1

தான் கூறிய ஒவ்வொன்றையும் தானே மறுதலித்த பெருமை கொண்டவன் இவன்” எனக் கைலாசபதி ஒருமுறை கூற நேர்ந்தது. உண்மைத்தான். கவனமாக பார்க்குமிடத்து, மாற்றங்களும் மறுதலிப்புகளும் இவனுக்கே உரித்தானதோ எனும் கேள்வி எழத்தான் செய்கின்றது. ஆனால், இம்மாற்றங்கள் எதன் அடிப்படையில், எதனால், பிறப்பெடுக்கின்றன என்பது கேள்வியாகின்றது. மறுபுறம், இவனது அகநிலை மாத்திரமே இங்கே சம்பந்தமுறும் விடயம் எனில், இதனை “வளர்ச்சி” என்று வரையறுக்கலாம். (வெறுமனே, மறுதலிப்பு என்பதனை விடுத்து).

இதனை போலவே, அழுத்தங்களும் இங்கே சம்பந்தமுறும் என்றால், “வையத் தலைமை கொள்” எனும் கருத்தாக்கத்திற்கு பாரதி வந்து சேர ஆளாக நேரிடுகின்றது என்பதும் தர்க்கப்பூர்வமானதே. இவற்றில், எது எப்படியிருப்பினும், இவனில் விகசிக்கும் இம்மாற்றங்கள் மிக மிக, ஆழமானவை. இலகுவில் எத்திக் கடக்க முடியாதவை. ஒரு சிறு உதாரணமாக அன்னி பெஸான்டை இவ் இளைஞன் அன்று, கையாண்ட முறைகள் யாதென பார்க்கலாம்:

எழுதுவான்:
“பிரம ஞான சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் தியஸாபிகல் பிரசிடென்டாகிய கர்னல் ஆல்காட் இப்போது மரணமடையும் ஸ்திதியிலிருக்கின்றார்… இவர் இறந்து போன பிறகு, இந்த சபைக்கு மிஸிஸ் அன்னி பெஸான்ட் பிரசிடென்டாக வரப்போகிறாரென்ற செய்தி அனேக தியஸாபிகாரர்களுக்கு சந்தோ~ந் தருமென்பதில் சந்தேகமில்லை… ஆனால், இந்த வி~யத்தின் சம்பந்தமாக ஒரு ரஸமான செய்தி இருக்கின்றது. அதாவது, ஜனவரி மாதம் 06ந் தேதி மஹாத்மா மோர்யா, மஹாத்மா கூட்ஹ{மி என்று சொல்லப்படும் இரண்டு ஸித்தர்களும் தமது சூக்சும வுடலை நீங்கி, ஸ்தூல வுடல் கொண்டு சென்னை அடையாற்றிலே, கர்னல் ஆல்காட் படுத்திருக்கும் இடத்திற்கு வந்தார்களாம். வந்து, மிஸிஸ் பெஸன்ட் அம்மையையே சங்க தலைமை வகிக்கும்படி செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுத்தார்களாம். இந்த சித்தர்கள் எத்தனையோ ஆயிரம் வரு~ங்களாக ஹிமாலயச் சாரலிலே வசித்து வருவதாக நம்பப்படுகின்றது. இவர்களே தியாஸபிகல் சபைக்கு மூல பூதர்களாக இருப்பவர்கள்…”
(சீனி.விஸ்வநாதன்: தொகுப்பு:2 பக்கம்:397: 1097)

இதேபோன்று, கர்னல் ஆல்காட்டின் மரணம் தொடர்பில் இவன் எழுதுவதும் மிகுந்த சுவாரஸ்யத்தை தரக்கூடியதே:
“சென்ற ஞாயிற்றுக்கிழமை… தியஸாபிகல் தலைவராகிய கர்னல் ஆல்காட் காலஞ் சென்றார்… சூக்சும லோகத்திலிருந்து ரஜபுத்திர வே~ம் கொண்ட கூட்ஹ{மி என்ற மஹாத்மாவும் வேறு பல மஹாத்மாக்களும், பிளாவட்ஸ்கி அம்மையும் சூக்சும சரீரிகளாக வந்து கர்னல் ஆல்காட்டை அழைத்து சென்றதாக மிஸஸ் அன்னி பெஸான்ட அம்மையார் எழுதுகின்றார்… கர்னல் ஆல்காட் இறந்த உடனேயே அவரது பிரேதம் வெகு கவுரவத்துடன் கொண்டு (போய்) எரிக்கப்பட்டது. ஹைகோர்ட் ஜட்ஜி சுப்பிரமணிய ஐயர், பிராமணர்கள், பவுத்தர்கள், கிருஸ்த்தவர்கள், முதலிய எத்தனையோ ஜனங்கள் சென்றிருந்தார்கள். பிரேதத்தை சுமந்து சென்றவர்களிலே 6 பேர் பிராமணர்களென்று மிஸஸ் அன்னி பெஸான்ட் எழுதியிருக்கிறார்…”  (சீனி.விஸ்வநாதன்: தொகுப்பு:2 பக்கம்: 442)

