1

1882இல், டிசம்பர் 12 இல் பிறந்த பாரதிக்கு, 1906இல், வயது இருபத்தி நான்காய், இன்னமும் அரும்பியிராத ஒரு காலப்பகுதி. சரியாக சொன்னால் தனது 23-24 வயது காலப்பகுதியிலேயே இவ் இளைஞன் இவ் உலக பரப்பினை கூர்ந்து நோக்க தலைப்படுகின்றான். இவனது இந்த செய்கைக்கு, பல்வேறு கூறுகள், அடித்தளமாய் அமைந்திருக்க கூடும் என்றாலும், இவற்றில் தலையானதாய் தெரிவது, இவனது ஆழ்ந்த வாசிப்பு திறன் எனலாம். (அதாவது, கசடு அற கற்பது என்பது இவன் பின் கொண்ட ஒரு கூறே).

இதனுடன் இணைந்தாற்போல், கைலாசபதியின் கூற்றான, “உணர்ச்சி பிழம்பாக தோன்றுபவன்” என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதுதான்.

இப்படி, “உணர்ச்சி பிழம்பாக” தோன்றியது எந்த காலப்பகுதியை சார்ந்தது என்பதனை கைலாசபதி அறுதியிட்டு கூறாமல் இருந்தாலும், இவ் உண்மையானது அவனது இறப்பு வரை நீடித்திருப்பதை அவனது எழுத்துக்கள் எதிரொலிக்காமல் இல்லை. இருப்பினும், தனது உணர்ச்சி பிரவாகத்தை ஒரு கட்டுக்குள் கொணரும் ஒரு மனிதனாக இவன் பிற்காலத்தில் உருவாகியிருக்க கூடும் என்பதனை அவனது அதே எழுத்துக்கள் எமக்கு காட்டாமலும் இல்லை.

வேறு வார்த்தையில் கூறினால், 23-24 வயது காலப்பகுதியில், இவ் இளைஞன், ஒப்பீட்டளவில், அடிப்படையில், தன் “எதிர்வினையை” அப்படியே காட்டும் “பச்சை” மண்ணாகவே இருந்துள்ளான். ஆனால், இப் பச்சை எதிர்வினைகள், ஒப்பீட்டளவில், மிக உயரிய மட்டத்தில், எந்த ஓர் சராசரி மனிதனும் இலகுவில் எட்டி பிடிக்க முடியாத தளத்தில் இயங்கின என்பதும் வேறு விடயம். இருந்தும், இவன், கால நகர்வோடு, “வையத் தலைமை கொள்” எனும் கருத்தாக்கத்திற்கு வந்து சேர்கின்றான் எனலாம்.

23ஆம் வயதின் இறுதி பகுதியில் இவ் இளைஞன் ரஷ்யாவை பற்றி பின்வரும் கூற்றை ஆற்றுவதை காணலாம்:

“ரஷ்யாவில், ‘ராஜாங்க புரட்சிக்குரிய சின்னங்கள்’ ஏற்பட்டு வருகின்றன… கவர்மென்ட் ஸ்தாபனங்கள்… (மற்றும்) பொது சொத்துக்கள் (இவற்றையும்)… தாக்குகின்றார்கள் என்று டூமாவில் பிரஸ்தாபம் செய்யப்படுகின்றது. சில இடங்களில் நிலச்சேனையுடன், சேனைக்காரர்களும் ராணுவமும் கலகம் தொடங்கி, தொழிலாளிகள் கூட்டமும் சேர்ந்து விடுகின்றன… வேலை நிறுத்தங்கள்… அனைத்தையும் தந்தி ராய்ட்டர் பிரசுரித்துள்ளது…” (இந்தியா:30.ஜனவரி.1906).

இதில் இருந்து தெரிவது:

    டூமாவில் நடக்கும் சமாசாரங்கள் உட்பட, அனைத்தையும், இவன், கவனத்துடன் நோக்கும் இயல்பு.

    அவற்றை, அன்றைய முக்கிய நிகழ்வுகளுடன் இணைந்து பார்க்கும் இவனது பாங்கு.

