23-24 வயதே நிரம்பியிருக்கக்கூடிய இவ்விளைஞனின், சாதியம் பற்றிய உணர்வும், பெண்களின் அடிமைத்தனம் பற்றிய எண்ணமும், இதைவிட மேலாக எலும்பும் தோலுமாய் அன்று தோற்றமளித்திருக்கக்கூடிய தன் மக்கள் பொறுத்த சிந்தனையும், நாடு காலனித்துவ ஆங்கிலேயரிடம் இப்படி அடிமைப்பட்டு போயிருக்கின்றதே என்ற ஆதங்கமும் மேலோங்கி வீசுவதாய் இருந்தது. ஆனால், இவற்றை விட, தம் இன்னுயிரை தியாகம் செய்து வெஞ்சிறையினுள்ளும் தம்மை இருத்திக் கொள்ள துடிக்கும் தன்னிகரற்ற சிங்கங்களையும் அவன் தன் வாழ்நாளில் தரிசிக்க வேண்டி வருகின்றது. இருப்பினும் இவ்விளைஞனின் உணர்வலைகளுக்கு கடிவாளம் போட்ட இரு பெரும் அலைகளும் அன்று வீசாமல் இல்லை.

ஒன்று, நாட்டில் சூல்கொண்டு முளைத்துள்ள விடுதலை இயக்கத்தின் முதிர்ச்சியின்மை. இரண்டாவது, இந்திய சமூகத்தில் அன்று காணப்பட்ட பிற்போக்குத்தன அல்லது ஒரு ஆசிய உற்பத்தி முறை ஏற்படுத்துகின்ற எண்ணற்ற முரண்களின் ஒட்டு மொத்தம்.

இவ்விரு அலைகளும் அவனை ஓயாது திணறடிக்கின்றன. அவனது எழுத்துக்களை அவை ஆழமாக தாக்க முற்படுகின்றன. இவற்றுக்கு எதிராகவெல்லாம், அவன் தன்னையும், தன் எழுத்தையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுகின்றான். உலக செழுமைகளையெல்லாம் உள்வாங்க முனையும் அவனது உணர்ச்சி பிழம்பான இளம் மனம், சாதியம் பொறுத்தும், பெண்களை உயிருடன் கொளுத்தும் சதி முறைமைகள் பொறுத்தும், இக் கொடுமைகள் யாவற்றையும் மிக கவனமாக காப்பாற்றி வரும் மதம் குறித்தும் கொந்தளிக்கின்றது.இப்புயலின் பின்னணியில்தான் அவன் “துளசிபாயி” (நவம்பர் 1905) என்றும் “பாரத குமரிகள்” (ஜனவரி 1906) என்றும் அற்புதமான சிறுகதைகளை தன் இளவயதில் தீட்டுபவனாக இருக்கின்றான். (1905-1906). ஆனால், இவை அனைத்துமே இவன், சுதேச மித்திரனில், சுப்ரமணிய ஐயரின் ஆசிர்வாதத்துடன் இணைந்த பின்பே நடந்தேறுகின்றது. இதற்கு சற்று முன்னதாக, அவன் ‘இந்துவுக்கு’ எழுதிய கடிதம் மிகவும் அர்த்தமுடையது மாத்திரமல்லாமல், அவனது இளம் மனதில் அன்று முகிழ்த்திருக்கக்கூடிய உயரிய சிந்தனை வீச்சையும் புலப்படுத்துவதாய் இருக்கின்றது (டிசம்பர் 1904).  சாதிய ஏற்றத்தாழ்வு குறித்து மேற்படி கடிதம் பின்வருமாறு பேசுகின்றது:

“இந்த சாதி அமைப்பு முறை இருக்கிறதே, அது அதி ஆச்சரியமானது. ஏனென்றால், பறையன் ஒருவன் பெருங் கொடையாளியாக இருந்தப்போதிலும் அவன் பிராமண தரகனை விட கீழானவன் என்றே கருதி நடத்துகின்றது. இங்கிலாந்தில், உரிய தகுதிகள் வாய்க்கப்பெற்ற சக்கிலியன் ஒருவனின் மகன் அங்கே பிரதம மந்திரியாகுவதற்கு எவ்வித தடைகளும் கிடையாதென்பதை அறிய வேண்டும்…சங்கராச்சாரியார் மடத்தின் பீடாதிபதியாக ஒரு சூத்திரன் வரமுடியுமா? சூத்திரனை பற்றி சொல்லவே வேண்டாம்… அவனுக்கு சமஸ்கிருத சாஸ்திரியத்தில் ஈடு இணையற்ற அறிவு இருந்தப்போதும்?…மகத்தான இங்கிலாந்து எங்கே? இந்தியா எங்கே?” (டிசம்பர் 1904).