இது இவ் இளைஞனின் (பாரதி) ஆளுமையையும் அவனது அன்றைய அரசியல் பார்வையினையும், முக்கியமாக இடைதரகர்களாக செயல்படக்கூடிய பிராமணர்கள் தொடர்பான இவனது அணுகுமுறையையும், மறுபுறத்தே, அன்னி பெஸான்ட்-பிளாவட்ஸ்கி-ஆல்காட் ஆகியோர் முன்னெடுக்கும் ஆவிகளும் சித்தர்களும் சார்ந்த அரசியலையும் தெளிவுற முன்வைக்கின்றது. அதாவது, இவர்களின் வெவ்வேறு அரசியல் இங்கு நேரடியாக மோதுவதை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

மேலும், அதே, அன்னி பெஸான்ட் குறித்து மேலும் கூறுவான்: “மிஸஸ் அன்னி பெஸான்ட் என்ற ஐரோப்பிய ஸ்திரீ 14 வருஷம் இங்கிலாந்திலேயே நாஸ்திகச்சியாக இருந்து, ‘தெய்வம் பொய், பரலோகம் கிடையாது. விவாகம் செய்வது மூடத்தனம், ஆண்-பெண்கள் விலங்குகளை போல ஸ்வேச்சைப்படி கூடி திரிதல் வேண்டும்’ என்று பிரசங்கித்து ஜீவனம் செய்து வந்தாள்…”.

“வயது அதிகப்பட்டுபோய்… இங்கு வந்து, தியஸாபிகல் சபையில் பேய்-பூதம்-குட்டி சாத்தான்-இவற்றைக் கொண்டு… மூட ஜனங்களை ஏமாற்றி, பிழைத்து வருகின்றாள்…”

“… கடற்கொள்ளைக்காரர் போன்ற இந்த அம்மாள், இப்போது நாட்டிலிருக்கும் குழப்பத்தை கவனித்து பேய், பூதங்களை எல்லாம் கட்டி சுருட்டி வைத்துவிட்டு ராஜநீதி விவகாரங்களில் பிரவேசித்து சுதேசியத்துக்கு விரோதமாக… வேலை செய்து வருகின்றாள்…”

(1). சில வருஷங்களின் முன் … இந்தியர்களெல்லாம் சமய பேதங்கள்… சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே நாள்கழிக்க வேண்டுமென்றும், அதுதான் பெருமை என்றும்… ராஜநீதி முதலிய லௌகீக வி~யங்களை நாட்டார் வசம் விட்டுவிட வேண்டுமென்றும் உபதேசம் செய்தாள்…”

(2)…. ….

(3)….. …

(4) இந்தியாவுக்குப் பரிபூர்ண ஸ்வதந்திரம் ஒருபோதும் வராதென்றும், வந்தாலும் கூடாதென்றும், எக்காலத்திலும் இந்தியா, பிரிட்டிஷாருக்கே கீழ்பட்டிருக்க வேண்டுமென்றும் பிரசங்கம் செய்தும் எழுதியும் வருகின்றாள்…”.

(5)…. ….
(சீனி.விஸ்வநாதன்: தொகுதி-3: பக்கம் 445-446-1908)

அதாவது, அன்னி பெஸான்ட் அம்மையார் எத்தகையவரானார் என்பதனையும், அவரது அரசியல் பிரவேசத்தின் பின்னணி என்ன என்பதனையும் அவரது உண்மையான உள் நோக்கம் யாதாக இருக்க கூடும் என்பதனையும் இவ்இளைஞன் அழுத்தமாக கோடிட்டு காட்டுகின்றான்.

28.11.1908இல், மேலும், இவ் இளைஞன் பின்வருமாறு எழுதுகின்றான்: “மிஸஸ் அன்னி பெஸான்ட், நமக்கு ஸ்வராஜ்யம் பெற ஒரு சுருக்கமான வழி சொல்லுகின்றார்”.

“நீங்கள் சுருக்கமும் சுலபமுமான வழியை விட்டுவிட்டு ஸ்வதேசியம், ஸ்வஜாதியக் கல்வி, அன்னிய வர்ஜனம் என்றும் க~;டமான மார்க்கங்களில் சென்று வீணாக தூக்கில் பிராணனைக் கொடுத்தும், ஜெயிலில் அடைபட்டும், தீபாந்தர தண்டனைக்குட்பட்டும்… நாசமடைகின்றீர்கள்… ஸ்வராஜ்யம் வேண்டியவர்களெல்லாம்… ஒரு ஆலமரத்தடியில் கண்களை இறுக மூடி… ஸ்வராஜ்யம் வேண்டுமென்று தியானம் பண்ணினால் தானே வந்து விடாதா ஸ்வராஜ்யம் என்கிறார்”

