- மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் இளமைக்காலத்தோற்றம். *டிஜிட்டல் ஓவியம் - இரமணிதரன் கந்தையா (Ramanitharan Kandiah) -
முன்னுரை:தாகூரின் செல்வாக்கில் இருந்து, மாற்றமுற்ற சி.வி.வேலுப்பிள்ளையின், நெடுங்கவிதையின் மூன்றாம் பகுதி இங்கே காணக்கிட்டுகின்றது. தமது காலத்தைய, அழுத்தமான மக்கள் குரலை வேலுப்பிள்ளை ஒலித்ததை போன்று, அவருக்கு பின்னால் எந்த ஒரு கவிஞனும் மலையக சமூகம் பொறுத்து ஒலித்தது கிடையாது. ஆழ்ந்த சமூக பற்றுடன் இவரது குரல் ஒலித்தமைக்கான விலையை அவர் தன் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கொடுத்திருக்க கூடும். இவரது அக்காலத்தைய எழுத்துக்கள், அக்காலத்தைய மலையக அரசியல் சார்ந்த சிந்தனைக்கு மாத்திரமல்ல, பொதுவில் உழைக்கும் மக்களின் சிந்தனைக்குள்ளும் வலை விரிக்க கூடியதே. இனி கவிதைக்குள் செல்லலாம்:
மயில் நிறத்து சேலை…
மயில் நிறத்து
சேலை…
அடர் வண்ண
பச்சை, மஞ்சள், சிவப்பாடை…
இமைகளையும் பெரிதாய் தீட்டி
நெற்றியில் அழுத்தமாய்
குங்குமம் பள பளக்க இட்டு…
கன்றி சிவந்த இதழ்களும்
அழகியதாய்…
தூய்மையில் விட்டிருப்பர்… ஆகா, எம்
அனைத்தையும்
இன்பத்திலும் ஆழ்த்தியிருப்பர்…
II
நாட்டு கூத்தும்
நட்டுவமும்
கோலாட்டமும் கும்மியும்
ஒயிலாட்டமும் சேர்ந்தொலித்து,
இவர்
மகிழ்வை
எடுத்துரைக்க
உருமி, தம்புரா, சங்கு
மேளம் என குமுறி, குமுறி
முழங்குமே…
நோயுற்ற ஓர்
ஆன்மாவை
புதுப்பிக்கும் -இந்
நிகழ்வுகள்
இப்படியாய் நடந்தேற
மனம்
சற்றே இளைப்பாறும்…
மன்மதன் கதையை
மீண்டும் ஒரு முறை
எடுத்துரைப்பார்…
உணர்ச்சிகள் கொப்புளிக்க
இணையற்ற அக்காதலை,
கர்வத்தை, நெஞ்சுரத்தை
இவர் எடுத்துரைக்கும் விதத்தினிலே
மீண்டும் ஒருமுறை
மன்மதன் எழுவான்…
நிலவு எரிகையில்,
விடியும் வரையிலும்
மனமும் அசையும்-அம்
முரணற்ற
காலங்களும்
மணி மணியாய் உருளும்…
குளிரை தடுக்க
சிறு தீ மூட்டி
பின்
அச் சிறு தீயில்
மனித முகங்களையும்
காட்டி
அங்கே…
ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என
தோட்டமே
செவிமடுக்கும்
அத்,
தலைமுறை கீதங்கள்
ஒரு சமூகத்தின்
பண்பட்ட நாகரீகத்தை
பறைசாற்ற…
ரதி என்ற நல்லாளின்
வசீகரத்து தங்க குணங்களை
எடுத்தியம்பி…
ஆம்
இவையெல்லாம் - அந்த
பிரட்டின் அதிர்வுக்கே…
சாந்தியும் அமைதியும்
நிறைந்தது
இந்நாட்கள்…
புத்தாண்டும், பொங்கலும், தீபாவளியும்
ரதி-மன்மதன் கதை என்றும்
அவ்வப்போது
அரங்கேற்றுவது
இவ்வாழ்க்கை…
ஒன்றன் பின் ஒன்றாய்
தொடரும் இவ்
வாழ்வியலின் ஒரு கூறு,
ஆனந்த காட்சி,
நாடக வடிவிலும்
அரங்கேறும் -ஆனால்
வாழ்வோ
சிதிலமடைந்து வீழ்வதாய்
இருக்கும் - இங்கு.
இவ்வாழ்வை,
துரைமார் வாழ்வுடன்
ஒப்பிட கூடுமா?
துரைமார் வாழ்வுடன் -இவை
நெருங்கவும் கூடுமா?
எம்மை ஆள்பவர்களுக்கானது
வாழும் இவ் உலகு…
அவர்களுக்கானது
அசையும் இவ் உலகு…
ஆம்…
அவர்களதே உலகு…
அவர்களுக்கே உலகு…
III
இம் மனிதர்
எங்கிருப்பினும் - அங்கே
ஓர் ஆங்கில சீமையை
தோற்றிடவே செய்வர்…
ஆங்கில சீமையின்
செல்வ திரட்சி-அத்தனையும்
எம்
வெங்கல தோல் மனிதரின்
கரங்களால்
உருவானதே…
ஆங்கிலேயர்
இருப்பிடத்தின்
முன்
விரியும்-ஒரு
பசும் புற்றரை - சூழ்ந்திருக்கும்
அழகிய பூங்கா –தோட்டங்கள்
பின் - அவற்றிடை
எழும் -ஒரு
செங்கல் மாளிகை…
உண்மையில் - இவை
ஒரு கம்பீர எழுச்சிதான்…
காலை ஒளியை
பருகி
மாலை கருக்கலையும்
முகரும் - அவை.