    மற்றும் பொது சொத்துக்கள் தாக்கப்படுவதும், ராணுவமும் தொழிலாளியும் கூட்டு சேர்வதும், வேலை நிறுத்தங்கள் ஆரம்பமாகி விடுவதும் - இவற்றை, “புரட்சிக்குரிய சின்னங்கள்” என இவன் விளங்கி கொள்வதும். அதாவது, வரலாற்றில் முளைவிடும் புதிய விடயங்களை இவன் இப்படியாய் கிரகித்து உள்வாங்குவது.

இவை, முன்பே கூறியது போல, நிகழ்வுகளின் தொகுப்புகளில் இருந்து உண்மைகளை சேகரித்து கிரகித்து, அவற்றின் அடியாக வந்து சேரும் இவனது ஆழ்ந்த அரசியல் ஞானத்தை பறை சாற்றுவதாயுள்ளது.

இதற்கு, கிட்டத்தட்ட, மூன்று மாதங்கள் கழிந்த நிலையில், இவ் இளைஞன் கிழக்கு தேசங்களை பற்றி பின்வருமாறு எழுதுகின்றான்:

“சூரியன் கிழக்கு திசையிலே உதிக்கின்றான். அவனது இளமையின் சௌந்தர்யங்களை எல்லாம் கிழக்கு திசை அனுபவிக்கின்றது… மேற்கில் அவன் மறையும் முன்பு… மாலையில் சிறிது நேரம் கீழ்திசை மங்கியிருப்பதை கண்டு இகழ்ச்சியாக நினைக்கும் மூடர்களும் இருக்கின்றார்கள்… ஆனால், கீழ்திசை உதய திசைதான்… மேல் திசை அஸ்தமன திசைத்தான்…”.

“இப்போது… மறுபடியும் நாகரீகமும் சமூகத்தில் வீரத்தன்மையும் (இது போலவே)… ஆசியாவில் பிறந்து விட்டன… கீழ் திசைக்கெல்லாம் மாணிக்கம் போன்றதாகிய இந்தியா அற்புத மாறுபாடுகளை அடைந்து வருகின்றது…”. (இந்தியா:08.09.1906).

இப்படியாக உலக நடப்புகளை கிரகித்து எழுதும் இவ் இளைஞன் சீனா, கொரியா, கம்போடியா, ஆப்கானிஸ்தான், பாரசீகம் ஜப்பான் போன்ற நாடுகளில் நடக்கும் விடயங்களையும் தனது கூர்மையான பார்வைக்கு உட்படுத்தி வருவது அவனது வழக்கமாகின்றது.

இரண்டு மாதங்களில், இவ் இளைஞன், ஜப்பானிய சோசலிஷக் கட்சியை பொறுத்தும் பின்வருமாறு எழுதுகிறான்:

“எலெக்‌ஷன் வேண்டுமென்று… மட்டுமே… வாதாடி வந்தவர்கள்… இப்போது முதலாளிகளுக்கு விரோதமாயும்… மன்றாட தொடங்கி விட்டார்கள்… மேற்கு தேசத்தார்களை போலவே தொழில் நிறுத்தங்களையும்… ஏற்பாடு செய்து வருகின்றார்கள்…” (இந்தியா: 06.10.1906).

சுருக்கமாக கூறினால், உலக பரப்பில், தொழிலாளி என்பதும், வேலை நிறுத்தங்கள் என்பதும் பொது சொத்துக்களை நாசப்படுத்துவது என்பதும் இவ் இளைஞனின் பார்வையில் வரலாற்றின் புரட்சிகர சின்னங்களாகின்றன. இவை, அவனை பெரிதும் கவர்ந்து இழுக்கின்றன. முக்கியமாக தொழிலாளி-ராணுவத்தினரின் கூட்டு நடவடிக்கைகள், தொழிலாள சக்திகளின் சோசலி~ கோட்பாடுகள்- இவை அவனை ஆகர்சிக்கின்றன. உத்வேகம் கொள்ள செய்கின்றன. அது ஜப்பானாக இருக்கலாம் அல்லது ரஷ்யாவாக இருக்கலாம் அல்லது சீனாவாக இருக்கலாம்- உலகம் முழுவதும் புதிதாய் தோன்றும் வீறு கொண்ட இம் முளைகளை அடையாளம் கண்டு, அதனை தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னணி பாத்திரம் வகிப்பவனாக இவன் இருக்கின்றான்.