“நமது கேள்வி நீங்கள் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது. போலீஸார்களும், ஆங்கிலோ இந்தியர்களும் உத்தியோகத்தர்களும்… ஆலமரத்தடியில் உட்கார்ந்து, இராஜத் துரோகிகளும் இராஜத் துரோகமும் இந்தியாவை விட்டு தொலைய வேண்டுமென்று… ஏன் தியானம் செய்யக் கூடாது…”

“வீடுகளை சோதனை போடுவNதுன்? சுதேசிகளுடன்… சுற்றி திரிவதேன்?… உபன்னியாசங்களை சுருக்கி எழுத ஆள் அனுப்புவதேன்? (உளவு) … ‘ஸ்பெஸல் கோர்ட்’ ஏற்படுத்த போவதேன்? தேச பக்தர்களுக்கு… மிருகத்தனமான தண்டனைகள் விதிப்பதேன்?…”
(சீனி.விஸ்வநாதன்: தொகுதி:3 பக்கம்: 651)

சுருக்கமாக கூறினால், அன்னி பெஸான்ட் அம்மையார் விளைவிக்கும் ஏடாகூடங்களை இவ் இளைஞன் இப்படி ஆழமாக அவதானிக்கின்றான். அவற்றை தக்கமுறையில் இப்படி விமர்சிப்பதற்கூடாக மக்களுக்கு ‘பயிற்றி பல கல்வி தருகின்றான்’. தியஸாபிகல் சங்கத்தின் தோற்றுகையானது  ஒரு தீர்க்கமான அரசியல் திட்டத்துடனேயே துவங்கப்பட்டுள்ளது என்பதை இவன் அப்பொழுதே கண்டு, அதனை விமர்சிக்க துணிகின்றான்.

வரலாற்றை எடுத்துப் பார்த்தால், கர்னல் ஆல்காட்  ஒரு  முற்றும் துறந்த முனிவராகவும் ஞானியாகவும், புலமைமிக்க பண்டிதராகவும் படம் பிடித்து காட்டப்படுகின்றார். ஆனால் அவர் ஒரு Free Mason என்பதும் ஆப்ரகாம் லிங்கன் கொலை விசாரணையில், அமெரிக்க அரசால் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் என்பதும் மறைபடும் விஷயமாகின்றது. சட்டத் துறையையும், ராணுவ துறையையும் விட்டு விலகி இவர் தியஸாபிகல் சங்கத்தை சென்னையில் பிளாவட்ஸ்கி அம்மையாருடன் உருவாக்கினார் என்பதும் மாத்திரமே பெரிதும் கூறப்படுவதாயும் அலசப்படுவதாயும் உள்ளது.

கலை களஞ்சியத்தில் பெரிதும் தங்கியிருக்கும் திரு.சீனி.விஸ்வநாதன் அல்லது இந்திய அரசியல் வரலாற்றை மிக பெரிய அளவில் எழுதியுள்ள நம்பூதிரிபாத் போன்ற விதி விலக்கானவர்கள் கூட, பாரதி அன்று உணர்ந்த இச்சித்திரத்தை, சரியாக, இன்றும் உணர்ந்தார்கள் இல்லை எனலாம். இலங்கையை பொறுத்தவரை கர்னல் ஆல்காட் பௌத்தத்தை மீட்டு கட்டியெழுப்பி, அதனை தமிழர்களுக்கு எதிராக திசை திருப்புவதன் மூலம் பிரிட்டிஷ் காலனித்துவம் நாளும் நிலைநிறுத்தப்படல் வேண்டும் என்ற அரசியல் நோக்குடன் செயல்பட்டவராவார். இத்தியாவை பொறுத்தவரை கர்னல் ஆல்காட் அல்லது பிளாவட்ஸ்கி அல்லது அன்னி பெஸான்ட் ஆகியோர் இந்து மதத்தை புதிதாக புணரமைத்து அதனை சுயாட்சிகாரர்களுக்கு எதிராக திருப்பி விடுவது அவர்களின், ஒரு கட்டத்து நோக்கமாகின்றது. இருந்தும், காலகட்டங்கள் மாறும்போது அதற்கேற்ப உருமாற்றங்களை இவர்கள் செய்யாமல் விடுவதில்லை என்பதிலேயே இவர்களது, சூக்சுமமும் சாணக்யமும் உள்ளடங்குகின்றது.