இதுபோலவே, அன்றைய இந்தியாவில் வேர்கொண்டிருக்கக் கூடிய இந்திய பெண்களின் இழிநிலை குறித்தும் அதனை நிவர்த்திக்கும் கடமைகளை கொண்டிருக்க வேண்டிய ஓர் அரசியல் ஸ்தாபனம் பொறுத்தும் இவ் விளைஞன் மிக ஆழ்ந்த அக்கறைகளை காட்டியுள்ளான். இப்பின்னணியில், அன்றைய அரசியலில் மாபெரும் அரண்களை கொண்டு, ஒரு கற்கோட்டையாக எழும்பி இருந்த, தேசிய காங்கிரஸ் குறித்து இவ்விளைஞன் பின்வரும் வரிகளை எழுதுபவனானான்:

“தேசிய காங்கிரஸ் தலைவரிலிருந்து தொண்டர் வரை எல்லா மட்டங்களிலிருந்தும் இந்தியாவின் சிறந்த புதல்வர்கள் இருக்கின்றனர்; என்பதையும் நான் சரியென்றே தயக்கமின்றி ஒப்புக்கொள்வேன்…ஆனால் நம்முடைய சமுதாய சீர்த்திருத்த மகாநாடுகள் வெற்றியடையாத வரைக்கும், நம் தேசிய காங்கிரஸ் என்பது வெறும் தூசியும் கண் கூச வைக்கும் பிரகாசம் மட்டுமே ஆகும்”. (டிசம்பர் 1904–அதே இந்துவின் கடிதம்).

இவ்வரிகள், ஜி.சுப்ரமணிய ஐயரையும் தலைவர்களில் ஒருவராய் கொண்ட (தமிழ்நாட்டின் தலைவர்) அன்றைய காங்கிரசின் உண்மை நிலைமையை குறித்தே ஆற்றப்படுகின்றது என்பது அழுந்த கோடிடப்பட வேண்டிய ஒன்றாகும். இக்காலப்பகுதியில், ஜி.சுப்ரமணிய ஐயர் மாத்திரமல்ல. ஆனால் நௌரோஜி முதல் கோகலே வரையான (1905), பல்வேறு பாண்டித்தியம் பெற்ற தலைவர்களும் அக்கற்கோட்டையை அலங்கரிக்க தவறவில்லை என்பதையும் கூறியாக வேண்டும்.

ஓர் ஆங்கிலேய காலனித்துவ அமைப்பு முறையின் மத்தியில் பல்வேறு அலைகளினிடையேதான் இக் கற்கோட்டை, விரும்பியோ விரும்பாமலோ எழுப்பப்படுகின்றது என்பது பொறுத்த உணர்வலையும் இங்கே தேவைப்படுகின்றது. ஆனால், இவற்றை எல்லாம் இவ் இளைஞனின் மனம் விமர்சனமற்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவ்விளம் மனம் அத்தகைய தலைவர்களையும் அங்கீகரித்து ஓர் சமரசத்தையும் ஏற்க மறுக்கின்றது. இப் பின்னணியிலேயே, இவ்விளைஞன், அக் கற்கோட்டை குறித்து ஆழ வருந்துபவனாயும் இருக்கின்றான்:

“குழந்தை பருவத்திலேயே விதவையாகி விட்ட ஒருத்தியை என்றென்றைக்கும் நரக வேதனை அனுபவிக்கும் படி செய்துவிட்ட கல் நெஞ்சம் கொண்ட ஒருவன், தலைமை பீடத்திலிருந்து, விழிப்படைந்து வரும் மக்களை சரிவர வழிநடத்தி செல்வான் என்பது நம்பிக்கை தர கூடிய ஒன்றல்ல. அது முற்றாக சாத்தியப்பட போவதில்லை என்பதனையும் கூறியாக வேண்டும்”. (அதே இந்து கடிதம்).

ஆனால், இஃது ஒரு ஆரம்பம் மாத்திரமே.

