஞனாய் வேலுப்பிள்ளை தோன்றுகின்றார். தனது செல்லப்பேரன், கோட்-சூட்டுடன், ஒரு துரை போன்று காட்சியளிக்க கூடும் என தாத்தா எதிர்ப்பார்த்திருந்தால், அது இயல்பானதாகவே இருந்திருக்க கூடும். ஆனால் இவ் இளைஞனோ, காந்திய குல்லாயும், கதிராடையும் அணிந்து, காலனித்துவத்துக்கு எதிராய் கோபம் கொண்டவனாய், இந்திய விடுதலை இயக்கத்தின் ஓர் சிறு பிழம்பாய் காட்சி தருகின்றான். இவனது பார்வை, தீவிரமான தீட்சண்யம், இவை யாவுமே,

இவ் இளைஞனின் வருங்கால எழுத்துக்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைகின்றது. இருந்தாலும், இவ் இளைஞன் இன்னமும் தாகூரின் இளைஞனாகவே இருக்கின்றான் - பிற்காலத்தில், காலம் அவனை தொழிலாளர் அணியினர் மத்தியில் வீசி எறியும் மட்டும். அப்படி வீசி எறிந்த போது உருவானவையே இந் நெடுங்கவிதை. ஜெக்மோகன் வார்த்தையில்: ‘முற்றாக மர்மம் நிறைந்ததுஇத் தாவல்’. இந் ’தாவலின்’ முக்கியத்துவம், மனிதனையே புரட்டி எடுக்க தக்கதுதான்.

இனி கவிதைக்குள் செல்லலாம்.


ஒருவன் எதனை பாடுதல் கூடும்:

யார் ஒருவன் பாடக் கூடும்

என் பாட்டனார் காலந் தொட்டு

எலும்பை முறிக்கும்

அடிமை சேவகம்

ஓர் மரபாக -இங்கே

தொடரும் விந்தையை?


சுமைகளால்

பிணிப்புற்று

தள்ளாடும்

மனிதனின்

முதுகு தண்டையும் உடைத்து

சக்கர வளைவாக - அவனை

குனிய வைத்து

வண்டியில் பூட்டி…

இரண்டாம் தர ஜீவனாய்

‘நாடுகடத்தப்பட்டவன்’

என்ற

நாமகரணமும் சூட்டிய

கதையை

யார் ஒருவன் பாடுதல் கூடும்?


பார்.

இங்கே

ஓர் அடிமை

தன் பெயரையே

இழந்துள்ளான்.

அவனது

தேசம் முதல்

அவன் வரையிலும் - இங்கே

பறிக்கப்பட்டு –அவன்

ஒதுக்கி

வைக்கப்பட்டுள்ளான்.

தன் தலைவிதியை

தானே கையிலேந்தி

பார்க்க – அவன்

விதிக்கப்பட்டுள்ள நிலையில்

எதையேனும் பற்றி பிடிக்கலாம்

என – அவன்

தேட

முற்படுகையில்,

எவன் ஒருவன்

இவற்றையெல்லாம்

பாடக் கூடும்…?


கப்பல் பாட்டு:

புற்களை சுரண்டவும்

‘கூச்’இஞ்சியின் பற்களை

பிடுங்கவும்

கடல் கடந்து

வந்த என் சோதரர்கள்…

தம் தந்தையின் அரவணைப்பில்

வந்த அந் நாட்களை

ஒரு தரம்

மீட்டு பார்ப்பர்.