வெறும் பில்லி சூனியம், ஹிமாலய சாரல் என ஆரம்பித்து பின் இறுதியில் இந்துமத எழுச்சிக்காக பாடுபடுகிறேன் என கூறி, இந்து சர்வகலாசாலைகளையும் கட்டியெழுப்பி (காசி) பின் அரசியல்வாதிகளுக்கு தியானமும் கற்பித்து பின் நாள் செல்ல மீண்டும் சுயாட்சி அரசியலை கைப்பற்றுவது இவர்களது நகர்வானது. அதாவது, அன்னி பெசன்ட் அம்மையாரின் இத்தகைய திருகுதாளங்களை அன்று திலகராலும் கூட புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது என்பதிலேயே இவ் இளைஞனின் மேதாவிலாசம் தங்கி உளது எனலாம். இத்திருகுதாளங்களை எல்லாம் தெளிவுற கண்ட ஒருவன் அன்று இருந்தானெனில் அவன் பாரதி ஒருவனே என நாம் முடிவு செய்யலாம்.

பிற்காலத்தில், காந்தியின் தலைமையில், அன்னி பெசன்ட் அம்மையார் கொடி கட்டி பறக்கையில், தானும் குடும்பத்தாரால் கூட கைவிடப்பட்ட நிலையில் சிறையில் அடைபட்டும், தனது இந்திய விடுதலை இயக்கமும் முற்றாக கருகி வரும் சூழ்நிலையில் பாரதி அன்னி பெசன்டுக்கு கடிதம் எழுதுவதும் அவளது பத்திரிகைக்கு விடயதானம் செய்வதும், மூலத்தை காட்டாதிருக்கும் நிகழ்ச்சி நிரல்களின் ஒரு அங்கமா என நாம் கேட்காதிருக்கவும் முடியாதிருக்கின்றது.

இங்கேயே, இந்திய வரலாற்றை நுணுக்கமாக பார்த்து எழுதிய இடதுசாரி தலைவரான நம்பூதிரிபாத் கூட அன்னி பெசன்ட்டின் உண்மையான உள்நோக்கத்தை அம்பலப்படுத்தியதாக தெரியவில்லை- என்பதிலேயே பாரதியின் அரசியல் கூர்மை ஆழ கிடக்கின்றது.

2

மகாத்மாக்கள் இமாலயத்திலிருந்து சூக்சும உடலோடு இறந்து கிடக்கும் கர்னல் ஆல்காட்டிடம் வந்து அவருக்கு கட்டளை இடுவதும், அவர்கள் சித்தர்கள் என்பதும், அவர்கள் இமயமலை சாரல்களில் பல்லாயிரம் வரு~ங்களாக வாசம் செய்கின்றனர் என்பதும், வெறும் மாயாஜால கதை போல எமக்கு தென்பட்டாலும், இதனையே இந்திய பெருங்குடி மக்களுக்கு அம்மையார் அன்று புகுத்தியதாக இருந்தது. பிறிதொரு கட்டத்தில், அன்னி பெசன்ட் அம்மையார் அவர்கள் இந்தியர்கள், சுயாட்சி கோரிக்கையை விடுத்து, ஆலமரத்தடியில் அமர்ந்து, கண்களை இறுக மூடி தியானம் செய்தால், சுவராஜ்யம் தானாக வந்துவிடும் என்றும் குரல் எழுப்பி உள்ளார்.

வேறு வார்த்தையில் கூறுவதானால், இந்த ‘மாயாஜாலக்காரி’ –பிளாவட்ஸ்கி – ஆல்காட் இவர்களின் கூட்டு இலங்கையிலும், இந்தியாவிலும் மக்களின் மனோநிலையை அப்படியே மாற்றி, அவர்களை திக்குமுக்காட செய்கின்றார்கள் என்பதை ஆதியுடன் அந்தமாக பாரதி அன்றே புரிந்து வைத்துள்ளான். இதுமாத்திரமல்லாமல் இவர்களின் இப்படியான நடவடிக்கைகளின் பின்னணியில், பிரிட்டிஷாரின் கோரத்தனமான அரசின் கை, வீற்றிருக்கின்றது என்பதையும் அவன் ஆழ புரிந்திருந்தான். ஆனால், இன்றுதானும், சீனி.விஸ்வநாதன் உட்பட பல்வேறு தரப்பினரும் அன்னி பெசன்டை விடுதலை வீராங்கனையாக போற்ற முயல்கின்றனர். ர~;ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி கூட தனது இறுதி நூலில் (கிளிம்மின் வரரலாறு: மூன்றாம் தொகுதி: பக்கம்:221) பிளாவட்ஸ்கி-அன்னி பெசன்ட் ஆகியோர் விரிக்கும் திருகுதாளங்களையும், மக்களுக்கு இவர்கள் காட்டும் மாயாஜால வித்தைகள் குறித்தும், அதற்கூடாக இவர்கள் பின்னக்கூடிய சதி வலைகள் யாவை என்பதை எடுத்துக் கூறுபவராகவும் இருக்கின்றார்.