23 வயதில், இவன் ஆற்றும் இத்தகைய சாதனை அளப்பறியது என்பதனை குறிப்பிட்டாக வேண்டும். இத்தகைய ஓர் பார்வையை நிராகரித்து, “தேடி சோறு திண்பதையே” தமது வாழ்க்கை லட்சியமாக கொண்ட சராசரி மனிதர்கள் தமிழ் சனத்தில் குவிந்து போன நிலையில் இவ்வகை முளைகள் விதிவிலக்காகின்றன. இலங்கையில் கூட, எமது தமிழ் சமூகம், இத்தகைய முளைகள் இல்லாத காரணத்தாலும் இத்தகைய அறிமுகங்கள் நடந்தேறா நிலையினாலும், சர்வதேச விதிமுறைகளை அறியாத காரணத்தாலும், பாரிய விலைகளை தம் வாழ்வில் கொடுக்க நேர்ந்தது–முள்ளிவாய்க்கால் ஈறாக.

இத்தகைய ஒரு  பின்னிணியில்தான், உணர்ச்சி பிழம்பாக தகிக்கும் இவ் இளைஞனின் வரலாற்று முக்கியத்துவம் இன்று உணரப்பட வேண்டியதாகின்றது. ஆனால், காலம் 1906 இல் இருந்து நகர்ந்து 1907ஐ அடையும் போது, (சரியாக ஒரு வருடத்தில்) இவ் உணர்ச்சி பிழம்பானது தன்னையே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகுகின்றது.

ii

சீனி.விஸ்வனாதன், தனது “பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (1907-1909)” என்ற நூலில் பின்வருமாறு பதிவிடுகின்றார்:

இந்தியா'  பத்திரிகை தொடர்பாக அரசு அதிகார வர்க்கம் 1906ம் ஆண்டில் பின்வருமாறு மதிப்பீடு செய்தது:

“(பத்திரிகையானது) உள்ளுர் மற்றும் பொது செய்திகளை கொண்டிருக்கின்றது. மதம், சமூகம் மற்றும் அரசியல் பிரச்சினைகளை விவாதிக்கிறது. சுதேசியத்தையும் அன்னிய பொருள்கள் புறக்கணிப்பு இயக்கத்தையும் தீவிரமாக ஆதரிக்கின்றது. பத்திரிகையின் தொணி (வுழநெ-ளுவசழபெ) கடுமையானது” (அரசாணை எண்: 515 (பொது) –ரகசியம்: நலன்- 01.07.1907)

அதாவது, தனது “இந்தியா” பத்திரிகையில் ‘தொழிலாளி’ என்றும் ‘சோசலீச கோட்பாடுகள்’ என்றும் ‘ரஷ்யா’ என்றும் ‘வேலை நிறுத்தங்கள்’ என்றும் ஆர்ப்பரித்த இவ்விளைஞனை பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனம் தனது பார்வைக்கு உட்படுத்திக் கொண்டது ஆச்சர்யமல்ல. இதன் நிமித்தமே, பத்திரிகையின் தொனி கடுமையானது என அது வரையறுத்து கொள்கின்றது.

இவ் உளவு அறிக்கை பொறுத்து பாரதி (இவ் இளைஞன்) நன்கு அறிந்திருப்பார் என நாம் ஊகிக்கலாம். (அவனது தொடர்புகளையும் அவனது அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் வைத்து பார்க்குமிடத்து).

1907ம் ஆண்டு “இந்தியா” பத்திரிகையை தொகுத்தளித்துள்ள சீனி விஸ்வனாதன் அல்லது திருவாளர் ஸி.எஸ்.சுப்ரமணியம், இளசை மணியன் ஆகியோரின் தொகுப்புகளை கவனித்து பார்க்கும் போது, 1907இல் இவ் இளைஞன், ரஷ்யா குறித்து திடீரென கடும் மௌனம் சாதிப்பதை அவனது மாறிய நிலைப்பாடாக நாம் கண்டுணரலாம்.

இக்காலத்தில், இவனது சுதேசியத்துக்கான ஆதரவு செறிவாக இருந்த போதிலும் ர~;யா அல்லது தொழிலாளிகள் அல்லது சோசலிச கோட்பாடுகள் பொறுத்த அவனது இந்த மௌனம் பலமாக ஒலிக்கவே செய்கின்றது.