அன்பான இஸ்லாமியரின்

கப்பல் பாட்டு…

பாய்மரக் கப்பலில்

சுழன்றடிக்கும் காற்று…

பின், மூர்க்கத்துடன்

தாவி வரும்

பெரும் அலைகள்…

அத்தோடு,

தாயொருத்தி

தான் பெற்றெடுத்த மகன்

குறித்து

பொங்கி விடும் பெருமூச்சு…


தேயிலைக்கடியில்

தங்கத்தை தோண்டி எடுக்கவென

தன் ஆன்மா முதல்

அத்தனையையும் அடகுவைத்து

புறப்பட்டு விட்ட - ஒரு

சகோதரன்…

அவனது

சகோதரி இப்போதும் - வடிக்கும்

கண்ணீர் துளிகள்…

இவற்றையும் தான்,

சுழன்றடிக்கும் காற்று

சுமந்து வருமே…


பயணிகள்…

கப்பல் செலுத்துனனை

திட்டி தீர்ப்பர்

கட்டு மரத்தில்

காற்றடித்ததற்காய்…


தன் தேசத்தில்

இருந்து

பிய்த்தெடுக்கப்பட்ட

முதலாவது ஆசாமி

தான்

கால் பதித்த

காட்டு வழியிலேயே

கால்களும் புண்ணாக

அனுராதபுரம் அருகே

சோர்வுற்று

பட்டினி சாவாக – வீழ்ந்திறந்து

போவான்…


புற்களை அகற்றவும்

‘கூச்’ இஞ்சியின் பற்களை

பிடுங்கவும்

வந்தவர்

ஒரு தரம்

மீட்டுத்தான் பார்த்துக் கொள்வர்

தம் கதையை…


சளைக்காத

அந்த

அணி வகுப்பு…

மன்னாரிலிருந்து

மாத்தளை, கண்டி வரையிலும்

வழி நெடுக

வெளிறிய

எலும்புகள்

உதிர்ந்து

அiயாளம்

காட்டிட…


அலறிய காடுகள்:

மனித வாசனை

அறியா –அவ்

இருண்ட காடுகள்

இவரின்

கோடாரி வீச்சுகளினால்

அலறி துடிக்கும்…

அங்கேதான்,

புதிதாய் மின்னவும்

செல்வம் சேர்க்கவும்

கோப்பி மணிகளும்

கோப்பியின் தளிர்களும்

செழிக்கவும்… வளரவும்…


கால்

வைக்கப்படாத அந்த

மலைகளின் தொடச்சிக்கப்பால்

ரயில் பாதைகள்

புதிதாய்

முளைத்தன…


புலிகளின்

இருப்பிடங்கள் மேலாய்

இப்போது,

பாதைகளும்

சரிவினில் வீடுகளும்

இணைக்கும்

பாலங்களும்…

புதிதாய் தோன்றின…

சுமை

சுமந்த

தவல மாடுகள்-

அவையும் போக- இனி

மூடு வண்டிகள்…

அவையும் போக,

சலங்கை,

ஈட்டியுடன்

தபால் கூலி– இவன்

புதிதாய்

தோற்றம் கண்டவன்…


இவனே

தோட்டத்தையும் வெளி உலகையும்

இங்கே

இணைப்பவன்.

தோட்டத்தையும் அரசினையும்…

ஆம்.

சிறு நகரம்

இப்படியாகத் தான்

தனித்திருந்த -ஒரு

தோட்டத்தை

எட்டி பார்த்தது…

இப்படியாகத்தான்

இங்கிலாந்தின் சுவர்க்கபுரி

தோட்ட சாம்ராஜ்யத்தால்

உருவாக்கப்பட்டு,

நகர்ந்தன நகர்ந்தன

இப்

பிரட்டின் அதிர்வுக்கே…


தனித்த குடிசைகள்:

இங்கே,

தனித்த குடிசைகள் என்று ஏதும்

இல்லை.

வீரம்

உருவாகி

நெருப்பும் வாளும் சேர்ந்தாற்போல்

வரலாறை உருவாக்கும்

சங்கதிகளும்

இங்கில்லை…

தனித்த ஒரு  குடிசையினுக்கோ – அன்றி

தனித்த ஒரு கிராமத்திற்கோ

இங்கிடமில்லை,

இல்லை.


வரிசை வரிசையாக

அமையப்பெற்ற தகரத்தால் ஆன தொழிலாள

லயங்கள்… அவர்களின் குடியிருப்புகள்…


பத்தடி நீளமும்…

பன்னீரடி அகலமும்…

இந்த காம்பிராக்களில்தான்

அடிமைகளின் வாழ்முறை

நன்கு

செழித்து வளர்வதாம்…


புகை அடுப்பு,

மூச்சடைக்க மூச்சடைக்க

திக்கு முக்காடி

இவர்கள்

உண்ணவும் உடுக்கவும்

படுக்கவும் உறங்கவும்…

சந்ததிகளை பெற்றெடுத்து

வளர்க்கவும்

இவை,

எதற்காக?