இத்தகைய சதி வலைகளில் ஒன்றையே திரு.எஸ்.நடேசன் அவர்கள் தனது நூலான ‘இலங்கையில் இந்திய தமிழர்களின் வரலாறு’ ((The History of Indian Tamil People in Srilanka) என்ற அரிய நூலில் ஏகாதிபத்திய ‘மறைகரத்தின்’ செயற்பாடு, எப்படி இனவாதம் ஒரு நாட்டில் விதைக்கப்படுகின்றது என்பதையும், அதற்கூடு பிரிட்டிஷாரின் ஆதிக்கம் எப்படி நீடிக்கப்படுகின்றது என்பதையும் கூறியுள்ளார் (பக்கம்:76). (இந்த அரிய நூலின் முதல் ஏழு அத்தியாயங்களும் வரலாற்று மாணவர்களால் நிச்சயம் வாசிக்கப்பட வேண்டியவையாகும்).

இத்தகைய சதிவலைகளின் பின்னலின் இன்றைய வடிவத்தை, சரியாக புரிந்துக் கொள்ள முடியாத தமிழர்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமது சொந்த வாழ்க்கையை இழந்து நிற்க நேர்ந்தது, என்பதையும் நாம் சேர்த்து கூறி ஆக வேண்டும். இப்புள்ளியிலேயே, பாரதியின் அறிவும் ஆற்றலும் இவ்வலைப்பின்னல்களை நுணுக்கமாக பார்த்து அம்பலப்படுத்துவதும் அவனது திறனும் முக்கியமானதாக பளிச்சிடுகின்றது.
அதாவது, திரு.சீனி.விஸ்வநாதன், நம்பூதிரிபாத், முள்ளிவாய்க்காலின் தமிழர்கள், இந்திய விடுதலை இயக்கத்தின் திலகர், அரவிந்தர், வ.உ.சி ஆகியோருக்கும் இவ் வலைபின்னல் சரியாக விளங்கவில்லை என்பதிலேயே வரலாறுகளின் சோகம் தங்கி உள்ளது.

3

1914இல் சிறைக்காலம் முடிந்தவுடன் திலகர் விடுதலை செய்யப்படுகின்றார். (இரண்டாவது முறையாக). இவரது ஆறு வருட சிறை தண்டனை குறைக்கப்பட்டு, “ஏற்பட்ட வற்புறுத்தலும் புரிதலும்” காரணமாக இவர் இடைநடுவில் விடப்பட்டது முக்கிய விடயமாகின்றது. தமது விசுவாசத்தை, பிரிட்டி~; அரசுக்கு தெரிவிக்கும் ஏற்பாட்டில் பயங்கரவாத செயல்பாடுகளுக்கு எதிராக திலகர் இப்போது கண்டனம் தெரிவிக்கின்றார். அதாவது, பகீ~;கர செயல் தந்திரத்தில் இருந்து வெகுஜன அரசியல் கிளர்ச்சிக்கு மாறுவதே திலகரின் சிறைக்கு பின்னதான கொள்கையானது.

இங்கே சமரசம் எந்த விகிதாசாரத்தில் கலக்கப்பட்டுள்ளது என்பது கேள்வியாகின்றது. “வெகுஜன அரசியலில் கலத்தல்” மாத்திரமே, என கூறப்படுவது பாராளுமன்ற அரசியலுக்கும் அடித்தளம் இட்டு செல்கின்றதா என்பதும் கேள்வியாகின்றது. மறுபுறம், சித்தர்களின் அடுத்த தலைமுறையினரான காந்தி போன்ற மகாத்மாக்கள் மேலெழுவதற்கு மேற்படி அரசியல் வழி சமைக்கின்றது என்பதும் தெளிவாகின்றது. அதாவது, ஒருபுறம் திலகரின் சமரசம்-மறுபுறம் இவ் வெகுஜன அரசியலிலேயே திலகரை மண் கவ்வ செய்யும் அன்னி பெசன்ட்-பிரிட்டிஷாரின் நுணுக்கமான திட்டம்.

1916 வசந்தத்தில், திலகர் பூனாவில் Home to Rule எனும் அரசியல் அமைப்பை தோற்றுவிக்கின்றார். இதனையே, அன்னி பெசன்ட் அம்மையார் சென்னையில் Home to Rule  என்று அதே பேரில் பிறிதொரு அமைப்பை தோற்றுவிக்கின்றார். (இதில் பிரிட்டிஷாரின் பங்கு பற்றுகை அல்லது அவர்களது ஆசிர்வாதங்கள் எந்தளவில் இருந்தன என்பது சம்பந்தமுள்ள கேள்வியே). சுருக்கமாக கூறுவதென்றால், ஒரு காலத்தில், பில்லி சூனியம் என்று ஜாலவித்தை காட்டி திரிந்த அன்னி பெசன்ட் அவர்கள் இப்போது தனது இமாலயத்தையும், சித்தர்களையும் விடுத்து, சுயாட்சி என்பதனை இந்தியர்கள் என்றென்றைக்கும் நினைத்துக்கொள்ள கூடாது-அவர்கள் தியானத்திலேயே மூழ்கி கிடக்க வேண்டியவர்கள் என்று கோரிக்கை விடுத்த அதே, அன்னி பெசன்ட் அம்மையார், இப்போது சுயாட்சி அரசியலே ‘தேவை’ என கூறுவது இந்திய வரலாறாகியது.