இந்தியாவில் சுதேசியத்தை பொறுக்குமளவுக்கு (திலகரின் அல்லது காந்தியின் சுதேசிய அரசியலை பொறுக்குமளவுக்கு) ர~;ய தொழிலாளர் கூட்டத்தை அல்லது சோசலீச சித்தாந்தத்தை அல்லது தொழிலாள ஒற்றுமையை பொறுப்பது பிரிட்டி~hரின் பார்வையில் ஆட்சேபத்துக்குரியதாகவே காணப்படுகின்றது என்பதை இவ் இளைஞன் கண்டு கொள்கின்றான். இதனாலேயே இவன் தனது அணுகுமுறையை மாற்றி, தனது, 1906இன் வெளிப்பாடுகளை தவிர்த்து, ரஷ்யா அல்லது சோசலீச கருத்தாக்கத்துடன் தன்னை வெளிப்படையாக சம்பந்தம் காட்டாது தவிர்த்துள்ளமையை, காலம் 1907ஐ நோக்கி நகரும் போது, நாம் இவனில் காணக்கூடியதாக உள்ளது.

அதாவது, உலக முதலாளித்துவத்தின் வலை பின்னல்களையும் அவர்களின் தந்ரோபாயங்களையும் ஆழ கற்று கொள்வதிலும் தனது நடவடிக்கையை மீள் பரிசீலனை செய்பவனாகவும் இவ் இளைஞன் தன் இருபத்திமூன்று வயதில் இருக்கின்றான்.

மேலே, மேற்கோள் காட்டப்பட்டுள்ள, பிரிட்டி~hரின் உளவு அறிக்கையானது, வெறுமனே மேலோட்டமாய் எடுக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில், இவ்வறிக்கையை தொடர்ந்தே, இந்தியா பத்திரிகையின் அலுவலகம் தேடப்படுகிறது. அதன் பிரசுரத்தாரரான திருமாலாச்சாரியார் கைது செய்யப்படுகின்றார். பாரதிக்கு எதிராக வாரண்டும் பிறப்பிக்கப்படுகின்றது. இவற்றுடன், பாரதி புதுவைக்கு தப்பி ஓடுகின்றார். (ஜுலை அல்லது ஆகஸ்ட் ஆரம்பத்தில்). இதனுடன், இந்தியா பத்திரிகையின், முதலாம் சுற்று 1907-ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதலில் தர்க்கப்பூர்வமான முடிவுக்கு வருகின்றது.

அதாவது 1907இல், இந்தியா பத்திரிகை, சில விவகாரங்களை தொடாமல், தவிர்த்தது என்பதில் அநேக அரசியல் நகர்வுகள் உள்ளடங்குகின்றன எனலாம். (1906இல், இந்திய அரசியல் கைதிகளுக்காக, அந்தமான் செலூலர் ஜெயில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது, என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதே).

iii

இப்புள்ளியிலேயே, பாரதி தொடர்பான விரிவான ஆய்வுகள் எமது பரிசீலனைக்கு எடுபட வேண்டி உள்ளது.

உலக முதலாளித்துவத்தின் வலை பின்னல்களுக்கு மத்தியில் வித்தியாசமாக விடயங்களை பார்க்கவும், சிந்திக்கவும் தெரிந்திருந்த இவ் இளைஞன், ஏனைய அவனது காலத்து மனிதர்களில் இருந்து வேறுபட்டு, பின்னாளில் ரஷ்யாவில், “காளி கடைக்கண் வைப்பதை” பாட நேர்வதை  ஒரு  தற்செயலாக கொள்ள முடியாதுள்ளது. மாறாக, இதனை, தருக்க ரீதியான ஒன்றாகவே கொள்ள நேர்கிறது. காரணம் இதற்கான அடித்தளங்களை அவனது 23ம் வயது செயற்பாடுகளே எம்மிடை பறை சாற்றுவதாய் அமைகின்றன. உண்மையை கூறினால், இப்படி “காளி கடைக்கண் வைப்பதை” விட, வெளிப்படையாக ஆவேசத்துடன் பாடவே, அவனது, கவி உள்ளம் விரும்பியிருக்கும்.