தேசிய காங்கிரசின் தலைமை பீடத்தை நோக்கி மேற்கூறியவாறு கருத்து தெரிவிக்கும் பாரதி, ஒரு கவிஞனின் மனநிலைக்கு ஏற்ப பின்வருமாறும் அதே கடிதத்தில் எழுதுவதும் இயல்பாகின்றது.

“(இப்படிப்பட்ட) கல் நெஞ்சம் கொண்ட ஒருவன் (தேசிய காங்கிரஸின்) “தலைமை” பீடத்திலிருந்து… வழி நடத்தி செல்வான் என எதிர்ப்பார்க்கலாமா?”

2

ஆனால், கால நகர்வில், இதே தேசிய காங்கிரசின் தலைமை பீடத்தை திரு.காந்தி கைப்பற்றுகின்றார். (1924). காந்தி 1915இல், தென்னாபிரிக்காவில் இருந்து வந்த உடனேயே காங்கிரசின் தலைவர்களில் ஒருவராக செயல்பட அவருக்கு வழி ஏற்படுத்தப்படுகின்றது.

அவரது பிரவேசத்துடன், வன்முறையற்ற சாத்வீகமான, அகிம்சை முறையிலான போராட்டமும் களமிறக்கப்பட்டு அன்றைய இந்தியாவின் சுவராஜ் இயக்கத்திற்கு அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றது.

இது திட்டமிட்ட ரீதியில், அதே காலனித்துவ ஆங்கில ஆதிக்க சக்திகளின் அனுசரனையோடுதான் நிறைவேறிய ஒன்றாகுமா என்பது வேறு விடயம். (இது போலவே, இன்றைய மோடி-ஜெயமோகன் வகையறாக்கள் காந்தியை கொண்டாடுவது என்பதும் இயல்பான விடயம்தான்). ஆனால், தனது முரண்களுக்கு எல்லாம் முன்னோடியாக இதே காந்தியுடன், ஆரம்பத்தில் இருந்தே, பாரதி, முரண்படுவதாய் உள்ளது. உதாரணமாக, “நவஜீவன்” பத்திரிகையின் மூலமாக காந்தி, விதவைகளின் மறுமண அரசியலை முன்னெடுக்கும் போது, அப்பார்வையுடன் பாரதி நேரடியாய் மோதுவதாக உள்ளது.

மனுகுலத்தை கட்டும் அனைத்து தளைகளும் சிதறடிக்கப்பட வேண்டுமென்ற எண்ணப்பாட்டுடன் தனது அரசியலை வடிவமைக்க முனையும் இவ்விளைஞன் இப்படி காந்தியுடன் முரண்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.

“இந்தியாவின் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை” என்ற கட்டுரையில் காந்திக்கு எதிராக பாரதி பின்வரும் பொருள்பட எழுதுகின்றான்:

“ஸ்ரீமான்…. சொல்கின்றார்… இந்த கணக்கின்படி… ஐந்து வயதுக்குட்பட்டோர்… 18,000 பேர். பிறந்து ஒரு வரு~மாகும் முன்னரே, விதவைகளாகி விட்ட மாதரின் தொகை 1,014. பதினைந்து வயதுக்கு குறைந்த கைம் பெண்களின் தொகை மூன்றரை லட்சம்”

“இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு”, “இது, இக்கைம் பெண்களின் மொத்த தொகை என்று சொல்லி வருத்தப்படுகின்றார்…”

“ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி, ‘மேலே காட்டிய தொகையை படிப்போர்கள் அழுவார்கள்’ என்பது திண்ணம் என்கின்றார்..”

“அப்பால் தனக்கு புலப்படும் உபாயங்கள் சிலவற்றை கூறுகின்றார்: (1) பால்ய விவாகத்தை நிறுத்தி விட வேண்டுமென்பதும் (2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம் பெண்களும் புனர் விவாகம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டும்...” என்றும் ஆனால் இவற்றை அனுசரிப்பதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் மேலும் கூறுவார்:

“ஆனால் இவ் உபாயங்களை விருப்பமுடையோர் அனுசரிக்கலாம். விருப்பமில்லாதோர் தமது குடும்பங்களிலேயே விதவைகளை வைத்துக் கொள்ளலாம்..”.