இதனை தொடர்ந்து 1911இன் டிசம்பரில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதற்கு முன்னரான ஒரு மிக சிறிய காலத்துக்கு அவரும் சிறை செல்ல கோரப்படுகின்றார். (June 1917- September 1917 – நான்கு மாதங்களுக்கு!) ஆரம்பத்தில், ஊட்டியின் பங்களா ஒன்றில் ‘சிறை’ வைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் கோயம்பத்தூருக்கு மாற்றப்படுகின்றாள். இதனை தொடர்ந்தே டிசம்பர் 1917இல் அவள் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகின்றாள். (திலகர் போன்றோருக்கு போட்டியாக). தீவிரவாதிகளை இந்திய காங்கிரஸ் உள்ளெடுக்க வேண்டும் என்ற அவளது கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதாவது திலகர் சிறை சென்றால், இவளும் சிறைக்கு அனுப்பப்படுவாள். திலகர் Home to Rule ஆரம்பித்தால், இவளும் அதனையே செய்வாள். இப்படியாக ஒரு  போட்டி அரசியலை கட்டி எழுப்புவதில் அன்னி பெசன்ட் அம்மையார், பிரிட்டிஷாரின் ஆசிர்வாதஙங்களோடு, பெரும் வெற்றி வாகையை சூடினார் எனலாம்).

இதே காலப்பகுதியில் தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பும் காந்தி (1914) தனது சாத்வீக ஒத்துழையாமை இயக்கங்களை ஆரம்பித்து விட்டார். முதலாளி வர்க்கத்தின் அனுசரனையுடன் இவர் ஆரம்பித்து நடத்திய (சத்தியாகிரக ஆசிரமங்களும்) வெற்றி வாகை சூட தொடங்கி விட்டன. (தென்னாபிரிக்காவின் ஆசிரமங்களுக்கு அன்று டாடாவால் ரூபா.25,000 நன்கொடை கொடுத்தது போல், உள்நாட்டில், ஆசிரமங்கள் தொடங்க, டாடாவால் ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாயை டாடா காந்திக்கு வழங்கினார் என்பது பதிவு. இதேபோன்று, பிர்லாவின் நன்கொடைகள் புரிந்துக் கொள்ளக்கூடியதே. ஏனெனில், காந்தியின் பல அரசியல் நடவடிக்கைகளை முதன் முதலாய் சிபாரிசு செய்வது பிர்லாவே என்பதற்கான பதிவுகள் உண்டு. உதாரணமாக, காந்தியை வட்டமேசை மகாநாட்டில் பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1930), தீவிரவாதிகளான ஸ்வராஜ் கட்சியினருக்கு காந்தி தரக்கூடியதாய் இருந்த ஆதரவை கேள்விக்கு உட்படுத்தியதாகவும் (1931), இரண்டாம் சட்டமறுப்பு இயக்கத்துக்கு எதிராக காந்திக்கு யோசனை கூறியதாகவும் (1932), மாகாண தேர்தலில் காந்தியை பங்கேற்கும்படி வற்புறுத்தியதாகவும் (1935) இருந்தனவற்றை கூறலாம்). இதே காலப்பகுதியில்தான் நாட்டில் கதர் தலைவர்களின் எண்ணிக்கையும் கூடுகின்றது.

வேறு வார்த்தையில் கூறுவதானால், அன்னி பெசன்ட் அம்மையார் அவர்கள் தன்னில் எதிர்ப்பார்க்கப்பட்டதைவிட அதிகமாகவே பிரிட்டிஷார் சார்பாக ஒருபுறமாக நிறைவேற்றி விட்டார் எனும் போது, அடுத்த சுற்றில், காந்தியின் தலைமையும், எழுவதாய் உள்ளது.

4

இச்சூழல் பாரதியை பெரிதும் பாதித்து, அனாதரவாக்கி விட்டது என்று கருத இடமுண்டு. ஒருபுறம் இந்திய விடுதலை இயக்கத்தின் சீரழிவு. அதாவது, திலகர் உட்பட்ட தலைவர்களின் செயலற்ற நிலைமை. மறுபுறத்தில், அன்னி பெசன்ட் அம்மையார், காந்தி போன்றோர்களின் அரசியல் மேலோங்கும் நிலை. மேலும், தான் புதுவையை விட்டகன்று சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். தனது குடும்பம் தன்னை அனாதரவாக்கி விட்டு அகன்ற தருணம். இவையும், பாரதியை ஆழ தாக்கும் காரணிகளாகின்றன.