தம் எஜமானரின்

பேராசைகளை நிறைவு செய்யவும்…

அவர் தம் நம்பிக்கைகளை

பூர்த்தி செய்யவும்…

ஒரு 

பிரட்டின் அதிர்வுகளில்

இவை அனைத்தும்

வந்து போயின

கடந்து போயின

ஒரு  நூற்றாண்டு காலமாய், இங்கே, பிரட்டின் அதிர்வுக்கே…


முதிர் மனிதர்கள்:

இங்கேதான்…

கடந்த காலத்தின்

முதிய கிழவர்கள்

அலைந்து திரிவர்…

எந்த ஒரு சின்ன துரையும் -இனி

அவர்களை அழைக்க போவதில்லை…

எந்த ஒரு பெரிய துரையும் - இனி

அவர்களை சீந்த போவதும் இல்லை…


அவர்களின் காலம்

இலை உதிர் காலம்…

அவர்களின்

வசந்தம்?

அவை, இங்கு

வெடித்து சிதறியவை…

அவர்களின்

இளம் பருவம்?

புளித்த மதுவும் கொண்டாட்டமுமாய்…

அவை,

சென்று முடிந்தவை…


இப்போது,

கரையும் இவர்களின் முகங்களில்,

வேலையற்றவர் பட்டியல்,

‘பென்ஸ்’ காசு

என

நீட்டி பிடிக்கப்படுகையில்…

ஆட்குறைப்பு எனப்படும்

கேவல சரித்திரத்தில்…

சிரச்சேதம் விதிப்புற்ற

ஊமைகளாய் - இவர்

அலைந்து திரிவர்…

வேருடன் பிடுங்கப்பட்ட

தேயிலை செடியின்

வேர் - அவர்

மனங்கள்…


புழுதியில்

வீசப்பட்ட

கந்தல் உருண்டை…

அவரது

வாழ்வு…


ஆதரவாய்

ஒரு  தடியை

ஊன்றியப்படி,

ஏந்தி பிழைத்து கொள்ள

ஒரு  பாத்திரமுமாய்

வலம் வரும் - இவர்கள் - தம்

இறுதி

கணங்களில்

உடம்பை

ஏதோ ஒரு

தேயிலைசெடிக்கடியில்

கிடத்தி விடுவோம்

என்ற நினைப்புடன்…

அவர்களின் வாழ்வு

இங்கே, இப்படியாய்

நகர்ந்தது நகர்ந்தது -இப்

பிரட்டின் அதிர்வுக்கே…


தேயிலை சிட்டும் மாணவர்களும்:

i

வேலியாய் மண்டும்

சூரியகாந்தி.

மகரந்த பொட்டுகளில்

தேயிலை சிட்டுகள்

பாடி கிறங்குவன…


ஊதும் காற்று,

இரவுகளில்

ஊதி வீசும்.

அழகிய நிலவும் - தோட்டத்தில்

வலம் வரும்…

சோம்பேறி நாய்கள் ஊளையிட

நிலவும்

தன்னொளி வீசி

சுவர்களில் படிந்து

சந்ததி பெருக

சித்திரம் வரையும்

ii

இளம் சூரியனின்

தகதகப்பு

இவர்களின்

தசைகளில் - நாளங்களில்

ஆழ ஓடும்…

கோரப்படாத தலையும்

கழுவப்படாத

உடம்புமாய்…

காட்டெலி முதல் -தம்

சகோதரன் வரையிலும்

நாகரீகம் அற்றோராய்…

முரட்டு தனங்களுடன்

சேற்றிலே புரண்டு

அழுக்கிலும் திரிவர்…


iii

தோட்டம் முழுவதும்

சுற்றி திரியும்

இவர்கள்…

ஏதோ ஒரு சூரிய காந்தி செடியின்

பின்னால்

போலி கூட்டம்

போட்டு,

கதைத்து மகிழ்வர்…

பின்,

விறகுக்கென

காடுகளிலும் ஏறுவர்…


பாடசாலை வரவுக்கு

மட்டம் போடுதல்

இவர்களது உவப்பான நடைமுறை…


பாடசாலை

முடியும் வரையிலும்

தேயிலை புதர்களில்

மறைந்து கிடப்பர்

ஆடுவர்… பாடுவர்…

எழுத்தறிவற்றது

இவர்களின் உலகு.