சோலை பூங்கா,
சுற்றிலும் மலர்கள்… ஒரு
கனவுலக சொர்கத்தை
இப்படியாய் கட்டி எழுப்பி…
வாழ்வின் மேன்மைகள்
இப்படியாய் செழித்துயர
துரைமார் களஞ்சியமும்
நிரம்பி வழியுமே…
IV
கோப்பி காலம் முதல்
தேயிலையின் காலம் வரை…
கோப்பி பறிப்போர் சென்று, மடிய…
கொழுந்து பறிக்கவென, புதியவர் தோன்ற…
பெருமூச்சும் புன்னகையும்…
வியர்வையும் கண்ணீரும் - இடையே
வந்தும் போகும் -
இதுவே இவரது வாழ்க்கை.
மாறுவதுதான் இயற்கை – என்றாலும்
இம்
மாற்றங்கள் தானாய்
வந்ததில்லை காண்…
மனிதனை
வேறாக்கி
நிறுத்தலும் - அவன்
உரிமையை
மற்றவன் தட்டி பறித்தலும்…
பின்,
மனிதன் மேல் மனிதன்
அல்லது அவனது அரசு பாய்தலும்…
ஒருவன் மறுக்க
மற்றவன் தடுக்க
தேயிலையின் காலம் தொடங்க
கோப்பி பிடுங்கியோர் செத்து ஒழிய…
இப்படியாய், இப்படியாய் இங்கே
மாற்றங்கள்
தொடர்ந்தன… ஓர் பிரட்டின் அதிர்வுக்காய்…
சாட்டைகள்
அல்லது
சுருக்கு கயிறு
தயார் நிலையில் இருக்கும்.
சட்டத்தின்,
சட்டமற்ற கரங்களும், மு~;டிகளும்
நாடற்றவர்
எமது தசையினை
வாட்டி வதைக்கும்…
ஆனால்,
இவை அணைத்திடுமோ,
எமது
சுதந்திர அன்னையின்
பெருந்தீ சுடரை -இது
அழித்திடுமோ
எமது பெரு நெருப்பை…
உணர்வுகளின்
எழுச்சிகளை
சம்மட்டி அடிகள்
தகர்த்ததுண்டோ?
புனித நெருப்பிடை
சுமை நிறைந்த
சிலுவையின் மத்தியில் - அறையப்படும் ஆணிகளிடையே
மனிதன்
தனது
பெயரையும் அழகுற
பொறிக்கத்தான் செய்வான்.
அவை
தூண்டி, ஊக்குவிக்கும்
எமது பெருந்தீ பற்றி எரியவே.
என்
வெண்கல தோல் மனிதர்கள்
மலை உச்சிகளில் இருந்தும்
பள்ளத்தாக்குகள் நெடிதுமாய்
எதிரொலி செய்ய – மலையில் ஏறி
குரல் தருவர்…
தெளிவுடனும்
உறுதியாகவும்
ஒரு நூற்றாண்டு காலமாய்-இவர்
குரல் தந்தது போல் - இவர் மீளவும் குரல்
தருவர்,
ஒரு - பிரட்டின் அதிர்வுகளுக்காய்…
வாழ்வு:
வாக்குகள் அற்றதோர் காலம்
இருண்ட அந்த அந்தகாரம்…
நாடற்றவர்
என்ற ஒரு
ஊழ்விதி தீர்ப்பு…
உலர்ந்தோர் உரிமையின்
வற்றிய நிலைபேறு…
அனைத்துமே இங்கோர்
புதியதோர் விடியலை
தோன்றவும்
செய்யும்…
அழிவும் ஆக்கமும்
இணையும் இத்தருணத்தில்தான்
வாழும் மனிதரின்
மூச்சு காற்றில்
பெரு நெருப்பு உருவாகி,
ஒரு நூற்றாண்டு காலத்து
கண்ணீரையும் வியர்வையையும்
ஒற்றி எடுப்பன…
ஓராயிரம் யானையின் பலம் கொண்டு
எழுச்சி கொண்டதோர் புதிய சக்தியாய்
இவர் புதிய சூரியனை படைக்க வெளிப்படுவார்.
லட்சோப லட்ச மனிதர்களின் - இவர்களின் இந் நூறாண்டு வரலாறு,
புதிய விடியல்களை நோக்கி -இம் மனிதர்களை
உந்தி தள்ளும் -அசைத்து நகர்த்தும்…
ஆம். அவர்
அணி நடை நடப்பர்
அணி நடை நடப்பர்- இப்
பிரட்டின் அதிர்வுகளுக்கே… இப்
பிரட்டின் அதிர்வுக்கே…
முற்றும்