கால நகர்வில், இத்துயர்மிக்க சோதனை அவனது பிந்திய காலத்தில் இடம்பெற்றாலும் அவனது ஆரம்ப அரசியல் நுணுக்கமாக இருப்பது மாத்திரமன்றி அழுத்தங்களுக்கு கட்டுப்படாத ஒன்றாகவும் இருக்கின்றது (இளம் கன்றாய்). இதன் காரணமாகவே, இக்காலப்பகுதியில் அவனது அரசியல் எவ்வாறு இருந்தது என்பதை கற்பது தேவைப்படும் ஒன்றாக உளது. இவ்வகையில், பின்வரும் அவனது கருத்துக்களை கூர்ந்து நோக்குதல் நன்று.

1. 1908இன் இறுதி பகுதியில் அவன் பின்வருமாறு எழுதுவான்: “பொது ஜனங்களுடைய அறிவு விருத்திக்கும், தர்ம வளர்ச்சிக்கும் அனுகூலமான முயற்சிகளை பிரதி பிரயோஜனம் கருதாமல் நடத்தி வர வேண்டும். அப்படி யார் செய்கின்றார்களோ அவர்களெல்லாம் பிராமணர்களே”

கிட்டத்தட்ட தனது 25வது வயதில் இவன் கூறும் இவ்வகை அரசியல், இவனது பிற்காலத்து அரசியலான கனக சபைக்கு பூணூல் இடும் வரை செல்லுகின்றதேயானால், இது அவதானத்துடன் நோக்கப்பட வேண்டியதாகின்றது.

“பிராமணர்கள் எனப்படுபவர் மேற்கண்ட… தொழில்களையா செய்து வருகின்றார்கள்?... தீர்வை வசூலிக்க சென்று அதர்மத்தின் மீது… ஆயிரக்கணக்கான பிராமணர்கள் சேவகத் தொழில்… (செய்கின்றார்கள்). இவர்களையா எமது ஜனங்கள்… மதிக்க வேண்டும்?”

“ஒற்றர்கள் என்று… அழைக்கப்பட்டு வந்த ரஹசிய போலீஸாரின் வேலையானது உலகத்திலுள்ள எல்லா தொழில்களிலும் அதிக நி~pத்தமானது. (கேவலமானது)… இப்போது பிராமணர் என சொல்லிக் கொள்பவர் இந்த வேலையைத்தான் செய்கின்றார்கள்… இப்படிப்பட்ட நீ~த் தொழிலை செய்வோர்களை… ‘பூதேவர்’ என கொண்டாடி வணங்குதல்… சாத்தியமா?”
(சீனி விஸ்வநாதன்: தொகுதி: 03: பக்கம் 668-670)

சாதி பிரிவினையும், பிராமணர்களின் காட்டி கொடுக்கும் திறனையும், பிரிட்டிஷாரின் நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்தும் பாரதி, இதனுடன் ஆறு பிராமணர்கள், ஆல்காட்டின் பிரேதத்தை தூக்கி நடந்தனர் என்று அன்னி பெசன்ட் கதை கூறுவதையும், அவன் நினைவு கூறுவதை, காண வேண்டி உள்ளது.

மொத்தத்தில் இவனது அரசியல் பிராமணர்கள் பொறுத்தும், பிரிட்டிஷாரின் ஒற்றர்கள் குறித்தும் எவ்வகை நிலைப்பாடுகளை இவன் கொண்டுள்ளான் என்பதனை தெளிவாக்குகின்றது.

2. இதேபோல், ரஷ்யாவை பற்றி அவன் கூறிய விடயங்கள் இவனது அரசியலை இன்னும் ஆழப்படுத்துவதாகவே இருக்கின்றது.

ரஷ்யாவை பற்றி கூறுகின்றான்: “ ‘நமது’ ரஷ்ய தோழர்கள் செய்துவரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் பொழிவானாக…”
(பாரதி தரிசனம்: பகுதி-1: பக்கம் 273)

இங்கே ‘நமது தோழர்கள்’ என கொண்டாடும் இவனது மனபான்மை கூர்ந்து நோக்கத்தக்கது.

3. சதி தகனம் பொறுத்து இவ் இளைஞன் எழுதுவது இவனது மேற்படி அரசியலின் ஒரு அங்கமே ஆகும்: “அவளது கழுத்து வரை வறட்டிகளை அடுக்கி நெருப்பை கொளுத்திவிட்டு, அந் நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகா பாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றை கொண்டு சொரிந்தார்கள். மத்தளங்களடித்தும், ‘ராம்… ராம்…’ என்று கூக்குரலிட்டு அவளது அழுகை குரல் வெளியே கேளாதபடி தடுத்துவிட… (அவள்) சிறிது நேரத்திற்குள் சாம்பராகி விட்டாள்… 20 வயது கன்னிகையை ஆவலுடன் கொழுத்திப் பார்த்து விட்டு தமது நீச உயிர்களுக்கு கஷ்டம் வரும் போது பொய் வே~ம் போடுகின்ற இந்த ஈனர்களை கோர்ட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (சீனி விஸ்வநாதன்: கால வரிசைப்படுத்தப்பட பாரதி படைப்புகள்: தொகுதி: 01: பக்கம் 191).