“அவர்கள், புனர் விவாகத்தை பற்றி யோசிக்கவே மாட்டார்கள். தாமும் அவர்களை மறுமணம் செய்துக் கொள்ளும்படி கேட்கப் போவதில்லை என ஸ்ரீமான் காந்தி சொல்லுகின்றார்”.

“ஆண்மக்கள் புனர் விவாகம் செய்து கொள்வதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையை குறைக்கும் அருமருந்தாகும்” என்றும் ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகின்றார். இந்த வினோதமான உபாயத்தை முதல் முறை வாசித்துப் பார்த்த போது எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால், இரண்டு நிமிசம் யோசனை செய்து பார்த்த பிறகுதான் அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று”

“முதல் தாரத்தை சாகக் கொடுத்தவன் பெரும்பாலும் கிழவனாகவேயிருப்பான். அவன் மறுபடியும் ஒரு சிறு பெண்ணை மணம் புரியுமிடத்தே அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் (இன்னுமொரு) விதவையாக மிஞ்சி நிற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒருமுறை மனைவியை இழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின் தொகையை குறைக்க வழியாகும்’ என்பதே ஸ்ரீமான் காந்தியின் தீர்மானம்”.

“சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான். ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது… இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருபோதும் நடக்கமாட்டார்கள். மேலும், பெரும்பாலும் கிழவர்களே முதல் தாரத்தை இழப்பதாக ஸ்ரீமான் காந்தி நினைப்பதும் தவறு”.

“இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25ம் பிராயத்தில் மரணம் நேருகிறது…”. எனவே இளம் பிராயமுடைய பலரும் மனைவியாரை இழந்து விடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அனு~;டிக்கமாட்டார்கள்… அவர்கள்; அங்கனம் துறவு பூணும்படி கேட்பதும் நியாயமில்லை”

“ ‘ஸ்திரி-விதவைகளின்’ தொகையை குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ‘புரு~-விதவைகளின்’ தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார்… ஸ்திரி-விதவைகளின் பெருந் தொகையை கண்டு தமக்கு அழுகை வருவதாக வேறு ஸ்ரீமான் காந்தி சொல்லுகின்றார். அப்பால் ‘புரு~-விதவைகளின்’ பெருந்தொகையை கண்டு அழுவதற்கும் இப்போது ஹேது உண்டாகும்”

“ஒரு ஸ்த்திரியை மணம் புரிந்து கொண்டு அவளுடன் வாழ விரும்புவோர் வயது முதிர்ந்தோராயினும் அவர்களை குற்றம் சொல்வது நியாயமன்று. சிறிய பெண் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண் மக்கள் மணம் புரியலாகாது என்பதை நாம் ஒருவேளை பேச்சுக்காக ஒப்புக் கொண்ட போதிலும், வயதேறிய பெண்களை வயது முற்றிய ஆண்மக்கள் மணம் புரிந்து கொள்ள கூடாதென்று தடுக்க எவனுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, எவ்வகையிலே நோக்குமிடத்தும், ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது. சாத்தியப்படாதது. பயனற்றது.”

“நாகரிக தேசத்தார் எல்லோரும் செய்கிறபடி, விதவைகள் எந்த பிராயத்திலும் தமது பிராயத்துக்கு தகுந்த புரு~ரை புனர் விவாகம் செய்து கொள்ளலாம். (இது போலவே ஆண்களும்)… வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹிருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்த வேண்டும் என்ற கொள்கை! இவற்றைக் கொண்டே நம்மவர்களிலே சில புருஷர்கள் ‘ஸ்திரிகளுக்கு’ புனர் விவாகம் கூடாது என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான் கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான் ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது."

“பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால், அதைகூட உறுதியாக சொல்ல அவருக்கு தைரியமில்லை” “மழுப்புகிறார்”.

எல்லா விதவைகளும் மறுமணம் செய்து கொள்ள இடம் கொடுப்பதே….தகுந்த மாற்று… மற்ற பேச்செல்லாம் வீண் கதை”. (பாரதியார் கட்டுரைகள்:பூம்புகார் பிரசுரம்: 1977).