காரணம், “மானுடம் பிணித்துள்ள தன் தளைகளையெல்லாம் சிதறடிக்கட்டும்” என அவாப்பட்ட ஒரு மனிதனின் உள்ள குமுறல்களுக்கு தீண் போடும் ‘ர~;ய’ நிகழ்வுகள் இவை. ஆனால், எம்மிடை எழும்பும் கேள்வி: இவன் இப்படி பாட நேர்ந்தது, தற்செயலானதா அன்றி தர்க்க ரீதியான வளர்ச்சியின் காரணத்தினாலா என்பதேயாகும்.

இவ்விடத்திலேயே, இவனது 23-24 வயதை காட்டி நிற்கும் சீனி.விஸ்வனாதனின் தொகுப்புகளும், இளசை மணியனது தொகுப்புகளும் எமக்கு இன்றியமையாதனவாக இருக்கின்றன.

iv

சீனி. விஸ்வனாதன் அவர்களின் தேடல்களும் இளசை மணியன் அவர்களது தேடல்களும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஒப்பிட முடியாத சிற்சில வித்தியாசங்களை கொண்டிருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

சீனி விஸ்வனாதன் அவர்களின் பாரதியின் காலவரிசையிலான எழுத்துக்கள், (தேடல்கள்) கிட்டத்தட்ட 17 தொகுதிகளாக வெளிவந்திருக்க கூடிய இன்றைய நிலையில் (எலையன்ஸ் வெளியீடு) திரு.இளசை மணியனின் தேடல்கள் துரதிர்ஸ்டவசமாக இரு பாகங்களுடன் மட்டுமே நிறைவு செய்யப்படுகின்றது. (1906இல் இருந்து 1907 ஜுன் வரை).

இருந்த போதும், சீனி விஸ்வனாதன் அவர்களின் முதலாவது தொகுப்பில் (1906இல்), ரஷ்யா பொறுத்த மூன்று கட்டுரைகள் மாத்திரமே பிரசுரமாகியுள்ளது.

மறுபுறத்தில் இதே காலப்பகுதியில் (1906) பாரதியின் ரஷ்யா  தொடர்பான 5 கட்டுரைகளை இளசை மணியன் பிரசுரம் செய்துள்ளார். (1906-முதற் பாகம்- பாரதி தரிசனம்).

வேறு வார்த்தையில் கூறுவதானால், சீனி விஸ்வனாதனின் ‘ரஷ்யா’ தொடர்பிலான இவ் விடுபாடானது, மேலும் அனேக விடுபாடுகள் நடந்திருக்க கூடுமோ எனும் கேள்வியை எம்மிடம் எழுப்புவது சகஜமாகின்றது.

எனவே, “காளியின் கடைக்கண் பார்வையை” முழுமையாக பரிசீலிப்பதென்றால் இத் தேடல்கள் முழுமையாக அமைய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உண்மையில் திரு சீனி விஸ்வனாதன் அவர்களே கூறுவார்: “பாரதி தொர்பிலான மேலும் பல தேடல்கள் முடுக்கி விடப்பட வேண்டும்” என்று. ஆனால், தேடல்கள் எனப்படுவது பூரண கற்கையுடனும், அர்ப்பணிப்புடனும், தன்னை முன்னிலைப்படுத்தாமலும் ஆழமானதாய் செய்யப்பட வேண்டியதாயுள்ளது.

இதே போன்று, இதே காலப்பகுதியில் (1906) பாரதி, ‘தொழிலாளர்’ தொடர்பிலும் ஐந்து கட்டுரைகளை எழுதி உள்ளார். இவ் ஐந்தும் இளசை மனியன் பதிப்பித்துள்ள நிலையில் சீனி.விஸ்வனாதன் அவர்களோ இரண்டு கட்டுரைகளை மாத்திரம் பிரசுரித்துள்ளார். இது போன்றே ‘வேலை நிறுத்தங்கள்’ தொடர்பிலும், இளசை மனியனால் பிரசுரிக்கப்பட்டுள்ள மூன்று கட்டுரைகளுக்கு பதிலாக சீனி.விஸ்வனாதனது இரண்டு கட்டுரைகளே பிரசுரமாகி உள்ளது.

இருப்பினும், சீனி.விஸ்வனாதனின் மாபெரும் தேடல்களும் இளசை மனியனின் தேடல்களும் தமிழுக்கு, முக்கியமாக பாரதி தேடல்கள் தொடர்பில் அளப்பறிய செழுமையை இரண்டுமே ஊட்டி உள்ளன என்பதில் மாற்று கருத்து இல்லை.