அழுகி, நாற்றமடிக்கும் அன்றைய ஜன சமூகங்களின் விசுவாசத்தன்மைகளை விமர்சிக்கும் அரசியலை இவன் கைகொள்கின்றான் என்பது தெரிகின்றது. பெண்களின் இழிநிலை, சாதிய பிரிவினைகள் இன்றைய இந்தியாவில் எப்படி, எவ்வாறு தலைவிரித்தாடுகின்றன என்பது இவனது எழுத்துக்கள் இன்று எழுப்பும் கேள்வியாகின்றது.

4. இந்து-முஸ்லீம் நல்லுறவுகள் தொடர்பில் இவன் 1906ம் ஆண்டில் மாத்திரம் 09 கட்டுரைகளை எழுதியுள்ளான். லட்சக்கணக்கான பேர் கொல்லப்பட போகின்றார்கள் என்பதும், இந்த ரத்த வாடையில்தான் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்நாட்டில் தொடரப் போகின்றது என்பதும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவுக்கு எதிராக திராணிப்பட்ட அரசியலையும் இவன் அன்றே கொண்டிருந்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஒரு தலையங்கத்தில் பின்வருமாறு எழுதுகின்றான்:
“ஏதோ சமயம் இரு புறத்தாரும் தப்பிதம் செய்திருக்கலாம்… (ஆனால்) நமது மகமதிய சகோதரர்களுக்கு காரியத்தில் காட்ட அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தை கொண்டாட வேண்டும். அப்போதுதான்… அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும்”
(பாரதி தரிசனம்: பகுதி-1: பக்கம் 259).

அதாவது, இது இவனது அணுகுமுறையை காட்டுவதாயுள்ளது. கணபதி பூஜையை கொண்டாடும் திலகரை தாண்டிய ஓர் அரசியலை இவன் முன்னெடுப்பது தெரிகின்றது. இந்து-முஸ்லீம் பிளவுகளை காந்தி தடுத்த விதம், இன்று, நன்கு பதிவு செய்யப்பட்டே இருக்கின்றது என்பது தெளிவு. அதாவது, அனைத்தும் முடிந்தவுடன், உண்ணாவிரதம் இருப்பது எந்தளவுக்கு பயனதரக் கூடியது எனும் கேள்வியை இவ் அவதானிப்புகள் எழுப்பாமல் இல்லை.

ஆனால், அதே மாதத்தில் பாரதி எனும் இவ் இளைஞன் எழுதுவான்:
“இத்தேச ஜனங்கள் பெரும்பாலர் ஹிந்துக்கள், மகமதியர் என இரண்டு பகுதிப்பட்டு நிற்பது பெரும் தடையாகவே இருக்கின்றது என்பதை ஒளித்துவைத்து பிரயோஜனமில்லை. தென்னிந்திய கிராமங்களிலே மகமதியர்களும் ஹிந்துக்களும் தமக்கிடையிலான வேறுபாட்டை மறந்து மகமதியர்களும் ஹிந்து ஜன சமூகத்தில் கிளையராகவே கருதப்படுகின்றார்கள்… வட இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஹிந்து, மகமதியர்கள் ஒருவித துவே~ம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்… கல்கத்தாவில் நடந்த சிவாஜி உற்சவத்தை எடுத்துக் கொள்வோம். சிவாஜியை தெய்வாம்சம் என்றும் மஹாத்மா என்றும் ஹிந்துக்கள் ஸ்தோத்திரம் செய்து கொண்டிருக்கும் போது இவர் கொலையாளி என்றும் பாதகர் என்றும் அனேக மகமதியர்கள் ‘இங்லீஸ்மான்’ என்றும் பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கின்றார்கள்… கோட்டைக்குள்ளே குத்தும் வெட்டும் நடக்குமானால் எதிரிகளுக்கு சந்தோஷமேயல்லவா?” (பாரதி தரிசனம்: பகுதி:1 பக்கம்:260-261)

இங்கேயே, மகமதியர்-ஹிந்துக்கள் ஆகியோரின் இனவாதம் மாத்திரமல்லாமல் அவ் இனவாதத்தால் நன்மை பெறும் பிரிட்டிஷாரின் கோர முகமும் அம்பலமாகின்றது எனலாம். இது அவனது அரசியலாகின்றது.

[ தொடரும் ]

உசாத்துணை நூல்கள்:

1. சீனி.விஸ்வநாதன். காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி எழுத்துக்கள். தொகுப்பு 2, 3.
2. இளசை மனியன்-ஸி.எஸ்.சுப்ரமணியம் - பாரதி தரிசனம்- பாகம் 1 மற்றும் 2
3. சீனி.விஸ்வநாதன்: கால வரிசையில் பாரதி பாடல்கள்.