இக்கட்டுரையானது, சரியாக எந்த வருடம் எழுதப்பட்டு வெளிவந்தது என்பதனை சீனி.விஸ்வநாதனும் அறியாதவராக இருந்தாலும் (இன்றுவரை-10.01.2026), கட்டுரை தொகுப்பில், இக்கட்டுரையை இடம் பெற செய்ய அவர் ஆவன செய்துள்ளார் என்பதனையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். ஆனால், இக்கட்டுரையை எழுதவும், காந்தியை ‘மகாத்மா’ என்று அழைக்க சம்மதியாதவனுமான பாரதிக்கு பின்னர் உருவெடுக்கும், ஓர் முதிர்ந்த பாரதிக்கு முன்னோடியாக அமைவது அவனது 23-24 இள வயது அரசியலே என்றால் அது மிகையாகாது.

3

இருந்தும், 1922இல் வெளிவந்த “சுதேச கீதங்களில்” “மகாத்மா காந்தி பஞ்சகம்” என்ற கவிதையும் இடம்பெறவே செய்துள்ளதை நாம் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. (பாரதி இறந்த பின் வெளியான பிரசுரம்). இக்கவிதையில், பாரதி, காந்தியை ‘மகாத்மா’ என்று அழைப்பது மாத்திரமல்லாமல் அவர் அடியெடுக்கும் அரசியலையும் வழிமொழிவதாய் கவிதை உருக் கொண்டுள்ளது.

“இடைச்  செருகல்” என்பது காலம் காலமாக எமது தமிழ் இலக்கியத்தில் இயங்கி வருவதுதான். ஒளவை முதல் சிலப்பதிகாரம் வரை, பல்வேறு திரிபுகள், அவ்வப்போது அரங்கேற்றி வைக்கப்படுவது, தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியமாக இருக்கின்றது. இவ்வகையில், “மகாத்மா காந்தி பஞ்சகம்” எனும் இக்கவிதை விமர்சகரால் இன்று சீர்தூக்கி பார்க்கப்பட வேண்டிய தேவையை எதிர்நோக்கவே செய்கின்றது. ஆனால் எமது இப்போதைய கேள்வி: இளம் பாரதியின் அரசியல் இப்போது மாறிவிட்டதா என்பதேயாகும்.

4

தேய்தல் அல்லது வளர்ச்சி என்பதனை மாற்றங்கள் எனும் வார்த்தை பிரயோகம் உள்ளடக்கவே செய்கின்றது. கலைஞர்கள், அரசியல்வாதிகளைப் போல் இன்றி, அனேக சந்தர்ப்பங்களில், தமது உண்மை முகத்தை இறுக மூடிமறைத்தலை ஒரு தேவையாக கொள்வர். பல சந்தர்ப்பங்களில் இவ் இரண்டக நிலைமை, இயல்பாகவும் நடந்தேறுவதும் உண்டு. கார்க்கி பொறுத்து லெனின் கூறுவார்:

“இலக்கியத்தில் நீங்கள் கடுமையான யதார்த்தவாதியாக இருக்கின்றீர்கள். ஆனால் தனிமனிதர்களை பொறுத்தவரையில், உங்களின் அணுகுமுறையானது கற்பனையலங்காரம் (Romantic) சார்ந்ததாக இருக்கின்றது. தனிமனிதர்களை நீங்கள் வரலாற்றின் உருவாக்கங்களாக அல்லது பிரசவிப்புகளாக அணுகி கொள்கின்றீர்கள்…”

இவ் இரண்டக நிலைமையானது மேலே குறிப்பிட்டதுபடி இயல்பாக நடந்தேறும் ஒன்றுதான்-முக்கியமாக கலைஞர்களில். மறுபுறம், கார்க்கி, டால்ஸ்டாயுடன் உறவாடும் போது பின்வருமாறும் நிகழ்கின்றது:

“அவருக்கு என்னில் உள்ள ஈடுபாடு அல்லது சுவாரஸ்யம் அனைத்தும் ஓர் இனக்குழுவினனை அறியும் வேட்கை சார்ந்தது. ஆனால், இவ் இனக்குழு சம்பந்தமான அவரது அறிவோ கிட்டத்தட்ட பூஜ்ய நிலையை உடையதுதான்…”.

இங்கே, மறைத்தல் என்பது வேண்டுமென்றே கைக்கொள்ளப்படுகின்றதா என்ற நியாயமான கேள்வியும் எழாமல் இல்லை.