இனி, இவற்றை ஒரு வழிகாட்டியாக கொண்டு, நாளைய தலைமுறை, பாரதி தேடலை மேலும் செழுமை ஆக்கலாம்.

v

இதேவேளை, 1906-1907 காலப்பகுதியில், பாரதி எனும் இவ் இளைஞன் தன்னை இலக்கியத்தோடு மட்டுப்படுத்தி கொள்ளாதவனாக இருக்கின்றான்.

“மானுடன் பிணித்திருக்கும் அத்தனை தளைகளையும் தகர்த்தெறியும்” நோக்கம் கொண்ட இவ்விளைஞனுக்கு திலகரின் அரசியலின் போதாமை கால நகர்வில் புரியக் கூடிய ஒன்றே. ஒரு காலக்கட்டத்தில், திலகரின் அரசியலை இவன் நியாயப்படுத்தினாலும், இவ் வயதிலேயே, தொழிலாளி என்பதும், சோசலிச கருத்துக்கள் என்பதும் இவ் இளவயது இளைஞனை ஆட்டி படைக்கும் விருட்சங்களாகின்றன. ஆனால், அக்கட்டத்தில் திலகரை அவன் நியாயப்படுத்திய அரசியலையும், நகர்வினையும் வேறுபடுத்தும், ஓர் தந்ரோபாய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். உதாரணமாக, அவன் எழுதுவான்:

“விதவைகளுக்கு விவாஹம் வேண்டும்” சர்வஜாதியாரும் ஒன்றாய் கலந்துவிட வேண்டும்’ என்பது போன்ற கொள்கைகளுடைய ஆசாரத் திருத்தக் கட்சியிலே திலகர் தம்மால் போய் சேர முடியாதென்கிறாhர். ஆசார திருத்தக்காரர்களின் கோட்பாடுகள் சரியா தப்பா என்பதை பற்றி நாம் இங்கு விவரிக்க வேண்டியது அவசியமில்லை.. (ஆனால்) மதக் கொள்கைகளையும் ஆசார சம்பந்தமான அபிப்பிராயங்களையும் அரசியல் விஷயங்களிலே கொண்டு வந்து புகுத்துவது மூடர்களின் செய்கை என்பதை மற்றுமொருமுறை வற்புறுத்த விரும்புகிறோம்…” (10.09.1096:இந்தியா:திலகரின் எதிரிகள் - பகுதி i:பக்கம்-45).

இச்சூழலிலேயே தொழிலாள இயக்கத்தோடு, தன்னை பிணிக்க முற்படும் பிபின் சந்திரபாலரை, இவ் இளைய பாரதி, சென்னைக்கு வரவழைப்பதில் முன்னணியில் நிற்கின்றார் (1907). பிபின் சந்திரபாலரை சென்னைக்கு அழைத்து வர பணம் சேகரிக்கும் குழுவில் ‘இந்தியா’ பத்திரிகையின் பத்திராதிபர் திரு.திருமாலாச்சாரியார் 15ரூபாய் நன்கொடை செய்கையில் அப்பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியர் பாரதி எனும் இவ் இளைஞன் ரூபாய் 5ஐ நன்கொடையாக வழங்குகின்றான். (பக்கம் 57 – பாகம் ஐ - இளசை மனியனின் தொகுப்பு).

24.11.1906இன், பிபின் சந்திரபாலரின் கூற்று:

“பிரிட்டிஷ்  துணிகள் மட்டும் அல்லாமல் பிரிட்டிஷ்  உத்தியோகங்களையும்… வேறு வித சம்பந்தங்களையும் நிராகரித்து விடுவது… முதற்படி… என பிபின் சந்திரபாலர்” போதனை செய்கின்றார். (பக்கம் 179: பகுதி-1)

இதற்கு முன்னராக அவர் ஆற்றியிருக்கும் கூற்று:

“இதுவரை தொழிலை நிறுத்தாதிருப்பவர்கள் கூட தொழிலை நிறுத்தி விட வேண்டுவது கடமையென பிபின் சந்திரபாலர் உபதேசித்துள்ளார்”. “ டிரையின்களை தண்டவாளங்களிலிருந்து தள்ளி விட பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன…”

இதே போன்று பாரதி எனும் இவ் இளைஞன், தொழில் நிறுத்தத்தை காட்டிக் கொடுக்க, சென்னையிலிருந்து, வங்காளம் சென்றிருக்கும் இளைஞர்கள் பொறுத்தும் எழுதுவார்:

“(இதனை)… சுதேச துரோக செய்கை என்பதாகவே நாம் கருதுகின்றோம்” (பக்கம் 225).