சிந்தனையற்று

வெறுமை நிறைந்தது

இவரது

வாழ்வு…


கால நகர்வினிலே,

மண்வெட்டி, அலவாங்கு,

முள்ளு, சுரண்டி என

இவரது கரங்களில்

திணிக்கப்பட்டு

மலையில் இறக்கி விடப்படுதல் நடைமுறையானது…


உழைப்பை சிந்தவும்

வியர்வையை கொட்டவும்

இப்படியாய் இவர்கள் பயிற்றப்படுவதும்

இங்கே

இயற்கையானது…


பொங்கல்:

i

இதோ

வந்தது

பொங்கல்.


ஒரு புதிய வருடம் -இனிதாய்

பிறப்பெடுக்கின்றதாம்… இனி

இரு நாட்கள்,

விடுமுறை…

இரு நாட்கள்

சாந்தமும் புனிதமும்…

மத்தளங்களின் எக்காள ஓசை…

பறவைகளின் முறையீட்டு முணு முணுப்பு…

சூரிய நமஸ்காரம் முதல்

நட்சத்திரங்கள் இளகி

வெள்ளொளி வீசும் வரை

அமைதியும் சாந்தமும்

கவிந்து படிவன…

ii

அதிகாலை,

விடியலின் கருக்கள்

வீட்டு தோட்டங்களில்

நீல நிறமாய்

கப்பி படிகையில்,

மா இலைகள்

ஒளிரத் துவங்கி விடும்…

மூட்டிய,

நெருப்புகள்

கண்சிமிட்டா

காளைகள்

கண் சிமிட்டாது– அவற்றை

பார்க்கும்.

விடியும் தருவாயில்

ஊது பத்திகள்…

சாம்பிராணி புகையும்

காட்டப்பட்டு…

பூஜையும் பாடலும்

தாளமும் மேளமுமாய்

கெண்டி, செஞ்சுரா

அலற அலற

ஆரம்பமாகும்

வீடுகளில்

பொங்கலோ

பொங்கல்…

iii

மாவிலை தோரணமும்

பந்தலுமாய்

கோவிலின் வாசலில் -கட்டி

தொங்கவிடப்பட…


சந்தனமும் சாம்பிராணியும்

வெற்றிலையும் பாக்கும்

பத்தியுமாய்

வாழை இலைகளில்

நெய், பால், பழம்

செந்நெல் அரிசி

இப்படியாய்

தட்டுகளில் ஏந்தி

வரப்பட…


மிருது தோல் படைத்த

வாலை குமரிகள்

அணி வகுத்து

பெருகி வர

ஆண்கள்

ஒரு வரிசையில் நின்று

அணி வகுக்க,

கோயிலின் மணிகள்

ஒன்றாய் சேர்ந்தொலிக்க

திருமுறை பாடல்கள்

ஜீவனுடன் உயர்ந்தொலிக்க…

கரங்கள் உயருமே

வானை நோக்கி

கூப்பி வணங்கியவாறே…


தீபாவளி:

மீண்டும்

இரு நாட்கள் பண்டிகையாம்….

இரு நாட்கள் குதூகலம்

இரு நாட்கள் கொண்டாட்டம்…

தீமைகளும் தீய சக்திகளும்

அழிந்து விட்டனவாம்….

எண்ணை குளியலும்

பலகாரங்களுமாய்…

பழைய உறவுகள் - இங்கே

புதுப்பிக்கப்படுவன…!

இழந்த ஒரு இளமை காலம்…

இழந்த ஓர் நம்பிக்கை…

ஏன்

இழந்து போன காதல்,

பின் வாழ்வு– வனப்பு

தந்தையிலிருந்து தனையன் வரை

எண்ணை குளியலும்

பலகாரமுமாய் இங்கே…

பழைய உறவுகள்

புதுப்பிக்கப்படுவன…

உடைந்த உறவுகள்

ஸ்தாபிக்கப்படுதலும்

புதியன

புதிதாய் கிளம்பலும்…


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.