5

பாரதியில் இவ்விரு அம்சங்களையும் நாம் தெளிவுற காணக்கூடியதாகவே இருக்கின்றது. “சுதேச கீதங்களில்” (1922) “அழகு தெய்வம்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள  ஒரு  மகத்தான கவிதை, பாரதி எனும் ஆளுமையை அல்லது அவனது அரசியலை, ஓரளவில் வெளிக்கொணர கூடியதுதான். (சீனி விஸ்வநாதன் இக்கவிதையின் கையெழுத்து பிரதியை தேடி பதிப்பித்துள்ளார்).

இவ் ஒப்புவமையற்ற கவிதை பல அற்புதமான வரிகளை கொண்டுள்ளது. உதாரணமாக:

“காலத்தின் விதி மதியைக்
கடந்திடுமோ என்றேன்…
காலமே மதியினுக்கோர்
கருவியா மென்றாள்…”

அதே போன்று, தனது எண்ணப்பாட்டை இப்பாடலில் கூறவரும் பாரதி, தனது திராணியையும் பறைசாற்றுபவனாகவே இருந்தான்:

“ஏலத்தில் விடுவதுண்டோ
எண்ணத்தை யென்றேன்…
எண்ணினால் எண்ணியது
நண்ணுங்கா ணென்றாள்…”

மிக அற்புதமாக புத்திகூர்மையை வெளிப்படுத்தும் இக்கவிதையில், “ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை…” என்பது போன்ற வரிகள் இடம்பெற்று இவனது விதிவிலக்கான ஆளுமையை கோடிடுவதாக உள்ளன. இறுதிவரை தான் கைப்பிடிக்க தீர்மானித்துவிட்ட, தன் வாழ்க்கை தீர்மானத்தை, அல்லது அவனது திராணியை எடுத்தியம்புவதாக மேற்படி வரிகள் விளங்குகின்றன. அதை அடுத்து வரும் வரிகளில் அவன் மேலும் கூறுகின்றான்:

“மூலத்தைச் சொல்லவோ
வேண்டாமோ என்றேன்…
முகத்திலருள் காட்டினாள்
மோகமது தீர்ந்தேன்…”

மூலத்தைக் காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பம், கார்க்கிக்கு, டால்ஸ்டாயுடன் இணைந்து அவர் உறவாடும் போது வாய்த்ததா என்பது தெரியவில்லை. ஆனால், அப்படியே வாய்த்திருந்தாலும் கூட மறைப்பது என்பதும் இயல்பான ஒன்றாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு. இருந்தாலும் இதைவிட மோசமான நிலைமையே பாரதியினது. தன்னை பாதுகாக்க அல்லது ஆக்கப்பூர்வமாய் விமர்சித்து வழிநடத்த ஒரு கட்சி இல்லாத நிலையில், தனிமனிதனாய், வீசக்கூடிய புயல்களுக்கு எல்லாம் முகம் தர வேண்டிய அனாதரவான சூழல் அவனது. இச் சூழலை அவன் எதிர் கொள்ளவேண்டிய திராணியை எங்கிருந்து பெற்றான் என்பதுவே கேள்வியாகின்றது. இதற்கான பதிலை தேடும் பொழுதே நாம் அவனது இளவயது அரசியலில் குடிகொண்டிருந்த கூறுகளை அல்லது பண்புகளை நுணிந்து நோக்க வேண்டிய தேவைகளுக்கு முகங்கொடுக்கவும் நேரிடுகின்றது.

23-24ம் வயதில், “துளசிபாய்”, “பாரத குமரிகள்”, மற்றும் ஏனைய சமரசமற்ற அரசியல் விமர்சனங்களை வீசி எறியும் அந்த கை, ஞான கிரணங்களை, இதயங்களில் விதைக்க துணிந்துவிட்ட அந்த கை, அவனது தகித்த இதயம் ஓர் மகா கவியினுடையது என்பதனையே எமக்கு சுட்டிக் காட்டுகின்றது. இவற்றிடை, மறைத்தலும், இடைச்செருகலும் கால நகர்வில் இடம்பெறுவது இயல்பானதாகின்றது. ஆனால் பாரதியின் உண்மை முகத்தை தரிசிக்க நாம் இவற்றை கடந்தே அவனை அணுக வேண்டியுள்ளது என்பதை அவனது இளமை காலம் முழுதும் கோடிடுவதாய் இருக்கின்றது, என்பதனையும் கூறியாக வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட  பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]