இதே போன்று அவன் மேலும் எழுதுவான்;:

பெங்காளத்து ரயில்வே நிறுத்தம் சுதேசிய முயற்சியுடன் சம்பந்தமுடையது…” (பக்கம் 228- பகுதி i)

இச்சூழலிலேயே பிபின் சந்திரபாலர் சென்னைக்கு வரவழைக்கப்படுகின்றார்.

சுருக்கமாக கூறினால், சுதேசியத்தையும் தொழிலாள இயக்கத்தையும் ஒன்றுபடுத்துவதில் இவ் இளைஞன் முன்னணியில் நிற்பதுடன், இவ் அரசியலில் முன்னே நகரக்கூடிய பிபின் சந்திர பாலரையும் அவன் சென்னைக்கு அழைத்து வருகிறான்.

அதாவது, பிபின் சந்திரபாலர் வங்காளத்தின் தீவிர சுதேசியத்தை ஊக்குவித்தது மட்டுமல்லாமல் வேலைநிறுத்த தொழிலாளர் சார்பாகவும் குரல் எழுப்புகின்றார். இதே போன்று இவ் இளைய பாரதியும் தீவிர சுதேசிய போராட்டத்தில் தொழிலாள நன்மையும் ஒன்று கலக்க வேண்டுமென்று விரும்புவதாய் தெரிகின்றது. இந்த அடிப்படையிலேயே அவன் பிபின் சந்திரபாலரை சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்கின்றார்.

vi

இதேவேளை, திலகர் போன்றவர்களின் அரசியல் போதாமைகளை இவன் ஆழமாக உணர்பவனாய் இருக்கின்றான்.

இதேநேரம், பிரிட்டி~hரின், அதி மோசமான பயங்கரவாதத்தையும், இதுபோலவே ஆழ உணர்கின்றான்.

அந்தமான் ஜெயில் வெறுமனே கண்காட்சிக்காக தோற்றுவிக்கப்படவில்லை என்பதை உணரும் இவன், கால நகர்விடை, பொதுவில் எண்ணுவது போல், இளைய தலைமுறையினரை குறிவைத்து “வையத் தலைமை கொள்” எனும் கருத்தை உதிர்த்தானில்லை.

தனது இயல்பான எதிர்வினைகளை கட்டுப்படுத்தி, அல்லது தான் உணர்ச்சி பிழம்பாக எழுதலை தவிர்த்து, வையத் தலைமை கொள்ள வேண்டியதன் அவசியத்தை முற்றும் உணர்ந்தவனாகவே இவ் இளைஞன் பிற்காலத்தில் உருவெடுக்கின்றான்.

இடைப்பட்ட இம்மாறுதலுக்கு முன்னர், இவனில் முன்நாளில் வேரூன்றி இருந்திருக்கக்கூடிய குணாதிசயங்கள் பின்னாளில் இவன் பாடிய கவிதைகளுக்கு வசதியாக கட்டியம் கூறுவதாய் அமையக்கூடும். எனவேத்தான் பயமறியா இளங்காளையாக அவன் உலா வந்த இந்த ஒரு காலப்பகுதி அதி முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக கூறுவோமானால், பயமறியாத இவ் இளம் கன்று, தனது 23-24 வயதில், 1906களில் தொழிலாளர்கள் குறித்தும், வேலை நிறுத்தங்கள் குறித்தும், சோசலிச கருத்தாக்கம் குறித்தும் இதைவிட மேலாக ரஷ்யா குறித்தும் அன்று என்ன நினைத்தது என்று அறிய நேர்வது முக்கியமானதாகின்றது. இவ் அறிமுகத்தோடு, இதனையே நாம் அடுத்து வரும் இதழில் காணலாம்.

(தொடரும்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.